ஆடிப்பெருக்கு: குடும்பத்தில் செல்வச்
செழிப்பும் மகிழ்ச்சியும் பெருக காவிரியை வணங்குவோம்!
நாளை
ஆடி பதினெட்டு எனும் பதினெட்டாம் பெருக்கு பண்டிகை தினமாக
அனுஷ்டிக்கப்படுகிறது. நாம் பல பண்டிகைகளையும் விஷேச தினங்களையும் கொண்டாடியும்
அனுசரித்தும் வருகிறோம். அதை எதற்காகச் செய்கிறோம் என பொருளுணர்ந்து செய்தால்
மகிழ்ச்சி இரட்டிப்பாகும். அந்த வகையில் ஆடிப்பெருக்கு எதற்காக அனுசரித்து
வருகிறோம் என அறிந்தால் நம் முன்னோர்களின் தீர்க தரிசனத்தையும் அறிவையும் கண்டு
வியக்காமல் இருக்க முடியாது.
தக்ஷிணாயன புண்ணிய காலமான ஆடி மாதத்தில்தான்
பொறுமையின் சிகரமான பூமாதேவி அவதரித்ததாகச் சொல்கின்றன புராணங்கள். இந்த மாதத்தில்
வரும் திதி, நட்சத்திரம் மற்றும் கிழமைகள் யாவும் மகிமை
வாய்ந்தன என்று ஜோதிட சாஸ்திர நூல்கள் பலவும் சிறப்பிக்கின்றன. ஆடிப்பிறப்பு, சர்வ நதி ரஜஸ்வலா, ஆடிப்பதினெட்டில் ஆடி
பெருக்கு, நாக தோஷ பூஜை, புதுமணத் தம்பதிக்கு
ஆடிப்பால் அளித்தல் இப்படி, நாம் அறிந்துகொள்ள
வேண்டிய ஆடிமாத விசேஷ வைபவங்கள் பல உண்டு.
தக்ஷிணாயன புண்ணிய காலம் என்று சூரியனின்
தென்திசைப் பயணத்தைக் குறிப்பிடுவர். இதில் முதல் மாதமாக ஆடியில் விவசாயிகள்
உழவுப்பணிகளைத் துவங்குவர். ஆடிப்பட்டம் தேடிவிதை என்று சொல்வதுண்டு. நாடு
செழிக்கத் தேவையான நீரைப் போற்றிப் பாதுகாக்கவேண்டும் என்ற நோக்கத்தில் நதியைத்
தெய்வமாகப் போற்றி வழிபட்டவர்கள் நம் முன்னோர். அதற்குரிய வழிபாட்டு நாளாக ஆடி
பதினெட்டாம் நாளைத் தேர்ந்தெடுத்தனர்.
ஆடிப் பெருக்கு
தமிழகத்திலுள்ள நீர் நிலைகளில் ஆடி
மாதத்தில் நீர்வரத்து அதிகமாகிப் பெருக்கெடுத்து ஓடும். நதிகளும் நீர் நிரம்பிக்
காணப்படும். பயிர் செழிக்க வளம் அருளும் அன்னை காவிரி நதியைப் பெண்ணாக - தாயாகப்
பாவித்து வணங்கிப் போற்றும் ஆடிப் பெருக்கு எனும் மங்கள விழா தொன்று தொட்டு
நிகழ்த்தப்படும் விழாவாகும். அனைவரையும் வாழ வைக்கும் அந்தக் காவிரித்தாய்க்கு
நன்றி செலுத்தும் விதமாகவே, "ஆடி பதினெட்டாம் விழா' கொண்டாடப்படுகிறது.
முக்கியமாக தமிழகத்தில், காவிரி ஓடும் ஊர்களில்
ஆடிப்பெருக்கு விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. காவிரித் தாய்க்கு நன்றி
தெரிவிக்கும் விதமாகவும் இந்த விழாவைச் சொல்வார்கள். காவிரியைத் தவிர தாமிரபரணி
நதிகள் ஓடுகிற ஊர்களிலும் ஆடிப்பெருக்கு வைபவம் சிறப்புறக் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு மழை கொட்டித்தீர்த்துள்ளது. ஆறுகள் பொங்கி பிரவாகம் எடுத்துள்ளன.
காவிரி கரையோரங்களிலும், தாமிரபரணி
ஆற்றங்கரைகளிலும் ஆடிப்பெருக்கு உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது.
