காஞ்சி மாமுனி மஹாபெரியவாளின் நிகழ்வுகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 3:29 AM | Best Blogger Tips


மஹா பெரியவாளின் கருணையா ?
காருண்யமா?
பம்பாயைச் சேர்ந்த ஏழை இளைஞர். இவரின் தந்தை பம்பாயில் ஒரு தனியார் நிறுவனத்தில் சிறிய பணியில் இருந்தார். மிக சொற்ப வருமானம். இளைஞர், அவருக்கு ஒரு தங்கை என இரு குழந்தைகள். தன் சொற்ப வருமானத்தில் இரு குழந்தைகளையும் படிக்க வைத்து குடும்பத்தையும் சிரமத்தோடு நடத்தி வந்த தந்தை திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார். அப்பொழுது அந்த இளைஞர் பியுசி படித்துக் கொண்டிருந்தார். இளைஞரின் படிப்பு அத்துடன் நிற்க குடும்பப் பொறுப்பை ஏற்க வேண்டிய சூழல். எங்கு தேடியும் வேலைக் கிடைக்காததால், அவ்வப் பொழுது கிடைக்கும் சிறு பணிகளைச் செய்து, பொருள் ஈட்டினார். தாயும் தன் பங்குக்கு அக்கம் பக்கம் உதவி செய்து பணம் ஈட்டினார் என்றாலும் நிரந்தரப் பணி இல்லாததால் வருமானமும் நிரந்தரமாக வரவில்லை. மிகவும் கஷ்ட நிலைதான் என்றாலும் அந்த கஷ்ட நிலையிலும் தன் தங்கையை படிக்க வைத்தார். வந்த வருமானத்தை வைத்து தாய் எப்படியோ சமாளித்து வந்தார். அவர்கள் பொருளில் வறியவர்களாக இருந்தாலும், குணத்தில் செல்வந்தர்களாக வளர்க்கப்பட்டிருந்தனர். அமைதியான நடத்தை, நல்ல ஒழுக்கம், சிறந்த பக்தி, பெரியவர்களிடத்து மரியாதை, நேர்மை என நல்ல பண்புடன் இருந்தனர். 
ஐந்து வருடங்கள் கடந்த நிலையில் தாயும் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். மன வேதனையும், வறுமையும் வாட்ட தாயின் பொருளுதவியும் நின்று போன நிலையில் குடும்பம் தத்தளித்தது. தங்கையின் படிப்பு பத்தாம் வகுப்புடன் நின்றது. தாய் ஈட்டிய சிறு பொருள் கொண்டு வாரம் ஐந்து நாட்கள் உணவருந்திய குடும்பம் மூன்று நாட்கள் கூட சமாளிக்க முடியாது திண்டாடியது. தாங்க முடியாத சூழலில் தங்கை வீட்டு வேலை செய்து பொருள் ஈட்டுவதாக சொல்ல, அண்ணனின் உள்ளம் வலித்தது. தன்னை விட ஏழு வயது சிறிய தன் தங்கையை, தன் தந்தை மறைவுக்குப் பின், தந்தையாக பொறுப்புக்களை தோளில் சுமந்து, எப்பாடு பட்டாவது பட்டாதாரியாக்கி ஒரு நல்ல வேலையில் அமர்த்தி விட வேண்டும் என கனவு கண்டவர்; மிகுந்த பாசம் கொண்டவர்; தான் கஷ்டப்பட்டாலும் தன் தங்கை கஷ்டப் படக் கூடாது என கண்ணும் கருத்துமாக வளர்த்தவர், தங்கையின் சொல் கேட்டு கண்ணீர் சிந்தினார். மனமும் கனவும் பெரிதாக இருந்து என்ன பயன் , அதை செயல்படுத்த சரியான சூழ் நிலை இல்லையே; அந்த நொடிப் பொழுதை கடந்து தான் ஆக வேண்டும் என உண்மை உறைக்க, தங்கையின் பிடிவாதத்திற்கு ஒப்புக் கொண்டார்.
