காஷ்மீர் ஃபைல்ஸ் திறைப்படம்

மணக்கால் அய்யம்பேட்டை | AM 10:08 | Best Blogger Tips

 



 

காஷ்மீர் பண்டிட்டுகள் கோரப்படுகொலை பிறந்த நாட்டில் அகதிகளாக இன்றுவரை உலாவும் உண்மை சரித்திரம்

 

இது ஏதோ ஒரு திரைப்படம் போல் தோன்றவில்லை.  ஒரு வரலாற்றை வாழ்ந்து காட்டி,  நம்மை அந்த வரலாற்றின் ஒரு பகுதியாக்கி இருக்கிறார்கள்.  தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த ஒரு சமூகம் சொந்த நாட்டிலேயே சொல்ல இயலாத சித்தரவதைகளை அனுபவித்து,  சொந்த நாட்டிலேயே அகதிகளாய், நாடோடிகளாய்,  நாதி அற்றவர்களாய், திரிந்த உண்மை வரலாறு அது.

 

அந்த வரலாற்றை யாருமே கண்டு கொள்ளவில்லை.

அந்த வரலாற்றுக்காக யாருமே கூக்குரல் எழுப்பவில்லை.

அந்த வரலாற்றை உலகமே புறக்கனித்தது.  அல்லது புறக்கனிக்குமாறு அரசியல்வாதிகளால் செய்யப்பட்டது.

 

அந்த வரலாற்றை மீட்டு எடுத்து மீண்டும் நம் முன் அதன் பக்கங்களை பிரித்து காட்டி, நம்மை நாமே குற்ற உணர்வில் காறி உமிழ செய்துள்ளார் இந்த காவியத்தின் படைப்பாளி.  ஆம் இந்த திரைப்படத்தின் இயக்குனர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி.

 


சமூக வலைதளத்தில் பத்து பேர் பார்க்க ஒரு மதரீதியான‌ பதிவிடவே பத்து முறை யோசிக்கும் மக்களுக்கு இடையே ஜிகாத் குறித்தும்,  மத ரீதியான படுகொலைகளை குறித்தும், இந்துக்கள் மீது கட்டவிழ்க்கப்பட்ட பயங்கரமான அராஜகங்களை, கோடிக்கணக்கான மக்கள் பார்க்கும் வகையில் வெளிப்படுத்த‌ எத்தனை நெஞ்சுறம் வேண்டும் ? 

 

காஷ்மீரில் யுக யுகமாய் வாழ்ந்த பண்டிட் குடும்பங்கள் எப்படிப்பட்ட கோர படுகொலைகளுக்கு ஆளாகின ?  மிக மிக பரிச்சயமான நபர்கள் ஒரே நாளில் எப்படி பயங்கரவாதிகளாக மாறுகிறார்கள் ?  நமக்கு அக்கறை உள்ளதோ இல்லையோ நாம் சார்ந்த மதம் என்பது எத்தனை பெரிய தாக்கத்தை நம்மீது ஏற்படுத்துகிறது ?

அண்ணன் தம்பி மாமன் மச்சான் என்பதெல்லாம் எத்தனை பெரிய ஏமாற்று வேலை ?

என இப்படி ஒவ்வொரு கேள்விகளுக்கு பதில் தருகிறது இந்த திரைப்படம்.

 

படத்தில் தில்லி ஜவஹர்லால் பல்கலைகழகத்தை குறிக்கும் வகையில் JNU க்கு பதில் ANU என்று குறிப்பிடப்படுகிறது.  பல்கலைகழகத்தில் படிக்கும் ஒரு காஷ்மீர் பண்டிட் மாணவன் கிருஷ்ணாவின் தாத்தாதான் 'புஷ்கர் நாத் பண்டிட்' (அனுப்பம் கேர்).  தன் தாயும்,  தந்தையும், அண்ணனும் ஜிகாதிகளால் கொல்லப்பட்டதை அறியாமல் கிருஷ்ணா வளர்கிறான்.  ANU பல்கலைகழகத்தில் உள்ள இடது சாரி ஆசிரியை 'பல்லவி கோஷ்' அவனை காஷ்மீர் போராளிகளுக்கு ஆதரவாக செயல்பட போதனை செய்கிறாள்.  பல்கலைகழகத்தின் மாணவர் அணியின் தலைவனாக வேண்டும் என்றால் பெரும்பான்மையான காஷ்மீர் இஸ்லாமிய மாணவர்களின் ஆதரவு வேண்டும் என்றும்,  ஒரு காஷ்மீர் பண்டிட் மாணவனான கிருஷ்ணா,  காஷ்மீர் முஸ்லீம் மக்களுக்கு ஆதரவாக பேசினால், அது மிகப்பெரும் அரசியல் யுக்தியாக இருக்கும் என்றும் அவனை மூளை சலவை செய்கிறாள்.  கிருஷ்ணாவின் பாத்திரம் இந்தியாவில் ஊடகங்களால் கட்டமைக்கப்படும் செக்யூலர் இந்துக்களின் மனோபாவத்தை குறிக்கிறது. 