ஆடிபதினெட்டு கொண்டாட்டம்
ஆடி பதினெட்டிற்குப் பத்து நாட்கள் முன்பாக
நவதானியங்களை ஒரு தட்டில் தூவி, மண் அல்லது எரு கலந்து
மூடி வைப்பார்கள். அது வெண்மையாக முளைத்து வளர்ந்திருக்கும். அதை முளைப்பாலிகை
அல்லது முளைப்பாரி என்பார்கள். ஆடி18 அன்று பிற்பகல்
வேளையில் முளைப்பாலிகையை ஏந்தி ஊர்வலமாக ஆற்றுக்குச் செல்வர். தூய்மையான இடத்தில், பசுஞ்சாணத்தில்
பிள்ளையார் பிடித்து வைப்பர். அவரின் முன்னால், முளைப்பாலிகைகளை
வரிசையாக வைப்பார்கள். அது முடிந்ததும் பச்சரிசி, சர்க்கரையை ஒரு
பாத்திரத்தில் போட்டு, நீர் ஊற்றிக் கலந்து
விநாயகரின் முன்னால் வைத்து வேண்டுவார்கள்.
வயதான சுமங்கலி ஒருவர், அங்கு வந்திருக்கும்
பெண்களுக்கு மஞ்சள் தடவிய நூலைக் கொடுப்பார். சிலர் கைகளிலும், சிலர் கழுத்திலுமாக
கட்டிக் கொள்வார்கள். அதன் பின், அவரவர் கொண்டு வந்த
முளைப்பாலிகை, பனை ஓலைகளால் செய்யப்பட்ட வட்டமான காதோலை, கருகுமணி ஆகியவற்றை
நீரில் விடுவர். நுரைத்துச் சுழன்று வரும் காவிரித்தாயின் வரவால் பயிர் பச்சை
எல்லாம் தழைக்கப் போகின்றன.
இந்த விழாவில் சிறப்பு அம்சமாக, ஆடிப்பெருக்கு அன்று
ஆற்றங்கரையில் வைத்து சுமங்கலிப் பெண்கள் தாலிக்கு புது மஞ்சள் கயிறு
மாற்றிக்கொள்வார்கள். ஏற்கனவே கழுத்திலிருந்த தாலிக்கயிற்றை, ஆற்றில் விட்டுவிட்டு, புதிய மஞ்சள்
கயிற்றில் தாலியைக் கோர்த்து, கணவன் மூலமோ அல்லது
சுமங்கலிப் பெண்கள் மூலமாகவோ தங்கள் கழுத்தில் அணிந்து கொள்வார்கள். இது ஒவ்வொரு
ஆண்டும் நடைபெறும்.
காவிரிக்குச் சூல்
காவிரித்தாய் இப்போது அவள் கருவுற்று
இருக்கிறாள் என்ற ஐதீகத்தில் தான் இவையெல்லாம் செய்யப்படுகின்றன. சிறுவர்கள்
சப்பரம் என்ற ஒன்றை (தேர் போல சிறியதாக இருக்கும்) அழகாக அலங்கரித்து, அதிகாலையிலிருந்தே
வீதிகளில் சத்தமிட்டு இழுத்தபடி ஓடுவார்கள். மாலையில், அந்தச் சப்பரத்தின்
உள்ளே, ஒரு சிறிய அகல்விளக்கை வைத்து மெதுவாக
இழுத்து வருவார்கள்.
சிறுமிகளும் கன்னியரும் சுமங்கலியரும்
காவிரி நதிக்கரையில் கூடி - தலை
வாழையிலையில் - காதோலை கருகுமணி, வளையல்கள், தாம்பூலம், எலுமிச்சங்கனி, விளாம்பழம், நாவற்பழம், வாழைப்பழம், பூச்சரம் இவற்றுடன்
காப்பரிசியும் படைத்து தீபம் ஏற்றி தேங்காய் உடைத்து கற்பூரங்காட்டி வணங்கி -
மஞ்சள் தடவிய நூலினை பழுத்த சுமங்கலிகளின் கையால் வாங்கி கழுத்தில் அணிந்து கொண்டு
காவிரியில் பூச்சரங்களுடன் தீபங்களை மிதக்க விடுவது - பரவசமான மங்கல
நிகழ்ச்சியாகும்.