மூன்று மாதங்கள் வலியும் வேதனையுமாய் கழிய, தன் தந்தையின் நெருங்கிய சொந்தக்காரர் திரு நெல்வேலியில் இருப்பது நினைவுக்கு வந்தது. அவரிடம் சென்று உதவிக் கேட்போம். அவர் சிபாரிசில் அங்கேயே ஏதாவது வேலை கிடைத்தால் தங்கையையும் அழைத்துக் கொண்டு வந்து விடலாம் என புதுக் கனவு கண்டார். கஷ்டப்பட்டு போக்குவரத்து செலவுக்கு என சிறிது பொருள் சேமித்து, உறவினருக்கு தன் வருகை குறித்து தபால் எழுதி விட்டு, தங்கையையும் பத்திரமாக இருக்கச் சொல்லி விட்டு திருநெல்வேலிப் புறப்பட்டார். திருநெல்வேலியில் தன் உறவினர் வீட்டுக்குச் சென்றவருக்கு பெரும் அதிர்ச்சி . வாசலில் ஒரு பெரிய பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது. அக்ரஹாரத்தில் அக்கம் பக்கத்தவரிடம் விசாரிக்க, ‘அவர்கள் வெளியூர் சென்று விட்டார்கள், எப்பொழுது வருவார்கள் எனத் தெரியாதுஎன அனைவரும் ஒரே பதிலையே கூறினர். மிகவும் நெருங்கிய உறவு என்பதால் முழுமையாக அவரை நம்பி வந்து விட்டார். கையிலோ மிகவும் சொற்ப பணம். திரும்பிப் போக முடியுமா என்பதே கேள்விக்குறி. அங்கு வேறு யாரையும் தெரியாது. பொழுது சாய்ந்து விட்டதால், சரி நாளை அவர் வருகிறாரா என பார்ப்போம் என முடிவு செய்து பிரயாணக் களைப்பில் ஒரு வீட்டுத் திண்ணையில் அயர்ந்து உறங்கி விட்டார்.
காலையில் பொது இடத்தில் குளித்து விட்டு அரை குறையாக வயிற்றை நிரப்பி விட்டு உறவினருக்கு காத்திருந்தார். அன்றும் அவர் வரவில்லை. அன்றைய பொழுது பயனில்லாது போயிற்று. மறு நாள் பொழுது விடிந்தது. அவருக்கும் தான் வாழ்க்கையில் புதிய உதயம் தோன்றியது. வழக்கம் போல் உறவினருக்கு காத்திருந்தவருக்கு ஏமாற்றம் தான். நம் வருகை அறிந்து உறவினர் பயணப் பட்டிருப்பாரோ என சந்தேகம் எழுந்தது. மேற் கொண்டு என்ன செய்வது எனப் புரியவில்லை.
அந்த சமயத்தில் நமது மஹா பெரியவா திரு நெல்வேலியில் முகாமிட்டிருந்தார். அக்ரஹாரத்து மக்கள் அவரைத் தரிசிக்க செல்ல இவருக்கும் தரிசிக்க ஆவல் பிறந்தது. அவர் முகாமிட்டிருந்த இடம் சென்றார். கூட்டம் வழிய அந்த கூட்டத்துடன் அவரும் கலந்தார். தரிசிக்க முடியுமா என்று தெரியவில்லை. பொறுமையுடன் காத்திருந்தார். நேரம் நகர்ந்துக் கொண்டிருந்த்து. அந்த சமயம் பின் இருந்து ஒருவர் வந்து, “ என்னப்பா, பெரியவாளைத் தரிசிக்க வந்தியா? வாஎன்று அவரை முன் நோக்கி அழைத்துச் சென்று பெரியவா முன் நிறுத்தி விட்டு சென்று விட்டார்.
