திருக்கச்சி

மணக்கால் அய்யம்பேட்டை | AM 10:44 | Best Blogger Tips
Image result for திருக்கச்சிImage result for திருக்கச்சி

#காஞ்சிபுரம் "#ஆயிரம்_கோவில்_நகரம்" என்று அழைக்கபடும் நகரம் ஆகும். இது பஞ்ச பூத தலங்களில் ஒன்றாக விளங்கப்படுகிறது.

காஞ்சிபுரம் நமது தமிழகத்தின் பாரம்பரிய சின்னமாகவும் திகழ்கிறது. இங்கே ஓடும் நதி பாலாறு ஆகும்.

முத்தி தரும் தலங்கள் ஏழனுள் முக்கியமானதும், புராண வரலாற்றுப் பெருமைகள் நிறைந்ததுமான காஞ்சிபுரம் ஒரு கோவில் மாநகரமாகும்.

சைவம், வைணவம், சமணம், சாக்கியம் போன்ற சமயங்கள் காஞ்சி மாநகரைக் கண்டிருக்கின்றன. தெய்வநலம் மணக்கும் திருநகரம் காஞ்சி மாநகரமாகும்.

திரும்பிய பக்கமெல்லாம் கோவில்களும் கோட்டங்களும் நிறைந்துள்ள இந்நகரில் கச்சி ஏகம்பனே! என்றும், காஞ்சி வரதப்பா! என்றும் வணங்கி வழங்கி வந்தது.

சிற்பக் கலையில் சிறந்து, கலை நுணுக்கத்தில் உயர்ந்து, வான்முட்டி நிற்கும் கோபுரங்கள் ஏராளம்! சிற்பங்களைச் செதுக்கி, அழகு படுத்தப்பட்ட உயர்ந்த தூண்கள் எழில் கூட்டுகின்றன. எங்கு நோக்கினும் எண்ணத்தைக் கொள்ளை கொள்ளும் எழில் கொஞ்சும் இறைவன் திருமேனிகள் கண்கொள்ளாக் காட்சியாகும்.

ஆழ்வார்களும், நாயன்மார்களும், சீன நாட்டின் நல்லறிஞர்களும் போற்றிப் புகழ்ந்த இம்மாநகரின் மிக முக்கிய ஆலயங்களில் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில்.


மேலும் காஞ்சி பட்டுக்கு மட்டுமல்ல, கலை, கலாசாரம் போன்றவற்றிலும் சிறந்து விளங்கும் ஊராகும்.

"திருவாரூரில் பிறக்க முக்தி,
காஞ்சியில் வாழ முக்தி,
காசியில் இறக்க முக்தி,
திருவண்ணாமலையை நினைக்க முக்தி"

என்ற வரிகள் மூலம் காஞ்சியின் சிறப்பை அறிய முடிகிறது.



பல்லவர், சோழர், விஜயநகர பேரரசர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பல கோவில்கள் உள்ளன. கைலாசநாதர் கோயில், காமாட்சியம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில்,சுப்பரமணிய சுவாமி கோவில், கட்பேசுவரர் கோவில், வைகுண்ட பெருமாள் கோவில் போன்ற பல கோவில்கள் ஆகியவை சிவகாஞ்சியில் உள்ளன.இதை பெரிய காஞ்சிபுரம் என்பார்கள்.தெற்கே சின்ன காஞ்சிபுரம் அல்லது விஷ்ணு காஞ்சியில் இருப்பது வரதராஜ பெருமாள் கோவில்.

பாரம்பரியம்,வரலாறு ஆகியவை மீது ஈடுபாடு கொண்ட அனைவரும் பார்க்கவேண்டிய இடம் இது.


வைணவ பாரம்பரியத்தில் திருவரங்கம் மற்றும் திருவேங்கடம் ஆகிய தலங்களுக்கு அடுத்ததாக முக்கியத்துவம் வாய்ந்த தலம்

#திருக்கச்சி அல்லது
#காஞ்சி_வரதராஜப்_பெருமாள்_கோயில் என்பது #பெருமாள்_கோயில் என்று வைணவர்களால் போற்றப்படுகிறது.