 


தாத்தாவின் அஸ்தியை அவரின் இறுதி ஆசைப்படி காஷ்மீரில் கரைக்க செல்லும் கிருஷ்ணா தன் பெற்றோருக்கும்,  உறவினருக்கும்,  தன் இந்து பண்டிட் மக்களுக்கும் நடந்தேறிய கொடூரங்களை உணர்கிறான்.

 

ஆசிரியை பல்லவி கோஷ் நிகழ்காலத்தில் மோடி அவர்களுக்கு எதிராக தேச விரோதிகள் அரங்கேற்றும் நிகழ்வுகளை ஒரே வாக்கியத்தில் உணர்த்துகிறாள். "நாட்டை ஆள்வது மட்டும் தான் அவர்கள் (அரசு) ஆனால் உண்மையில் சிஸ்டம் நம் கையில்தான் உள்ளது" என்கிறாள். சிஸ்டம் என அவள் குறிப்பிடுவது உலகளாவிய ஊடக பலம்,  தீவிரவாதிகளின் பின்னனி,  இடது சாரி மற்றும் காங்கிரஸ் போன்ற செக்யூலர் வியாபாரிகள் ஆகியவற்றை குறித்துதான்.

 

படம் கொடூரமாக இந்துக்கள் மீது தீவிரவாதம் தலைவிரித்து ஆடும் 90 களுக்கும்,  நிகழ்காலத்திற்கு மாறி மாறி பயனிக்கின்றது.   ரத்த வெள்ளத்தில் இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப் படுவதையும்,  90 களில் பாரதம் எப்படிப்பட்ட கேவலமான அரசியல் பின்னனியில் இருந்தது என்பதையும்,  தீவிரவாதிகளை விட அதிகமாக‌ இந்திய அரசியல் தலைவர்களால் காஷ்மீர் பண்டிட்டுகள் வஞ்சிக்கப்பட்டார்கள் என்பதையும் திரைப்படம் ஆணித்தரமாக சுட்டிக் காட்டுகிறது.

 

மதம் மாறு அல்லது மரணித்து போ,  அல்லது காஷ்மீரை விட்டு ஓடிப் போ எனும் பொருள் பட 'ரலீவ், கலீவ், சலீவ்' என இந்துக்களை நோக்கி எங்கு பார்த்தாலும் கோஷங்கள் காஷ்மீரில் எழுகிறது. தங்களோடு ஆண்டாண்டு காலம் வசித்த காஷ்மீர் இஸ்லாமிய‌ சிறுவர்களும்,  சிறுமிகளும் கூட இந்த கோஷத்தை எழுப்புகிறார்கள். அக்கம் பக்கத்தில் பல காலமாக ஒன்றாக வசிக்கும் முஸ்லீம்களே தீவிரவாதிகளிடம் இந்துக்களை காட்டிக் கொடுக்கிறார்கள்.  கல்வி கற்று கொடுத்த ஆசிரியர் அனுப்பம் கேர் குடும்பத்தையே சூரையாடுகிறான் அவரின் மாணவன். 

"நீ என் மாணவன் பிட்டா அல்லவா ? எனக் கேட்கிறார் அனுப்பம் கேர்.  நான் உன் மாணவன் அல்ல நான் JKLF இன் விங் கமேண்டர் என்கிறான் அவரிடம் படித்த அந்த மாணவன். 

 

அதிர வைக்கும் கடும் குளிரில் மரண வேட்டையில் இருந்து தப்பித்து ஓடுகிறார்கள் இந்துக்கள். ஒரு லாரியை பிடித்து பெண்கள் குடும்பத்தோடு இரவு நேரத்தில் கடும் குளிரில் பயனிக்கிறார்கள்.  உயிரை காப்பாற்றிக் கொள்வதை விட அவர்களுக்கு அந்த சூழ்நிலையில் எதுவுமே முக்கியமில்லை.  ஓடும் லாரியில் வயதுக்கு வந்த ஒரு மாணவிக்கு அடக்க இயலாத வகையில் இயற்கை உபாதை.  ஓடும் லாரியிலிருந்தே பெண்கள் ஒரு போர்வையை தடுப்பாக பயன்படுத்த,  சிறுநீர் கழிக்கிறாள்.  அதே வேளையில் அந்த பகுதியின் உயரமான மரங்களில் தங்கள் உறவினர்கள் அரை நிர்வானமாக கொல்லப்பட்டு கட்டிப் போடப்பட்டிருப்பதை கண்டு அவள் அலறுகிறாள்.  அதை கேட்டு மற்ற பெண்களும் அந்த காட்சியை பார்த்து அலறுகிறார்கள். உண்மையில் பார்ப்பவர்களை உறைய வைக்கும் காட்சி.

