ஆடிப் பெருக்கு: ஆற்றங்கரையில் தூய்மையான ஓர் இடத்தில் பசுஞ்சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்திருப்பார்கள். அவர் முன்னால், முளைப்பாலிகைத் தட்டுகள் வரிசையாக வைக்கப்படும்.
பிள்ளையார் காகமாய் வந்து அகத்தியரின் கமண்டலத்தைக் கவிழ்க்க, காவிரி நதி உருவானது எனும் கதையை அறிவோம். அதே போல் மணிமேகலை காப்பியம் சொல்லும் பொன்னி நதியின் கதை என்ன... ஆடிப்பெருக்கில் காவிரியை ஏன் கொண்டாடுகிறோம், அன்று நிகழும் அபூர்வ வழிபாடுகளின் தாத்பர்யங்கள் என்ன...
ஒரு வருடத்தை இரண்டு அயனங்களாக வகுத்திருக்கிறார்கள் நம் முன்னோர். ஆடி முதல் மார்கழி முடிய தட்சிணாயனம். இது மழைக் காலத்தின் தொடக்கம். தை முதல் ஆனி முடிய உத்தராயனம். இது கோடைக் காலத்தின் தொடக்கம்.
மழைக்காலத்தின் தொடக்கமான இந்த ஆடி மாதத்தில்தான் பூமாதேவி அவதரித்தாள் என்கின்றன புராணங்கள். அதே போல் இந்த தட்சிணாயனக் காலம் தேவர்களுக்கு மாலைப் பொழுது.
அந்தி சாய்ந்தவுடன், கன்று தாயைத் தேடும். தாய்ப் பறவையைக் குஞ்சுகள் தேடும். அனைத்து ஜீவராசிகளும் அன்னையைத் தேடும். அப்படியே, தேவர்களின் மாலை நேரமான இந்த ஆடி மாதத்தில் அன்னையின் அருளை வேண்டி அம்மன் மாதமாக ஆடி மாதத்தைப் போற்றிக் கொண்டாடுகிறது மனித குலம். அதேபோல் ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், ஆடிப் பதினெட்டு என்று மற்ற விழாக்களாலும் ஏற்றம் பெறுகிறது இந்த மாதம்.
அது ஏன் பதினெட்டு?
பதினெட்டு என்ற எண் ‘ஜய’த்தை அதாவது வெற்றியைக் குறிக்கும். மகாபாரதத்தில் 18 பர்வங்கள், பகவத்கீதையில் 18 அத்தியாயங்கள், சபரிமலையில் 18 படிகள் முதலானவை எல்லாம் இந்த அடிப்படையிலேயே அமைந்தன.
இந்த முறையிலேயே, நீர் பெருக் கெடுத்து ஓடும் நதிக்கரைகளில் பதினெட்டுப் படிகளை அமைத்த நம் முன்னோர்கள், உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அளிக்கும் காவிரி முதலான நதிகளுக்கு நீர்நிலைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஆடிப்பெருக்கு விழாவைக் கொண்டாடினார்கள்.