நான் பேடி என்று தலைப்புச் செய்தி போடு

மணக்கால் அய்யம்பேட்டை | 12:12 PM | Best Blogger Tips

 


"நான் பேடி என்று தலைப்புச் செய்தி போடு" என்று கூறிய சர்தார் வல்லபபாய் பட்டேல்..............

காந்தி, நேரு, பட்டேல் போன்ற பெரும் தலைவர்களுடன் தோளோடு தோள் பழகியவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் அதிபரான மறைந்த ராம்நாத் கோயங்கா.

1948-ல் பாரத சரித்திரத்தை,

தேசப் பிரிவினையால் ஓடிய ரத்தவெள்ளத்தால் எழுதிய காலம்.

பெரும் தலைவர்களுடனான தனது அனுபவங்களை கோயங்கா என்னிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

அதில் ஒன்றுதான் பாகிஸ்தான் உதவியுடன் ஹைதராபாத் நிஜாம் சுதந்திர நாடு அமைக்க வேண்டும் அல்லது பிரிட்டிஷின் மறைமுக உதவியால் காஷ்மீரைப் போல் விசேஷ அந்தஸ்து பெறவேண்டும் என்று செய்த முயற்சி.

அதை எப்படி சர்தார் பட்டேல் முறியடித்தார், அதற்கு கோயங்காவின் உதவியை நாடினார் என்பதை ஒரு முறை கோயங்கா என்னிடம் கூறினார்.

எப்படிப்பட்ட தன்னலமற்ற, துணிவான, மேன்மையான தலைவர் சர்தார் பட்டேல் என்பதை அந்த அனுபவம் உணர்த்தும்.

தங்களை மாவீரன், தளபதி என்றல்லாம் போஸ்டர் போட்டுக் கொள்ளும் எண்ணற்ற தலைவர்களைப் போற்றும் நம் மக்களுக்கு, தலைமை என்றால் என்ன என்பதை கோயங்காவின் அனுபவம் உணர்த்தும்.



11.9.1948-ல் பாகிஸ்தான் தலைவர் எம்.. ஜின்னா காலமானார்.

மறுநாள் காலை 4 மணி. டெல்லியில் ராம்நாத் கோயங்காவின் டெலிஃபோன் அடித்தது.

கோயங்கா அதை எடுத்தபோது, அடுத்த பக்கம் பேசியது துணைப் பிரதமர் சர்தார் பட்டேல். ராம்நாத், நீ இங்கு வருகிறாயா, அங்கே நான் வரட்டுமா". நான் வருகிறேன் வல்லபாய்" என்று கூறிய கோயங்கா, அரை மணி நேரத்தில், பட்டேல் வீட்டுக்குச் சென்றார்.



என்ன வல்லபாய், இவ்வளவு காலையில்?" என்று கேட்க, வல்லபாய் பட்டேல் கோயங்காவிடம், பாரத மாதாவின் உடலில் பாய்ந்த அம்பு ஹைதராபாத் என்று நினைக்கிறாயா, இல்லையா?" என்று கேட்டார். ஆமாம் வல்லபாய்" என்றார் கோயங்கா. அந்த அம்பை எடுக்க, நான் கூறுகிறபடி செய்வாயா?" என்று பட்டேல் கேட்க, நிச்சயம் வல்லபாய்" என்று கோயங்கா பதிலளித்தார்.

பட்டேல் அவரிடம் ஃபைல் ஒன்றைக் கொடுத்து இதைப் படி" என்று கூறினார். அந்த ஃபைலில் நிஜாம் ஆட்சி செய்யும் ஹைதராபாத் மாஹாணத்தில், தனியார் கொலைப் படையான முஸ்லீம் ரஸாக்கர்கள்** ஆயிரக்கணக்கில் ஹிந்துக்களைப் படுகொலை செய்கிறார்கள், ஹிந்துப் பெண்களை கற்பழிக்கிறார்கள், அவர்களுக்குப் பாதுகாப்புத் தேவை என்று கூறும் ரகசியப் போலீஸ் அறிக்கைகள் இருந்தன.

இது பற்றிய செய்திகள் வந்துகொண்டிருந்தாலும், அங்கே எந்த அளவுக்கு அராஜகம் நடக்கிறது என்பது அப்போதுதான் கோயங்காவுக்குப் புரிந்தது.

இப்போது தெரிகிறதா நிலைமை? 2 லட்சம் பேர் அடங்கிய ஒரு தனியார் படை படுகொலைகளைச் செய்கிறது.

