*புள்ளிமான்கள்*

மணக்கால் அய்யம்பேட்டை | 12:43 PM | Best Blogger Tips

 


ஒரு காட்டில் இரண்டு புள்ளி மான்கள் ஒரே மாதிரியாக இருந்தன. இணைப்பிரியாத நண்பர்களாக இருந்தன. எங்கு சென்றாலும் சேர்ந்தேதான் செல்லும். ஒரு நாள் மழை பெய்தது. மான்களால் விளையாட முடியவில்லை. மழை நின்ற பிறகு வெளியே சென்று இன்னும் மழை வருமா என்று இரண்டு மான்களும் மேலே பார்த்தன. அப்போது மேகத்திற்குள்ளிருந்துட வெளியே வந்தது சூரியன். மான்கள் இரண்டும் சூரியனிடம், இன்னும் மழை வருமா? என்று கேட்டன. அதற்கு சூரியன், நான் வந்து விட்டேனே, இனி எப்படி மழை வரும்? என்று சொல்லி மான்களைப் பார்த்து சிரித்தது.


எங்களைப் பார்த்து ஏன் சிரிக்கிறாய் என்றது ஒரு மான். நீங்கள் இருவரும் ஒரே மாதிரியாக இருக்கிறீர்கள்! அது தான் எனக்குச் சிரிப்பு வந்து விட்டது! தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். நீங்கள் யார்? நாங்கள் தான் அழகான இரண்டு புள்ளிமான்கள். நாங்கள் இருவரும் நண்பர்கள் என்றன புள்ளிமான்கள்.


சரி, உங்களில் யார் திறமையானவர்கள்? என்று கேட்டது சூரியன். நாங்கள் இருவருமே திறமையானவர்கள் தான்! என்றது புள்ளிமான்கள். சூரியன் சற்று யோசித்துவிட்டு சரி, அப்படியென்றால் நான் ஒரு போட்டி வைக்கிறேன். அதோ அங்கு ஒரு மரம் இருக்கிறது பாருங்கள். உங்களில் அந்த மரத்தை யார் முதலில் தொடுகிறார்களோ அவர்கள் தான் திறமையானவர்கள். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நான் ஒரு பரிசு தருவேன் என்றது.


சூரியன் பரிசு தருவதாகச் சொன்னதும் இரண்டு மான்களும் ஓடத்தொடங்கின. ஆனால் மரத்தைத் தொடாமல் நின்று கொண்டிருந்தன. சூரியன் ஏன் மரத்தைத் தொடாமல் அப்படியே நின்று கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டது. ஒரு புள்ளி மான் சொன்னது, நான் என் நண்பனுக்கு விட்டுக்கொடுத்து விட்டேன் என்றது. இன்னொரு புள்ளிமானும், நானும் என் நண்பனுக்கு விட்டுக்கொடுத்து விட்டேன் என்று சொன்னது.



இதைக் கேட்டு பெரிதும் மகிழ்ந்த சூரியன் சொன்னது, அழகான இரண்டு புள்ளி மான்களே! உங்கள் ஒற்றுமையைப் பார்த்து நான் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் இருவரும் எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். உங்களுக்கு நான் ஒரு வானவில்லை பரிசாகத் தருகிறேன். நீங்கள் எப்போது விரும்புகிறீர்களோ அப்போதெல்லாம் வானவில்லே வருக என்று சொன்னால் போதும். வானத்தில் அழகான வானவில் தோன்றும். நீங்கள் அதைப்பார்த்து ரசிக்கலாம் என்று சொல்லிவிட்டு சூரியன் விடை பெற்றது. மான்கள் இரண்டும் மகிழ்ந்தன. அவற்றிற்கு விருப்பமான நேரத்தில் வானவில்லை வரச்செய்து பார்த்துப் பார்த்து ரசிக்கும்.


நீதி :

நண்பர்களே விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் வாழ்க்கை வளமாக இருக்கும்.



 நன்றி இணையம்