ஸ்ரீ ரங்கநாதர் தங்கைக்குச் சீர்
ஆடிப்பதினெட்டு அன்று - ஸ்ரீரங்கத்தில்
காவிரிக்கரையின் அம்மா மண்டப படித்துறையில் - நம்பெருமாள் எழுந்தருளி - யானையின்
மீது சீர்வரிசை கொண்டுவந்து கங்கையினும் புனிதமான காவிரிக்குச் சகல மரியாதையுடன்
சமர்ப்பிக்கின்றார்.
ஜோதிடத்தில் ஆடி பதினெட்டு
ஆடி பதினெட்டு என்பது சுக்கிரனோடு சூரியன், சந்திரன், புதன். குரு
ஆகியவர்களுக்கு ஏற்படும் தொடர்புகளைக் குறிப்பதாகவே அமைந்திருக்கிறது.
காவிரிக்குச் சீர் கொடுப்பது என்பது ஒரு பாரம்பரியமான விழாவாகும். அழகிய
இளம்பெண்ணையும் கர்ப்பத்தையும் குறிக்கும் கிரகம் சுக்கிரனாகும். ஜோதிடத்தில்
பாரம்பரியத்தைக் குறிக்கும் கிரகம் சூரியன் ஆகும். நதியைக் குறிக்கும் கிரகம்
சந்திரன் ஆகும். சீர் வரிசை மற்றும் சித்திரான்னங்களைக் குறிக்கும் கிரகம்
புதனாகும்.
ஆடி மாதம் என்பது கடக மாதம். இந்த கடக
ராசியில் புனர்பூசம்,
பூசம், ஆயில்யம் என்ற 3 நட்சத்திரங்கள்
இருக்கிறது. ஆடி பதினெட்டு அன்று பூசம் நட்சத்திரத்தை விட்டுவிட்டு ஆயில்யம்
நட்சத்திரத்திற்கு சூரியன் மாறுவார். அந்த சனி நட்சத்திரத்தை விட்டுவிட்டு புதன்
நட்சத்திரத்திற்கு சூரியன் வரும்போது அது ஒருவித சக்தியைக் கொடுக்கும். ஏனென்றால்
புதனும், சூரியனும் நட்பு கிரகங்கள். சூரியன் புதனின்
ஆயில்ய பாதத்தில் வரும்போது ஒருவித கிளர்ச்சி, புத்துணர்ச்சி, செடி கொடிகளில்
பச்சையத் தன்மை சதவிகிதம் அதிகரிக்கும். இதனால்தான் இந்த நாட்களில்
இதுபோன்றெல்லாம் செய்வது நல்லது.
ஜோதிடத்தில் நதிகள் மற்றும் கடல் சார்ந்த
பகுதிகள் மற்றும் அனைத்து நீர் நிலைகளுக்கும் காரகர் சந்திர பகவான் ஆவார்.
காலபுருஷனுக்கு நான்காம் வீடான கடகம் சந்திரனின் ஆட்சி வீடாகும். மேலும் கடக ராசி
கடலும் கடல் சார்ந்த இடமுமான நீர் ராசி மற்றுமல்லாது பெண் ராசியாகவும் ஜோதிட
சாஸ்திரம் கூறுகிறது. இந்த சந்திரனின் ராசியான கடகத்தைத் திரிகோண ராசிகளாகப் பெற்ற
விருச்சிகம் மற்றும் மீன ராசிளும் நீர் ராசிகள் மற்றும் பெண் ராசிகளாகும்.
மேலும் சுக்கிர ஸ்தலத்து இறைவன்
ஸ்ரீரங்கநாதர் காவிரியை சகோதரியாக கருதி சீர் செய்வதாகவும் அமைந்திருக்கிறது.
