செந்தூரம்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:41 | Best Blogger Tips

சிந்துார் - ( செந்தூரம் )
அழகானஆரஞ்சு நிறம் 
ஆஞ்சநேயர் இருக்கும் ஆலயங்களில் மட்டுமே கிடைக்கும் ..
என் இஷ்ட தெய்வமான அவரின் சிந்தூரை இட்டுக் கொள்வதில் எனக்கு அவ்வளவு இஷ்டம்.
இந்த சிந்தூரின் பின்னால் ஒரு சின்ன கதை உண்டு.
ஒரு முறை அரசவைக்குப் புறப்பட சீதா தேவி தயாராகிக் கொண்டிருந்தார்.
ஒரு வெள்ளிச் சிமிழிலிருந்து சிறிது சிந்தூரை எடுத்து தன் நெற்றி வகிட்டில் இட்டுக் கொண்டார்.
அவரை அழைத்துச் செல்ல வந்த அனுமன் இதை கவனித்தார்.
தாயே உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா ?என்று கேட்டார்.
சீதா தேவியும் தாராளமாக கேள் என்றார்.. நீங்கள் ஏன் தினசரி உங்கள் வகிட்டிலும் சிந்தூரை வைத்துக் கொள்கிறீர்கள் என்றார். .
என் கணவர் நீடூடி வாழ வேண்டும் என்பதற்காக என்றார்.. சீதா தேவி.
பிறகு அனுமன் சீதா தேவியை அரசவை வாயில் வரை சென்று விட்டு விட்டு.. தாயே நீங்கள் செல்லுங்கள் நான் இதோ வந்து விடுகிறேன் என்று கூறிவிட்டு சென்று விட்டார்.
சீதை தன் பணிப்பெண்களுடன் வருவதை கண்ட ராமன் அனுமன் எங்கே? என்று கேட்க.. சற்று நேரத்தில் வந்துவிடுவார் என்று சீதை கூறினார்.
சில நிமிடங்களில் தன் உடல் முழுவதும் சிந்தூரைப் பூசிக் கொண்டு அரசவைக்கு வந்தார் அனுமன் ..
அனுமா இது என்ன கோலம்? என்று ராமன் கேட்க.. அதற்கு அனுமன் ..தெய்வமே.. அன்னை நெற்றி வகிட்டில் வைத்துக் கொள்ளும் சிறு சிந்துார் தங்களின் நீண்ட ஆயுளுக்கு வழி வகுக்கும் என்றால் நான் தங்களின் பரிபூரண ஆயுளுக்காக என் உடல் முழுவதும் சிந்துாரை தினமும் பூசிக் கொள்வேன் என்றார்.
இதைக் கேட்ட ராமனின் கண்கள் அனுமனின் பக்தியையும் வெகுளித்தனத்தையும் நினைத்து கலங்கியது. அனுமனை கட்டித் தழுவிக் கொண்டார்.
இந்தக் கதை ஒரு ஆங்கில சிறுவர் மாத இதழில் படித்தது.
ஜெய் ஸ்ரீராம்...