வரலாறு - வீர சாவர்க்கர் !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:42 | Best Blogger Tips
savarkar


வீர சாவர்க்கர் இந்திய விடுதலை போராட்டத்தின் முக்கிய புரட்சியாளர். மிகப்பெரிய தியாகங்களை தேசத்துக்காக ஏற்றவர். சமூக புரட்சியாளர். அவரது வாழ்வனைத்தும் தேச நலனுக்கான போராட்டமாகவே திகழ்ந்தது. வரலாற்றை உருவாக்கிய அப்பெரும் ஆளுமை தேசத்தின் சரித்திரத்தை மீட்டெடுத்து எழுதுவதிலும் அதே அக்கறையைக் காட்டினார்.
அன்றைய காலகட்டத்தில் பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்கள் உருவாக்கியதே நம் தேசத்தின் வரலாறாக அறியப்பட்டது; பாரதத்தின் வரலாறு காலனிய ஆதிக்கத்தின் தேவைக்கேற்ப எழுதப்பட்டு வந்தது.
இந்நிலையில் விடுதலைக்காக போராடும் ஒரு தேசத்தின் கூர்நுட்பம் கொண்டதோர் வரலாற்றாசிரியனாக பாரத வரலாற்றை அணுகிய பெருமை வீர சாவர்க்கருக்கு உண்டு.
வரலாற்றை எழுதினார்: வரலாற்றை மாற்றினார்
பாரதத்தின் முதல் விடுதலை வேள்வியான 1857 எழுச்சியை பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்களும் பாரதத்தின் அன்றைய வரலாற்றறிஞர்கள் பலரும் “சிப்பாய் கலக”மென்றே எழுதி வந்தனர். அதனை “விடுதலை எழுச்சி” என மிக விரிவான ஆதாரங்களுடன் ஒரு நூலாக முதன் முதலில் எழுதியவர் வீர சாவர்க்கரே. இந்நூல் 1907 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்நூலை எழுதியதன் குறிக்கோள் குறித்து வீர சாவர்க்கர் எழுதுகிறார்:
“….இந்த நூலை எழுதியதன் நோக்கம் என்ன? வரலாற்றின் உண்மை குறித்த உந்துதலை மக்களுக்கு உருவாக்க வேண்டும். அவர்கள் மீண்டும் தேசமளாவிய பெரிய புரட்சி யுத்தத்தை அன்னிய ஆதிக்கத்துக்கு எதிராகத் தொடங்க வேண்டும்…..”
தனது நூலை வெளியிட 1907 ஆம் ஆண்டை வீர சாவர்க்கர் மிகக் கவனமாகத் தேர்ந்தெடுத்திருந்தார். ஏனென்றால் அது முதல் விடுதலை வேள்வியின் ஐம்பதாம் ஆண்டு நினைவு விழா கொண்டாடப் பட்ட ஆண்டு ஆகும். இந்திய வரலாறு குறித்த மிகப்புதிய பார்வையை, ஒரு பெரும் பிரச்சாரத்துக்கு எதிராக, ஆராய்ச்சி நூலாக பலத்த எதிர்ப்புகளுக்கிடையே 1907 ஆம் ஆண்டில் அவர் வெளியிட்டார். இதற்காக அவர் எத்தனை ஆண்டுகள் முன்னதாக அந்த ஆராய்ச்சியையும் திட்டமிடுதலையும் தொடங்கியிருக்க வேண்டுமென எண்ணிப்பார்த்தால் வீர சாவர்க்கரின் மேதமையும், உழைப்பும் வியக்க வைக்கின்றன.
வீர சாவர்க்கர் வெறும் வரலாற்று ஆராய்ச்சியாளர் மட்டுமல்ல. தான் ஆராய்ந்தறிந்த தம் தேச வரலாற்றை தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் கருவியாகவும் அவர் பயன்படுத்தினார். இரண்டாம் உலகப்போர் தொடங்கிய போது இந்திய இளைஞர்களை ராணுவத்தில் பெரிய அளவில் இணையுமாறு அவர் பிரச்சாரம் செய்தார். இப்பிரச்சாரத்தில் அவர் வெளிப்படையாகவே கூறினார்:
“….1857ல் நமது முதல் விடுதலைப் போர் நடைபெற்ற காலத்திலிருந்தே பிரிட்டிஷார் இராணுவத்தினை அரசியல் நிகழ்வுகளிலிருந்து விலக்கி வைத்துள்ளனர். இதனை மாற்ற இது நல்ல வாய்ப்பாகும். இதில் நாம் வெற்றி பெற்றால் விடுதலைக்கான போரில் நாம் வெற்றி அடைவோம்…..”
netajiவீர சாவர்க்கரின் இந்த தீர்க்கமான பார்வை வரலாற்றையே மாற்றியமைத்தது என்பதை நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வார்த்தைகளின் மூலமாக அறிகிறோம்.
