நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:31 | Best Blogger Tips

நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
காதலாகி கசிந்துருகி கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நல்நெறிக்கு உய்ப்பது
வேதநான் கினும் மெய்பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சிவாயமே!
விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை ஒன்றும் இல்லையாம்
பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை
நண்ணி நின்றறுப்பது நமச்சிவாயவே!
முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்
தன்னெறியே சரணாதல் திண்ணமே
அந்நெறியே சென்றங்கு அடைந்தவர்க்கெலாம்
நன்னெறிவாயது நமச்சிவாயவே.
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழ
கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சிவாயவே!
நம்புவார் நமர் நாவினவிற்றினால்
வம்பு நாண்மலர் வார்மது வொப்பது
செம்பொனார் திலகம் உலகுக் கெலாம்
நம்பன் நாமம் நமச்சிவாயவே!
நரகம் ஏழ்புக நாடினர் ஆயினும்
உரைசெய் வாயினர் ஆயின் உருத்திரர்
விரவியே புகுவித்திடும் என்பரால்
வரதன் நாமம் நமச்சிவாயவே!
சிவசிவ என்கிலர் தீவினை யாளர்
சிவசிவ என்றிட தீவினை மாளும்
சிவசிவ என்றிட தேவரும் ஆவார்
சிவசிவ என்ன சிவகதி தானே!
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே!
சீவன் எனச்சிவன் என்னவே றில்லை 
சீவ னார்சிவ னாரை அறிகிலர் 
சீவ னார்சிவ னாரை அறிந்தபின் 
சீவ னார்சிவ னாயிட்டு இருப்பரே!
தெள்ளமு தூறச் சிவாய நமவென்(று)
உள்ளமு தூற ஒருகால் உரைத்திடும்
வெள்ளமு தூறல் விரும்பிஉண் ணாதவர்
துள்ளிய நீர்போற் சூழல்கின்ற வாறே.
சிவனரு ளாய சிவன்திரு நாமம்
சிவன் அருள் ஆன்மாத் திரோதம் மலமாய்ச்
சிவன்முத லாகச் சிறந்து நிரோதம்
பவம தகன்று பரசிவ னாமே.
நமச்சி வாயவே ஞானமும் கல்வியும்
நமச்சி வாயவே நானறி விச்சையும்
நமச்சி வாயவே நாநவின் றேத்துமே
நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே!
பெற்ற தாய்தனை மகன் மறந்தாலும்
பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்து ஓங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே!
திருச்சிற்றம்பலம்.
ஓம்நமசிவாய..