மஹா பெரியவா முன் நின்ற இளைஞர் நமஸ்கரித்து எழுந்தார். அவரின் உள்ளத்து சோகத்தையும், கள்ளமில்லா உள்ளத்தையும் படம் பிடித்த மஹா பெரியவா, “என்னப்பா எங்கேந்து வர?” எனத் துவக்கினார். பம்பாய்லேந்து வரேன்என வார்த்தைகள் வாயிலிருந்து தடங்கி தடுக்கி விழுந்தது. யாரு... இன்னார் பையனா நீ?” எனக் கேள்வி எழுப்ப, இளைஞர் ஆம் எனத் தலை அசைத்தார். மேலும் அவரைப் பேச விடாது பெரியவாளே பேசத் தொடங்கினார். உங்க அப்பாவத் தெரியும்பா. அவர் மடத்துக்கு வந்திருக்கார். உங்க தாத்தாவுக்கும் மடத்துக்கும் தொடர்பு உண்டு. உன் அப்பா அம்மா காலமாயிட்டா இல்லியோ. இப்ப நீ என்ன பன்ற?”
வேலை ஒன்னும் இல்லைப் பெரியவாநா தழு தழுத்தது.
உன்னோட வேற யார் இருக்கா?”
ஒரு தங்கை மட்டுமதான்
அவ என்ன பண்றா?” 
பத்தாவது படிச்சுட்டு வீட்டு வேலை பாக்கறாஎன்றார் கண்ணீர் வழிய. 
சில நொடி அமைதிக்குப் பின் மஹா பெரியவா தொடர்ந்தார். நீ யாரை நம்பி இங்க வந்தியோ அவா உன் வருகை தெரிஞ்சு வேற ஊர் போய்ட்டா. இனி அவாளுக்காக காத்திருக்காத. இன்னிக்கே ஊருக்கு கிளம்பு. இனிமே நீ யாரையும் நம்பி இருக்க வேண்டாம். கவலைப்படாம போஎன்று சொல்ல இளைஞர் ஒன்றும் பேசவில்லை. கைகட்டி நின்றார். மஹா பெரியவா அருகே இருந்தவரிடம், “யார் இவனை அழைச்சுண்டு வந்தா?” என்று கேட்க, அந்த அன்பர் முன் வந்து, “நீங்க தான் பெரிவா என்னை அழைச்சுண்டு வரச் சொல்லி சொன்னேள்..என்று இழுக்க, “ நானா?” என பெரியவா கேட்க, எல்லோரையும் நற்செயலுக்கு ஏவிவிட்டு வேடிக்கைப் பார்க்கும் குரு(றும்பு) நாதரின் கேள்விக்கு என்ன பதில்? --- வந்தவர் அமைதி காக்க, “ சரி , நீ ஒண்ணு செய். இவனுக்கு ஆகாரம் பண்ணி வெச்சு, அவன் பம்பாய் போய் சேர ரயில் டிக்கெட்டும் வாங்கிக் கொடுஎன்று சொல்ல வந்தவர் அதை பெரும் பாக்கியமாக எடுத்துக் கொண்டார். இளைஞர் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரிக்க, மஹபெரியவா ஆசியுடன் அனுப்பி வைத்தார்.
மஹாபெரியவாளைத் தரிசித்த நினைவுகள் நீண்ட பயணத்தின் துணை வர இளைஞரும் பம்பாய் ரயில் நிலையம் வந்தடைந்தார். ரயில் நிலைய நுழைவு வாயிலில் டிக்கெட் பரிசோதகர் டிக்கெட் கேட்க, சட்டைப் பையில் கை விட டிக்கெட் அங்கு இல்ல. பேன்ட் பாக்கெட்டில் கை விட அங்கும் இல்லை. அவசரம் அவசரமாக தான் ஒரு மாற்றுத் துணி வைத்திருந்த துணிப் பையில் தேட டிக்கெட் அங்கும் இல்லை. பரிசோதகர் அவரை தனியே ஓரமாக நிறுத்தி வைத்தார். ரயில் உள்ளே இரு பரிசோதகர் வந்த பொழுது இருந்த டிக்கெட் எப்படி காணாமல் போனது என மூளை சிந்திக்க, உடம்பு பதற்றமடைந்து மீண்டும் மீண்டும் தேட, உள்ளம் மட்டும் மஹா பெரியவாளின் நினைவுகளிலிருந்து அகலாது நின்றது. கையிலோ மிகவும் சொற்ப பணம், தண்டனைக்குரிய தொகையை எப்படியும் செலுத்த முடியாது. எதையும் மேற்கொண்டு சிந்திக்க முடியாது நின்றார்.