ஆஸாத் ஹிந்த் வானொலியில் ஆற்றிய உரையில் (ஜூன் 25, 1944) நேதாஜி கூறினார்:
“….சில தலைவர்கள் தவறான அரசியல் கற்பனைகளால் இந்திய ராணுவத்தில் இணைந்த வீரர்களை ‘கூலிப்படையினர்’ என அழைத்துக் கொண்டிருந்த போது வீர சாவர்க்கர் அச்சமின்றி இந்திய இளைஞர்களை ராணுவத்தில் இணைய அழைப்பு விடுத்து வருவது மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இவ்வாறு இணைந்த வீரர்களே இந்திய தேசிய ராணுவத்துக்கு கிடைக்கும் பயிற்சி பெற்ற வீர இளைஞர்கள்……”
விடுதலைப் போராட்டத்தின் இறுதி ஆண்டுகளில் இந்திய ராணுவத்தில் தேசபக்தியும் விடுதலை உணர்ச்சியும் அலையடித்தது பிரிட்டிஷார் இந்தியாவை விட்டகல ஒரு முக்கிய காரணமாகிற்று என்பது வரலாறு.
மீட்டெடுக்கப்பட்ட போராட்ட வரலாறு
cover1இந்தியாவின் வரலாறே அது மீண்டும் மீண்டும் அன்னிய படையெடுப்புகளுக்கு அடி பணிந்த வரலாறுதான் என்று அன்னிய ஆட்சியாளர்களும் அன்னிய மோகத்துக்கு ஆளான நம் வரலாற்றாசிரியர்களும் தொடர்ந்து சொல்லி வருகின்றனர். யூனியன் ஜாக் செங்கோட்டையில் இருந்து கீழிறங்கி விட்டது. இருந்தபோதும் நம் கல்வி நிறுவனங்களில் கண்ணுக்குத் தெரியாமல் அக்கொடியின் இருண்ட நிழல் தொடர்ந்து படர்ந்திருக்கிறது.
அந்த இருள் அகல பாரதத்தின் வரலாற்றை ஆழ்ந்து பயின்றவர் வீர சாவர்க்கர். அவர் எழுதிய “பாரத நாட்டின் வரலாற்றில் ஆறு பொன்னேடுகள்” ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் படிக்க வேண்டிய நூலாகும். தமிழர்களான நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களும் அதில் உண்டு.தமிழக மன்னர்களின் வீரத்தை, அன்னியர் ஊடுருவிட இயலாத தென்னக பாரதத்தின் மறத்தை, முதன் முதலில் புகழ்ந்தெழுதி ஆவணப்படுத்திய வரலாற்றாசிரியர் வீர சாவர்க்கரே ஆவர். சக்தி வாய்ந்த மொழியில் அவர் எழுதுகிறார்:
“….கிரேக்கர்களும் சகர்களும் ஹுணர்களும் வடக்கே அலை அலையாக படையெடுத்து வந்து தாக்கிய போதும் அவர்களால் நர்மதை நதிக்குத் தெற்கே காலடி வைக்க முடியவில்லை. அதுவும் தவிர கலிங்க சேர சோழ பாண்டிய அரசுகள் மிக வலுவான கடற்படையுடன் காத்திருந்தன. கடல் எல்லையில் அந்நிய படையெடுப்பு அபாயமே இல்லாமலிருந்தது…..”
நம் வீர வரலாறு குறித்துத் தமிழ் நெஞ்சம் பெருமிதத்தால் விம்முகிறது. இப்பெருமிதம் பொய்யான இனவாத கட்டுக்கதையால் உருவானதல்ல. ஆழமான வரலாற்று ஆராய்ச்சி அளிக்கும் சத்தியமான உன்னத உணர்ச்சி. சாணக்கியர் கூடல் என்னும் இடத்திலிருந்து வந்த காரணத்தால் கௌடில்யர் என அழைக்கப்பட்டிருக்கக் கூடும் என்கிற செய்தியையும் வீர சாவர்க்கர் தருகிறார். மட்டுமல்ல.
