திராவிட இயக்கம் உயர்சாதி எதிர்ப்பு இயக்கமே தவிர...

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:37 | Best Blogger Tips

திராவிட இயக்கம் உயர்சாதி எதிர்ப்பு இயக்கமே தவிர சாதி ஒழிப்பு இயக்கம் அல்ல: எஸ். குருமூர்த்தி
______________________________________________
மாநிலங்களவையில் சரக்கு, சேவை வரியான ஜிஎஸ்டி மசோதா வெற்றிகரமாக நிறைவேறியுள்ளதுஅதுகுறித்து உங்களது அபிப்ராயம் என்ன? 
ஜிஎஸ்டி வரி மசோதாவில் எனக்கு முழுமையான ஒப்புதல் இல்லை. இதில் நிறைய பிரச்சினைகள் உள்ளன. எல்லாக் கட்சிகளும் சேர்ந்து, இது சீர்திருத்த நடவடிக்கையென்று ஒரு சித்திரம் உருவாக்கப்படுகிறது. பல ஆண்டுகளாகவே வெளிவந்த பத்திரிகைக் கட்டுரைகளுக்கும் பொருளாதார நிபுணர்களுக்கும் பங்குண்டு. ஆனால் இதில் இருக்கும் பிரச்சினைகளை யாரும் எடுத்துக்காட்டவேயில்லை. உணவுப் பொருட்கள் மீது வரிவிதிப்பது என்பது நமது நாட்டில் இயலாத ஒரு காரியம். ஹரியானாவில் அரிசி மீது 16 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களில் இதை நினைத்தே பார்க்கமுடியாது. 
இதுபோன்ற பிரச்சினைகள் குறித்து பத்திரிகைகள் எதுவும் தீவிரமாக விவாதிப்பதாகவும் தெரியவில்லை. இது துரதிர்ஷ்டமானது. நாட்டில் நடக்கும் பெரிய சீர்திருத்தம் என்றும் இது விளம்பரம் செய்யப்படுகிறது. இதுபோன்ற சீர்திருத்தம் இந்திய அளவிலேயே நடக்கவில்லை என்ற தோற்றமும் இருக்கிறது. சாதாரணமாக நாட்டின் நலனில் அக்கறையுள்ளவர்களுக்குக் கூட, இந்தச் சட்டம் நிறைவேற்றப்படவில்லையெனில், பொருளாதார சீர்திருத்தமே நடக்காது என்பது போன்ற ஏக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, இந்தப் பிரச்சினைகளை எல்லாம் விவாதிக்கப்பட வேண்டிய கட்டாயம் உருவாகும். இன்றுள்ள சில பிரச்சினைகளுக்குத் தீர்வு இருந்தாலும், மேலும் சில பிரச்சினைகள் உருவாக வழிவகுக்கும். அவை எல்லாவற்றையும் சமாளிக்க வேண்டியிருக்கும். 
இந்தியாவைப் பொருத்தவரை பொருளாதாரத்துடன் உயிரோட்டமான தொடர்புடையது சாதி என்று தொடர்ந்து சொல்லி வருகிறீர்களே? 
சாதிக்கும் பொருளாதாரத்துக்குமான தொடர்பை நான் 25 ஆண்டுகளாக ஆராய்ந்து வருகிறேன். பல்வேறு சாதிய அமைப்புகளுடனும் எனக்குத் தொடர்பு உண்டு. தொழில்முனைவுக்கான முக்கியமான கருவி சாதி என்று தி இந்துவில் நான் எழுதியிருக்கிறேன். 
சாதி தொடர்பான பெருமிதங்கள் தானே கவுரவக் கொலைகளுக்கும் காரணமாக இருக்கின்றன? 
அவை தனிப்பட்ட சம்பவங்கள். அதை யாராலும் தடுத்து நிறுத்தவெல்லாம் முடியாது. உலகம் முழுக்க இந்த வேறுபாடுகள் இருக்கின்றன. ஒரு கொலை நடக்கிறது என்பதற்காக எல்லா சமுதாயங்களும் பிரிந்திருக்கின்றன என்று நாம் கருதவேண்டியதில்லை. ஆங்காங்கே நடக்கும் கவுரவக் கொலைகள் பெரிதுபடுத்தப்படுகின்றன. எட்டு கோடி பேர் வசிக்கும் ஒரு மாநிலத்தில் கவுரவக் கொலைகளின் சதவீதத்தைப் பார்த்தால் மிகவும் குறைவுதான். 
