"சனிபகவானை கோபப்படுத்தும் செயல்கள்"

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:46 | Best Blogger Tips
Image result for சனிபகவானை

வாழ்க்கையில் கஷ்டம் நேரும்போதெல்லாம் அவற்றின் காரணமாக நம் அனைவருக்கும் நினைவில் வருபவர் சனிபகவான். ஏனெனில் நவகிரகங்களில் மிகவும் முக்கிய கிரகமான சனிபகவானே நமக்கு ஏற்படும் துன்பங்களுக்கு காரணமாவர். ஒருவர் ஜாதகத்தில் சனிபகவான் வந்துவிட்டால் சில ஆண்டுகளுக்கு அவர் வாழ்க்கை இன்னல் நிறைந்ததாகவே இருக்கும்.

சனிபகவான் உங்கள் ஜாதகத்தில் வந்துவிட்டால் ஏழரை ஆண்டுகளும் இருக்கலாம் அல்லது ஜென்ம சனியாக அதற்கு மேலேயும் இருக்கலாம். குறிப்பாக சனிதிசை முடியும் நேரமான அஷ்டம சனி மிகவும் துன்பம் நிறைந்ததாக இருக்கும். ஆனால் சனிபகவான் எவ்வளவு கெடுப்பவரோ அதே அளவு கொடுப்பவர். அவரை சரியான முறையில் வழிபட்டால் அவர் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது. இங்கே அவரை எவ்வாறு வணங்கினால் நன்மை கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

சனிபகவான் சூரியதேவனின் மகன் ஆவார். இவர் தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே சூரியனின் வெப்பத்தால் கருப்பாக மாறியவர். சனிபகவானின் தாயான சாயா தேவி தீவிர சிவபக்தை ஆவார். அவரை போன்றே சனிபகவானும் கர்ப்பத்திலிருந்தே சிவபக்தனாகவே வளர்ந்தார். அவர் பக்தியை மெச்சி தவறு செய்யும் மனிதர்களுக்கு வாழும்போதே தண்டனை கொடுக்க வேண்டிய பொறுப்பை அவருக்கு வழங்கினார் சிவபெருமான்.

சனிபகவானை மகிழ்ச்சிப்படுத்தும் முதல் சொல் " நமசிவாய " என்பதாகும். சிவனை வழிபடுவதே சனிபகவானின் கோபப்பார்வையிலிருந்து உங்களை பாதுகாக்கும்

பிரதோஷத்தன்று சிவபெருமானை வழிபடுவது கூடுதல் சிறப்பு. சிவனுக்கு பிடித்த ருத்திராட்ச்சத்தை அணிந்திருப்பவர்களை சனிபகவான் தண்டிப்பதில்லை.

அனைவருமே அறிவோம் சனிபகவானுக்கு பிடித்த நிறம் கருப்பு என்று. கருப்பு நிற துணியை வைத்து வழிபடுவதை சனிபகவான் மிகவும் விரும்புவார். அதேபோல கருப்பு நிற பசுவின் பாலும், தயிரும் சனிபகவானுக்கு வைத்து வழிபட மிகச்சிறந்த பொருளாகும். இதனை வைத்து வழிபடுபவர்களை சனிபகவான் ஒருபோதும் சோதிப்பதில்லை.

சனிபகவானை வணங்க ஏற்ற நாள் சனிக்கிழமைதான். சனிக்கிழமை தோறும் சனிபகவானின் கோவிலுக்கு சென்று எள் விளக்கு ஏற்றி வழிபடுவது அவரின் கோபப்பார்வையிலிருந்து பாதுகாக்கும். சனிக்கிழமை விரதம் இருப்பதும் கூட நல்லதுதான். சனிக்கிழமைதோறும் காகத்திற்கு சாப்பாடு வைத்து முன்னோர்களை வழிபடுபவர்களை சனிபகவான் தொந்தரவு செய்யமாட்டார்.

சனிபகவானின் தீயபார்வையிலிருந்து யாராலும் தப்ப முடியாது. சுத்தம் இல்லாத இடங்களும், மனிதர்க்ளும் சனிபகவானுக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்த கூடியவை. குளித்துவிட்டு ஈரத்துடன் வீட்டிற்குள் செல்பவர்கள் சனிபகவானின் பார்வையிலிருந்து தப்பிக்க இயலாது.

அதேபோல முதல் நாள் உடுத்திய துணியை அடுத்தநாளும் உடுத்துவது சனீஸ்வரருக்கு பிடிக்காத ஒன்று.

இருள்சூழ்ந்திருக்கும் வீடுகளை எப்பொழுதுமே சனிபகவானுக்கு பிடிக்காது. எனவே மாலை நேரத்தில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைப்பதை வழக்கமாக கொண்டிருங்கள். அதேபோல எந்நேரமும் வீட்டில் அமங்கல சொற்கள் பேசுவது அவருக்கு பிடிக்காத ஒன்று. சுத்தம் இல்லாத இடத்தில் லட்சுமி தேவிதான் வர யோசிப்பார் ஆனால் சனிபகவான் எளிதில் அங்கு குடியேறிவிடுவார்.

மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை உள்ளவர்கள் சனிபகவானின் பார்வையிலிருந்து தப்பிக்கவே இயலாது. மாற்றான் மனைவி மீது ஆசை கொண்டால் அவர்கள் சனிபகவானால் அழிவது நிச்சயம். அதற்கு மிகச்சிறந்த உதாரணம் இராவணன் ஆவான்.அனைத்து கிரகங்களையும் சிறைபிடித்தாலும் இராவணனால் சனி பகவானை ஒன்றும் செய்ய இயலவில்லை. அதுவே அவனது அழிவிற்கு காரணமாய் அமைந்தது.

வஞ்சகம் செய்து வெற்றிபெறலாம் என நினைப்பவர்களை கண்டால் சனிபகவானுக்கு சுத்தமாக பிடிக்காது. அவர்கள் மட்டுமின்றி அவர்களின் வாரிசுகளையும் தண்டிக்காமல் விடமாட்டார். சனிபகவானை சரியான முறையில் வழிபட்டால் சுக்கிரனை விட ஆயிரம் மடங்கு அனுக்கிரகத்தை அள்ளித்தருவர். அதேசமயம் அவரை கோபப்படுத்தினால் வம்சத்தையே தண்டித்து விடுவார்...
 Image may contain: 1 person, sunglasses and closeup
நன்றி இணையம்