டிக்கெட் பரிசோதகர் தன் பணி முடித்த பின் இவர் பக்கம் திரும்பினார். 
நீ ஏன் ஓரமா நிக்கற?”
சார் நீங்கதான் என்னிடம் டிக்கெட் இல்லை என்று நிறுத்தி வைத்திருக்கிறீர்கள்என்றான். 
பார்வையில் தமிழர் எனப் புரிந்து கொண்ட பரிசோதகர் ஓ தமிழா.. இல்லியே வேற காரணத்துக்குன்னா ஒன்ன நிறுத்தி வெச்சேன்
என்று அவர் சிந்திக்க, அவர் யோசனைக்கு ஒன்றும் எட்டவில்லை. இல்ல டிக்கெட் இல்லனு தான் என்னை நிறுத்தி வைத்தீர்கள் என அவர் மீண்டும் சொல்ல இவர் மறுக்க, இப்படியே போய்க் கொண்டிருந்த்து. அங்கு அவருள் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருப்பவர் நம் மஹா பெரியவர் அல்லவா? (பரிசோதகருக்கு இளைஞரின் நேர்மையை படம் பிடித்து காட்டிக் கொண்டிருந்தார். )மஹா பெரியவா தான் எண்ணிய வேலை நடந்து முடியும் வரை விலகுவதில்லை. அனைவரையும் கைப்பாவையாக்கி நடனம் ஆட வைப்பவரின் பொம்மலாட்டம் அங்கு அரங்கேறிக் கொண்டிருந்தது. 
யோசித்துக் கொண்டே நடந்தவர் அந்த இளைஞனையும் அழைத்துக் கொண்டு தன் அலுவலக அறை வந்தார். அவனை அமர வைத்து அவனைப் பற்றி கேட்டு விட்டு எங்கிருந்து வருகிறாய் என கேட்க, டிக்கெட்டைத் தவறவிட்ட எனக்கு அபராதம் விதிக்காது அமர வைத்து தன்னைப் பற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறாரே என குழப்பமாக இருந்தது. இருந்தாலும் பெரியவர் - தந்தை ஸ்தானத்தில் இருப்பவர் என எண்ணி இளைஞர் பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார். தான் திரு நெல்வேலி சென்றதையும் உறவினர் இல்லாததால் செய்வதறியாது நின்றதையும் மஹா பெரியவாளைத் தரிசித்ததையும் - ஏன் சொல்கிறோம் எனப் புரியாமலே கொட்டிக் கொண்டிருந்தார். காஞ்சி மஹா பெரியவாளைத் தரிசினம் பண்ணியா காஞ்சிப் பெரியவாளையா - அந்த மஹானையா என கண்கள் அகல விரிய - உள்ளம் மத்தாப்பாய் - மலர மீன்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருந்தவர் பெரியவாளை நினைத்து தலை மீது கரம் குவித்து வணங்கினார். அந்த இளைஞர் மீது மேலும் ஆர்வம் ஏற்பட அவன் குடும்பத்தை பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்.
அந்த இளைஞர் அனைத்து விவரங்களையும் கூற, அந்த இளைஞரின் நேர்மை, பணிவு என அனைத்தும் அவரைக் கவர தன் முகவரியைத் தந்து இன்றே நீ உன் தங்கையை அழைத்துக் கொண்டு என் வீட்டிற்கு வா என்று அனுப்பி வைத்தார். அன்றைய நிகழ்வுகளை இளைஞரால் நம்ப முடியவில்லை இது நாம் தரிசித்த மஹா பெரியவாளின் கருணைதான் எனப் புரிந்து அவருக்கு மனமார நன்றி செலுத்தினார். டிக்கெட்டைத் தொலைக்கச் செய்து கருணையும் காட்டி விட்டாரே என உள்ளம் உருக நன்றி செலுத்தினார். வீட்டிற்கு வந்து தன் தங்கையிடம் நடந்தவைகளைக் கூறி, அன்று மாலையே டிக்கெட் பரிசோதகரின் இல்லத்துக்கு இருவரும் சென்றனர். முதல் பார்வையிலேயே அண்ணன் தங்கையை தம்பதியருக்கு பிடித்து விட அவர்களை தங்கள் இல்லத்திலேயே தங்கும்படி கேட்டுக் கொண்டனர்.
