ஆரோக்கியமே, ஆனந்தம் மருத்துவ கேள்வி-பதில்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:45 AM | Best Blogger Tips

டாக்டர் என் வயது 50, எனக்கு பல வருடங்களாக நீரிழிவு நோய் இருக்கிறது. மாத்திரைகள் பயன்தராததால் தற்போது MIXTARD இன்சுலின் ஊசி போட்டு வருகிறேன். ஆனால் எவ்வளவு தான் கவனமாக இருந்தாலும், என் இடது காலின் பாதத்தில் புண் ஏற் பட்டு புரையோடி இப்போது அந்த காலை இழந்து விட்டு அல்லல்படுகிறேன். காலைத் துண்டிக்கும் அளவுக்கு புண் எப்படி உண்டாணது என்பது எனக்கே தெரியவில்லை, கால்களை பத்திரமாக பாதுகாக்க வேண்டும் என்பதை தெரிந்தவன் நான். வீட்டினுள் கூட சிலிப்பர்தான் அணிவேன். அப்படி இருந்தும் எங்கோ எனக்கே தெரியாமல் இடித்துக் கொண்டதால் வலி தெரியாமலேயே புண் ஏற்பட்டது. முறையாகத் தான் தினமும் கட்டு போட்டுக் கொண்டேன். ஆனால் எல்லாமே தோல்வியுற்று தற்போது ஒரு காலை இழந்து போனேன். என்னைப் போன்ற வியாதி உள்ளவர்களுக்கு இது குறித்து நீங்கள் விளக்கினால் பயனுள்ளதாக இருக்கும்.

பதில்

நீரிழிவு நோயின் பின்விளைவுகளில் மிகவும் ஆபத்தானது கால் புண்கள். இதனால் பலர் கால்களை இழந்து போக நேரிடுகின்றது. 25 சதவிகித நீரிழிவு நோயாளிகள் கால் புண்ணுக்காகவே மருத்துவமனைகளில் சேர நேர்ந்து விடுகிறது.

காலில் புண் ஏற்படுவதால் இவ்வாறு கால் துண்டிக்க நேர்வதற்கு முக்கிய காரணம் கால் தோலில் புண் உண்டாவதே! இதை உடனடியாக தக்க சிகிச்சை மூலம் குணப்படுத்தி விடலாம். இதன் மூலம் 85 விழுக்காடு கால் துண்டிப்பதை தவிர்க்கலாம். இவ்வாறு கால் புண் காரணமாக காலை துண்டிக்க நேர்வதற்கான முக்கிய காரணங்கள் வருமாறு;

நரம்பு தளர்ச்சி காரணமாக கால் பாதங்களில் மதமதப்பு உண்டாகி உணர்ச்சி இன்றி போகும். இதனால் காலில் கல், முள், குத்தினாலும் அல்லது இடித்துக் கொண்டு அடிபட்டாலும் வலி ஏற்படாது. வலி இல்லாத காரணத்தினால் அதை அலட்சியம் செய்வதால் காலதாமதம் ஏற்படுகிறது. நோய்க்கிருமி தொற்று எளிதில் உண்டாகி காலில் சீழ்பிடித்து புரையோடிப் போகிறது.

· இரத்த ஓட்டம் குறைபாடு. இது இரத்த குழாய்கள் சுருக்க முறுவதால் உண்டான அடைப்பால் ஏற்படுகிறது. இரத்த ஓட்டம் குறைந்த தோல் பகுதியில் புண் ஆறுவது சிரமம்.

· பாதத்தில் தோல் தடிப்பது, கால் ஆணி உண்டாவது, அழுத்தத்தால் ஏற்படும் மாற்றங்கள்.
· தோல் நரம்புகள் பாதிப்பதால், தோல் உலர்ந்து போய் வெடிப்புகள் ஏற்படுவது.
· கால் மூட்டுகள் இறுக்கம் காரணமாக அசைவு குறைவது.
· உடல் பருமன் அதிகம்.
· இனிப்பின் கட்டுப்பாடு இல்லாதது.
· அளவான காலணிகள் அணியாதது. காலணிகளினால் ஏற்படும் புண்கள். புதிய காலணிகள் அணியும் போது இது ஏற்படலாம். அடுத்தவர் காலணிகளை அணிந்துக்கொள்வது தவறு. இதனால் ஒருவர் காலில் உள்ள காளான் தொற்று மற்றவருக்கு பரவும் வாய்ப்புள்ளது. இவை விரல்களின் இடுக்குகளில் உண்டாகும் ‘சேற்றுப்புண்’என்பது.
PERIPHERAL ARTERIAL OCCLICIVE DISEASE [வெளிப்புற தமனி ஒக்கலிசிவு நோய் ]