இத்திருக்கோயிலின் இராஜகோபுரம் மேற்கு நோக்கி அமைந்தள்ளது. காஞ்சியில் தெற்குப் பகுதி - நகரத்திற்கு மையத்தில் அமைந்துள்ள திருக்கோயிலாகும். மூலவர் வரதராஜப் பொருமாள் மேற்குப் பார்த்த வண்ணம், நின்ற திருக்கோலத்தில் சேவார்த்திகளுக்கு அருள் புரிந்து கொண்டுள்ளார். பெருந்தேவி தாயார் கிழக்கு பார்த்த வண்ணம் எழுந்தருளி சேவார்த்திகளுக்கு அருள்புரிந்து கொண்டுள்ளார்.


இக்கோயில் எவரால் முதலில் நிறுவப்பட்டது என்பது தெரியவில்லை. எனினும் கி.பி. 1053 ல் சோழர்களால் வேழமலையில் குகைவரைக் கோயில் கிழக்கு மேற்கே விரிவாக்கப் பெற்றது என்று கல்வெட்டுகளின் மூலம் அறியப்படுகிறது. முதலாம், விக்கிரம சோழனும் கோயிலை விரிவுபடுத்தினர்.

பதினான்காம் நூற்றாண்டில் தாயார் சன்னதியும், அபிஷேக மண்டபமும் அமைக்கப்பெற்றன. சோழர்களின் வீழ்ச்சிக்குப்பின், விஜயநகர அரசர்கள் கிழக்கு கோபுரம், ஊஞ்சல் மண்டபம் மற்றும் கல்யாண மண்டபங்களை நிறுவினர்.

கல்யாண மண்டபம் எட்டு வரிசைகளில், வரிசைக்குப் பன்னிரண்டு தூண்களாக 96 சிற்பகலை மிக்க ஒரே கல்லாலான தூண்கள் நிறைந்த மண்டபம் ஆகும். தூண்களில் யாளி, போர்குதிரை, குதிரை மீது வீரர்கள் மற்றும் பல்வகை சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
இதற்குள் உள்ள சிறிய நன்கு தூண் கொண்ட மண்டபத்தையும் சேர்த்து நூறு கால் மண்டபம் என அழைக்கப்படுகிறது. இதன் நான்கு மூலைகளில் தொங்கும் கற்சங்கிலிகள் சிற்பக்கலையின் விந்தையாகும். கிழக்கு கோபுரம் ஒன்பது நிலைகளுடன் சுமார் 180 அடி உயரமுடையது. தற்போது இக்கோபுரம் சிதிலமடைந்துள்ளது.


தொண்டை நாட்டில் அமைந்துள்ள திவ்ய தேசங்களுள் மிகவும் சிறப்பாகக் பேசப்படும் திருப்பதியும், பெரும்பாலான மக்களுக்குத் தெரிந்திருக்கக் கூடியதுமான திருக்கோவில் இது ஆகும்.

காஞ்சிபுரம்.

1.
பட்டுப்புடவை 

2.
காஞ்சி அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோவில் 

3.
வரதராஜ பெருமாள் திருக்கோவில் ஆகியவை மக்களுக்கு நினைவிற்கு வரும்.


மூலவராகிய தேவராஜப் பெருமாள், வேழ மலை (#அத்திகிரி) மீது நின்ற திருக்கோலத்தில் மேற்கே திருமுகமண்டலமுடன் நாற்கரத்துடன் அருள்பாலிக்கிறார். மூலவர் மலை மீது அமைந்துள்ளார் என்பதற்கு சான்றாக கர்பகிரகத்தின் நேர் கீழே குன்று குடைவரை கோயிலில் யோக நரசிங்க பெருமாள் வீற்றுக்கிறார்.

