கர்மவீரர் காமராஜர் முதல்வராய் இருந்த போது, மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்ர்க்கை ஒதுக்கீட்டில், முதலமைச்சருக்கென 10 இடங்கள் Quota ஒதுக்கியிருந்தார்களாம். அதற்கென விண்ணப்பங்களும் வரவேற்கப்பட்டனவாம். அந்த விண்ணப்பங்களிருந்து யாரை வேண்டுமானாலும் 10 பேரை முதல்வர் தேர்ந்தெடுக்கலாம். காமராஜரின் உதவியாளருக்கு ஒரு எண்ணம் தோன்றியதாம். ஊரெல்லாம் இவரைப் பெரிய மனம் கொண்டவர் என்று சொல்கிறார்களே, இவர் எந்த அடிப்படையில் மாணவர்களை தேர்ந்தெடுக்கிறார் என்று பார்ப்போம். தன் ஜாதி அடிப்படையிலா, தன் ஊர்க்காரர்களுக்கு கொடுப்பாரா, நண்பர்களின் பிள்ளைகளுக்கு கொடுப்பாரா அல்லது கட்சிக்காரர்களுக்கு கொடுப்பாரா? என்று பார்க்கலாம். அப்போது இவர் சுயரூபம் தெரிந்து விடும் என்று எண்ணினாராம்.
காமராஜர் முன்பு விண்ணப்பங்களை எடுத்து சென்று கொடுத்தாராம். சில நிமிடங்களில் அவற்றை பரிசீலித்த காமராஜர், கடகடவென பத்து விண்ணப்பங்களை எடுத்து கொடுத்து விட்டு சென்று விட்டாராம். அவற்றைப் பார்த்த உதவியாளருக்கோ மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் அவர் எண்ணிய ஒரு அடிப்படையில் கூட அவர் தேர்ந்தெடுத்த விண்ணப்பங்கள் இல்லை. நேராக காமராஜரிடமே சென்று, நீங்கள் தேர்ந்தெடுத்த மாணவர்கள், உங்கள் ஜாதி, ஊர், நண்பர்கள் அல்லது கட்சிக்காரர்கள் என்று எந்த அடிப்படையிலும் வரவில்லையே, பிறகு எந்த அடிப்படையில் இவர்களை தேர்வு செய்தீர்கள்? என்று கேட்டாராம்.
சிரித்துக் கொண்டே கல்வி வள்ளல், கர்மவீரர் காமராஜர் சொன்னாராம், நீங்கள் கொடுத்த விண்ணப்பங்களையெல்லாம் வாங்கிப் பார்த்தேன், அவற்றில் பெற்றோர் கையொப்பம் என்ற இடத்தில் யார் விண்ணப்பங்களில் எல்லாம் கைய்யெழுத்துக்கு பதில் கைநாட்டு [கை ரேகை] இருந்ததோ, அவற்றைத் தான் நான் தேர்வு செய்தேன். எந்த குடும்பத்திலெல்லாம் கல்லாமை என்னும் இருள் இருக்கிறதோ, அவர்கள் வீட்டுக்குத் தான் நாம் முதலில் விளக்கேற்ற வேண்டும் என்று கூறினாராம். இப்படிப்பட்ட தலைவர்களும் நம் தமிழ்நாட்டில் தான் வாழ்ந்துள்ளனர் என்பதில் பெருமிதம் கொள்வோம்.
நன்றி இணையம்