கிட்னி கல் என்றால் என்ன?

மணக்கால் அய்யம்பேட்டை | 12:59 PM | Best Blogger Tips

சிறுநீரில் பல வேதிப் பொருட்கள் கலந்துள்ளன. அவற்றுள் சில மணிச்சத்துக்கள், சில உயிரியற் பொருட்கள். இவை இரண்டும் தகுந்த விகிதத்தில் இருப்பதால்தான் அவை படிகங்களாகவோ, (crystals) திடப்பொருள்களாகவோ, சிறுநீர்த் தாரைகளில் படியாமல் இருக்கின்றன. சிலருக்கு ஏற்படும் வளர்சிதை மாற்றங்கள் இவற்றின் விகிதங்களை மாற்றி இவற்றைச் சிறு துகள்களாகவோ, கற்களாகவோ படிய வைக்கின்றன. இவையே நாளடைவில் கற்களாக உருவாகின்றன.

கிட்னியில் கற்கள் உருவாவதற்கான காரணங்கள்

இந்நோய் சுலபமாக ஏற்படுவதற்கான உடல் கூறு கொண்டவர்களுக்கு, உணவுப்பொருள் ஒரு காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் உணவுப் பழக்கம் மட்டுமே இதற்கு காரணம் என்று கூறமுடியாது எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

கால்சியம், பாஸ்பேட் மூலகங்கள் அடங்கிய கற்களே மிகுதியாக காணப்படுகின்றன. இம்மூலகங்கள் சிறுநீரில் கூடுதலாக வெளிப்படும் நோய்களில் இவை தோன்றுகின்றன. பாரா தைராய்டு மிகுதி நோயும் (Hyperparathyroidis m), சிறுநீர்ப் பாதையில் தொற்றுகள் (Urinary tractinfections) , , சிறுநீரக நோய்கள் (Cystic kidney diseases) போன்ற நோய்களும் இவ்வகைக் கற்கள் ஏற்பட முக்கியமான காரணங்களாகும்

யூரிக் அமிலம், புரதச் சத்து சிதைப்பிற்கு பின்பு உண்டாகும் கழிவுப் பொருளாகும். இது ரத்தத்தில் 6 மிலி கிராம் அளவில் இருக்க வேண்டும். பிறவி நொதிக்குறைகள் சிலவற்றில் யூரிக் அமிலம் இந்த அளவை தாண்டும்போது மிகுதியான யூரிக் அமிலம் சிறுநீரில் வரும். அப்போது அது கற்களாக படிவதுண்டு.

நாம் உண்ணும் உணவில் இருந்து தேவையான கால்சியம் நமக்கு கிடைக்கிறது. அதிகப்படியாக கால்சியம் நாம் மாத்திரைகளாகவோ, உணவாகவோ எடுக்கும்போது
அவை சிறுநீரில் கழிவு பொருளாக வெளியேறுகிறது. இப்படிப்பட்ட சமயங்களில் கால்சியம் மூலகங்கள் oxalate மற்றும் phosphate உடன் சேர்ந்து சிறுநீர் தாரைகளில் படிகங்களாக படிந்து பின் கற்களாக மாறுகின்றன.

சில சிறுநீர் பெருக்கி மருந்துகள் (Diuretics) கால்சியம் கலந்த antacid மருந்துகள் கல் உருவாகக்கூடிய வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

பிறவியிலேயே ஏற்படும் சில நொதிக் குறைகளில் சிறுநீரில் ஆக்ஸாலிக் அமிலம், சிஸ்டீன் போன்ற வேதியல் பொருள்கள் மிகுதியாக வெளிவரும். இவைகளும் கிட்னியில் கல் உருவாக ஏதுவாகிறது.

கிட்னி கற்கள் யாருக்கு வரும்-

பொதுவாக 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களக்கு இந்த நோய் வருகிறது. பெண்களைப் பொறுத்தவரை, 50 வயதைத் தாண்டும்போது இந்த நோய் வருகிறது. ஒருவருக்கு
ஒருமுறை கிட்னியில் ஒன்றுக்கு மேற்பட்ட கற்கள் வந்துவிட்டால், அடுத்தடுத்து கற்கள் உருவாவதற்கான வாய்ப்பு அதிகம் உண்டு. நோயாளியின் பெற்றோர்களுக்கோ அல்லது முன்னோர்களுக்கோ, இந்த பாதிப்பு இருந்தாலும், இந்நோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

கிட்னி கல் - அறிகுறிகள்


சிறுநீரகத்தில் இருந்து கல் வெளியேறி குறுகிய சிறுநீர்க்குழாயில் நுழைந்து வெளியேற முடியாமல் தடைபடும்போது தாங்கமுடியாத வலி ஏற்படும்.
சிறுநீர் வெளியேறுவதில் சிக்கல் உண்டாகும்.

சில நேரங்களில் சிறுநீர் ரத்தத்துடன் கலந்து வெளியேறும்.

நீர்த்தாரையில் எரிச்சல் உண்டாகும்.

அளவில் சிறியதான கற்கள் சிறுநீர் மூலமாகவே வெளியேறிவிடும். தண்ணீர் அதிகம் அருந்தினால் சிறுநீர் கல் தானாகவே கரைந்து வெளியேறும். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் அறுவை சிகிச்சை மூலம் கல்லை வெளியேற்ற வேண்டிய அவசியம் ஏற்படும்.

சிறுநீரக கற்களை எக்ஸ் கதிர், கணினி அச்சு வெட்டு, நுண் ஒலி துருவு படங்கள் ஆகியவற்றின் மூலம் அறியலாம். சிறுநீரக கற்கள் உள்ள நோயாளி தாமாகவே வெளிக்கொணரும் கற்களைஆராய்ந்து அதில் கால்சியம், பாஸ்பேட்,ஆக்ஸலேட்களும் மிகுதியாக இருப்பதை அறியலாம். இவற்றை கொண்டு கற்கள் உருவாவதற்கான காரணங்களை அறிந்து அவற்றை அகற்ற வேண்டும்.




Via  FB Karthikeyan Mathan