பதிவாகாத சம்பவங்களும் நடக்கத்தானே செய்கின்றன? 
அதையெல்லாம் நான் நம்பமாட்டேன். பதிவாகாத சம்பவங்களைப் பற்றி ஆய்வு செய்யுங்கள். இது ஆய்வு செய்யமுடியாத விஷயமுமல்ல. எந்தக் குற்றத்தையும் மறைக்கலாம். ஆனால் கொலையை மறைக்கவே முடியாது. இன்று அது சாத்தியம் இல்லை. தமிழ்நாட்டைப் பொருத்தவரை நடக்கும் கொலைகளின் எண்ணிக்கையே குறைவுதான். உலகிலேயே ஆண்டுதோறும் நடக்கும் கொலைகளை ஒப்பிட்டால், கொலைகள் மிகவும் குறைவாக நடக்கும் நாடு பாரத நாடுதான். நமது நாட்டில் 6 லட்சத்து 68 ஆயிரம் கிராமங்கள் இருக்கின்றன. 12 ஆயிரத்து 800 காவல் நிலையங்கள் தான் உள்ளன. அப்போதுகூட, கொலை, களவுச் சம்பவங்கள் மிகமிகக் குறைவாக நடக்கும் நாடு இந்தியா தான். பாலியல் வல்லுறவுக் குற்றங்கள் இன்னும் குறைவு. ஆனால் இந்தப் புள்ளிவிவரங்களையெல்லாம் பார்க்காமலேயே ஊடகங்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளைச் சொல்லிக் கொண்டேயிருக்கின்றன. போதுமான எந்த ஆய்வும் இங்கே நடப்பதில்லை. ஆதாரமின்றி செய்தித்தாள்களில் எழுதுவது அதிகமாகிக் கொண்டிருக்கிறது. கண்ணோட்டத்தின் அடிப்படையில் எழுதுவது அதிகமாகி விட்டது என்று ஊடகங்களை நோக்கி என்னால் குற்றம்சாட்டவே முடியும். அரசியல்கட்சிகள் போல ஆதாரமின்றி பத்திரிகைகள் பேசுவது வழக்கமாகிவிட்டது. 
ஆனால் தீண்டாமை, தீண்டாமை தொடர்பான கொலை உள்ளிட்ட கொடுமைகள் இன்னும் இந்து மதத்தின் பேரால் இந்தியாவில் நடந்துகொண்டு தானே இருக்கின்றன? 
உலகளவில் கிமு ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து மனிதர்களால் மனிதர்கள் பெரிய எண்ணிக்கையில் கொல்லப்பட்ட சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 680 மில்லியன் மக்கள் குறைந்தபட்சம் இக்காலகட்டத்தில் உலகம் முழுவதும் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் இந்தியாவில் 13-ம் நூற்றாண்டு வரை, கலிங்கப் போரிலும், உடன்கட்டை மற்றும் தீவட்டிக் கொள்ளைச் சம்பவங்களிலும் தான் அதிகம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். உடன்கட்டை ஏறும் முறை ராஜஸ்தான் மற்றும் வங்காளத்தில் இருந்துள்ளது. அதுவும் மற்ற நாடுகளில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடும்போது எண்ணிக்கை மிகவும் சொற்பம் இங்கே. பெருந்திரளாக கொலைகள் நடக்காததற்குக் காரணம் என்ன? வித்தியாசங்களுடன் சுமுகமாக இங்கே வாழமுடியும் என்பதை நிலைநாட்டியவர்கள் தான் ஆதிசங்கரர், ராமானுஜர் போன்ற மகான்கள். வித்தியாசங்களில் ஏற்றத்தாழ்வுகளும் இருக்கலாம். அதையும் மீறி வாழத் தெரிந்தவர்கள் தான் உயர்ந்த மனிதர்கள். 
