கும்பகோணம் கருப்பூர் பெட்டிகாளி குறை தீர்க்கும் கோயில்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:43 | Best Blogger Tips
கும்பகோணம் கருப்பூர் பெட்டிகாளி க்கான பட முடிவு

கும்பகோணம்_கருப்பூர்_பெட்டிகாளி
குறை_தீர்க்கும்_கோயில்கள்
கஷ்டமெல்லாம் தீரும் 
பெட்டிக்காளியின் அருளால்
கும்பகோணம் - சென்னை மார்க்கத்தில், கும்பகோணத்திலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் இருக்கிறது கொரநாட்டு கருப்பூர்.
இங்கே அமைந்திருக்கும் அருள்மிகு அபிராமி அம்மன் சமேத சுந்தரேஸ்வரர் ஆலயத்தில்தான், ஒரு பெட்டிக்குள் அருள்பாலிக்கிறாள் பெட்டிக் காளி அம்மன். மறக்கருணையோடு தீவினைகளையும், தீய சக்திகளையெல்லாம் சுட்டெரிக்கும், இந்த அம்பிகை, அறக் கருணையோடு தன்னை நாடி வரும் பக்தர்களுக்கெல்லாம் வேண்டும் வரம் தந்து அருள்பாலிக்கிறாள்.
இந்த அம்பிகை இந்தத் தலத்தில் குடியேறிய கதை சிலிர்ப்பானது.
‘‘சுந்தரரால் பாடப் பெற்ற வைப்புத் தலம் இது; புராணப் பெயர்திருப்பாடலவனம்’. முற்காலத்தில் பாதிரி மரங்கள் அடர்ந்திருந்ததால் இந்தப் பெயர் வந்தது. இப்போதும் கோயிலின் தல விருட்சம் பாதிரி மரம்தான். மிகப் பழைமையான கோயில். குபேரன், சூரியன், சுரதன் போன்றோர் வந்து வழிபட்ட தலம் இது.
ராஜகோபுர வாயிலில் இடம்பெற்றிருக்கும் சங்கநிதி, பதும நிதி சிலைகள், கோயிலுக்கே எதிரேயுள்ள பிரம்மதீர்த்தத்தில் குபேரன் தன் படைகளுடன் வந்து, தீர்த்தமாடியதைச் சித்திரிக்கும் சிற்பம் ஆகியன குபேரன் இங்கே வழிபட்டதற்கு ஆதாரமாகத் திகழ்கின்றன. இந்தக் கோயிலை, மூன்றாம் குலோத்துங்கச் சோழன் புனரமைத்துக் கட்டியதாகச் சொல்கிறார்கள். ஐந்துநிலை ராஜகோபுரம் மற்றும் இரண்டு திருச்சுற்றுகளுடன் திகழும் ஆலயத்தில் அனைத்து பரிவார தெய்வங்களையும் அதிகார நந்தியையும் தரிசிக்கலாம். மூலவர் ஸ்ரீசுந்தரேஸ்வரர், அம்பிகை ஸ்ரீஅபிராமி ஆகியோரது சந்நிதிகளுக்கு இடையே ஈசான பாகத்தில் அமைந்திருக்கிறது ஸ்ரீபெட்டிக் காளியம்மன் சந்நிதி. காளிதேவியின் சிரம் வடக்கு நோக்கி இருக்குமாறு பெட்டி வைக்கப்பட்டுள்ளது!’’ என்றார் சிவகுமார் குருக்கள்.
