பிரசவித்த பெண்களின் உடலானது பழைய நிலைக்கு திரும்பும்போது வலியும், வேதனையும் ஏற்படும். இந்த வலி தொடர்ந்து இருப்பதில்லை. விட்டு விட்டு வரும். குழந்தை பிறந்து மூன்று மணி நேரத்திற்குள் பால் கொடுத்து விட்டால் இந்த வலி குறையும் . ஒரு சிலருக்கு குறையாது, வலியும் தாங்க முடியாததாக இருக்கும்.
கருப்பையில் ரணம் ஏற்பட்டு வலி அதிகரிக்கும். கருப்பை ரணத்தை ஆற்றவும், வலிகளைப் போக்கவும் பிரசவித்த பெண்களுக்கு நாட்டு மருந்துகளை கசாயம் செய்தும், லேகியம் போல செய்தும் சாப்பிடக் கொடுப்பார்கள்.
பிரசவ லேகியம்
சுக்கு, மிளகு, திப்பிலி, ஆலரிசி, லவங்கப்பத்திரி, லவங்கப்பட்டை இவற்றை வகைக்கு 10 கிராம் அளவு எடுத்து லேசாக வறுத்து இடித்து தூளாக்கி சலித்து வைத்துக் கொண்ட சூரணத்தில் இரண்டு ஸ்பூன் அளவு பனை வெல்லத்துடன் சேர்த்து, ஒரு நாளைக்கு மூன்று வேளை கொடுத்தால் போதும். அடி வயிறு வலி குணமாகும்.
வில்வ இலைச் சாறு
குழந்தை பிறந்த பின்னர் கருப்பையில் ரணம் ஏற்பட்டு, அதனால் இரத்தப்பெருக்கு ஏற்படுவதும் உண்டு. அச்சமயத்தில் வில்வ இலையுடன் வெங்காயம் சேர்த்து இடித்துப் பிழிந்த சாற்றில் அதே அளவு விளக்கெண்ணையும் சேர்த்து, காய்ச்சி வடித்து அத்தைலத்தில் ஒரு ஸ்பூன் வீதம் ஒரு வாரம் தொடர்ந்து கொடுத்து வர, ரணம் ஆறும். இரத்தப் போக்கும் நிற்கும். மஞ்சள் தூளுடன் இஞ்சிச்சாறு சம அளவு எடுத்து பால் அல்லது காய்ச்சி ஆறவைத்த நீரில் கலந்து பருக வலி குறையும்.
கடுகுப் பொடி
சமையலில் அன்றாடம் பயன்படுத்தப்படும் கடுகு பிரசவித்த பெண்களுக்கு அருமருந்தாக செயல்படுகிறது. வாணலியில் கடுகை போட்டு லேசாக வறுத்து அதனை பொடி செய்து வைத்துக்கொள்ளவேண்டும். சாப்பிடும் போது சோறுடன் கடுகுப்பொடி, நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட கருப்பை புண்கள் ஆறும், வலி குறையும்.
கொடாம்புளி ரசம்
குழந்தை பேற்றுக்குப்பின்னர் புளி, காரம் அதிகம் சாப்பிடுவது தாய்மார்களுக்கு ஏற்றதல்ல. எனவே வெள்ளைப்பூண்டு அதிகம் சேர்த்த பத்திய உணவும், கொடாம்புளி, மிளகு சேர்த்த ரசமும் உணவில் சேர்த்து கொடுப்பார்கள். இது வயிற்று வலிக்கு இதம் தரும்.