ஆங்கிலேயர்கள், இந்தியாவிற்கு ”சுதந்திரம் கொடுத்த சமயத்தில், இந்தியாவில் 500க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள் இருந்தன. சிற்றரசர்கள் அவற்றை ஆண்டு வந்தனர். "இந்த சமஸ்தானங்களில் உள்ள மன்னர்களும், அங்குள்ள மக்களும் என்ன முடிவு எடுக்கின்றனரோ, அதன் பின், தொடர்ந்து தனி நாடாகவோ, விடுதலை பெற்ற இந்தியா அல்லது பாகிஸ்தானுடனோ இணைந்து கொள்ளலாம். அது அவர்களின் உரிமை; அதில் நாங்கள் தலையிட முடியாது...' என்று ஆங்கிலேயர்கள் கைவிரித்து விட்டனர்.
தானே விரும்பி, இந்தியாவுடன் சேர்ந்த முதல் சமஸ்தானம், தமிழகத்தில் உள்ள புதுக்கோட்டை சமஸ்தானம். மற்ற, எல்லா இந்திய சமஸ்தான ராஜாக்களும், தங்கள் மன்னர் பதவியையும், சுகபோகம், அதிகாரம், சொத்துக்களை இழக்கத் தயாராக இல்லை. அதனால், உள்துறை அமைச்சராயிருந்த வல்லபாய் படேல், மேற்படி மன்னர்களுக்கு எச்சரிக்கைக் கடிதம் எழுதினார். "இந்தியாவுடன், அவர்கள் தாமாக இணைந்தால், அவர்களுக்கு தரப்படும் மானியம் மற்றும் சலுகைகளை பெறலாம். அரசாங்கமாக நடவடிக்கை எடுத்து பிடுங்கிக் கொண்டால், அந்தச் சலுகைகள் கிடைக்காது...' என்று குறிப்பிட்டார். சமஸ்தானங்கள் உடனே வந்து சேர்ந்து கொண்டன.
திருவிதாங்கூர், மைசூர், ஐதராபாத், காஷ்மீர், சுனாகத் ஆகிய ஐந்து மாநிலங்களும் பரப்பளவில் பெரிதாக, மக்கள் தொகையில் கணிசமான அளவில் இருந்தன. ஆகவே, திருவிதாங்கூர் ராஜா, மைசூர் மகாராஜா, ஐதராபாத் நவாப், காஷ்மீர் பேரரசர், சுனாகத் நவாப் ஆகிய ஐவரும், இந்தியாவுடன் தங்கள் சமஸ்தானங்களை இணைக்க மறுத்தனர்.
உடனே, படேல் ராணுவ நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்தார். மைசூரும், திருவிதாங்கூரும் இந்தியாவுடன் இணைந்தன. சுனாகத் சமஸ்தான நவாபுக்கு எதிராக, அங்குள்ள மக்கள் கிளர்ச்சியில் இறங்கினர். அவர், "எனக்கு சமஸ்தானமும் வேண்டாம்; மன்னர் பதவியும் வேண்டாம்...' என்று குடும்பத்துடன், பாகிஸ்தானுக்கு ஓடி விட்டார்.
ஐதராபாத் நிஜாமும், காஷ்மீர் அரசர் ஹரிசிங்கும், "எக்காரணத்தைக் கொண்டும், மன்னராட்சியை விட்டுக் கொடுக்க மாட்டோம்...' என்பதில் உறுதியாக இருந்தனர். இதே சமயத்தில், காஷ்மீரை பாகிஸ்தானுடன் சேர்க்க வேண்டும் என்று, பாகிஸ்தான் கோரியது. ஐதராபாத்தில் பெரும்பான்மை மக்கள் இந்துக்கள். மன்னரோ முஸ்லீம் நிஜாம். காஷ்மீரில் பெரும்பான்மை முஸ்லீம்கள். மன்னரோ இந்து - ஹரிசிங். ஆகவே, மக்கள் தொகையை வைத்து, ஐதராபாத், இந்தியாவுடன் இணையுமானால், அதே அடிப்படையில் காஷ்மீர், பாகிஸ்தானுடன் இணைய வேண்டும் என்று வற்புறுத்தினர் பாகிஸ்தானியர்.
