67வது பிறந்தநாளில் நாளை மோடி திறந்து...........

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:39 | Best Blogger Tips
Image may contain: 1 person, outdoor
67வது பிறந்தநாளில் நாளை மோடி திறந்து வைக்கும் சர்தார் சரோவர் அணையின்..
அகமதாபாத்: உலகின் 2வது மிகப்பெரிய அணையாக கருதப்படும் சர்தார் சரோவர் அணையை வரும் 17ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி நாட்டுக்கு அர்ப்பணிக்க இருக்கிறார்.
அன்றைய தினம் அவருக்கு பிறந்த நாளாகும். இது அவருக்கு குஜராத் அளிக்கும் மிகப்பெரிய பரிசு என மாநில முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் நர்மதா நதியின் குறுக்கே அணை கட்டும் திட்டம் கடந்த 1961ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு இந்த திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

இது உலகின் 2வது மிகப்பெரிய அணையாகவும், இந்தியாவின் மிகப்பெரிய அணையாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள கிராண்ட் கூலி அணை உலகின் மிகப்பெரிய அணையாக கூறப்படுகிறது.
இந்த அணையில் மொத்தம் 30 மதகுகள் உள்ளன. ஒவ்வொன்றின் எடையும் சுமார் 450 டன்கள் ஆகும். ஒவ்வொரு மதகையும் மூட ஒரு மணி நேரம் ஆகும். இந்த மதகுகள் அமைக்க கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அனுமதி அளிக்கவில்லை. மோடி அரசு பதவியேற்றவுடன் 17 நாட்களில் அனுமதி வழங்கப்பட்டதாக குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்தார்.
இந்த அணையில் 121. 92 மீட்டர் உயரத்துக்கு தண்ணீரை சேமித்து வைக்கலாம். மதகுகள் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் தற்போது 138 மீட்டர் உயரத்துக்கு தண்ணீரை சேமித்து வைக்க முடியும். இதன் மூலம் 4. 73 மில்லியன் கன மீட்டர் தண்ணீர் சேமித்து வைக்க முடியும்.
இந்த அணையின் மூலம் சுமார் 2 லட்சத்து 46 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்புக்கு நீர்ப்பாசன வசதி கிடைக்கும். மேலும் குஜராத் மட்டும் அல்லாமல் மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மாநிலத்துக்கு இந்த அணையால் பயன் கிடைக்கும்.
குஜராத் மாநிலத்தில் சுமார் 10 ஆயிரம் கிராமங்களுக்கு குடிநீர் வசதி கிடைக்கும். 1. 2 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த அணையில் அமைக்கப்பட்ட நீர் மின்சக்தி திட்டம் வாயிலாக இதுவரை 4141 கோடி யூனிட் மின்சாரங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் ரூ. 16 ஆயிரம் கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. இதிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தை மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா பகிர்ந்து கொள்கின்றன.
சர்தார் அணைக்கு நர்மதா பச்சாவ் அந்தோலன் என்ற அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதன் காரணமாக கட்டுமான பணிகள் கடந்த 96ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. கடந்த 2000ம் ஆண்டு சில நிபந்தனைகளுடன் மீண்டும் கட்டுமான பணிகளை தொடங்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்த அணையை நாளைய தினம் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்க இருக்கிறார். அன்று அவருக்கு பிறந்த நாள். இது அவருக்கு மிகப்பெரிய பிறந்த நாள் பரிசாக அமையும் என விஜய் ரூபானி மேலும் தெரிவித்தார்.


நன்றி இணையம்