காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள #ஏகாம்பரநாதர்_கோவில் தல வரலாறு
காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோயிலில் ஸ்தலவிருட்சம் என போற்றப்படும் மாமரத்தின் வயது 5000 ஆண்டுகள். இந்த மாமரத்தின் கீழ் உமையாள் தவம் செய்ததாகவும், இம்மரத்தில் கனியும் மாங்கனிகள் நான்கு வித சுவையுடையவை என்றும் கூறப்படுகிறது.
மண் லிங்கம்:
இங்கு உள்ள சிவபெருமானை பிருத்வி லிங்கம் என்று அழைப்பர். மேலும் இந்த சிவபெருமான் மண்ணால் ஆனவர். இதனை சுயம்பு என்றும் கூறுவது உண்டு. அதனால் இந்த சிவபெருமானுக்கு அபிஷேகங்கள் நடப்பது கிடையாது. மாற்றாக லிங்க வடிவில் உள்ள ஆவுடையாருக்கு அபிஷேகங்கள் நடைபெறும். மேலும் இங்கு மற்ற கோவில்களைப் போல அம்மனுக்கு என்று தனியாக சந்நிதி கிடையாது.
புராண கதை:
பார்வதி திருக்கைலாயத்தில் சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூடியதால் உலகம் இருளில் மூழ்கியது. சிவபெருமான் நெற்றிக்கண்ணைத் திறந்து உலகத்துக்கு வெளிச்சம் தந்தார். இந்த தவற்றினால் பார்வதியை உலகத்துக்குச் சென்று தன்னை நோக்கி தவம் இருக்கச் சொன்னார் சிவபெருமான்.
பார்வதி காஞ்சிபுரத்தில் சாதாரண பெண்ணாக பிறந்து கம்பா நதிக்கரையில் ஒரு மாமரத்தின் அடியில் மணல் லிங்கம் செய்து பூஜித்தார். பார்வதியின் தவத்தை உலகினுக்கு அறியச் செய்ய சிவபெருமான் கம்பா நதியில் வெள்ளத்தை உண்டாக்கினார். பார்வதி தனது மணல் லிங்கத்தை வெள்ளம் அடித்து செல்லாமல் இருக்க கட்டி அணைத்துக் கொண்டார்.
சிவபெருமான் அந்த மாமரத்தின் அடியில் தோன்று பார்வதிக்கு அருள் புரிந்து, இரண்டு படி நெல்லைக் கொடுத்து காமாட்சி என்ற பெயரில் காமகோட்டத்தில் 32 அறங்களைச் செய்ய பணித்தார். பார்வதி வழிபட்ட மணல் லிங்கம் தான் பிரித்வி லிங்கம். காமகோட்டம் தான் காமாட்சி அம்மன் கோவில். பார்வதி கட்டித் தழுவியதால் இங்கு உள்ள சிவபெருமானை தழுவக் குழைந்தார் என்றும் அழைப்பர்.
விழாக்கள்:
இந்தக் கோவிலில் தினமும் ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும் ஆனித் திருமஞ்சனம், ஆடிக் கிருத்திகை, ஆவணி மூலம், நவராத்திரி, பங்குனி உத்திரம், சித்ரா பெளர்ணமி, வைகாசி விசாகம் போன்ற விழாக்களும் நடைபெறுகின்றன. கோவில் திறந்திருக்கும் நேரம்: காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையாகும்.
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