டிக்கெட் பரிசோதகர் அந்த இளைஞரை கல்லூரியிலும். தங்கையை மேற்படிப்பிலும் சேர்த்தார். குழந்தைப் பாக்கியம் இல்லாத அத் தம்பதியர் - இருவரையும் தங்கள் சொந்த பிள்ளைகள் போல் பார்த்துக் கொண்டனர். எங்கோ அனாதையாய் கிடந்த தங்கள் மீது பாசத்தைப் பொழியும் தம்பதியர் மீது இவர்களும் மிகுந்த அன்பு காட்டினர். நல்ல ஒழுக்கம், அடக்கம், பணிவு, பக்தி, மரியாதை, சொந்த பெற்றோரைப் போல் கண்ணும் கருத்துமாய் இயல்பாய் அக்கறைக் காட்டுவதும் பாசத்தைப் பொழிவதுமென அவர்களின் நடவடிக்கை அனைத்தும் தம்பதியரைக் கரைய வைத்தது. பிள்ளைப் பாசத்தையே அனுபவித்திராத அவர்களுக்கு, இவர்கள் இருவரும் காட்டிய பாசம் உள்ளத்தை உருக்கியது. வயதான காலத்தில் மஹா பெரியவாதான் இவர்களைக் காண வைத்து அனைத்து சந்தோஷங்களையும் தந்து ஆனந்தப் பட வைத்துள்ளார் என மஹா பெரியவாளை வணங்கித் தம்பதியர் நன்றி கூறினர்.
மாதங்கள் நகர்ந்தன. தம்பதியர் இருவரும் ஏக மனதாக முடிவு செய்து, அவர்கள் இருவரையும் தங்கள் வாரிசாக சட்டப்படி தத்து எடுத்துக் கொண்டனர். மஹா பெரியவாளைத் தரிசித்த நாள் முதல் தன் வாழ்வில் ஒவ்வொரு நாளும் நடந்து வரும் அதிசயத்தை உணர்ந்த இளைஞர் பக்தியுடன் நாள் தவறாது நன்றி செலுத்தினார். ஆதரவற்று பெரும் பள்ளத் தாக்கில் வீழ்ந்திருந்த தனக்கு அன்புக் கரம் நீட்டி ஆசியுடன் பெரும் பாக்கியத்தையும் அள்ளிக் கொடுத்த மஹா பெரியவாளே அவரின் முழு முதற் தெய்வமானார். அனாதையாய் நின்ற தனக்கும் தன் தங்கைக்கும் அன்பு பெற்றோர்களாகி வளமும் தந்த டிக்கெட் பரிசோதகர் தம்பதிகளை தன் சொந்த பெற்றோராகவே பூஜித்தார். வருடங்கள் நகர்ந்தன. தம்பதியர் தங்கையை ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்தனர். இளைஞரும் ஒரு தனியார் அலுவலகத்தில் ஒரு பணியில் அமர்ந்தார். இளைஞருக்கும் திருமணம் செய்ய வரன் தேடிய பொழுது வரன் அமையாது, வயது கடந்துக் கொண்டே போனது. தம்பதியர் இளைஞரின் பூரண சம்மதத்துடன் ஒரு அனாதை விடுதியில் ஒரு நல்லப் பெண்ணைத் தேர்ந்தெடுத்து திருமணம் செய்து முடித்தனர்.
