கேள்வி - பிரபஞ்ச மனதின் ஒரு பகுதியாகவே நமது மனம் உள்ளதென்றால், மனிதனுக்கு மனிதன் மனதின் செயல்பாடுகள் மாறுவதேன் ?
இராம் மனோகர் - பிரபஞ்ச மனம் நமக்குள் வெளிப்பட பலவிதமானத் தடைகள் உள்ளன. தடைகள் நீங்கி வரவர பிரபஞ்ச ஆற்றல் நமக்குள் பெருகி வருகிறது. ஒருவருக்கொருவர் ஏற்படும் மாற்றத்திற்கு இந்தத் தடைகளே காரணம்.
கேள்வி - என்ன விதமான தடைகள் ?
இராம் மனோகர் - மனமே மனதிற்குத் தடைதான். மனதின் தன்முனைப்பு, மலகன்மாதி பாதிப்புகள், பிராண சக்திக் குறைபாடு, சம்ஸ்காரங்கள், வாசனைகள், வாத பித்த கப ஏற்ற இறக்கமென்று இன்னும் பலவிதமானத் தடைகள் மனதிற்கு உண்டு.
கேள்வி - இவற்றை அகற்றுவது எப்படி ?
இராம் மனோகர் - சில தடைகளை நாம் நம் சுய முயற்சியால் அகற்ற முடியும். சில தடைகளை அகற்ற ஆன்மாவின் உதவி நமக்குத் தேவைப்படுகிறது. அத்தகைய உதவியைப் பெறதான் நாம் இறைவனையும், குருமார்களையும் நாடுகிறோம்.
கேள்வி - தவம் உதவி செய்யாதா ?
இராம் மனோகர் - தவம் அனைத்துத் தடைகளையும் நீக்க வல்லது. தவத்தால் ஆன்மாவின் அருளும், சுய முயற்சியும் ஒருசேர ஓங்கும்.
கேள்வி - தடைகள் ஏன் ஏற்படுகின்றன ?
இராம் மனோகர் - எல்லா விதமானத் தடைகளுக்கும் மனமே காரணம்.
கேள்வி - சற்று விளக்கமாக கூற முடியுமா ?
இராம் மனோகர் - நம் உணர்வுகளையும், எண்ணங்களையும் பதிவு செய்து வைத்திருப்பதுதான் மனம். இதில் எண்ணமானது செயல்படத் தூண்டும் போது, அந்தச் செயல் மனதில் புதிய வடிவங்களை உருவாக்குகிறது. இப்படி மனம், புத்தி, சித்தம், அஹங்காரம், எண்ணம் எல்லாம் ஒரு வட்டமாக இருந்து புலன் வழியாக புறப் பொருள்களை நுகர்ந்து புதுப்புது பதிவுகளை உண்டாக்கிக் கொண்டே இருக்கிறது. பிறகு புதுப்புது செயல்களாக மலர்கிறது. இந்தப் புறப் பதிவுகள் அனைத்தும் ஆன்மிக மேம்பாட்டிற்குத் தடையை ஏற்படுத்தக் கூடியவைகளே.
தவ முயற்சியானது இந்தத் தீய வட்டச் சுழற்சியின் அடிப்படையையே அழித்து விடுகிறது. எனவே மனம் அமைதி அடைகின்றது. அவ்வப்போது எழும் எண்ணங்களையும் சோதித்து, அடக்கி, வேரிலேயே கிள்ளி விடுவதால் சாதகரின் சுய அறிவு வேலை செய்கிறது. பொதுவாக மனமானது நம்மைப் பல்வேறு கோணங்களில் அதன் போக்கிற்கு இழுத்துச் சென்று விடுகிறது. இதற்குக் காரணம் என்னவென்றால் அது பல்லாயிரக் கணக்கான விஷயங்களைக் குப்பைகளாகத் தன் ஆழத்தில் மலைபோலக் குவித்து வைத்திருக்கிறது. எனவே நாம் ஒன்று நினைக்கும் போது அது, அதற்குத் தொடர்புடைய வேறு ஏதாவது ஒன்றைக் குறித்த சிந்தனைக்கு நம் அறிவை மடை மாற்றி விட்டு விடுகிறது.
எனவே நம் இலக்கும் நோக்கம் எல்லாமே தடம் மாறி விடுகின்றது. இப்படிப்பட்ட சூழலில் வாழந்து கொண்டிருக்கிற நாம் நம் மனதை ஒரு நிலைப்படுத்துவது என்பது மிகவும் கடினமாக இருக்கிறது. எனவே, புதிய வீட்டிற்குள் குடி புகுவதற்கு முன் அதில் உள்ள குப்பைகள், தூசு, ஒட்டடைகளை அகற்றி சுத்தம் செய்து, சுத்தமாகக் கழுவி, ஹோமம் முதலியவற்றைச் செய்து பழைய நாற்றத்தைப் போக்கி, அதற்குப் பிறகே குடியேறுவது போல, நாமும் நம் மனதில் மலைபோலக் குவிந்துள்ள நாற்றமடித்த பழைய குப்பைகள் ஒத்த எண்ணங்களின் சம்ஸ்காரங்களை அடியோடு அழிக்க வேண்டியது அவசியமாகிறது.