ஒரு கொலை நடந்தால் அந்தப் பிரச்சினையைத் தீர்க்க முயற்சிக்க வேண்டும். இருதரப்பினரையும் சமாதானமாக்க முயற்சிக்க வேண்டும். கொலை நடப்பது சாதியினால் தான், சாதி ஒழிக என்று கூச்சல் போடுவதில் அர்த்தமேயில்லை. சாதி ஒழியவே போவதில்லை. சாதியை எப்படிக் கையாளவேண்டும் என்றுதான் பார்ப்பேன். நான் ஒரு எதார்த்தவாதி. அடிப்படையில் நான் ஒரு பொருளாதாரவியலாளன். பொருளாதாரத்தைப் பொருத்தவரை ஒரு நபரின் இயல்பை மாற்றமுடியாது. அவன் எப்படி இருக்கிறானோ அவன் போக்கில் போய்த்தான் கையாளவேண்டும். இதைத் திருத்த வேண்டும் என்று வரலாற்றில் நினைத்தவர்கள் இரண்டுபேர். கார்ல்மார்க்ஸ் அதில் ஒருவர். அவர் செய்தது சமூகமாற்றம். அது இப்போது முழுமையாக உருக்குலைந்துவிட்டது. சந்தை வழியாக சரிசெய்ய முயன்ற இன்னொருவர் ஆடம் ஸ்மித். ஆனால் அதுவும் தோற்றுப்போனது. சீரான பொருளாதாரம் என்பது சாத்தியமில்லை. கலாசாரத்தோடு சேர்ந்துதான் பொருளாதார முன்னெடுப்புகளைச் செய்யமுடியும் என்பதை மில்லனியம் இலக்காக ஐக்கிய நாடுகள் சபையே ஒத்துக்கொண்டுவிட்டது. இதையெல்லாம் யாரும் நம்மூரில் விவாதிப்பது கூட இல்லை. வித்தியாசங்கள் எப்போதும் இருக்கத்தான் செய்யும். அதை இணக்கமாக்கும் முயற்சியைத் தான் செய்யவேண்டும். நமது ஊரைப்பொருத்தவரை பொருளாதார ஆராய்ச்சி பூஜ்ஜிய நிலையில் உள்ளது. 
சாதியொழிப்பு சார்ந்து ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக அரசியலும் போராட்டங்களும் விவாதங்களும் நடந்த இடம் தமிழகம். சமீபகாலத்தில் அனைத்து சாதிகளும் தம்மை மறுஉறுதி செய்வதற்காக ஒன்றாகத் திரள்வதையும் அதுதொடர்பான மோதல்களும் அதிகரித்திருக்கின்றன. அதை எப்படி பார்க்கிறீர்கள்? 
சாதி ஒழிப்பு என்பது அரசியலாகப் பேசப்பட்டது. ஆனால் சாதியொழிப்பு என்பது சிறிதளவு கூட இங்கே நடக்கவில்லை. திராவிட இயக்கம் உயர்சாதி எதிர்ப்பு இயக்கமாக இருந்ததேயொழிய சாதி ஒழிப்பு இயக்கம் அல்ல. பிராமணர்கள் தான் சாதிக்குக் காரணம் என்று சொல்லி அவர்களை இலக்காக வைத்தார்கள். இந்தியாவைப் பொருத்தவரை சாதியை ஒழிப்பது அல்ல, சாதியை மைய நீரோட்டத்தோடு இணைத்தால் தான் சாதி போகும் என்பதற்கு வெற்றிகரமான உதாரணம் தான் கான்ஷிராமின் பகுஜன் சமாஜ் கட்சி. அதனால் சாதி இங்கே இருக்கத்தான் செய்யும். இந்த உண்மையை இந்தியாவில் ஆங்கிலம் படித்த ஒரேயொரு அறிவாளியை வெளிப்படையாக ஒத்துக்கொள்ள வைக்கமுடியுமா சொல்லுங்கள். அதற்குத் தைரியம் கிடையாது. சாதி இருக்கத்தான் போகிறது. அதை எப்படிக் கையாள்வது என்பதுதான் சவால். 
உலகமயமாதலும், நகர்மயமாவதும் சாதியை ஓரளவு நீர்த்துப் போகச் செய்யாதா? 
