ஒரு சமயம் பலத்த மழை பெய்து கொண்டு இருந்தது. எங்கும் வெள்ளம் கரை புரண்டு ஓட, மக்கள் தத்தளித்தனர். பலர் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டனர்.
மக்களைக் காப்பாற்ற ஒரு படகு அனுப்பப்பட்டது. மக்கள் தாம் உயிர் தப்பினால் போதுமென்று தம் பொருள்களை எல்லாம் துறந்து படகில் ஏறினர்.
பண ஆசையுள்ள ஒருவன் மட்டும், வெள்ளம் திரண்டு வருவதைக் கண்டதும், முதலில் தன் பணத்தை எல்லாம் துணியில் வைத்து தன் இடுப்பில் கெட்டியாகக் கட்டிக் கொண்டு இருந்தான்.
அவனும் படகில் ஏறினான்.நீரில் சென்று கொண்டிருந்த போது சூறாவளிக் காற்று வரவே, படகு கவிழ்ந்துவிட்டது.
நீச்சல் தெரியாதவர்கள் நீரில் முழ்கிவிட்டனர். தெரிந்தவர்கள் கரையை நோக்கி நீச்சலடித்துக் கொண்டிருந்தனர்.
பண ஆசை உள்ளவனுக்கும் நீச்சல் தெரியும். ஆனால், அவன் இடுப்பில் கனம் இருந்ததால் வேகமாக நீந்த முடியாமல் மிகவும் திணறினான்.
அருகில் இருந்தவர்கள், இடுப்பில் உள்ளதை அவிழ்த்து விடு, உயிர் தப்பிக்கலாம் என்றனர். ஆனால், அவன் பணத்தை இழக்க சிறிதும் விரும்பவில்லை.
இடுப்பில் கணம் அதிகமாகவே நீந்த முடியாமல் கஷ்டப்பட்டு கடைசியில் நீருக்குள் மூழ்கினான். ஆபத்தில் பணம் அவனைக் காப்பாற்றவில்லை. அவன் உயிருக்கு அதுவே எமனாக அமைந்தது.
அவனுடைய பேராசையே அவனைக் கொன்றது.சுகங்களில் மனதை வைத்துத் தனது வாழ் நாட்களை வீணாகக் கழிக்கும் மனிதன், ஆயுட்காலம் முடிந்த பின்பு ஆசையுடன் சேர்த்த அனைத்தையும் தான் வாழ்ந்த மண்ணில் விட்டுச் செல்கிறான்.
சிறு துளிகளாக அலைந்து அலைந்து சேகரித்த தேனை பிறர் கவர்ந்து செல்வது போல மனிதன் ஆசைவைத்து பாடுபட்டுச் சேர்த்து வைத்த பணம்,பொருள், வீடு ஆகிய அனைத்தையும் பிறரிடம் விட்டே சென்று விடுகிறான்.
ஆம்,தோழர்களே ...,
நமக்குள் ஆசை இருக்கலாம். நாம் ஆசைக்குள் சிக்கி விடக்கூடாது.
‘ஆசையின் கொடுமை, அதை அடையும் வரை ஆர்வம் இருக்கும். அடைந்ததும் நிறைவு வராது.
*எதிலும் அளவோடு ஆசை வைத்து வாழும் வாழ்வே துன்பமற்ற நல்ல வாழ்விற்கு வழி வகுக்கும்*
ஆம்.., அளவான ஆசைகளோடு வாழ்ந்து சுகம் பெறுவோம்..
நன்றி இணையம்