அலெக்ஸாண்டர் போன்ற ஒரு ஆதிக்க வெறி பிடித்த கொடியவனை ஐரோப்ப காலனிய வரலாற்றாசிரியர்கள் மகா அலெக்ஸாண்டர் என புகழ்ந்து கொண்டிருந்தனர். ஆனால், வீர சாவர்க்கர் அக்கால வரலாற்றின் ஒவ்வோர் இழையாகத் தேடிச்சென்று சரித்திரத்தை நோக்குகிறார். காத்திரமான ஆதாரங்களின் அடிப்படையில் காலனிய மனநிலைக்கு எதிராக அவர் பின்னர் உணர்ச்சிகரமான பெருமுழுக்கம் செய்கிறார்.
malwa_india_1823எவ்வாறு அன்னிய ஆக்கிரமிப்பாளனுக்கு எதிராக மாளவ-சூத்ரக குடியரசுகள் இணைந்தன; அவர்கள் எவ்வாறு சாதி-கலப்பு திருமணங்களை பெரிய அளவில் செய்து தம்மை ஒரு ஒன்றுபட்ட சமூகத்தினராக மாற்றி ஓரணியில் சேர்ந்தார்கள். எப்படி இந்த இணைந்த சமூகம் உருவாக்கிய ராணுவத்தைச் சேர்ந்த பாரதிய வீரனின் அம்பு அலெக்ஸாண்டரின் அந்திமக் காலத்தை விரைவாகக் கொண்டு வந்தது என்பதை ஆதாரபூர்வமாக அவர் விளக்குகிறார். இந்த வரலாற்று உண்மைகள் ஐரோப்பிய காலனிய வரலாற்று ஆசிரியர்களால் உணரப்பட்டவையே; எனினும், உரத்த குரலில் சொல்லப்படாதவை. வீர சாவர்க்கர் அவ்வுண்மைகளை உரக்கச் சொன்னார்.
வரலாற்றின் நேர்மையை அவரது உணர்ச்சிகர தேசபக்தி எவ்விதத்திலும் பாதித்துவிடக் கூடாது என்பதில் அவருக்கு இருக்கும் அதீத கவனம் இங்கு குறிப்பிடப்பட வேண்டியது. எடுத்துக்காட்டாக, சந்திரகுப்த மௌரியர் குறித்து வழங்கும் நாட்டுப்புறக் கதைகளை வீர சாவர்க்கர் ஒரு வரலாற்றாசிரியராகவும் சமூக ஆராய்ச்சியாளராகவும் எடை போடும் விதத்தைப் பார்க்கலாம்:
ஒருவனை அவனது பண்பை வைத்து எடை போடாமல், அவன் பிறந்த இனத்தின், குடும்பத்தின் பெருமை-சிறுமைகளை வைத்து மதிப்பிடுவது அனைத்து மானிட சமூகங்களிலும் காணப்படும் பொதுவான பலவீனம். குடும்ப மரபுகளைப் பற்றிய உயர்வு நவிற்சி கதைகள் காலப் போக்கில் நாடகங்களாகவும், கவிதைகளாகவும், புதினங்களாகவும், நாட்டுப்புற பாடல்களாகவும் விளம்பரப்_படுத்தப்பட்டு மக்களிடையே பரவின.  (விரிவஞ்சி இதை மேலும் விவரிக்காமல் விடுகிறோம்.)
ஆனால், மௌரிய குலத்தின் தோற்றத்தைக் குறித்த வரலாற்று உண்மையை வெளிப்படையாகக் கூறுகிறார் வீர சாவர்க்கர்:
“…..மூராவின் மகனே மௌரியன்! சந்திரகுப்தனை மௌரியன் என்று அழைக்க அதுவே சரியான காரணமாகும். தாய்வழிப்பிறப்பைப் பெருமையாக எண்ணிய சந்திரகுப்தன் தன் அரச குடும்பத்திற்கு மௌரியன் என பெயர் சூட்டிக் கொண்டான். அதன் மூலம் தன் தாய் மூராதேவியின் பெயரைப் பாரத நாட்டின் வரலாற்றில் சிரஞ்சீவியாக்கிவிட்டான். மயில் பறவைகளை விற்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த மூரியா ஜாதியையே மௌரியப் பேரரசர்கள் ஏற்றுக்கொண்டனர்…..”