பெருமாளை காண்பதற்கு இருப்பதிநான்கு படிகளை ஏறிச்செல்லும் போது காணப்படும் தங்க பல்லி மற்றும் வெள்ளி பல்லி, இக்கோவிலில் பிரசிதம். மூலவரை நோக்கிய படி தென்மேற்கே பெருந்தேவி தாயாருக்கு தனி சன்னதியும், திருக்குளத்தின் எதிரே சக்கரதாழ்வர் சன்னிதி உள்ளது. கோயில் வெளி பிரகாரத்தில் கண்ணன், ராமர், வராஹா பெருமாள் சன்னதிகளும், ஆண்டாள், ஆழ்வார்கள், களியமானிக்க பெருமாள், ஆச்சார்யர்கள் சன்னதிகளும் மற்றும் நம்மாழ்வார் சன்னதியும் உள்ளன. இராஜகோபுரம் 96 அடி உயரமுள்ளது.

அத்தி வரதர் எனப்படும் மரத்தல் செய்யப்பட்ட பெருமாள், திருக்குளத்தில் பள்ளி கொண்டிருக்கிறார். முழுதும் அத்திமரத்தால் ஆன பள்ளிகொண்ட பெருமாள் நீண்ட நெடிய உருவம்.40 ஆண்டுகளுக்கு ஒருமுறை, குளத்து நீரை முழுவதும் வெளியேற்றி ஸ்ரீ அத்திவரதரின் திருவுருவச் சிலையை வெளியெடுத்து, கோயிலில் பள்ளிகொள்ள வைத்து ஒருமாத காலத்திற்கு உற்சவங்கள் பிரமாதமாக நடக்கும்.

அத்திவரதரை தம் வாழ்நாளில் தரிசிப்பது மிகப் பெரும் பேறு ஆகையால், எங்கிருந்தெல்லாமோ வந்து மக்கள் பெருமாளைத் தரிசிப்பர்.

திருக்குளத்தின் கிழக்குத்திசையில் சக்கரத்தாழ்வார் என பேசப்படுகின்ற சுதர்சன ஆழ்வார் சந்நிதி அமைந்துள்ளது.தமிழகத்தில் எங்கும் காணமுடியாத மிகப்பெரிய அளவில் சுதர்சன ஆழ்வார் திருமேனி காட்சி தருகின்றது. இவர் 16 கைகளுடன் சங்கு சக்கரங்கள் தாங்கி காட்சியளிக்கின்றார்.

ஒரு சமயம் மும்மூர்த்திகள் உலக நன்மைக்காக செய்த யாகத்தில், பங்கு கொண்ட தேவர்களுக்குக் கேட்ட வரம் எல்லாம் கொடுத்தார் மகாவிஷ்ணு எனவே அவருக்கு வரதர் என்று பெயர் ஏற்பட்டதாகக் கூறுவர். யாகத்தில் அளித்த அவர்ப் பாகத்தை ஒரு சித்திரை மாத திரிவோண நன்நாளில் நாராயணன் புண்ணியகோடி விமானத்தில் சங்கு, சக்கர, கதையுடன் தோன்றி ஏற்றுக் கொண்டார்.

ஸ்ரீ மந் நாராயணன் புண்ணியக்கோடி விமானத்துடன் இங்கு எழுந்தருளிய நன்நாள் சித்திரை மாதத்து திருவோண தின்த்திலாகும். அந்நாளில் தேவர்கள் ஒன்று சேர்ந்து இத்தலத்தில் நித்திய வாசம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ள, நாராயணன் சம்மதித்தார். உடன் ஐராவதம் என்ற யானையே மலை வடிவில் கொண்டு நாராயணனைத் தாங்கி நின்றது. இதனால் இதற்கு அத்திகிரி என்று மற்றொரு பெயரும் ஏற்பட்டது.


