செஞ்சி

மணக்கால் அய்யம்பேட்டை | 11:23 AM | Best Blogger Tips
தமிழக வரலாற்றில் செஞ்சிக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு, மேற்கு தமிழகத்தில் வலிமையான கோட்டை கொத்தளம் உடைய அரசியல் களம் என்றால் அது செஞ்சி தான். வேலூர் கோட்டைகள் எல்லாம் கட்டுவதற்கு முன்னரே கோட்டையுடன் வலிமையாக திகழ்ந்த ஊர் செஞ்சி.

செஞ்சிக் கோட்டை ஆனந்தக் கோனாரால் அமைக்கப்பட்டு பல அரசர்களின் ஆட்சியின் கீழ் இருந்து பின்னர் பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் வசம் இருந்தது. தற்போது இக்கோட்டை மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத் துறையின் பராமரிப்பில் உள்ளது. கிருஷ்ணகிரி, சந்திரகிரி மற்றும் ராஜகிரி ஆகிய மூன்று சீரற்ற மலைக்குன்றுகளை மாபெரும் செஞ்சிக்கோட்டையின் மதில்கள் அரவணைத்துக் செல்கின்றன. ராஜகிரி மலை மட்டுமே (800 அடி உயரம்) தனியாக எவற்றோடும் பொருந்தாமல் நிற்கும் குன்று.

போர்வீரர் தங்குமிடங்கள் குதிரைலாயங்கள்

உயரம் குறைந்த கவிகை மாடங்கள். வளைவு வளைவான நுழைவாயில்கள், தனியறைகள், குதிரைகள் இளைப்பாறவும் போர்வீரர்கள் தங்கவும் கட்டப்பட்டுள்ளன. கல்யாண மகாலுக்கு அருகிலுள்ள இந்த கவின்மிகு அறைகளில் தொல்பொருள் ஆய்வுத்துறையின் பயிற்சி முகாம் அமைக்ப்பட்டுள்ளது.

யானைக்குளம்

போர் வீரர் குடியிருப்பு வரிசைக்கு தெற்கில் உள்ள யானைக்குளம் மாடங்கள் அழகின் ரகசியங்கள்.

சதத் உல்லாக்கான் மசூதி

சதத் உல்லாக்கான் எழுப்பிய மசூதி. தேசிங்குராஜனை போரில் வென்று கோட்டையைக் கைப்பற்றியதன் நினைவாக கட்டப்பட்டது. கி.பி. 1717 - 18 இல் எழுப்பப்பட்டதாகப் பார்சிய கல்வெட்டு தெரிவிக்கிறது.

நெற்களஞ்சியம் - உடற்பயிற்சிக்கூடம்

விஜய நகர கட்டடக் கலை பாணியில் அமைந்த செஞ்சிக் கோட்டையின் பெருமைமிகு கட்டடங்கள் ராஜகிரி மலையின் கீழ் கல்யாண மகாலுக்கு அருகிலுள்ள நெற்களஞ்சியம் பிரமாண்டமானது. தாராளமான நுழைவாயிற் பகுதி. இதன் சுவர்கள் மூன்று மீட்டர். பீப்பாய் போன்ற அரைவட்ட கவிகை மாடத்தை நெற்களஞ்சியத்தின் வடகிழக்கில் காணமுடியும். உடற்பயிற்சி செய்யவும் நெற்களஞ்சியக் கட்டடம் பயன்பட்டதாக சொல்லப்படுகிறது.

வெங்கட்ரமணா கோயில்

பரந்து விரிந்துள்ள கோயில், இங்குள்ள முனைப்பான தூண்களும், அழகுமிகு சிற்பங்களும் நாயக்கர்களின் அழகியல் தன்மையை எடுத்துக்காட்டுகின்றன.

வேணு கோபாலஸ்வாமி கோயில்

கலை எழில் மிகுந்த சிற்பங்கள் நிறைந்த கோயில் இது. கிருஷ்ணன் புல்லாங்குழல் இசைப்பது, அவரை கயிறு கட்டி இழுப்பது போன்ற சிற்பங்கள் இங்குள்ளன. இந்தக் கோயிலின் முகப்பு வாயிலில் மிகச்சிறந்த பூச்சு வேலையோடு மெருகேற்றப்பட்ட மென்மையான தளம் உள்ளது. இது வேணுகோபாலஸ்வாமி கோயிலின் சிறப்புத் தன்மையை பறைசாற்றுகிறது.

