காணாமல் போன கிணறு ... கண்டுபிடிக்கப்பட்டது...!!!
தஞ்சை அரண்மனை வளாகத்தில் பழங்கால கிணறு கண்டுபிடிப்பு
தஞ்சாவூர் : தஞ்சாவூரை சோழர், நாயக்கர், மராட்டிய மன்னர்கள் ஆண்டனர். இவர்கள் ஆட்சி காலத்தில், 110 ஏக்கரில் அரண்மனை கட்டப்பட்டது.
இந்த அரண்மனையில் தர்பார் மஹால், ஆயுத கோபுரம், மணி கோபுரம், சார்ஜா மாடி ஆகியவை அழகிய வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டுள்ளன.
தமிழக தொல்லியல் துறை தன் கட்டுப்பாட்டில் இந்த அரண்மனையை எடுத்து, பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து, புனரமைப்பு செய்கிறது.
இந்நிலையில், 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தர்பார் மஹால், சார்ஜா மாடி, மணி கோபுரம், ஆயுதகோபுரம் ஆகியவை
புனரமைக்கப்படுகின்றன. மேலும், மராட்டியர்களின் வம்சத்தினர் தங்கியுள்ள பகுதிகளும், பழமை மாறாமல் புதுப்பிக்கப்படுகிறது.
அரண்மனை வளாகத்தில் உள்ளே நுழைந்தவுடன் இடது புறத்தில் பழமையான, அழகிய கட்டுமானங்களை கொண்ட கிணறு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த இடம் குப்பை மேடாக இருந்தையும், மரங்கள், செடி கொடிகள் மண்டி இருந்ததையும் சுத்தம் செய்து பார்த்த போது தான், கிணறு இருந்தது தெரிந்தது.
இதையடுத்து, அதை பழமை மாறாமல் புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வரலாற்று ஆய்வாளர்கள் கூறியதாவது:
நாயக்கர் காலத்தில் பல்வேறு குளங்கள் உருவாக்கப்பட்டு, நீர் வழிபாதைகள் அமைக்கப்பட்டன. அரண்மனை வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கிணறு, நாயக்கர் காலத்தின் வடிவமைப்பு கொண்டதாக இருக்கலாம்.
இந்த கிணறு அரச குல பெண்கள் பயன்படுத்தியுள்ளனர். இந்த கிணற்றுக்கான நீர் வழிபாதையை கண்டுபிடித்து, தண்ணீர் வருவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்கிறது.