நான் உள்துறை அமைச்சர், துணைப் பிரதமர், ஆனால் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. நான் பேடியா இல்லையா? என்னைப் பேடி என்றுதான் என் கீழ் பணியாற்றும் அதிகாரிகள் கூட நினைக்கிறார்கள். அதுதான் உண்மை" என்று பொருமினார் பட்டேல்.

ஜவஹர்லால் என்ன நினைக்கிறார்" என்று கோயங்கா கேட்க, எப்போதும் போல் குழப்பம். என் பொறுப்பில் விடப்பட்ட 500-க்கும் மேலான சமஸ்தானங்கள் நம் நாட்டுடன் இணைந்தாகி விட்டது.

அவர் பொறுப்பு எடுத்துக் கொண்ட ஹைதராபாத், காஷ்மீர் இரண்டும் நமக்கு எதிராக இருக்கிறது. மென்மையான நேருவால் கடினமான நடவடிக்கை எடுக்க வேண்டிய இந்த பிரச்னையைத் தீர்க்க முடியாது.

ஆனால் அவர் அதை என் கையில் கொடுக்க மாட்டார். நேரு என் கையில் கொடுக்க நீ உதவி செய்ய வேண்டும்" என்று கூறினார் பட்டேல். நீங்கள் என்ன கேட்டாலும் செய்கிறேன் வல்லபாய்" என்று கூறினார் கோயங்கா.

நீ பி.டி.. செய்தி நிறுவனத்தின் சேர்மன், இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை உன் கையில். இந்த இரண்டின் மூலமாக, நான் கொடுத்திருக்கும் ஃபைலில் இருக்கும் விவரங்களை வெளியிட்டு ""impotent sardar (பேடி சர்தார் படேல்) என்று தலைப்புச் செய்தி வெளியிடு" என்று பட்டேல் கூற கோயங்கா அதிர்ந்து போனார்.

வல்லபாய், உங்களைப் பழிக்கும் இந்தப் பாவத்தை என்னை ஏன் செய்யச் சொல்கிறீர்கள்? என்னைப் பற்றி எல்லோரும் என்ன நினைப்பார்கள்" என்று கேட்டார் கோயங்கா. அது தான் என் திட்டத்தின் துவக்கம். எனது நற்பெயர் பலியானால்தான் நாடு பிழைக்கும். இல்லையென்றால், நம் நாட்டின் மத்தியில், ஒரு பாகிஸ்தான் அல்லது காஷ்மீர் உருவாகும். அதைத் தடுக்க வேண்டும்.



நீ என்னைப் பழித்துச் செய்தி போட்ட பிறகுதான், அதில் உனது பங்கே துவங்குகிறது" என்று கூறினார். அவரது திட்டம் என்ன என்று பட்டேல் விவரிக்க, அதைக் கேட்டு அதிசயித்தார் கோயங்கா. அந்த அதி சாணக்கியத் திட்டம் என்ன?

கோபாலசாமி ஐயங்கார், நேருவின் கண்ணும், காதும் போன்றவர். .சி.எஸ். அதிகாரியான அவர், காஷ்மீர் மஹாராஜாவின் கீழ் காஷ்மீர் பிரதமராக இருந்தவர். அவரை நேரு அமைச்சராக நியமித்திருந்தார். அவரும் கோயங்காவும் மிகவும் நெருங்கியவர்கள்.

சாணக்கியமான திட்டம்

நாளைக் காலை பி.டி.. மூலம் இந்தச் செய்தி எல்லா பத்திரிகைகளிலும் தலைப்புச் செய்தியாக வந்தவுடன் நீ உன் நண்பர் கோபாலசாமி ஐயங்காரிடம் போகவேண்டும்.

அவர் கூறுவதைத்தான் நேரு கேட்பார். நீ சொல்வதை ஐயங்கார் கேட்பார், அல்லது நீ அவரைக் கேட்க வைக்க வேண்டும். நேற்று ஜின்னா இறந்து விட்டார். பாகிஸ்தான் 12 நாள் துக்கம் அனுசரிக்கும். இதுதான் சரியான நேரம். நாளை அமைச்சரவையில் ஹைதராபாத் பற்றி முடிவெடுக்க வேண்டும்.

நாளை காலை இந்தச் செய்தி வெளிவந்தால், நாடே என்னைத் தூற்றும். ஆனால் நேருவுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் தெரியும்; இதற்கு நான் பொறுப்பல்ல, அவர்தான் பொறுப்பு என்று. இந்தச் செய்தி வெளிவந்தால் அவரது மனதில் குற்ற உணர்வு ஏற்படும்.

