கோவை பரளிக்காடு உங்களை அன்புடன் வரவேற்கிறது
கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள காரமடையில் இருந்து
மஞ்சூர் செல்லும் சாலையில் உள்ளது காரமடை வனப்பகுதி. இப்பகுதியில் மலைவாழ் மக்களுடன் இணைந்து சுற்றுச்சூழல் சுற்றுலாவை
நடத்தி வருகிறது காரமடை வனத்துறை. சனி, ஞாயிறுகளில் அனுமதி. 20 பேருக்கு குறையாமல் முன்பதிவு
செய்தால், எந்த நாளிலும் அனுமதிப்பார்கள்.
பரிசல் பயணம், மதிய உணவு, ஆற்று குளியலுக்கு பெரியவர்களுக்கு
ரூ.300, 15 வயதுக்கு உட்பட்ட சிறியவர்களுக்கு
ரூ.200 கட்டணம். கோவையில் இருந்து காரமடை
வழியாக இரண்டரை மணி நேர பயணத்தில் பரளிக்காடு பரிசல் துறையை அடையலாம். காலை 10 மணி அளவில் பூச்சிமரத்தூரில் உள்ள
பரிசல்துறையில் தயாராக இருக்க வேண்டும். அங்கு செல்ல பஸ் வசதி இல்லை. பைக், காரில் செல்லலாம்.
வனத்துறையினர், அப்பகுதி மலைவாழ்மக்கள் வரவேற்பார்கள். சுக்கு காபி
கொடுத்து உபசரிப்பார்கள். பரிசல் கரையில் இயற்கை எழிலோடு பெரிய மரங்களும், நிழலும் ஆசுவாசப்படுத்தும்.
அங்கிருந்தவாறு பரிசல் நடக்கும் பில்லூர் ஆற்றின் அழகை, இருபுறமும் மலைகள் பசுஞ்சுவராய்
காட்சியளிப்பதை ரசிக்கலாம். 30&க்கும் அதிகமான பரிசல்கள் உள்ளன. ஒரு பரிசலில் 4 பேர் வீதம் செல்லலாம். 2 மணி நேரம் பரிசலில் பயணிக்கலாம்.
மலையடிவாரங்களில் தற்காலிகமாக இறங்கி ஓய்வெடுக்கலாம். வனப்பகுதியில் காலாற
நடக்கலாம். அங்குள்ள மலைவாழ் குடியிருப்புகளை பார்வையிடலாம். சலிக்க, சலிக்க மேற்கொண்ட பரிசல் பயணம்
முடிந்து பரிசல் கரையில் இறங்கினால் மலைவாழ் மக்கள் சமைத்த உணவு தயாராக இருக்கும்.
அதில் களி உருண்டை, நாட்டுக்கோழி குழம்பு, மீன் குழம்பு, வெஜிடபிள் பிரியாணி, கேசரி, சப்பாத்தி, கீரை மசியல், வெங்காய தயிர்பச்சடி, தயிர் சாதம், அப்பளம், ஊறுகாய் மினரல் வாட்டர் வழங்குவார்கள். உணவின் ருசி நம்மை
கிறங்கடிக்கும். பரிசல் கரையில் உள்ள மர கயிறு ஊஞ்சலில் விளையாடி
மகிழலாம்.அங்கிருந்து மாலை 3 மணியளவில் வனத்துறையினர் காரமடை செல்லும் வழியில் 20 கி.மீ.
தூரத்தில் உள்ள பவானி ஆற்றுக்கு அழைத்து செல்வார்கள். கூழாங்கற்கள் நிறைந்த
ஆற்றின் நீர் குளிர்ச்சியானது. மூழ்கி எழுந்தால் மொத்த களைப்பும் பறந்துபோய்
புத்துணர்ச்சி வந்துவிடும்.
ஆற்றில் 5 மணி வரை ஆட்டம் போடலாம். பின்னர் வனத்துறையினர் வழியனுப்பி
வைப்பார்கள். பரிசல் பயணம், ஆற்றுக்குளியல் வனத்துறையினரின் கண்காணிப்பில் நடப்பதால்
தைரியமாக செல்லலாம். பரளிக்காடு சுற்றுச்சூழல் வனச்சுற்றுலாவை குடும்பத்தோடு
குதூகலிக்கலாம். வன அதிகாரியை 90470 51011 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு 3 நாள் முன்பு முன்பதிவு செய்ய
வேண்டும்.