அப்போதுதான் மனம் தூய்மை அடைந்து ஒருநிலைப்படுவது சாத்தியமாகும். சரி, வீடு தூய்மையடைந்து விட்டால் மட்டும் போதுமா ? உடனே குடி புகுந்து விட முடியுமா ? என்று கேட்டால், முடியாது. ஏனென்றால் அங்கு நாம் வாழ்வதற்குத் தேவையான புதிய நல்ல பொருட்களை கொண்டு வந்து, அந்தந்த இடத்தில் வைக்க வேண்டுமல்லவா ? அது போல நம் மனதில் நன்மைகளை நிரப்ப வேண்டும். நன்மைகளை நிரப்புவதற்காகவே தீமைகளை அழிக்க வேண்டும். நன்மைகள் நிரம்பிய மனதில் தீமைகள் மறுபடியும் நுழைய முடியாமல் போய் விடுகிறது. ஆனால், கொஞ்சம் தீமை ஒட்டிக் கொண்டிருந்தாலும் அது மீண்டும் உள்ளே நுழைந்து விடும்.
வியாதி, கடன், தீ இந்த மூன்றையும் சுத்தமாக அழித்து விட வேண்டும். இல்லை என்றால் மீண்டும் பற்றிக் கொள்ளும். இதில் தீ என்பதைத் தீமை என்றும் கொள்ளலாம். இப்படித் தீமைகளே இல்லாமல் தூய்மையடைந்த உள்ளத்தில்தான் தெய்வீகப் பேராற்றல் வந்து நிரம்புகிறது. இத்தகைய இலட்சித்தை அடைவதே ஆன்மிகம் எனப்படுகிறது. நம் முன்னோர்கள் சொல்வது என்னவென்றால் இந்த பிரபஞ்சமாகிய ஜகத் என்பதே நம் மனதின் பிரதிபலிப்புதான் என்கிறார்கள். அதாவது '' மனோமாத்ரம் ஜகத்'' என்பது வாக்கு. ஆகையினால், தூய்மையடைந்த மனம் கொண்டவருடைய இந்த பிரபஞ்சம் குறித்த பிரதிபலிப்பும் தூய்மையானதாகவே இருக்கும் என்பதை நான் சொல்லவேத் தேவையில்லை.
நன்றாகக் கவனித்துப் பார்த்தால் புறவுலகப் பொருள்கள் மேல் கொள்ளும் பற்றுதான் நமது மனதின் இந்த தீய வட்டச் சுழற்சிக்குக் காரணமாக இருக்கிறது. பற்று எனும் கயிறை அறுத்தால்தான் படகை செலுத்தி இந்த சாஹரத்தைக் கடக்க முடியும். நண்பர்கள் நான்கு பேர் பரிசலில் ஏறி ஆற்றின் அக்கரையில் நடந்து கொண்டிருக்கும் திருவிழாவைக் காணச் சென்றனர். அங்கு சென்றதும் நன்றாகக் குடித்து விட்டு போதை தலைக்கேற தங்கள் ஊர் செல்வதற்காக ஆற்றங்கரைக்கு வந்தனர். அங்கிருந்த பரிசலில் ஏறி அமர்ந்து கொண்டு துடுப்பு வலிக்க ஆரம்பித்தனர். விடிய விடிய துடுப்பு வலித்தும் ஊர் வரவேயில்லை. பொழுதும் விடிந்தது, அவர்கள் போதையும் தெளிந்தது. அப்போதுதான் பார்த்தார்கள் பரிசல் அவர்கள் ஏறிய இடத்திலேயே சுற்றிக் கொண்டே இருந்தது.
ஏனென்றால், அவர்கள் பரிசலைக் கரையில் கட்டியிருந்த கயிற்றை அவிழ்க்கவே இல்லை. இதுதான் நம் நிலையும். சுயஞானம் பெறாத எந்த மனிதனும் மயக்கத்தில் இருக்கிறான். பற்று எனும் கயிற்றை அறுத்தால்தான் சுயஞானம் ஏற்படும். சுயஞானம் பெற்றவனே ஆன்மிக ஞானத்தைப் பெற முடியும். கீதை சொல்வது என்னவென்றால், ஞானத்தைப் போல தூய்மை தரும் பொருள் இவ்வுலகில் வேறெதுவுமில்லை என்பதுதான். அத்தகைய ஞானத்தைப் பெற்றுத் தருவது மனத் தூய்மையே. எனவே மனதின் தற்பொழுதைய இந்த நிலையை அற்றுப் போகச் செய்து அதைத் தூய்மைப்படுத்துவதுதான் தடைகளை நீக்குவதில் முதல்படியாக இருக்கிறது. பிறகு மற்றவை இறையருளால் தானே நிகழும்.