பெண் விடுதலைப் போராட்ட
வீரர்களை நாம் அதிகம் போற்றாமல் இருக்கிறோம் அல்லது அவர்களை நமக்கு அதிகம்
அறிமுகம் செய்யாமல் விட்டுவிட்டார்கள்.
நேரடியாகக் களத்திலிறங்கி
போராடி உயிர் நீத்தவர்களில் சிலரைப் பற்றிய ஓரிரு வரிகள் அறிமுகத் தொகுப்பு.
ப்ரீத்திலதா வதேதர் (Pritilata
Waddedar) : வங்காளத்தைச் சேர்ந்தவர். “நாய்களும் இந்தியர்களும் நுழையக் கூடாது” என்று வாசகம் வைத்திருக்கும் இடங்களை பஞ்சாபி ஆண்
போல் வேடம் அணிந்து சென்று அடித்து நொறுக்கியவர். பிரிட்டிஷ் என்கௌண்டரிலிருந்து
தப்பிக்க சயனைடு தின்று மாய்த்துக் கொண்டவர். வங்கத்து இளைஞர்களின் ஆதர்சம்.
குயிலி Kuyili
: ராணி வேலுநாச்சியாரின் தளபதி
போன்றவர். சிவகங்கையில் பிரிட்டிஷ் ஆயுதக் கிடங்கினை தன் உடல்முழுவதும் எண்ணெய்-ஐ
ஊற்றிக் கொண்டு கிடங்கினில் சென்று தீ வைத்து தன் உயிரை மாய்த்துக் கொண்டவர்.
தமிழக இளைஞர்களின் ரத்தத்தில் ஏற்றப்பட வேண்டியவர்.
மாதங்கினி ஹஸ்ரா Matangini
Hazra : வங்காளத்தைச் சேர்ந்தவர்.
காந்திய வழிப் போராளி எனினும், மிகத் தீவிரமான போராளி தன் 72 வயது வரை களத்தில் இறங்கிப் போராடினார். அந்த
வயதிலும் இவரை கட்டுப்படுத்த முடியாத பிரிடிஷ் போலீஸ் இவரைச் சுட்டுக் கொன்றனர்.
ராணி வேலுநாச்சியார் Rani
VeluNachiyar: தமிழக ராணி. பிரிடிஷ் படையை
ஆயுதங்கள் கொண்டு போர்க் களத்தில் வென்ற ஒரே இந்தியப் பெண்மணி இவர் தான். வெற்றி
பெற்ற ஒரு இந்திய வரலாற்றை இந்தியக் கல்வியாளர்களே மழுங்கடித்து விட்டனர்.
கித்தூர் ராணி சென்னம்மா Kittur
Chennamma : கர்னாடகத்தைச் சேர்ந்தவர். 1820களிலேயே ஆங்கிலேயர்களுக்கு எதிராக போர் செய்து
மாண்டவர். கர்னாடகா மக்களின் ஆதர்ஷம்.
ராணி அவந்திபாய் Rani
Avanti Bai : மத்தியபிரதேசத்தைச் சேர்ந்தவர்.
முதல் சுதந்திரப்போராட்டக் களத்தில் பிரிடிஷ் படையுடன் கடுமையாகப் போரிட்டவர்.
கைது செய்யப்பட்டுவிடுவோம் என்ற நிலையில் தன் வாளாலே தன் தலையைத் துண்டித்துக்
கொண்டு உயிர் நீத்தவர்.
பேகம் அஷரத் மஹல் Begum
Hashrat Mahal : உத்திரபிரதேசத்தைச் சேர்ந்தவர்.
1857
போரில் ஆயுதமேந்தி கடுமையாகப்
போராடியவர். போராடியதோடில்லாமல் லக்னோவை பிரிடிஷிடமிருந்து சிறிது காலத்திற்கு
கைப்பற்றிய வீர மங்கை. கைதாகாமல்
தப்பித்தும் இந்திய நேபாள மன்னர்கள் யாரும் அடைக்கலம் கொடுக்காததால், இமயமலைப் பகுதியில் தன் இறுதிகாலத்தை இழந்தவர்.
பிகாஜி ருஸ்தோ காமா Bhikaiji
Rusto Cama : மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர்.
விடுதலை அடையப் போகும் இந்தியாவிற்கென்று புதிய கொடியை உருவாக்கி, ( மேலே, பச்சை வண்ணப் பட்டையில், எட்டு மலர்ந்த தாமரைகள் நடுவில் மஞ்சள் நிற பட்டையில், வந்தே மாதரம் என, தேவநாகரி வரியில் எழுதி, அடியில், சிவப்பு நிறப் பட்டையில், சந்திரனும், சூரியனும் இடம் பெற்றிருந்தன) அதனை 1907ல் ஜெர்மனியில் கொடியேற்றியர்.
கேப்டன் லட்சுமி Captain
Lakshmi : இந்திய தேசியப் படையில் பெண்
ரெஜிமெண்ட்-ன் தலைவி. நேதாஜி தப்பிப் போகச் சொல்லிக் கூட கேட்காமல் பிடிவாதமாக
போராட்டக் களத்தில் நின்று பிரிட்டிஷாரால் கைது செய்யப்பட்டவர்.
இராணி இலட்சுமிபாய் (Rani
Lakshmi bai) : நாடறிந்த பெயர். ஆனால், ஆறு மாதங்களாக ஆங்கிலேயர்களை போர்க்களத்தில் அவர்
கதற விட்ட தீரத்தை இளம் தலைமுறைகளிடம் முழுமையாகக் கொண்டு சேர்க்கப்படவில்லை.
ஜல்காரிபாய் Jhalkari
Bai : இன்றைக்கும் இவரது வீரம் பற்றிய
நாட்டுப்புறப் பாடல்கள் மத்தியபிரதேசத்தில் பிரபலம். ஜான்ஸி ராணியின் போர்வாள்
மற்றும் மூளை. நடுத்தரக்
குடும்பத்தில் பிறந்து பிரிட்டிஷாரை நடுங்கச் செய்த பாரதத்தின் தவமகள்.
மேலே குறிப்பிட்டவர்களெல்லாம்
ஆயுதமேந்தி களமாடிய பிரபலங்கள். ஆயுதம் ஏந்தாமலும், ஆயுதமேந்திப் போராடக் காரணமாக பின்னாலிருந்து
செயல்பட்ட , முல்மதி, ஜிஜாபாய், மீனாட்சி அம்மாக்கள், செல்லம்மா, அன்னிபெசண்ட் போன்ற லட்சக்கணக்கான தாய்களின்
தியாகங்களால் மட்டுமே மீட்டெடுக்கப்பட்ட இந்த சுதந்திரம் கத்தியின்றி ரத்தமின்றி
கிடைத்ததல்ல.
விடுதலைக்காக உயிரைக்
கொடுத்தவர்கள் முதல் விரலை அசைத்தவர்கள் வரை அனைவரின் பாதங்களையும் பணிந்து, அவர்கள் விரும்பிய நல்ல தேசம் அமைக்க அனைவரும்
பாடுபடுவோம்.
வந்தே மாதரம்! வாழ்க பாரதம்!!