அடுத்து, ஸ்ரீபெட்டிக் காளி அம்மன், இங்கு குடியேறிய திருக்கதையைச் சிலிர்ப்போடு பகிர்ந்துகொண்டார் காளிதாஸ் குருக்கள்:
‘‘பெட்டிக்குள் இருப்பதால், பெட்டிக் காளியம்மன் என்று அழைக்கப் பட்டாலும், ஸ்ரீசுந்தரேஸ்வரர் கோயிலில் இருப்பதால், ‘சுந்தர மகா காளியம்மன்என்பதே இந்த அம்மனின் திருப்பெயர். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன், ஊரின் தென்புறம் உள்ள காவிரி ஆற்றில் மிதந்து வந்த மரப்பெட்டி, இங்கே கருப்பூரில் கரை ஒதுங்கியது. திறந்து பார்த்த மக்களுக்கு பேரதிர்ச்சியும் ஆச்சர்யமும் ஏற்பட்டன. பெட்டிக்குள்ளே எட்டுக் கரங்கள் கொண்ட அஷ்ட புஜ காளியின் திருவடிவம்... அதுவும் தலை முதல் இடுப்பு வரை உள்ள உருவம் படுத்த நிலையில் இருந்தது. எங்கிருந்து வந்தது, யார் அனுப்பியது என்றெல்லாம் எண்ணி மக்கள் குழம்பிய வேளையில், அங்கிருந்த சிறு பெண்ணின் மேல் சாமி வந்தது. காளிதேவியின் மகிமைகளைக் கூறியதுடன், அவளை எவ்வாறு பூஜிக்க வேண்டும் என்றும் அருள்வாக்கு சொன்னாள் அந்தச் சிறுமி.
மலையாளமும் தமிழும் கலந்து, அந்தச் சிறுமி கூறிய அருள்வாக்குப் படி, பெட்டியை ஓர் ஓலைக் குடிசைக்குள் வைத்து, தயிர்சாதம் பள்ளயம் (படையல்) போட்டு வணங்கி வந்தனர் மக்கள். இந்த நிலையில், திடீரென ஒருநாள் அந்தக் குடிசை தீப்பற்றி எரிந்தது. அம்மன் இருந்த பெட்டியைக் காப்பாற்றிய மக்கள், மேற்கொண்டு அந்தப் பெட்டியை எங்கே வைப்பது என்று குழம்பியபோது, ஆன்மிகப் பெரியோர்களின் ஆலோசனையின்படி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் இப்போதிருக்கும் இடத்தில் வைக்கப்பட்டது.
அன்றுமுதல், இந்தக் காளிதேவிக்கு பள்ளயம் போட்டு, பூஜைகள் செய்து வருகிறோம். சர்க்கரைப் பொங்கல், உப்பு இல்லாத தயிர் சாதம் ஆகியவற்றை மட்டுமே அம்மனுக்குப் படைப்போம். உப்பு சேர்த்த எந்தப் பொருளையும் நைவேத்தியம் செய்வது இல்லை. பெட்டியைத் திறப்பதற்கு முன்னர், உக்கிரக் காளியைக் குளிர்விக்கும் பொருட்டு, குளிர்ச்சி தரும் தயிர் பள்ளயம் போடப்படுகிறது. பசுந்தயிர் கலந்த சாதத்தில் வெங்காயம் நறுக்கிச் சேர்த்து பள்ளயம் போடப்படும்.
பெட்டியைத் திறந்தபிறகு, வண்ணமிகு மலர்கள், புனுகு, ஜவ்வாது, சந்தனம், பன்னீர், மஞ்சள், குங்குமம், விபூதி மற்றும் பழங்கள் வைத்து அர்ச்சனை செய்து ஆராதிப்பது வழக்கம். சந்நிதியில் பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் மட்டுமே வழங்கப்படும். வழக்கமாக அம்மன் சந்நிதிகளில் தரப்படுவது போன்று குங்குமம், புஷ்பம், எலுமிச்சம்பழம் ஆகியன இங்கே வழங்கப்படுவது இல்லை.’’
அதேபோல வேறுசில கட்டுப்பாடுகளும் உண்டு இந்தக் காளியைத் தரிசிப்பதற்கு. கர்ப்பிணிகள், எண்ணெய் ஸ்நானம் செய்தவர்கள், முகச்சவரம் செய்தவர்கள் ஆகியோர் காளியைத் தரிசிக்க அனுமதிக்கப்படுவதில்லை.
செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில், படையல் பூஜை செய்யப்பட்ட பிறகு பெட்டி திறக்கப் படுகிறது. மற்ற நாள்களில் நித்தியப்படி நடக்கும் நான்கு கால பூஜைகளின் போதும்கூட பெட்டி திறக்கப்படுவதில்லை.
