மிளகு பொங்கலுக்கு....

மணக்கால் அய்யம்பேட்டை | 3:01 PM | Best Blogger Tips

 May be an image of congee and text that says "がーかン மிளகு மி பொங்கல்"

மிளகு பொங்கலுக்கு சிறந்த தொடு உணவு, தேங்காய் சட்னியா... இல்லை சாம்பாரா...
 
இப்படி ஒரு கேள்வியோட ஒரு பட்டி மன்றம் நடத்தினா உங்க ஆதரவு எந்த பக்கம்... இது ஒரு பதில் சொல்ல முடியாத கேள்விதான்... ஆனா என்னை கேட்டா ரெண்டுமே அசத்தலான தொடு உணவுதான்...
 
பெரும்பாலான மக்களுக்கு காலையில இந்த மிளகு பொங்கல் சாப்பிட கொடுத்தா சாப்பிடவே மாட்டாங்க. அதுக்கு முக்கியமான காரணம் இந்த பொங்கல் சாப்பிட்டதுமே பலருக்கு தூக்கம் வந்திடும். அதுக்கு காரணம் பொங்கல்ல நெய் அதிகமா சேர்த்து செய்யறதால இதுல கலோரிகள் அதிகமா இருக்கு.
 
பொங்கல் சாப்பிட்டதும் செரிமானம் ஆக அதிக ஆக்சிஜன் தேவைப்படும். இதனால மூளைக்கு செல்ல வேண்டிய ஆக்சிஜன் அளவு குறைஞ்சு, டேக் டைவர்சன் எடுத்து வயிற்று பக்கம் போகுது. மூளையோட செயல் திறன் குறையறதால தூக்கம் வர்ற மாதிரி ஒரு உணர்வு நமக்கு ஏற்படுது. இந்த பொங்கல் மட்டுமில்ல கலோரிகள் அதிக அளவுல உள்ள எந்த உணவு சாப்பிட்டாலும் நமக்கு இதே போலதான் தூக்கம் வரும். யார் எது வேணா சொல்லட்டும். எனக்கு இந்த மிளகு பொங்கல் ரொம்ப பிடிக்கும்பா 😋...
 
எனக்கு மிளகு பொங்கல்,வடை உடன் தேங்காய் சட்னி - யும் பில்டர் காபி  சுவையோ சுவை அந்த சுவைக்கு .இந்த சோழ நாட்டின் சாதாரண பிரஜை ...ரமேஷ் அடிமை.


மார்கழி மாசம் நம்மூர் கோவில்கள்ல பிரசாதமா இந்த மிளகு பொங்கல் கொடுப்பாங்க. சின்ன வயசுல அந்த குளிர்லயும் குளிச்சிட்டு (சில சமயம் குளிக்காம) கோவிலுக்கு போய் சுடச்சுட தர்ற அந்த பொங்கல தொண்ணை இலையில வாங்கி சாப்பிடும் போது, அந்த குளிருக்கு இதமா தொண்டைக்குள்ள இறங்கும். ஒரே ஒரு குறை என்னன்னா, தொட்டுக்க ஒரு சட்டினியோ சாம்பாரோ குடுத்திருக்கலாம் 🤭.
 
சில ஹோட்டல்ல பொங்கல்ங்கற பேர்ல மஞ்சள் பொடியும் மிளகும் மட்டும் போட்டு கொண்டாந்து ஒரு வஸ்துவை இலையில வைப்பாங்க... இலையில வச்சுட்டா நீ கொடுக்கறதெல்லாம் நாங்க பொங்கல்னு சொல்லி சாப்பிடணும்மான்னு நம்ம வாய் நம்மளை பார்த்து கேவலமா கேட்கும். சாப்பிட்டு முடிச்சதும் வயிறும் கூட சேர்ந்து கழுவி ஊத்தும். இந்த மாதிரி பொங்கல் செய்யற அவங்களையெல்லாம் பிடிச்சி அண்ணனோட 50 வது படத்தை 5 தடவை பார்க்க வைக்கணும் 🤗.
 
ஒரு நல்ல மிளகு பொங்கலுக்கு உதாரணமே வறுத்து சேர்த்த முந்திரியும் அந்த நெய் மணமும்தான். அப்படியொரு பொங்கல் சாப்பிடணும்னா கண்டிப்பா நீங்க பூர்வ ஜென்மத்துல புண்ணியம் பண்ணியிருக்கணும். சில 'என்னமோபவன்' ஹோட்டல்கள்ல இன்னும் மோசம் பண்ணுவாங்க. பொங்கல்ங்கற பேர்ல ஒரு சதுரமான பாத்திரத்துல கொண்டாந்து கொடுப்பாங்க. அதை கவுத்தோம்னா தட்டுல செங்கல்ல தூக்கி வச்சது மாதிரியே இருக்கும். இவனுங்களை என்ன பண்ணலாம்னு நீங்களே சொல்லுங்க.
 
இவ்வளவு பேசறியே நீயே ஒரு நல்ல பொங்கல் ரெசிபி சொல்லேன்னு நீங்க சொல்றது கேட்குது. அதுக்காகத்தான் இந்த ரெசிபி. படிச்சிட்டு கட கடன்னு கிட்சனுக்கு ஓடிப்போய், பொங்கல் செஞ்சி தட்டுல போட்டு கொண்டாங்க பார்ப்போம்...
 
தேவையான பொருட்கள் :
 
அரிசி : 1 கப்
பாசிப்பருப்பு : 1/2 கப்
முந்திரி : 10
மிளகு : 1 1/2 ஸ்பூன்
சீரகம் : 1 ஸ்பூன்
நெய் : 2 லிருந்து 4 ஸ்பூன்
இஞ்சி : சிறு துண்டு
கருவேப்பிலை : 1 கொத்து
உப்பு : தேவையான அளவு 
 
செய்முறை :
 
ஒரு சட்டியில நெய் சேர்த்து அதுல மிளகு, சீரகம், முந்திரி, இஞ்சி, கருவேப்பிலை சேர்த்து நல்லா தாளிச்சு வச்சுடுங்க.
 
ஒரு குக்கரில் தேவையான அளவு தண்ணீர் ஊத்தி (3 கப் தண்ணீர் ) அரிசியையும், பாசிப்பருப்பையும் சேர்த்து, அது கூட தேவையான அளவு உப்பு சேர்த்து , 5 விசில் வர்ற வரைக்கும் வேக வச்சிட்டு ஆறினதும் அதுல, தாளிச்சது சேர்த்து நல்லா கலந்துக்கோங்க. அவ்வளவுதான் மக்களே...
 
எவ்வளவு எளிமையான ஒரு செய்முறைன்னு பார்த்தீங்களா 🤗... இதை அப்படியே செஞ்சி ஒரு சட்னியோ, சாம்பாரோ வச்சி சாப்பிட்டு பார்த்துட்டு எப்படி இருந்துச்சுன்னு சொல்லுங்க 🤗.
 
உங்களுக்கு மிளகு பொங்கலுக்கு தொட்டுக்க பிடிச்சது சாம்பாரா இல்லை சட்னியான்னு சொல்லுங்க...