நீரிழிவு நோயாளிகளுக்கு மற்றவர்களைவிட நான்கு தடவை அதிக இந்த பாதிப்பு உண்டாகிறது. கால்களுக்கு இரத்தம் கொண்டு வரும் டிபியல்(TIBIAL), பெரோனியல் (PERONEAL) எனும் தமனிகள் (ARTERIES) பாதிக்கப்பட்டு அவற்றில் அடைப்பு ஏற்படுவதால் இரத்த ஓட்டம் தடைப்படுகிறது.
இது உண்டாவதற்கு முக்கிய காரணமாக புகைத்தல், உயர் இரத்த அழுத்தம், அதிகமான கொழுப்பு எனக்கூறப்படுகிறது. இது உண்டானால் கால்களில் குடைச்சல் உண்டாகும். நடந்தால் வலி உண்டாகும். இரவில் வலி அதிகமாகும். கால்களில் உள்ள முடிகள் உதிரும். கால் நகங்கள் தடிப்பாகும். கால்கள் தரையில் பதியும் போது சிவந்தும், உயர்த்தினால் வெளிறிப் போகும்.
இதுபோன்று தமனி பாதிக்கப்பட்ட்டுள்ளதா என்பதை டாப்ளார் (DOPPLER) கருவி மூலம் அறியலாம். வேறு சில இரத்த பரிசோதனைகளும் தேவைப்படும்.

புண் வராமல் தடுப்பது எப்படி?

நீரிழிவு நோயாளிகள் தங்கள் கால்களை முகத்தைப் போன்று பராமரிக்க வேண்டும். முகத்தை நாம் ஒரு நாளில் எத்தனை முறைகள் கண்ணாடியில் பார்த்துக் கொண்டு அழகு படுத்துகிறோமோ, அதுபோன்ற நம்முடைய கால்களையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதே இதன் பொருளாகும். சிறு காயம், கீரல் அல்லது தடிப்பு, அரிப்பு ஏற்பட்டாலும் அதை அலட்சியப் படுத்தாமல் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சுயமாகவே தினமும் கால்களை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இரவில் படுக்கைக்கு செல்லுமுன் கால்களைக் கழுவி, துண்டால் துடைத்து விட்டு படுக்கச் செல்ல வேணடும். முடிந்தால் ஈரப்பசை கொண்ட திரவகத்தை (MOISTURIZER) தடவிக் கொள்ளலாம். காலணிகளை சரியான அளவில் பயன்படுத்த வேண்டும். மிகவும் இறுக்கமான வற்றை தவிர்க்கலாம்.

சிறு சிறு காயங்கள், கீறல்கள், கொப்புளங்கள், சேற்றுப்புண் முதலியவற்றை சொந்தமாக வீட்டில் சிகிச்சை செய்து கொள்வதைக்கூட தவிர்த்து மருத்துவரிடம் சென்று சுத்தமான முறையில் கட்டு போட்டுக் கொள்வதும் நல்லது. அதிக சூடான நீரில் காலை நனைப்பது. ஒத்தடம் கொடுப்பதும் கெடுதியே. அதிக வீரியமிக்க களிம்புகளைத் தடவிக் கொள்வதும் தவறு. இவை புண் உண்டாவதைத் துரிதமாக்கும்.

ஆனால் இத்தகைய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் கூட ஒரு சிலருக்கு இறுதியில் காலில் புண் ஏற்படவே செய்கிறது. புண்ணில் வெகு எளிதில்ல கருமித் தொற்று ஏற்பட்டு புண் ஆழமாகிவிடும். நார்த்தசைகள் அதன் மேல் மூடிவிடுவதால் புண் ஆறுவதும் சிரம்ம்மாகிறது. நரம்புகள் பாதிக்கப்படுவதால் வலியும் இருக்காது. நோய்த் தொற்று அதிகமாக புண் மேலும் ஆழமாகி விடும். சீழ் உண்டாகி துர்நாற்றம் வீசும். அதன் பின்பு எலும்புகளும் பாதிப்புக்கு உள்ளாகி தசைகளும், இதர திசுக்களும் பாதிப்புக்கு உள்ளாகி கால் வீங்கி தோல் கருநிறமாகிவிடும். இதை கேங் கிரீன் (GANGRENE) என்பர். இது உண்டானபின் அந்தக் கலை வைத்திருப்பது உயிருக்கே ஆபத்தாகும். அதனால்தான் உயிரைக் காக்க பாதிக்கப்பட்ட கால் அகற்றப்படுகிறது. ஆகவே நீரிழிவு நோயாளிகள் தங்களுடைய கால்களை கவனமாக கண்காணிப்பது நல்லது.



Via ஆரோக்கியமான வாழ்வு