எல்லா அதர்மமும் ஆடித்தான் அடங்கும்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:07 | Best Blogger Tips

 


கண்ணா நான் குழம்பியிருக்கின்றேன், சோர்வடைந்துவிட்டேன், எல்லாம் வீணான முயற்சி என்பது போலாகிவிட்டது, என்னால் இனி ஒரு அடி கூட எடுத்துவைக்க முடியாது. அவர்களே ஆண்டுகொள்ளட்டும் நான் இனி களத்தில் இருக்க விரும்பவில்லை

"அர்ஜூனா சூதாட்டத்தில் காய்களை அவர்கள் பக்கம் விழுமாறு செய்தவன் யார்? நீயா இல்லை நான், இந்த யுத்தத்தை நடத்த திட்டமிட்டவன், நான்.

நடந்த காட்சிகள், நடக்க வேண்டிய காட்சிகளை நான் அறிவேன், உன்னால் அதை அறியவும் முடியாது அறிந்து கொள்ளும் அறிவும் உனக்கு கொடுக்கபடவில்லை, எல்லாம் அறிந்தவன் நான்.

இங்கு எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் உண்டு, அதை நீ அறியமாட்டாய் ஆனால் நான் அறிவேன்

விதைப்பது உன் கடமை, விதையினை நிலத்தை நீரை உருவாக்கும் சக்தி உனக்கு கொடுக்கபட்டதா? இல்லை. அதெல்லாம் எம் பொறுப்பு

விதைப்பதை விதைத்துவிட்டு போ, விளைச்சலுக்கு நானே பொறுப்பு

உன் கடமையினை நீ செய், விளைவுகளுக்கு நானே பொறுப்பு

நீ வெறும் கருவி, என் கைபாவை, நான் சொன்னதை மட்டும் செய். எந்த நேரத்தில் எதை எப்படி நடத்தி முடிக்க வேண்டும் என்பதை அறிந்தவன் நான், இது நான் நடத்தும் காட்சிகள்

உனக்கான கடமையினை மட்டும் நீ செய், அடுத்தவன் கர்மாவோ கடமையோ பற்றி சிந்திக்கும் அவசியம் உனக்கு இல்லை அதனால் உனக்கு குழப்பமே மிஞ்சும்

அவன் வந்த காரியத்தை அவன் செய்யட்டும், நீ வந்த காரியத்தை மட்டும் நீ செய். எல்லோரையும் இயக்கும் நான் என் காரியத்தை நன்றாகவே செய்து கொண்டிருக்கின்றேன்

இங்கு எல்லாம் மாயை, மாயையின் உச்சம் காட்டும் மயக்கத்தில் மயங்கி கிடக்கின்றாய். என்னை உற்றுபார் என் விஸ்வரூபத்தை பார், இவர்களெல்லாம் யார் என பார்? எதற்காக இங்கு குவிந்திருக்கின்றார்கள் என பார், எதற்காக அதிகாரம் அவர்களுக்கு கொடுக்கபட்டது என்பதை மட்டும் பார்

உன் கடமையினை மட்டும் நீ செய், மயக்கதில் சிக்கி இதில் இருந்து நழுவினால் இன்னொருவனை கொண்டு இந்த காட்சிகளை நடத்த எனக்கு தெரியும். ஆனால் உன் சுதர்மத்தை கர்மத்தை தவறவிட்ட பாவம் உன்னை விடாது

உன் கர்மா கழியவும், உன் கடமை நிறைவேறவுமே இங்கு நீ அழைத்துவரபட்டிருக்கின்றாய். அந்த கடமையினை தெளிவாய் செய், மயக்கம் அறுத்து குழம்பாமல் பற்றறுத்து செய்.

இங்கு காண்பன எல்லாம் மறையும், மறைந்தன எல்லாம் திரும்பும். காலமாக நான் ஆடும் இந்தஆட்டம் உனக்கு புரியாது, புரியாத விஷயத்தை யோசித்து ஏன் குழம்புகின்றாய்

இங்கு எல்லாவற்றுக்கும் ஒரு காலம் உண்டு. அதன்படியே காட்சிகள் அமையும்

அக்கிரமம் ஆட ஒரு காலம் உண்டு , அடங்க ஒரு காலம் உண்டு. எல்லா அதர்மமும் ஆடித்தான் அடங்கும் என்பதை மனதில் கொள், எந்த அக்கிரமும் நெடுநாள் நிலைத்ததில்லை என்பதையும் நினைவில் கொள்

கடும் வெயில் மழைக்கு அறிகுறி, மழை செழுமையின் வாசல், வெயில் இன்றி மழை இல்லை. அதர்மம் ஆடாமல் தர்மம் வரவாய்ப்பே இல்லை

இது என் நாடகம், என் இயக்கம் நீங்களெல்லாம் வெறும் பாத்திரங்கள், உன் பாத்திரத்தை நீ ஒழுங்காக செய் அதுதான் நான் கேட்பது

நீ இன்று காணும் எல்லாம் மாறும், எல்லாம் மாறும்

என்னை சரணடை, என்னில் உன் பாரங்களை சுமத்து, என் காவலில் இருந்து கடமையினை செய், எப்பொழுதும் உன்னோடு நானிருந்து காத்துவருவேன்

கலங்காதே, எழு, மயக்கம் அறு, கடமையினை செய் அதை மட்டும் செய், அதற்காகவே நீ படைக்கபட்டிருக்கின்றாய் "

 எல்லா அதர்மமும் ஆடித்தான் அடங்கும்

நன்றி இணையம்