வரலாற்றாசிரியரும் ஒரு தேசத்தை வழிநடத்தி செல்ல வேண்டிய தேசியகுருவும் மாறி மாறி ஒருவருக்கொருவர் எதிர்ப்பற்ற நிலையில் வீர சாவர்க்கரில் வெளிப்படுகின்றனர்.
சந்திரகுப்த மௌரியர் மூலம் சாதியையும் குலத்தையும் கோத்திரத்தையும் பற்றிக்கொண்டு ரிஷி மூலம் நதிமூலம் ஆராயும் அற்ப மனங்களுக்கு அவர் சொல்கிறார்:
“…..சந்திரகுப்தர் ஒரு க்ஷத்திரியனா? எப்படியிருந்தால் என்ன?  “உயர் ஜாதியில் பிறந்த க்ஷத்திரியர்களே! மிலேச்சனான அன்னியப் பேரரசனுக்கும் அவனது படைத்தளபதிகளுக்கும் சிரங்களைத் தாழ்த்தி மண்டியிட்டு ஏற்றுக்கொண்ட உங்களைவிட அஞ்சா நெஞ்சனாகிய சந்திரகுப்தன் என்னும் பெயர் படைத்த நான் மாபெரும் க்ஷத்திரியன் என உரிமை கொண்டாடமுடியும். எப்படி என்று கேட்கிறீர்களா? அந்த மிலேச்சர்களை ஒவ்வொரு போர்க்களத்திலும் என் வாள் வலிமையால் முழுதும் தோல்வி அடையச் செய்திருக்கிறேன்.” என்று நியாயமான பெருமிதத்துடன் சந்திரகுப்தன் கூறக்கூடும்…….”
இவ்விதமாக பாரதம் அன்னிய ஆக்கிரமிப்பை எவ்விதம் தொடர்ந்து எதிர்த்து போராடியது என்பதை இத்தனை விரிவான ஆதாரங்களுடன் எந்த வரலாற்றாசிரியரும் ஆவணப்படுத்தியுள்ளார்களா என்பது ஐயமே. தட்சிணத்தில் முஸ்லீம் ஆக்கிரமிப்பினால் இஸ்லாமியராக மாற்றப்பட்டிருந்த ஹரிஹரரும் புக்கரும் எவ்வாறு தாய் தர்மம் திரும்ப வித்யாரண்ய சுவாமிகள் புரட்சிகரமாக உதவினார் என்பதையும் வீர சாவர்க்கர் தமக்கே உரிய பார்வையுடன் விவரிக்கிறார்:
“…..விஜயநகரம் என்னும் ஹிந்துப் பேரரசு நிலைநாட்டப் பெற்றது ஹிந்து வமிசத்தின் மாபெரும் சாதனை என்பதைப் போதுமான அளவுக்கு ஹிந்து வரலாறுகளில் பெருமைப் படுத்தி பேசப்படவில்லை. இதற்கு எடுத்துக்காட்டாக ஒன்றைக் கூறவேண்டுமென்றால் சங்கேஸ்வர சங்கராச்சாரியாரான மாதவாச்சாரிய வித்யாரண்ய ஸ்வாமியைக் குறிப்பிடலாம்.
இவருக்கு இருந்த புரட்சிகரமான அரசியல் ஞானம் தனித்தன்மை வாய்ந்தது. சமயத்துறைகளிலும் அவர் மாபெரும் புரட்சியாளர் என்பதை அவர் பழைய பழக்க வழக்கங்களைப் பின்பற்ற மறுத்ததன் மூலம் நிரூபிக்கலாம். …ஆனால் இன்று வடபாரதத்தில் வாழும் ஹிந்துக்கள் மேற்குறிப்பிட்ட தக்காணத்து ஹிந்து மாமன்னர்களைப் பற்றி கேள்விப்பட்டதைப் போல காட்டிக் கொள்வதேயில்லை. தென்னாட்டிலும் அவர்களின் பெயர்களை ஓரளவு அறிந்தவர்கள் ஆயிரத்தில் ஒருவர்தான். இந்த மானங்கெட்ட நிலையிலிருந்து ஹிந்துகள் உடனடியாக மாற வேண்டியது அவசியம்…..”