ராணுவ தளபதி கரியப்பா, படேலுடன் சென்று, பிரதமர் நேருவை சந்தித்தார். "நாம் காஷ்மீர் மீதும், ஐதராபாத் மீதும் ஒரே நேரத்தில் முன்னறிவிப்பின்றி, திடீர் ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டும்...' என்றார்.
நேரு அதற்கு சம்மதிக்கவில்லை. காஷ்மீரியான நேருவுக்கு, காஷ்மீர் மன்னர் ஹரிசிங் மீது ஒரு அன்பு. அதனால், "இப்போது காஷ்மீர் மீது படையெடுக்க வேண்டாம். ஹரிசிங்கிடம் பேசி, சமாதானப்படுத்தி, அவரை சேர்த்துக் கொள்வோம். இப்போதைக்கு, ஐதராபாத் மீது மட்டும் ராணுவ நடவடிக்கை எடுங்கள்...' என்று கூறி விட்டார். படேலுக்கும், நேருவுக்கும் ஆகாது. அதனால், படேல் கோபத்துடன் திரும்பி விட்டார்.
கரியப்பா ஐதராபாத் சென்று, நிஜாமுடன் பேச்சு வார்த்தை நடத்தி, ஐதராபாத் தனி நாடாக இருப்பதில் உள்ள சிரமங்களையும், தொல்லை களையும் விளக்கி, அவரை இந்தியாவுடன் சேரும்படி சொன்னார். நிஜாம் மன்னர் மனம் மாறி இறங்கி வந்தபோது, நிஜாமின் படையிலிருந்த, "ரசாக்கர்கள்' அதை ஏற்கவில்லை. இந்திய ராணுவத்தை எதிர்த்துப் போராடத் தயார் என்றனர்.
அக்., 22, 1947ல் ஐதராபாத் மீது, இந்திய ராணுவம் படையெடுத்தது. அதன் திடீர் தாக்குதலை சமாளிக்க முடியாத, "ரசாக்கர்'கள் தலை தெறிக்க ஓடி, ஒளிந்து விட்டனர். நிஜாம் சரணடைந்தார். ஐதராபாத் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைந்தது.
ஐதராபாத்திற்குள் இந்தியப் படைகள் நுழைந்து விட்ட செய்தியறிந்த பாகிஸ்தான், அந்த நிமிடமே தன் படைகளை காஷ்மீருக்கு அனுப்பியது. ராவல்பிண்டிக்கும் காஷ்மீர் எல்லைக்கும் 50 கி.மீ., தொலைவு தான். பாக்., படைகள் அங்கிருந்து, சூறாவளியென காஷ்மீருக்குள் புகுந்தது. புகுந்த 24மணி நேரத்திற்குள், யூஞ்ச் முதல் ஜான்கர் வரை பலுச்சிஸ்தான் முதல் கில்சிட் வரையிலும் கைப்பற்றி விட்டது.
இதன் பின்னரே, காஷ்மீர் மன்னர் ஹரிசிங்கிற்கு காஷ்மீர் தனித்து வாழ முடியாது என்ற ஞானோதயம் பிறந்தது. ஹரிசிங், டில்லிக்கு பறந்து வந்து இந்தியாவுடன் காஷ்மீரை இணைத்தார். பாகிஸ்தானோ, காஷ்மீரின் எல்லை முடிவடையும் கார்கில் வரை, 500 கி.மீ., தூர எல்லைகளை ஆக்கிரமித்துக் கொண்டது.
கரியப்பா சொன்னது போல், ஒரே நேரத்தில் ஐதராபாத், காஷ்மீர் ஆகிய இரு பகுதிகளையும் தாக்கி இருந்தால், காஷ்மீர் எல்லைப்பகுதி பறி போயிருக்காது. நேருவின் பிடிவாதத்தால், தும்பை விட்டு வாலைப் பிடித்திருக்கமாட்டோம்.
— மகுடபதி எழுதிய, "பீல்டு மார்ஷல் கே.எம்.கரியப்பா' நூலிலிருந்து...