எனக்கு அநியாயமாக அவப்பெயர் வந்ததால், தார்மீகமாக நான்தான் ஹைதராபாத் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று அமைச்சர்கள் அனைவரும் கூறுவார்கள். ஆனால், நேருதான் அதைக் கூறவேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

ஹைதராபாத் பிரச்னையை தீர்க்கும் பொறுப்பை என்னிடம் கொடுக்க, நேருவுக்கு ஐயங்காரால் மட்டுமே ஆலோசனை கூற முடியும். அவர்தான் அமைச்சரவையில் நாளை இதைப் பற்றிய பேச்சைத் துவங்குவார். ஐயங்கார் கூறினால் நேரு தட்ட மாட்டார்.

ராணுவத்தை வைத்துத்தான் 2 லட்சம் ரஸாக்கர்களையும், 22,000 நிஜாம் ராணுவத்தையும் முறியடிக்க முடியும். போலீஸ் நடவடிக்கையே போதும் என்று நேரு நினைக்கிறார். போலீஸாரால் அது முடியாது.

ஜின்னா மரணப் படுக்கையில் இருக்கிறார் என்று தெரிந்தவுடனேயே நான் ராணுவத்தை ஹைதராபாத் அருகே கொண்டு போய் விட்டேன். இது ரகசியம். நாளைதான் சரியான நாள். எல்லாம் உன் கையில். இது உனக்கும் எனக்குமான ரகசிய ஒப்பந்தம். யாரிடமும் நாம் பேசியதைப் பற்றி மூச்சு விடாதே.

நான் இந்தத் தகவல்களை உனக்குக் கொடுத்தது ஐயங்காருக்கு தெரியவே கூடாது. ஆனால், செய்தி வந்த பிறகு, என்னிடம் நீ பேசியதாகவும், ஹைதராபாத் நடவடிக்கையை என்னிடம் அளிக்கவில்லை என்றால், நான் ராஜினாமா செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று ஐயங்காரிடம் கூறி விடு" என்று பட்டேல் கூறினார்.

இதை என்னிடம் கூறிய கோயங்கா, குரு, எந்த மாதிரியான தைரியசாலி சாணக்கியர் பட்டேல். தன் நற்பெயரைப் பணயம் வைத்து நாட்டைக் காக்க பாடுபடும் தேசபக்தர் பட்டேல் என்பதை நான் அனுபவபூர்வமாக கண்டேன்" என்று கண்ணீர் மல்க நினைவு கூர்ந்தார். பிறகு, எப்படி ஐயங்காரை பட்டேல் சமாளித்தார் என்பதையும் கூறினார்.

ஐயங்காரின் காலில் விழுந்த கோயங்கா

மறுநாள் அனைத்துப் பத்திரிகைகளும் சர்தார் பட்டேல் மீது குற்றம் சுமத்தி செய்தி வெளியிட்டன. அந்தப் பத்திரிகைகளை எடுத்துக் கொண்டு கோயங்கா, காலை 5.30-க்கு கோபால சாமி ஐயங்கார் வீட்டுக்குப் போனார். ஐயங்காரைப் பார்த்தவுடன் கோயங்கா அவர் காலில் விழுந்து, கால்களைக் கட்டிப் பிடித்துக் கொண்டார்.

ராமநாதா! இது என்ன, எழுந்திரு" என்று ஐயங்கார் அவரைப் பிடித்துத் தூக்க முயற்சி செய்ய, நீங்கள் நான் கேட்பதைச் செய்வேன் என்று உறுதி கூறினால் தான் எழுந்திருப்பேன்" என்று கோயங்கா கூறினார். என்ன என்று தெரியாமல் எப்படி நான் சரி, செய்கிறேன் என்று சொல்ல முடியும்" என்று கேட்டார் அவர்.

எனக்காக ஒன்றும் கேட்கவில்லை, நாட்டுக்காக நீங்கள் ஒன்று செய்தே ஆகவேண்டும், இல்லையென்றால் பட்டேலுக்கும், நேருவுக்கும் இன்று அமைச்சரவையில் நேரடி மோதலை தவிர்க்கவே முடியாது" என்று கூறினார் கோயங்கா. சரி செய்கிறேன். எழுந்திரு" என்று கூறிய பிறகே அவரது காலை விட்டார் கோயங்கா. பிறகு செய்தித்தாள்களை கோயங்கா அவரிடம் கொடுத்தார்.