ராஜகிரி மலைகோட்டை

இந்தோ - இஸ்லாமிய பாணியில் கட்டப்பட்ட அரச தர்பார் மண்டபம் இம்மலையின் உச்சியில் உள்ளது. மேல் வளைவுகள் வரிசையாக அமைய, குவிமாடம் மூடிய கூரை என்று இம்மண்டபத்தின் வடிவமைப்பு உள்ளது. ரசிக்கத்தக்க மற்றொரு கட்டடம் போர்த் தளவாடக் கிடங்கு, இம்மலை மீது நாயக்கர் கால கட்டடக் கலையமைப்பைக் கொண்ட ரெங்கநாதர் கோயில் ஒன்றும் இருக்கிறது. இங்கு சென்றால் 4 மீட்டர் நீளமும் 2 மீட்டர் சுற்றளவும் கொண்ட பெரிய இரும்பு பீரங்கி ஒன்றையும் பார்த்து வரலாம்.

கிருஷ்ணகிரி கோட்டை

ராஜகிரியின் வடக்கேயுள்ள மலைக்குன்றில் கருங்கல் பாறைகளின் மீது அமைந்துள்ள கிருஷ்ணகிரி கோட்டை. கற்படிகள் வழியாக நடந்து கோட்டையை அடையலாம். இங்கு காண்பதற்கு நிறைய இடங்கள் உள்ளன. இரு பிரமாண்டமான தானியக் களஞ்சியக் கட்டடங்கள், தூண்களில் உருவான மண்டபம், இரண்டு கோயில்கள், செங்கல் மாளிகை, வட்டமான பார்வையாளர் தர்பார் மற்றும் சிறு பீரங்கியும் உள்ளன.

சிங்கவரம் கிராமம்

செஞ்சி அருகில் 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சிங்கவரம் கிராமம். இது பல்லவர் காலத்தில் சிங்கபுர நாட்டின் தலைநகராக இருந்தது. முதலாம் மகேந்திர வர்மன் தந்தை சிம்ம விஷ்ணுவின் காலத்தில் இந்த நகரம் ஏற்பட்டிருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

சிங்கவரம் அருள்மிகு அரங்கநாதஸ்வாமி ஆலயம் மிகப்பழமை வாய்ந்தது , இது

செஞ்சிக்கு வடக்கே ஐந்து கிமீ தூரம் உள்ளது இக்கோயில் ம்லையின் மேல் இருப்பதால் 125 படிகளைக் கடக்க வேண்டும் எல்லோரா போல் ஒரே பாறையைக்குடைந்து செய்யப் பட்டக்கோயில், இந்தப்பாறையிலேயே முன் புறம் இரு தூண்கள் மிகப்பெரிய அளவில்நிற்க உள்ளே நீண்ட கருவறை தெரிகிறது அங்கு ஆதிசேஷன் சுருண்டு கிடக்க அந்தப்படுக்கையில் அனந்த சயனமாக அரங்கன் சயனித்திருகிறார். தலையைச் சற்று தூக்கியவாறு, வலது திருக்கரத்தைக் கீழே தொங்க விட்டபடி, இடது கையை மேற்புறமாக மடித்து, கடக முத்திரையைக் காட்டி ஐந்து தலை நாகத்தின் மேல் திருமால் அழகுற நித்திரை கொண்டுள்ளார்.

காஞ்சிபுரத்தைப் போன்று செஞ்சியும் இரு பிரிவாக இருந்துள்ளது. தற்போது உள்ள செஞ்சி "சிவ செஞ்சி" என்றும், சிங்கபுரம்-மேலச்சேரி இணைந்திருந்த பகுதி "விஷ்ணு செஞ்சி" என்றும் அழைக்கப்பட்டதாக கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றன.