நம் தேசிய வாழ்க்கையையும் பண்பாட்டையும் காப்பாற்ற பல நூற்றாண்டுகளாக நாம் நடத்திய இத்தொடர் போராட்டத்தின் நீட்சியாகவே பாரத விடுதலைப் போராட்டத்தையும் வீர சாவர்க்கர் காண்கிறார். இதில் குறுகிய கொள்கைப்பார்வைகளின் அடிப்படையில், அரசியல் எதிரிகளை தேச விரோதிகளாக சித்தரிக்கும் சின்னத்தனம் அவருக்கு என்றைக்கும் உரியதல்ல. பாரத விடுதலையின் இறுதிக்கட்டத்தை வீர சாவர்க்கர் வர்ணிக்கும் போது அப்போராட்டத்தின் அனைத்து தரப்புகளையும் அரவணைத்து ஒரு விசாலமான ஹிந்துத்துவ வரலாற்றுப் பார்வையை முன்வைக்கிறார்.
“….பிற்காலத்தில் சத்தியாகிரகம் ஒத்துழையாமை போன்ற தாரக மந்திரங்களை ஜெபித்தவரும் பொதுமக்களால் மகாத்மாஜி என அன்புடன் போற்றப் படுபவருமான அப்பெரியாருடன் சீரிய நண்பனாகப் பழகும் வாய்ப்பினை நான் பெற்றிருந்தேன். அப்போதுதான் அவர் இங்கிலாந்து வந்திருந்தார். அப்போது அவரை பாரிஸ்டர் காந்தி என்று மட்டும் அழைத்தார்கள். அதன் பின்னர் எங்கள் வாழ்நாள் முழுவதும் நாங்கள் ஒன்றாக இணைந்ததுண்டு. பல சமயங்களில் எங்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவியதும் உண்டு.
…பாரத நாட்டின் அரசியல் வாழ்வில் நான்கு காலகட்டங்கள் உண்டு.
1) ஆங்கில ஆட்சியை அடிவருடியவர்கள்
2) தீவிர தேசியவாதிகளான அகிம்சாவாதிகள்
3) புரட்சிவாதிகள்
4) ஹிந்துத்துவ வாதிகள்
இந்த நால்வகை அரசியல் தொடர்பு கொண்ட அனைவரும் 1857 ஆம் ஆண்டு சுதந்திரப்போரில் பெற்ற தோல்விக்குப் பின்னர் உருவானவர்கள்.
….தில்லி செங்கோட்டையில் கர்வத்துடன் பறந்து கொண்டிருந்த பிரிட்டிஷ்காரர்களின் யூனியன் ஜாக் கொடி, பேரரசு என்ற திமிருடன் பறந்து கொண்டிருந்த அந்த கொடி பிடுங்கி எறியப்பட்டு “பாரத சுதந்திரம் வாழ்க. நீங்கள் அனைவரும் வாழ்க” என்னும் இடிமுழக்கத்துடன் மூவர்ணக் கொடி சுதந்திர ஆளுமை கொண்ட பாரத நாட்டு அரசாங்கத்தின் கொடியாக ஏற்றி வைக்கப்பட்டது. அக்கொடியின் நடுவில் சுதர்சன சக்கரம் பொறிக்கப்பட்டிருந்தது….”
வீர சாவர்க்கரின் “பாரத நாட்டின் வரலாற்றில் ஆறு பொன்னேடுகள்” பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை ஹிந்துக்கள் விரட்டி சுவராஜ்ஜியம் நிறுவியதுடன் முடிவடைகிறது.
cover2இந்த நூலைப் போலவே மிகவும் பிரசித்தி பெற்ற அவரது மற்றொரு வரலாற்று ஆவணம் “ஹிந்து பத பாதுஷாகி” என்பதாகும். இது வீர சிவாஜி காலம் தொட்டு மராட்டிய பேரியக்கம் எப்படி அன்னிய மொகலாய ஆக்கிரமிப்பை எதிர்த்து அதனை பலமிழக்க செய்தது, அத்துடன் எவ்வாறு இந்த பெருமைக்குரிய ஹிந்து இயக்கம் ஐரோப்பிய ஆக்கிரமிப்பையும் எதிர்கொண்டது என்பதையும் ஆவணப்படுத்துகிறது.