ஸ்ருங்கிபேரர் என்ற முனிவருக்கு ஹேமன், சுக்லன் என்று இரண்டு மகன்கள் இருந்தனர். இவர்கள் கெளதம் முனிவரிடம் வித்தைப் பயின்றனர். இவர்கள் இருவரும் விஷ்ணு பூஜைக்குப் பழம் புஷ்பம், தீர்த்தம் கொடுக்கும் பணியினை மேற்கொண்டிருந்தனர். ஒரு நாள் கொண்டு வந்த தீர்த்தத்தை மூடாமல் வைக்க, அதில் ஒரு பல்லி விழுந்து விட்டது. இதை அறியாத இவர்கள் அத்தீர்த்தத்தை அப்படியே கொண்டு வந்து கெளதம முனிவரிடம் கொடுக்க, முனிவர் அதை பெற்றுக் கொண்ட போது அதில் இருந்த பல்லி வெளியில் தாவி ஓடியது.

அதைக் கண்டு கோபமுற்ற கெளதம முனிவர் அவர்கள் இருவரையும் நோக்கி பல்லியாகக்கடவது என்று சாபம் அளித்தார். இதனால் கவலை அடைந்த ஹேமன், சுக்லன் இருவரம் முனிவரின் பாதங்களில் விழுந்து வணங்கி, சுவாமி அறியாமையால் தவறு நடந்து விட்டது எங்களை மன்னித்து, பாபவிமோசனமும் கூற வேண்டும் என வேண்டினர். உடனே முனிவர் சாந்தம் அடைந்து இந்திரன் யானை வடிவம் கொண்டு (கஜேந்திரனாக) வரதனை தரிச்சிக்க இச்சந்நிதியில் நுழைவான் அச்சமயம் உங்கள் சாபம் அகலும் என்று கூறினார்.

அதன் பின்பு ஹேமன், சுக்லன் இருவரும் இத்தலத்தலதிற்கு வந்து மூலவர் அறையின் வெளிப்பிரகாரத்தில், மூலவரின் வடகிழக்கே பல்லியாக வந்து அமர்ந்தனர். குறிப்பிட்ட காலம் நெருங்கியதும் இந்திரன், கஜேந்திரன் (யானை வடிவில்) வடிவம் கொண்டு இத்தலத்தில் நுழைந்த உடன் இவர்களின் சாபம் அகன்றது என்பது, பல்லியின் புராண வரலாற்றுச் சான்றோர்கள் கூறுகின்றனர்.

மேலும் இத்திருக்கோயிலினுள் :-

1. அழகிய சிங்கர் சந்நிதி
2. சக்கரதாழ்வார் சந்நிதி
3. தன்வந்திரி சந்நிதி
4. வலம்புரி விநாயகர் சந்நிதி
5. திருவனந்தாழ்வார் சந்நதி
6. கருமாணிக்க வரதர் சந்நதி
7. மலையாள நாச்சியார் சந்நதி
ஆகியச் சந்நிதிகள் தனித்தனியாக அமைந்துள்ளன.


இத்திருக்கோயிலினுள், வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ள திருக்குளத்தில், அத்தி மரத்தால் செய்யப்பட்ட, கிடந்து நிலையில் உள்ள அத்திவரதர் சிலையை 40 வருடங்களுக்கு ஒரு முறை வெளியில் எடுத்த முறைப்படி பூசைகள் செய்து, ஒரு மண்டலகாலம் பொது மக்களின் தரிசனத்திற்காக வைப்பது வழக்கமாக உள்ளது. கடைசியாக 1979 ஆம் அண்டு எடுக்கப்பட்ட பொது மக்களின் பார்வைக்கும், தரிசனத்திற்கும் வைக்கப்பட்டது.


வரதராஜ பெருமாள் ஹஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் ஹஸ்த நட்சத்திரம் பிறக்கும் தேதியில் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவ விழா தொடங்கும். இவ்விழா 10 நாள்கள் நடைபெறுகிறது.

நன்றி இணையம்