“நாம் மிருகங்கள்; மனிதர்களை விட உயர்ந்த மிருகங்கள்”

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:51 | Best Blogger Tips

 


அதிகாலை நேரத்தில், தனக்காகவும், தனது இரு குட்டிகளுக்காகவும் இரை தேடச் சென்றது தாய்ப்புலி.

இரு குட்டிப் புலிகளும் தாய்ப்புலி கொண்டு வரும் உணவை எதிர்பார்த்துக் காத்திருந்தன. நீண்ட நேரமாகியும் தாயைக் காணோமே? என்றது ஒரு புலிக்குட்டி.

இன்னும் இரை ஒன்றும் கிடைக்கவில்லையோ என்னமோ? என்றது இன்னொரு புலிக்குட்டி.

எனக்குப் பசி காதை அடைக்கிறது...

எனக்கும்தான் பசி வயிற்றைக் கிள்ளுகிறது!

எதற்கும் நாம் சிறிது தூரம் சென்று அம்மாவைத் தேடிப் பார்ப்போமா? என்றது ஒரு புலிக்குட்டி.

வேண்டாம், வேண்டாம். நான் வரும்வரை நீங்கள் குகையைவிட்டு வெளியே வரக்கூடாதுஎன்று நம் தாய் சொல்லிவிட்டுப் போயிருக்கிறது என்றது மற்றொரு குட்டி.


கடைசிவரை அம்மா வராமலே இருந்து விட்டால்... நம் சாப்பாட்டிற்கு என்ன செய்வது? என்றது முதல் குட்டி.

பேசாமல் இரு; அப்படி வராவிட்டால் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்! என்று பதில் சொன்னது இரண்டாவது குட்டி.

அதுவரை பசியோடு இங்கேயே கிடந்து தவிக்க வேண்டுமா?” என்று அலுத்துக் கொண்டே, தன் கால் விரல்களில் ஒன்றை லேசாகக் கடித்து, அதில் கசிந்து வந்த ரத்தத்தை நக்கி ருசி பார்த்தது.

அப்போது தாய்ப்புலி வரும் சத்தம் கேட்டது.

தாய்ப்புலி எந்த இரையையும் கொண்டுவரவில்லை. இதனால் குட்டிப் புலிகள் இரண்டும் ஏமாற்றம் அடைந்தன.

ஏன் அம்மா, ஒன்றும் கிடைக்கவில்லையா? என்று கேட்டது குட்டிப் புலிகளில் ஒன்று.

ஒரு கொழுத்த காட்டுப் பன்றி மரத்தடியில் உதிர்ந்து கிடந்த பழங்களைப் பொறுக்கித் தின்று கொண்டிருந்தது. நான் அதன்மேல் பாயத் தயாராவதற்குள் இன்னொரு புலி வந்து அதைக் கவ்விக் கொண்டு போய்விட்டது.என்றது தாய்ப்புலி.

அதை நீ சும்மாவா விட்டாய்? என்றது இன்னொரு குட்டிப்புலி.

சும்மா விடாமல் என்ன செய்வது? என்று சொன்னது தாய்ப்புலி.

நீ அதை ஏன் அடித்துக் கொன்றிருக்கக் கூடாது? என்று கேட்டது முதல் குட்டிப்புலி.

சீச்சீ, தன் இனத்தைத் தானே அடித்துக் கொல்ல நாம் என்ன மனிதர்களா? நாம் மிருகங்கள் - அப்படியிருக்கும்போது நமக்கு நாமே எதிரிகளாக முடியுமா? அந்தப் பன்றி போனால் இன்னொரு பன்றி என்று சொல்லிக் கொண்டே... தாய்ப்புலி மீண்டும் இரை தேடச் சென்றது.

குட்டிப் புலிகள் இரண்டும் தங்கள் பசியை மறந்து, “நாம் மிருகங்கள்; மனிதர்களை விட உயர்ந்த மிருகங்கள்என்று கும்மாளம் கொட்டின.

நன்றி இணையம்