முஸ்லீம் சித்திக்கள், ஆங்கிலேய-போர்ச்சுகீசிய கூட்டணி, டச்சு கப்பல் படை ஆகிய அனைத்தையும் கன்கோஜி ஆங்க்ரே எனும் மராட்டிய கப்பற்படை தளபதி எவ்வாறு மீண்டும் மீண்டும் தோற்கடித்தார் என்பது மிகவும் சுவாரசியமான வரலாற்றுத்தகவல். “வன்மம்” (Revenge), “வெற்றி” (Victory) போன்ற பெயர்களைத் தாங்கிய ஆங்கிலேய கப்பல்கள் மராட்டிய கப்பற்படை மீது போர் தொடுத்து அடைந்த படுதோல்விகள் பாரத வரலாற்றின் மறைக்கப்பட்ட பக்கங்கள். இறுதியாக மராட்டிய ஹிந்து இயக்கம் செய்த வரலாற்றுத்தவறுகளையும் வீர சாவர்க்கர் காய்தல் உவத்தலின்றி விளக்குகிறார்.
இந்நூல் வீர சாவர்க்கர் ரத்னகிரியில் முழு விடுதலை அடைவதற்கு முன்னர் எழுதப்பட்டது. ஆங்கிலேய அதிகாரிகளுக்கு தெரியாமல் எழுதப்பட்டது. முழுக்க முழுக்க தாம் ஆராய்ச்சி செய்த வரலாற்று ஆவணங்களை தமது நினைவிலிருந்து மட்டுமே மீட்டு இதனை வீர சாவர்க்கர் எழுதினார். ஆனால் பின்னர் அது ஆராயப்பட்ட போது முழுக்க முழுக்க அந்த வரலாறு ஆதாரப்பூர்வமாக ஆவண சான்றாதாரம் கொண்டதாக அமைந்திருந்தது.
சிலர் கேட்கலாம், “சாவர்க்கர் ஏன் இந்த பழைய வரலாறுகளைத் தோண்டி எடுத்து எழுத வேண்டும்?”
இதற்கு வீரசாவர்க்கர் விளக்கமாக பதிலளிக்கிறார். ஒவ்வொரு வரலாற்றாசிரியனும் நினைவில் வைத்திருக்க வேண்டிய விளக்கம் அது.
“இறந்த காலத்தின் நினைவுகளைக் கொண்டு நிகழ்காலத்தில் சண்டை போட்டுக் கொண்டிருப்பது தற்கொலைப் போக்குடைய மடத்தனம் மட்டுமே. ஒரு ஹிந்துவும் முஸ்லீமும் இன்றைக்கும் ஒருவரை ஒருவர் தழுவுவது போல ஒருவரை ஒருவர் கொல்ல முயற்சிக்க வேண்டும், ஏனென்றால் அந்த காலத்தில் அப்படித்தான் சிவாஜியும் அப்ஸல்கானும் செய்தார்கள் என்று சொன்னால் அதைப் போல மடத்தனம் வேறென்ன இருக்க முடியும்?
நாம் வரலாற்றை படிப்பது நம் இன்றைய விரோதங்களை இரத்தம் சிந்தும் மோதல்களை பரஸ்பர வெறுப்பை, கடவுளின் பெயராலோ அல்லது அன்னைபூமியின் பெயராலோ, வளர்த்துக்கொள்ள ஆகச்சிறந்த காரணங்களைக் கண்டுபிடிப்பதற்காக அல்ல. மானுட வெறுப்பையும் இனதுவேஷத்தையும் வளர்க்க அல்ல. மாறாக அதற்கு நேர் எதிரிடையான காரணங்களுக்காக மட்டுமே நாம் வரலாற்றை ஆராய்கிறோம். இவ்வெறுப்பையும் வன்முறையையும் அகற்றி மனிதனுக்கு மனிதன் அனைத்து மானிடத்தின் பொது இறைத்தன்மையையும் பூமியின் அனைத்து மானுடத்துக்குமான தாய் தன்மையையும் உணர்ந்து ஒரு மானுட குலமாக மாறுவதற்காக மட்டுமே.”
ஆனால். இந்த “மானுடமே ஓர் குடும்பம்” எனும் பொன்னுலகக்  கனவு ஒரு யதார்த்தமற்ற கனவாக இருக்காமல் யதார்த்த சூழலின் தரவுகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு செயல்பபட்ட ஒரு கருவியாக அவர் கைகளில் விளங்கியது. ஹிந்து பத பாதுஷாகிக்கு 1925ல் அவர் எழுதிய முன்னுரையில் வீர சாவர்க்கர் கூறுகிறார்:
“….ஆனால் இந்த பிரகாசிக்கும் பொன்னுலக கனவு நமது கண்களை யதார்த்தத்தின் உண்மைகளை அறியவிடாமல் குருடாக்கி விடலாகாது. மனிதர்கள் குழுக்களாக பிரிவுகளாக இயங்குகின்றனர். தம்மை உறுதிப்படுத்திக் கொண்டு விரிவாக்கம் செய்ய அவர்கள் தொடர்ந்து முயற்சி செய்கின்றனர். கடும் போர்களும் தியாகங்களும் இந்த விரிவாக்கத்தை செயல்படுத்திய வண்ணமே உள்ளது.