இந்த ரகசிய ஆவணங்கள் எப்படி உனக்குக் கிடைத்தன? இது வெளிவந்தது பேராபத்தாச்சே" என்று ஐயங்கார் அதிர்ந்து போனார்.

கோயங்கா, அதிகாலையில் தான் பட்டேலைச் சந்தித்ததாகவும், இந்தச் செய்தி வந்த பிறகு நேரு, ஹைதராபாத் நடவடிக்கையைத் தன்னிடம் கொடுக்கவில்லை என்றால், நான் ராஜினாமா செய்வதைத் தவிர வேறு வழியில்லை" என்று பட்டேல் கூறினார் என்று சொன்ன கோயங்கா மேலும், ஹைதராபாத் மீது நடவடிக்கை எடுக்கும் பொறுப்பை நேரு, பட்டேலிடம் கொடுக்கும்படி நீங்கள்தான் எப்படியாவது ஏற்பாடு செய்ய வேண்டும்" என்றார். ஐயங்காரும் இந்த நிலையில் அது தவிர வேறு வழி ஒன்றும் தோன்றவில்லை" என்று கூறினார்.

மீண்டும் அவர் காலில் விழுந்த கோயங்கா, சாமி! நீங்கதான் நாட்டை காப்பாத்தணும்" என்று கூறி விடை பெற்று, நேராக பட்டேலின் வீட்டுக்குச் சென்று அவரிடம் நடந்ததைக் கூறினார்.

பட்டேல், நீ இந்தப் பிரச்னையில் நாட்டைக் காப்பாற்றியவன். நீ இறக்கும்போது உனக்கு இது பெரும் மகிழ்ச்சியைக் கொடுக்கும்" என்று சொன்னார்.

கதை, வசனம், டைரக்ஷன் - பட்டேல்

அன்று அமைச்சரவைக் கூட்டத்தில் பட்டேல் கேட்டுக் கொண்டபடி ஐயங்கார் பேச, நேருவும் அதை ஏற்றார். ஹைதராபாத் நடவடிக்கையை எடுக்கும் பொறுப்பு பட்டேலுக்கே அளிக்கப்பட்டது.

நேரு போலீஸை மட்டுமே பயன்படுத்த வேண்டும்" என்று மறுபடியும் வற்புறுத்தினார். பட்டேல், ராணுவம் அங்கு போயாகிவிட்டது, ராணுவம்தான் நடவடிக்கை எடுக்கும்" என்று கூறினார்.

நேரு மௌனமானார். மறுநாள் செப் 13. வெளியில் போலீஸ் நடவடிக்கை என்று கூறப்பட்ட ஹைதராபாத் மீது ராணுவ நடவடிக்கை துவங்கியது. ஐந்து நாட்களில் பிரச்னை தீர்ந்தது. மேஜர் ஜெனரல் ஜே.என்.சௌத்ரி தலைமை தாங்கினார்.

ரஸாக்கர்களின் கொலைப்படையில் பெரும்பாலானவர்களை ராணுவம் தீர்த்துக்கட்டியது. நிஜாமும், அவரது ராணுவமும் சரணடைந்தது. லட்சக்கணக்கான ஹிந்துக்களைப் படுகொலை செய்த ரஸாக்கர்களின் படுகொலைப் படையை, நமது ராணுவம் கலைத்தது.

இப்படித்தான் ஹைதராபாத் நடவடிக்கைக்கு கதை - வசனம் - டைரக்ஷன் செய்து முடித்தார் சர்தார் பட்டேல். காஷ்மீரைப் போல் ஹைதராபாத்துக்கும் விசேஷ அந்தஸ்து கொடுக்க மௌன்ட்பேட்டன் செய்த சூழ்ச்சியை முறியடித்தார் பட்டேல். ***

இல்லையென்றால் நேருவின் குழப்பம் இன்னொரு காஷ்மீரை உருவாக்கியிருக்கும். சாணக்கியமும், தைரியமும், சுயநலமற்ற தேசபக்தியும் நிறைந்த சர்தார் பட்டேல் அப் படி நடவாமல் தடுத்தார்.

பட்டேல் மட்டும் தலையிடாமல், நேருவின் கையில் விட்டிருந்தால், தென்னிந்தியாவில் ஒரு காஷ்மீர் உருவாகியிருக்கும்.










நன்றி துக்ளக் ஆசிரியர் ஸ்ரீ.குருமூர்த்தி