ஒரே கல்லில் குடைந்து இந்தப் பெருமாள் திருமேனியை வடித்துள்ளனர். ஸ்ரீரங்கம் ரெங்கநாதரைவிட, இந்த ரெங்கநாதர் நீளமானவர் என்று கருதப்படுகிறது. சிங்கவரம் ரெங்கநாதர் 24 அடி நீளத்திற்கு பள்ளி கொண்டுள்ளார். அவரும், பள்ளியறையும் ஒரே கல்லில் உருவானவை. மகேந்திரவர்ம பல்லவனின் கலை ஆர்வத்தில் விளைந்த அற்புதம் இது..மிகப் பெரிய பெருமாளான இவரை மூன்று வாயில்கள் வழியாகச் சென்றுதான் முழுமையாகத் தரிசிக்க முடியும். முதல் நிலையில் பெருமாள் திருமுகம், மேலிருக்கும் பஞ்சமுக ஆதிசேஷன், வலது திருக்கரம், இடது திருக்கரம், கந்தர்வ பிரம்மா, மார்பில் மகாலட்சுமி ஆகியோரை தரிசிக்கலாம். மத்திய பாகத்தில் ஸ்ரீகருடன் தரிசிக்கலாம். மூன்றாம் நிலையில் திருவடி, அதன் கீழ் பூமாதேவி, நாரதர், பிரகலாதன், பிருகு-அத்திரி என்ற முனிவர்கள் ஆகியோரை தரிசிக்கின்றோம்.

ஸ்ரீ வரதராஜப் பெருமாளையும் பூதேவி, ஸ்ரீதேவியுடன் தனி சந்நிதியில் தரிசிக்கலாம். தாயார் ரங்கநாயகி தனியே அருள் பாலிக்கிறார். ஸ்ரீ நிகமாந்த மகாதேசிகன் சிலை வடிவமும் உள்ளது. இக்கோயிலில் "சந்திர புஷ்கரணி" என்ற வற்றாத தீர்த்தக் குளம் இருக்கின்றது. மலை மீது சுற்றி வரும் போது லட்சுமி தீர்த்தம், ராமர் தீர்த்தம், வெயில் படாத சுனை ஆகியவற்றைக் காணலாம். மேலும் செஞ்சி அரச குடும்பத்தினர் வருவதற்கு, செஞ்சிக் கோட்டையில் இருந்து இக்கோயிலுக்கு வரும் சுரங்கம் ஒன்றும் உள்ளது. அதை இப்போதும் காணலாம்.

செஞ்சியை ஆண்ட மாவீரன் தேசிங்கு ராஜன், ஆர்க்காடு நவாப்பின் படைகளுடன் போரிட தன் குல தெய்வமான இந்த ஸ்ரீஅரங்கநாதரிடம் அனுமதி கேட்டபோது அரங்கன், "இன்று போருக்குச் செல்ல வேண்டாம். நாளை செல்" என்று கூறினாராம். தேசிங்கோ, "எதிரியின் படைகள் எல்லையை அடைந்துவிட்டதே... முன் வைத்த காலை பின் வைக்கமாட்டேன். இன்றே செல்லட்டுமா?" என்று கேட்டாராம். இதைக் கேட்ட அரங்கன் தலையைத் திருப்பிக் கொண்டதாகக் கூறுகிறார்கள். இப்போதும் ரங்கநாதர், முகம் திரும்பிய நிலையில் இருப்பதைக் காணலாம். போரில் தேசிங்கு, சுபாங்கிதுரை என்பவன் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டதில் வீர மரணம் அடைந்தார்.

மேலும் முஸ்லீம் படையெடுப்பின்போது காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் உற்சவ மூர்த்தியை சிறிது காலம் தேசிங்கு ராஜா பாதுகாப்பில் சிங்கவரம் ரங்கநாதர் ஆலயத்தில் வைத்திருந்தனர்; பின்னர் காஞ்சியில் அமைதி திரும்பியதும் மீண்டும் எடுத்துச் செல்லப்பட்டதாக வரலாறு கூறுகிறது. இதன் விளைவாகவே இக்கோயிலில் ஸ்ரீ வரதராஜர் சந்நிதி அமைக்கப்பட்டதாம்.

வைகுண்ட ஏகாதசி அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து தரிசித்து மகிழ்கின்றனர். மாசி மகத்தன்று புதுச்சேரி கடற்கரையில் சிங்கவரம் ரங்கநாதருக்கு தீர்த்தவாரி நடைபெறும். 800 ஆண்டுகளாக இத்த வைபவம் செஞ்சி சிங்கவரம் ரங்கநாதருக்கு நடைபெறுவதாகத் தகவல்.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஆலயம் இந்து அறநிலைய ஆட்சித்துறையின் கீழ் உள்ளது.



Thanks to kalvisolai
- kishan.