உலகமயமாதல் என்ற நடைமுறை, 2019-ல் நிலைகுலையும். என்னுடைய பொருளாதாரச் சிந்தனையை எதிர்ப்பதற்கு வலு உள்ளவர்களே இன்று குறைவு. ‘செயல்பூர்வமான பொருளாதாரம்’(functional economy) என்ற திட்டமே இன்று உலகெங்கும் இல்லை. பொருளாதாரத் திட்டமே நிலைகுலைந்து போயுள்ளது. வன்னியர்களும், முக்குலத்தோரும், தலித்களும் அரசியலை நோக்கிப் போனதால் பொருளாதாரத்தில் பின்தங்கினர். நாடார்கள், கவுண்டர்கள், நாயுடு மற்றும் ராஜூக்கள் வர்த்தகத்தில் கவனம் திருப்பினார்கள். அதனால் பொருளாதாரத்தில் முன்னேறிய சமூகத்தினர் ஆனார்கள். வன்னியர்களிடம் நான்கு லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் நிலம் உடைமையாக உள்ளது. ஆனால் லாரியோ அரிசி மில்லோ அவர்களில் எத்தனை பேர் வைத்துள்ளனர்? எத்தனை பேர் பண்டக சாலை வைத்துள்ளனர். முக்குலத்தோர், தலித், வன்னியர் மக்கள் வணிகத்தில் முன்னேறினால் தமிழகம் இந்தியாவிலேயே பொருளாதாரத் தன்னிறைவு பெற்ற மாநிலமாக இருக்கும். தேவேந்திர குல வேளாளரின் சமீபத்திய வளர்ச்சி அவர்களின் நிலவுடைமை சார்ந்ததுதான். இது பாராட்டத்தக்கது. இந்தியா போன்ற நாடுகளைப் பொருத்தவரை, சமூகத்தை தனிநபரின் அடிப்படையில் படைக்க முடியாது. அரசின் வலு அதிகமாகும். குடும்பங்கள் சிதையும். கணவன், மனைவி பிரியாமல் இருந்தால்தான் நாட்டின் பொருளாதாரம் நன்றாக இருக்கும். 
சுதந்திர இந்தியாவும் சமநீதியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அரசியல் சாசனத்தின் கனவுகளும் சாத்தியமில்லாமல் ஆகிவிட்டதா? 
வகுப்பு பேதமற்ற சமூகமும், சாதியற்ற சமூகமும் வேண்டுமென்றுதானே 1950-ல் தொடங்கினோம். ஆனால், தற்போது வகுப்பு பேதத்தை ஏற்றுக்கொண்டு விட்டோமே. முகேஷ் அம்பானிக்கு 60 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கலாம் என்று அரசாங்கம் ஒத்துக்கொண்டு விட்டது. சாதியற்ற சமூகத்துக்குப் பதிலாக சாதியை அடிப்படையாகக் கொண்ட அரசியல் வந்துவிட்டது. அரசியல், சாதிக்கு சவால் விட்டது. ஆனால் சாதி வென்றுவிட்டது. ஐந்து வருடத்திற்கு மட்டுமே மதிப்புள்ள அரசியல் என்பது காலம் காலமாக இருந்த சாதி என்னும் நிறுவனத்தின் முன்பு தோற்றுவிட்டது. தற்காலிக சக்திகள், நிரந்தர சக்திகளுடன் போராட முடியாது. கார்ல் மார்க்ஸ், லெனின் போன்றவர்கள் புரட்சி வழியாக இதையெல்லாம் சரிசெய்யலாம் என்று நினைத்தனர். அதுவும் தோல்வியடைந்துவிட்டது. அதனால் நாம் சாதி விஷயத்தில் எதார்த்தவாதியாக இருக்க வேண்டும். 
கடந்த இருபது ஆண்டுகளில் வழிபாடுகள், ஜோதிட நம்பிக்கைகள், சமய நம்பிக்கை கூடுதலாகப் பெருகியுள்ளதே? 
நவீன வாழ்க்கை எத்தனையெத்தனை சிதறல்களைக் கொண்டுவருகிறதோ, அத்தனையத்தனை அந்நியமாதலையும் கொண்டுவருகிறது. அதனால் மக்கள் கடவுளிடம் போய் சரணடைகிறார்கள். நமது வாழ்க்கை எந்தளவுக்கு மாறுகிறதோ அந்த அளவுக்கு அதற்கான எதிர்வினையும் நம் சமூகத்தில் இருக்கும்
Courtesy: The Tamil Hindu