…எனவே உலக ஒற்றுமையைக் குறித்து பேசுவதற்கு முன்னால் ஒரு தேசமாக ஒரு சமுதாயமாக உயிர்வாழும் தகைமையை நாம் அடைய வேண்டும். இந்த அக்னிப்பரீட்சைதான் ஹிந்துக்கள் முன் இஸ்லாமிய ஆதிக்க சக்திகளால் வைக்கப்பட்டது.
ஒரு அடிமைக்கும் அவன் எஜமானனுக்கும் சமத்துவமான அமைதி நிலவ முடியாது. ஹிந்துக்கள் வரலாற்றில் தம் வீரத்தை நிரூபிக்காமல் இருந்திருந்தால் இஸ்லாமியர்கள் நட்புக்கரத்தை நீட்டியிருந்தால் கூட அக்கரம் நட்பினைக் குறிப்பதாக அல்லாமல் அலட்சியத்துடனும் வேண்டா வெறுப்பாகவும்தான் நீட்டப்பட்டிருக்கும். ஹிந்துக்கள் அதனை நம்பிக்கையுடனும் நேசபாவத்துடனும் சுயமரியாதையுடனும் பற்ற முடியாது.
…ஹிந்துக்கள் தங்கள் தேவதேவியரின் பெயரால் நிகழ்த்திய நீண்ட மாபெரும் விடுதலைப் போராட்டமே அந்த சுயமரியாதையை,  நம்பிக்கையை முஸ்லீம்களுடன் நட்பு கோரும் தன்மையை ஹிந்துக்களுக்கு அளித்துள்ளது.”
பாரத விடுதலைப் போராட்டத்தின் போது பிரிட்டிஷ் தடியடியால் இறந்த தியாகியான லாலா லஜபதி ராய் இந்நூலை ஒவ்வொரு பாரத அரசியல்வாதியும் படிக்க வேண்டிய நூல் என கூறினார்.
வரலாற்றாசிரியர்கள் பற்றிய வரலாற்றிலே ஒரு தனித்துவம் கொண்ட வைரமாக வீர சாவர்க்கர் ஜொலிக்கிறார். தேசத்தின் மீது அன்பு, அக்கறை, வரலாற்று உண்மை மீது அடங்காத ஆர்வம் ஆகியவற்றை எவ்வித சமரசமும் இன்றி தருகிறார் அவர். அத்துடன் காலனிய ஆதிக்கத்துக்கு உள்ளாகி தளர்வுற்று நிற்கும் வளரும் நாடுகளுக்கான ஒரு ஆதர்ச வரலாற்றாசிரியராக அவர் விளங்குகிறார். வறட்டுத்தனமாக புள்ளிவிவரங்களை மட்டுமே அடுக்கும் வெறுமை கொண்ட வரலாற்றாசிரியராக அவர் இல்லை. மாறாக வரலாற்றை செயல்படும் தன்மையுள்ள ஒரு கருவியாக, நிகழ்காலத்தை அறிந்து கொள்ளவும் வருங்காலத்தை உருவாக்கவும் பயன்படுத்துகிறார். வீர சாவர்க்கரின் இந்த வரலாற்று ஆய்வு நோக்கை முன்னெடுத்து செல்ல வேண்டியது ஹிந்து அறிவியக்கத்தின் இன்றியமையாத கடமையாகும்.
பின்குறிப்பு:
வரலாற்றுப் பேராசிரியர் இரா.அண்ணாமலை அவர்களால் வீர சாவர்க்கரின் “பாரத நாட்டின் வரலாற்றில் ஆறு பொன்னேடுகள்” தமிழ் படுத்தப்பட்டு நான்கு தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது.
முகவரி: ஜனசேவா பதிப்பகம் 2-ரங்கசாயி தெரு, சென்னை-11.
 நன்றி தமிழ்ஹிந்து ( www.tamilhindu.com )