எம். எஸ். சுப்பு லட்சுமி......
‘’ரகுபதிராகவ ராஜாராம்’ எனும் பாடல் உலகத் தமிழர்களுக்குப் பிடித்த பாடல்.மகாத்மா காந்திக்கும் பிடித்த பாடல்.

‘தன்னை இழந்து பாடுகிறார்’ என்று எம்.எஸ்.சுப்புலட்சுமியை மனம் விட்டுப் பாராட்டினார் காந்தி. இந்திய வானொலியில் மகாத்மா காந்திஜியின் அஞ்சலிக்கு இன்றைக்கும் இந்தப் பாடல்தான் ஒலிக்கிறது.
திருப்பதி திருமலையில் தினமும் கோவில் நடை திறக்கும் போது பாடப் படும் வெங்கடேச சுப்ரபாதம் எம். எஸ். சுப்புலட்சுமி பாடிய பாடலே.

"இந்தியா இந்தத் தலைமுறையில் ஒரு மாபெரும் கலைஞரை உருவாக்கி உள்ளது என்பதில் நீங்கள் பெருமிதம் கொள்ளலாம்" என ஒருவரை பார்த்து சரோஜினி நாயுடு ஒரு முறை கூறினார். ஆம்.
அவர்தான் கர்நாடக சங்கீத மேதை எம்.எஸ். சுப்புலட்சுமி.

எம். எஸ். சுப்புலட்சுமி யின் முழுப்பெயர் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி. 1916 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி தமிழ்நாட்டின் மதுரையில் பிறந்தார். மிக இளம் வயதிலேயே இசை கற்றுக் கொள்ளத் தொடங்கிய இவர் தனது பத்தாவது வயதில் முதல் இசைப் பதிப்பை வெளியிட்டார். தனது 17-வது வயதில் தன் முதல் அரங்கேற்றததை நிகழ்த்தினார். இவர் பல மொழிகளில் பாடியுள்ளார். சிறந்த வீணைக் கலைஞ்ராகவும் திகழ்ந்த இவர் இசை உலகில் எம்.எஸ். என்று அன்புடன் அழைக்கப் பட்டார்.
குடும்பத்தார் அழைத்த பெயர் குஞ்சம்மாள்.
அவரது முதல் குரு அவருடைய தாயார் சண்முகவடிவு தான்.
சுப்புலட்சுமி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
1945-ல் இவர் நடித்து ’பக்த மீரா’ படம் மிகவும் புகழ் பெற்றது.
விடுதலைப் போராட்ட வீரரான கல்கி சதாசிவம் 1940 ஆம் ஆண்டு சுப்புலட்சுமியை மணந்தார்.
இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
1941ம் ஆண்டு சாவித்திரி என்ற படத்தில் எம். எஸ். சுப்புலட்சுமி நாரதர் வேடத்தில் நடித்தார். அதில் அவருக்குக் கிடைத்த ஊதியம் 50 ஆயிரம் ரூபாய்.
அதை மூலதனமாகக் கொண்டு தான் ‘கல்கி’ பத்திரிகை தொடங்கப் பட்டது. பத்திரிகையின் அப்போதைய விலை இரண்டு அணா.
ராஜாஜி, டி.கே. சிதம்பரநாத முதலியார், ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார். கல்கி கிருஷ்ணமூர்த்தி, ஆர்.கே. சண்முகம் செட்டியார், அறிஞர் அண்ணா போன்றவர்களால் தொடங்கப் பட்ட தமிழிசை இயக்கத்திற்கு பக்க பலமாக நின்றவர் எம்.எஸ். சுப்புலட்சுமி. பெண்ணிய மனுஷி சரோஜினி நாயுடு அவர்களுடன் மகாகவி பாரதியார், சுத்தானந்த பாரதியார், வள்ளலார், இராமலிங்க அடிகளார், பாபநாசம் சிவன் போன்ற மேதைகளின் தமிழ்ப் பாடல்களை மேடை தோறும் பாடி ரசிகர்கள் மனதில் பதிய வைத்த பெருமை எம்.எஸ். சுப்புலட்சுமியையே சாரும்.
இந்தியில் வெளிவந்த மீரா திரைப் படத்தைப் பார்த்த பிரதமர் நேரு "இந்த இசையரசிக்கு முன்னால் நான் யார்? வெறும் பிரதமர்!" என எம். எஸ். சுப்புலட்சுமியைப் பாராட்டிப் புகழ்ந்தார்.அந்தப் படத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமி பாடிய ‘காற்றினிலே வரும் கீதம்’ எனும் பாடல் இன்றைக்கும் மிகவும் பிரபலமானது.
அவ்வளவு பிரபலம், புகழ், சம்பாத்தியம் இருந்து. சுப்புலட்சுமி சாதாரண மனுஷியாகவே வாழ்ந்தார். பல நூற்றுக்கணக்கான கச்சேரிகளின் மூலம் அவருக்கு கிடைத்த செல்வத்தை எல்லாம் தானமாக நற்பணிகளுக்கும், சமூக சேவைக்கும் கொடுத்த ஒரே இசைக் கலைஞர் எம்.எஸ். சுப்புலட்சுமிதான்.
இதற்காகவே இவருக்கு பிலிப்பைன்ஸ் நாட்டின் மாக்சேசே விருது வழங்கப் பட்டது.
இவர் உலகின் பல நாடுகளுக்குப் பண்பாட்டுத் தூதுவராகச் சென்று பல நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார்.
1966 அக்டோபரில் ஐ.நா. சபையில் இவர் தன் அரங்கேற்றத்தை நிகழ்த்தியுள்ளார்.
1997-ல் அவரது கணவரின் இறப்புக்குப் பிறகு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை.
1998 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது இவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவர் 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி இயற்கை எய்தினார்.
❤️💕💜💖💖❤️💜💖💕
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏
🌷 🌷🌷 🌷 🌷 🌷🌷 🌷