ராஷ் பிஹாரி போஸ் பிறந்த தினம் இன்று...

மணக்கால் அய்யம்பேட்டை | 10:56 PM | Best Blogger Tips



சிம்மசொப்பனம், வீரம், புரட்சி என்று படித்தால், உடனே பளீரிட வேண்டிய பெயர் ராஷ் பிஹாரி போஸ்.
இந்திய தேசிய ராணுவம் என்ற உடனேயே, நம் நினைவுக்கு வருவது நேதாஜிதான். ஆனால், அவர் ஐ.என்.ஏ.வை உருவாக்கவில்லை. அதன் தலைமைப் பொறுப்பை அவர் ஏற்றுக் கொண்டார். இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கியவர் ராஷ் பிகாரி போஸ்...
தேடப்படும் முக்கிய அரசியல் குற்றவாளிகள் பட்டியலை பிரிட்டிஷ் அரசு வைத்திருந்தது. அதில் உள்ள எவரைப்பற்றி தகவல் கொடுத்தாலோ அல்லது பிடித்துக் கொடுத்தாலோ நூறு ஏக்கர் நிலம் பரிசு தருவதாகவும் அறிவித்து இருந்தது.அந்தப் பட்டியலில் முதல்பெயர் ராஷ் பிகாரி போஸ்...
1938ல் ஹிந்து மகா சபை கிளையை ஜப்பானில் தொடங்கியவர் ராஷ் பிகாரி போஸ்..
நினைத்த நேரம் நினைத்த உருவம் எடுத்துக் கொள்ளும் மாயாவியைப் போல அவர் இருந்தார் என்று போலீஸ் குறிப்புகள் கூறுகின்றன. ஓடும் ரயிலில் போலீஸ் சுற்றி வளைத்த போது, துறவி போல மாறுவேடம் அணிந்து தப்பி இருக்கிறார். ஒரு முறை போலீஸ் உயர் அதிகாரியின் குதிரை வண்டி ஓட்டுபவனாக உருமாறிக்கொண்டு, கூடவே பயணம் செய்து தப்பிச் சென்று இருக்கிறார்.இன்னொரு முறை, காவல்துறை அதிகாரிகள் தேடிவந்த போது செத்துப்போய் ஆவியாக அலையும் கிழவனைப் போல வேடம் போட்டு காவலர்களைப் பயமுறுத்தி தப்பியிருக்கிறார்.
மற்றொரு முறை, தன்னைப் பிடிக்க அலைந்து கொண்டிருந்த காவல்துறை அதிகாரியிடம், கைரேகை ஜோசியம் பார்ப்பவனைப் போலச் சென்று நாளை நிச்சயம் ராஷ் பிகாரி போஸை கைது செய்ய முடியும் என்று நம்பிக்கை ஊட்டி அவரது வாகனத்திலேயே தப்பிச் சென்று இருக்கிறார். இப்படி, ராஷ் பிகாரி போஸின் நிஜவாழ்வில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள் இன்றுவரை கதை கதையாகப் பேசப்பட்டு வருகின்றன...
புத்த மதத்துறவி, வணிகர், தேநீர் கடை நடத்துபவர், கூலித் தொழிலாளி, நாடக நடிகர் எனப் பல வேடங்கள் போட்டு மூன்று வருடங்களுக்கு ஜப்பானிலேயே வாழ்ந்து கொண்டிருந்தார் போஸ். பத்து நாட்களுக்கு மேல் ஒரு இடத்தில் தங்கியிருக்க முடியாது. போலீஸ் சுற்றி வளைத்துவிடும். தப்பிப் போக வேண்டும். பிரிட்டிஷ் உளவாளிகள் பின்தொடர்ந்து கொண்டே இருந்தார்கள்..
ஜனவரி 21, 1945-ல் ராஷ் பிகாரி போஸும் மரணம் அடைந்தார்.பிரிட்டிஷ் அரசுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கிய ராஷ் பிகாரி போஸின் சுதந்திரக்கனவு அவர் வாழ்நாளில் நிறைவேறவில்லை. ஆனால், அவர் உருவாக்கிய உத்வேகம் அயல் நாடுகளில் வாழும் இந்தியர்களை ஒன்றிணைத்தது. மலேசியா, பர்மா, சிங்கப்பூரில் இருந்த இந்தியர்களை ஒரே அணியில் திரளச் செய்தது. வலிமைமிக்க அந்த இணைப்புக்கு காரணமாக ராஷ் பிகாரி இருந்தார் என்பதே அவரது தனிச்சிறப்பு...
ராஷ் பிகாரி போஸின் வரலாறும் இளம்தலைமுறையினர் அறிந்து கொள்ள முடியாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டது.வரலாற்று நிகழ்வுகளை எளிதாகக் கடந்து போய் விடும் வெறும் தகவலாக மாற்றி வைத்திருப்பதுதான் ஒருவன் தன்னை இந்தியனாக உணரமுடியாத நிலைக்கு முக்கிய காரணம்...
Thanks: Satheesh T