வருடங்கள் சென்றன. டிக்கெட் பரிசோதகர் தான் சம்பாதித்த சொத்து மற்றும் பூர்விக சொத்து என அனைத்து சொத்துக்களையும் நான்குப் பிரிவாகப் பிரித்தார். மனைவி மற்றும் சட்டப்படி தத்து எடுத்துக் கொண்ட மக்களுக்கு கொடுத்தது போக மீதி ஒரு பங்கை சமூக சேவைக்கு என ஒதுக்கினார். அந்தத் தொகை மூவர் ஒப்புதலின் பேரில் செலவழிக்கப்பட வேண்டும் என எழுதி வைத்தார். பரிசோதகர் மற்றும் சில ஆண்டுகளில் அவர் மனைவியும் இறந்து விட சொத்து சற்று பெரியத் தொகையாக இருந்ததால் அதை எந்த விதத்தில் சமூகப் பணிக்கு செலவிடுவது, அதை எப்படிக் கையாள்வது எனக் குழப்பம் ஏற்பட தன்னை அனைத்திலும் வளமாக்கிய தன் தெய்வம் மஹா பெரியவாளைத் தேடி இளைஞர் காஞ்சி வந்தார்.
பெரியவாளின் முன் கண்ணீர் பெருக்கோடு கைக் கூப்பி நின்றார். அவர் வடித்த கண்ணீர் பெரியவாளின் பாதத்தில் நன்றியாகப் போய்க் கலந்தது. அந்தக் கண்ணீரே மஹா பெரியவாளுடன் உரையாடியது. உணர்ச்சிப் பெருக்கோடு நின்றவர் ஆசுவாசப் படுத்திக் கொள்ள பெரியவா மௌனமாய் இருந்தார். சில நிமிடங்களில் சுதாரித்த இளைஞர், தன் குழப்பத்தை தெரிவித்து தங்களின் சித்தப்படி செய்ய விழைகிறேன் என்றார். பணத்தை அனாதைக் குழந்தைகளின் கல்விக்கும், மற்றும் ஆதரவற்ற முதியோர்களுக்கும் செலவிடு. நீ செய்யும் உதவி உன் இடது கைக்கு கூடத் தெரியக் கூடாது. அவர்களுக்கு தொண்டு செய்வதையே இனி உன் முழு நேரப் பணியாகக் கொள்என ஆசிக் கொடுக்க , இளைஞர் தன் குழப்பம் தீர்ந்த மகிழ்வில் ஆசியுடன் உத்தரவு பெற்றார். இல்லம் வந்தவர் தன் பணியை ராஜினாமா செய்து விட்டு, மஹாப் பெரியவாளின் ஆசிப்படி தொண்டாற்ற ஆரம்பித்தார்.
இளைஞரின் தாத்தா மஹாபெரியவாளைத் தரிசித்தவர். அவர் தந்தையும் பெரியவாளைத் தரிசித்து ஆசி பெற்றவர். நம் மஹா பெரியவாளின் பார்வை ஒரு பரம்பரையின் மீது விழுந்து விட்டால் அவர்கள் மரணப் பள்ளத்தாக்கில் விழுந்தாலும் கைத் தூக்கி விட்டு விடுவார். இது அந்த பரம்பரையினரின் விசுவாசத்தைப் பொறுத்தது. ஆதரவற்று அனாதயாய் நின்ற அண்ணனையும் தங்கையையும் பாதுகாப்பான இடத்தில் சேர்த்து அனைத்திலும் வளமாக்கினார். குழந்தைப் பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு முதுமையில் போற்றிப் பேண அருமையான செல்வங்களைத் தந்து பாக்கியம் தந்தார். அனாதையாய் நின்ற ஒரு குடும்பத்திற்கும், முதியவர்களுக்கும் ஆசி தந்த மஹா பெரியவா அந்த செல்வ வளத்தையே மேலும் மேலும் பல அனாதைகளுக்கும் முதியவர்களுக்கும் பயன்படும்படி செய்தார். இது மஹா பெரியவாளின் கருணையா... காருண்யமா... 
மஹா பெரியவாளின் ஒரு ஆசி எத்தனை ஆசிகளாக பெருகி அதனால் எத்தனை மக்கள் பாக்கியம் அடைகிறார்கள்.
எண்ணிலடங்கா ஆசிகளையும் அனுக்ரஹங்களையும் வாரி வாரி வழங்கி தன் புகழை மறைப் பொருளாக வைத்துச் சென்ற மாமுனியே சரணம் சரணமையா!
(ஸ்ரீ மும்பை விஜயன் ஸ்வாமிகளின் சொற்பொழிவிலிருந்து)
நிகழ்வுகள் தொடரும்...