நதியை குறிக்கும் கடகத்திற்கு சகோதர பாவமாக அதாவது மூன்றாம் பாவமாக வருவது
கன்னியாகும். காவிரிக்கும் கடகத்திற்கும் அதிபதி சந்திரன் ஆகும். மாலவனுக்கும்
கன்னிராசிக்கும் காரக கிரகம் புதன் ஆகும். இந்த வருடம் கூடுதல் சிறப்பாகச் சூரியன்
புதனின் ஆயில்யத்திற்கு பயணிக்கும் அதேவேளையில் சந்திரன் மற்றொரு நீர் ராசியான
மீனத்தில் புதனின் ரேவதி நட்சத்திரத்தில் பயணிப்பது மட்டுமல்லாமல் புதனின்
வீட்டில் நிற்கும் சுக்கிரனை சம சப்தமமாக பார்ப்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் ராவணன் உள்ளிட்ட பல அசுரர்களை வதம்
செய்த பாவம் நீங்க, என்ன செய்வது என்று
வசிஷ்ட முனிவரிடம் ராமபிரான் கேட்டார். அதற்கு வசிஷ்டர்,
'அறுபத்தாறு கோடி தீர்த்தங்களையும் தன்னிடத்தில்
கொண்டுள்ள காவிரி ஆறு, தென்னகத்தின் கங்கை
என்று அழைக்கப்படுகிறது. எனவே அந்த நதியில் நீராடினால் உன் பாவ உணர்வுகள் நீங்கும்' என்றார். அதன்படி
ராமர், காவிரி ஆற்றில் நீராடி பாவங்களைப் போக்கிக்
கொண்டார். ராமபிரான் காவிரியில் நீராடிய தினம் ஆடிப்பெருக்கு எனப் புராண தகவல்
தெரிவிக்கின்றன.
அன்ய க்ஷேத்ரே க்ருதம் பாபம் புண்யக்ஷேத்ரே
விநச்யதி |
புண்ய க்ஷேத்ரே கிருதம் பாபம்
வாரனாச்யாம் விநச்யதி |
வாரனாச்யாம் க்ருதம் பாபம் கும்பகோனே விநச்யதி |
கும்பகோனே க்ருதம் பாபம் காவேரி ஸ்நானே
விநச்யதி |
என்று காவேரி ஸ்நானத்தின் மகிமையை வேதம்
போற்றுகிறது.
கோச்சாரத்தில் விருச்சிக ராசியில் குரு
பகவான் பயணம் செய்யும் நிலையில் தாமிரவருணி புஷ்கர ஆண்டில் காவிரியில்
மட்டுமல்லாது தாமிரவருணி நதியிலும் ஆடிப் பெருக்கு விழாவைக் கொண்டாடுவது மற்றும்
நீராடுவது மிகவும் சிறப்பானதாகும். பெரும்பாலும் எல்லாரும் ஆசைப்படுவது எதற்கு? வளமான வாழ்க்கை, சுகபோகங்கள், ஆரோக்கியமான நீண்ட
ஆயுள். இதைப் பல கிரகங்கள் தந்தாலும் எல்லாவற்றிற்கும் சிகரமாக இருந்து வாரி
வழங்கக்கூடிய தன்மை சுக்கிரனுக்கு உண்டு. சுக்கிரன் சுகபோகங்களின் அதிபதி. திருமண
பாக்கியத்துக்கு அதிகாரம் வகிப்பவர்.
இன்பங்களின் ஊற்றாக இருப்பவர். இயல், இசை, நாடகம் உள்ளிட்ட ஆய
கலைகள் அறுபத்து நான்குக்கும் அதிபதி. தாம்பத்திய வாழ்க்கை மகிழ்ச்சியாக
இருப்பதும் இவரது அனுக்கிரகத்தால் நடக்கக்கூடியதே. எல்லா வகையிலும் இன்பங்களை வாரி
வழங்குவதாலேயே சுக்கிர பகவான் சுகபோகம் அருளக்கூடியவர் என்றும்
போற்றப்படுகிறார். ஒருவருக்குப் பொன், பொருள், அழகமைந்த மனைவி, சுகமான வாழ்க்கை, உயர் பதவி, கலை, வாகன் யோகம்
போன்றவற்றைச் சிறப்புடன் வாழும் யோகத்தைத் தருவது சுக்கிரன் ஆகும்.
ஆடிப்பெருக்கு விழாவின் நிறைவாக, விநாயகர் முன்னால்
வைக்கப்பட்டிருந்த பச்சரிசி, சர்க்கரை கலவையை
எடுத்து வந்திருப்பவர்களுக்கு எல்லாம் வழங்குவார்கள். சிலர் தேங்காய் சாதம் முதலான
சித்ரான்னங்களைக் கொண்டு வந்து, ஆற்றங்கரையில்
அமர்ந்து உண்பார்கள்.
🌸🙏🌸
என்றும் அன்புடன்
அடியேன்🙏🏻#கிருஷ்ணனின்_சேவகன் #ஸ்ரீராமஜயம் 🛕
Copy From உழவார/இறைப்பணி /அழகிய தஞ்சை -2005