 

காஷ்மீரில் இருந்து ஜம்முவிற்கு தப்பி வரும் இந்துக்கள் கொடூரமான முகாம்களில் தங்க வைக்கப்படுகிறார்கள்.  பல நோய்களில் இறக்கிறார்கள். நாட்டை ஆளும் அரசியல் கட்சிகள் அவர்களை மிகக் கேவலமாக புறக்கனிக்கின்றன. வாழ்நாள் முழுவதும் ஆர்டிக்கிள் 370 ஐ நீக்குங்கள் என போராடும் ஒரு போராளியாக அனுப்பம் கேர் மரணிக்கிறார். 

 

இறுதியில் ANU பல்கலைகழகத்தில் மாணவர் தேர்தலுக்காக கிருஷ்ணா பேசும் பேச்சுதான் படத்தின் அதி அற்புதமான ஹைலைட்.  (காஷ்யப புரா என அடியேன் எழுதிய காஷ்மீர் சரித்திரத்தின் சுருக்கமாகவே இது தெரிந்தது)

 

படத்தை குறித்து எத்தனை பக்கங்கள் எழுதினாலும்,  அதை நீங்கள் பார்க்கையில் ஏற்படும் உணர்வுக்கு ஈடாக புள்ளி ஒரு சதவீதம் கூட ஏற்படுத்த இயலாது.  அனுப்பம் கேரும், மிதுன் சக்கரவர்த்தியும் மற்ற‌ சக நடிகர்களும் நடிக்கவில்லை,  வாழ்ந்திருக்கிறார்கள். 

 

படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் கூட்டம் அப்படி ஒரு அமைதி காக்கிறது.  ஆங்காங்கே சில மெல்லிய அடக்க இயலாத விம்மல்கள் கூட கேட்கிறது.  ஹவுஸ்புல் காட்சி கூட, அந்த அமைதியால் யாருமே இல்லாதது போல் இருக்கிறது.  திரையரங்கில் ஒரு மொபைல் போன் ஒலிக்க,  "எழுந்து வெளியே போய் பேசுங்கள்" என மற்றவர்கள் கண்டிக்கிறார்கள்.  அப்படி ஒரு அர்ப்பணிப்போடு இந்த படத்தை கூட்டம் பார்க்கிறது.  இவர்கள் யாருமே சினிமா பார்ப்பவர்களாய் தெரியவில்லை.  ஒரு மாபெரும் அஞ்சலியில் பங்கு கொள்பவர்களாக இருக்கிறார்கள்.

 

நீங்கள் ஆயிரம் பசுக்களை தானம் செய்திருக்க‌லாம்,  ஆயிரம் கோவில் கும்பாபிஷேகத்திற்கு சென்று வந்திருக்க‌லாம்,  ஆயிரம் புன்னிய‌ நதிகளில் நீராடி இருக்க‌லாம்,  ஆயிரம் மகான்களின் ஆசியை பெற்றிருக்க‌லாம்.  ஆனால் இந்த திரைப்படத்தை காசு கொடுத்து பார்த்து உங்கள் ஆதரவை தெரிவிக்கவில்லை என்றால் அவை யாவுமே வீண் தான்.  நம் ஒவ்வொருவரின் ஆதரவும் இந்த திரைப்படத்திற்கு இல்லாமல் வேறு எதற்கு இருக்க வேண்டும் ?

 

இப்படியெல்லாம் இனி யாரேனும் படம் எடுப்பார்களா தெரியவில்லை.  எடுத்து விட்டார்கள். ஆகவே நீங்கள் செல்வது ஒரு திரைப்படத்திற்கு அல்ல,  ஒரு வேள்விக்கு.  நீங்கள் வாங்குவது ஒரு திரைப்பட நுழைவு சீட்டு அல்ல,  லட்சக்கணக்கான இந்து பண்டிட்டுகளின் உண்மை சரித்திரத்தை நாமும் உணர்கிறோம், அவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம் எனும் ஒரு பெருமிதம் அது.

 

மீண்டும் சொல்கிறேன் எத்தனை பக்கங்கள் எழுதினாலும், இந்த திரைப்படத்தை விவரித்து விட இயலாது.


நன்றி இணையம்