ஆண்டுதோறும் சித்திரை, வைகாசி மாதங்களில் நடக்கும் திருவிழா நேரங்களில் மட்டும் காளியை வெளியே எடுக்கிறார்கள். அலங்கரித்த காளி அம்மனை பல்லக்கில் வைத்து, சுவாமி புறப்பாடு நடைபெறும். அப்போதும் காளியின் உத்தரவு கிடைத்தபிறகே பல்லக்கு ஊர்வலம் நடக்கும். மாவிலை மற்றும் வேப்பிலை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட வீதிகளின் வழியே அம்ம னின் பல்லக்கு முன்னும் பின்னுமாக ஆடியபடி உலா வருவது, காணக் கண்கொள்ளாத காட்சி! ‘பெட்டிக் காளியம்மன் பல்லக்குத் திருவிழாவில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி, சுற்றுப்பட்டு ஊர்க் காரர்களும் திரளாக வந்திருந்து காளியைக் கண்ணாரக் கண்டு நெஞ்சார வணங்கிச் செல்கின்றனர்.
திருமணத் தடை, குழந்தைப்பேறின்மை, தீராக் கடன், சொத்துப் பிரச்னை போன்ற கஷ்டங்களைத் தீர்க்கும் அருமருந்தாகத் திகழ் கிறாள் பெட்டிக்காளியம்மன். பிரச்னையால் தவிக்கும் பக்தர்கள் நம்பிக்கையோடு இங்கு வந்து பெட்டிக்காளியம்மனைத் தரிசித்துச் சென்றால், விரைவில் கஷ்டங்கள் அனைத்தும் நிவர்த்தியாகும். ராகு கால வேளையில் இந்த அம்மனைத் தரிசித்து வழிபட்டால் ராகு - கேது தோஷம் உட்பட சகல தோஷங்களும் விலகும் என்பது பக்தர்களது நம்பிக்கை.
வலப்புறத்து திருக்கரங்களில் சூலம், அரிவாள், உடுக்கை மற்றும் கிளி திகழ, இடப்புறத்தின் கரங்களில் பாசம், கேடயம், கபாலம் மற்றும் மணி ஏந்தியபடி, ஆக்ரோஷத்துடன் திகழ்கிறாள் இந்த அஷ்டபுஜ காளி அன்னை. என்றாலும், அபயம் என்று வந்தவர் களை ஆதரித்து அரவணைக்கும் அன்னையாகவும் திகழ்கிறாள். நாமும் ஒருமுறை இந்தத் தலத்துக்குச் சென்று சிவ-சக்தியின் அருளோடு காளியம்மையின் திருவருளையும் பெற்றுவருவோம்.
மாசிமகத்தன்று தரிசிக்க வேண்டிய ஐந்து தலங்களில் ஒன்று!
மகாமகக் குளம் அமைந்துள்ள கும்பகோணத்தைச் சுற்றியுள்ள திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், தாராசுரம், சுவாமிமலை, கொரநாட்டு கருப்பூர் ஆகிய ஐந்தும்பஞ்ச குரோச தலங்கள்என்று அழைக்கப்படு கின்றன. ‘குரோசம்என்றால் மிக அருகில் அதாவது இரண்டரை நாழிகையில் கடந்து செல்லக் கூடிய தூரம் என்று பொருள். ஸ்ரீஆதிகும்பேசுவரர் அமுதக் குடத்தினைச் சிதைத்தபோது, அதிலிருந்த அமுதத் துளிகள் சிதறி விழுந்த இடங்கள்தான் இந்த பஞ்ச குரோசத் தலங்கள். மகாமகம் மற்றும் வருடம்தோறும் வரும் மாசிமகத்தன்று, இந்த ஐந்து தலங்களின் தீர்த்தங்களிலும் நீராடி விட்டு, பிறகு மகா மகக் குளத்தில் நீராடுதல் மிகச் சிறப்பானது. அந்த வகையில், கொர நாட்டு கருப்பூரும் சிறப்பானதொரு தலமாக விளங்குகிறது.
எப்படிச் செல்வது?:
கும்பகோணத்தி லிருந்து சென்னை செல்லும் சாலையில், கும்பகோணத்தி லிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது கொரநாட்டு கருப்பூர்.
நடை திறக்கும் நேரம்: காலை 6 முதல் மதியம் 12 மணி வரை; மாலை 4.30 முதல் இரவு 8 மணி வரை.
Image may contain: 1 person, sunglasses and outdoor
நன்றி இணையம்