வெள்ளியங்கிரி, கோயம்புத்தூர், கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு
வெள்ளியங்கிரிக்கு இரண்டு தலவரலாறுகள் உள்ளன.
ஒரு தலவரலாற்றையும், அடிவாரத்திலுள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோயில் பற்றிய தகவல்களையும் சென்ற வாரம் கண்டோம். இந்த வாரம் மற்றொரு தலவரலாறைக் காணலாம்.
பெயர்க்காரணம்: எப்போதும் வெள்ளை நிற மேகங்களால் சூழப்பட்டு, வெள்ளியைப் போல மின்னுவதால் வெள்ளியங்கிரி என அழைக்கப்படுகிறது.
புராண பெயர்கள்: வெள்ளி மலை, ரசதகிரி
மலையின் மகத்துவம்: உமையவளின் வேண்டுகோளுக்கிணங்கி சிவபெருமான் திருநடனம் ஆடிய திருத்தலம் இம்மலையில் அமைந்துள்ளது.
இதற்கு "பல்கலை
மேடை" என்று
பெயர். தற்போது, இப்பெயர் மருவி "பலகார
மேடை" என
அறியப்படுகிறது.
தலவரலாறு:
விஷ்ணு புராணம் மற்றும் பத்ம புராணங்களில் பூவுலகின் ஆதி மனிதன் தோன்றிய குறிப்புகள் உள்ளன. ப்ரம்ம தேவரால் தோற்றுவிக்கப்பட்ட மனு மற்றும் சதரூபையே ஆதி (அல்லது முதல்) மனிதர்கள்.
இத்தம்பதியர்களுக்கு பிறந்த மகளின் பெயர் ப்ரஸூதி. ப்ரம்ம தேவரின் மகனான பிரஜாபதி தக்ஷன், ப்ரஸூதியை மணந்துக் கொண்டார். ப்ரஸூதியைத் தவிர பஞ்சஜனி என்ற பெண்ணையும் மணந்து, 24 பெண்குழந்தைகளுக்கு தந்தை ஆனார். இவர்களுள், அதிதி, திதி, கத்ரு, வினிதா, தனு, முனி, அரிட்டை, சுரசை, சுரபி, தாம்ரா, குரோதவசை, இரா மற்றும் விஸ்வா ஆகிய 13 பெண்களை சப்த ரிஷிகளுள் ஒருவரான காஷ்யப மகரிஷிக்கு மணமுடித்துக் கொடுத்தார். மீதமுள்ள 11 பெண்களுள், க்யாதியை பிருகு முனிவருக்கும், சம்புதியை மரிச்சி மகரிஷிக்கும், ஸ்ம்ரிதியை அங்கிரஸ் மகரிஷிக்கும், பிரீத்தியை புலஸ்திய மகரிஷிக்கும், க்ஷமையை புலஹ மகரிஷிக்கும், சந்நதியை கத்ரு மகரிஷிக்கும், அனுசூயாவை அத்ரி மகரிஷிக்கும், ஊர்ஜ்ஜாவை வஷிஷ்ட மகரிஷிக்கும், ஸ்வாஹாவை அக்னி தேவருக்கும், ஸ்வதாவை பிரித்திஸ் தேவருக்கும் மணமுடித்துக் கொடுத்தார். இளைய மகளான சதியின் மீது அளப்பரிய அன்பு கொண்டிருந்தார். தக்ஷன் மற்றும் ப்ரஸூதியின் தவப்பயனால் ஆதிபராசக்தியே சதியாக அவதரித்திருந்தாள். சிவபெருமானை நிந்தனை செய்து வந்த தக்ஷன் இந்த உண்மையை அறிந்திருக்கவில்லை.
சதி வளர்ந்து கன்னிப்பருவத்தை அடைந்தாள்.
அவளுக்கு ஆடல் கலையைக் கற்பிக்க எண்ணிய தக்ஷன், அக்கலையில் சிறந்து விளங்கிய மதனிகா என்ற மங்கையை வரவழைத்தார். தக்ஷன் காலத்திலேயே ஆடல் கலை வல்லுநர்கள் சிவபெருமானை நடராஜராக ஆராதனை செய்வது மரபு. அதற்கு மதனிகாவும் விதிவிலக்கல்ல.
இருப்பினும், தக்ஷனின் அரண்மனையில் தங்கியிருந்த மதனிகா, நடராஜர் சிலையை பதுக்கி வைத்து வணங்கி வந்தாள். காலம் இவ்வாறாக செல்ல, சதியும் ஆடல் கலையில் நன்கு தேர்ச்சிப்பெற்றாள். ஒருநாள், மதனிகாவைக் காண வந்த சதி, அவள் எதையோ அவசரமாக மறைப்பதை உணர்ந்தாள். அது யாது என வினவிய சதியிடம் மதனிகா எதுவும் கூறவில்லை.
தொடர்ந்து கேள்வி கணைகளை தொடுத்த சதியிடம் வேறுவழியின்றி நடராஜரான சிவபெருமானைப் பற்றி கூறினாள் மதனிகா. அதுவரை, சிவபெருமானைப் பற்றி எதுவும் அறிந்திராத சதிக்கு அவரை தரிசிக்கும் ஆவல் எழுந்தது. தனது ஆவலை மதனிகாவிடம் கூறினாள் சதி. மறுப்பு தெரிவிக்க இயலாமல், தன்னிடம் இருந்த நடராஜர் சிலையை சதியிடம் காட்டினாள் மதனிகா. பார்த்த கணமே சிவபெருமானின் மீது காதல் கொண்டாள் சதி. இதில் வியப்பதற்கு எதுவும் இல்லை என்ற போதும், தக்ஷனின் கோபாக்னிக்கு தான் இரையாவது உறுதி என்பதை மதனிகா உணர்ந்தாள். மெல்ல மெல்ல சதியின் காதலைப் பற்றி தக்ஷன் அறிந்தார்.
எக்காரணம் கொண்டும் அவளை சிவபெருமானுக்கு மணம் முடித்து தரப்போவதில்லை என சூளுரைத்தார். ஆதிபராசக்தியே சதி என்ற உண்மையை அவருக்கு அறிவுறுத்த எண்ணிய அனைவரது முயற்சியும் வீணானது. இறுதியில், தக்ஷனின் விருப்பத்திற்கு மாறாக சிவபெருமானின் கரம் பற்றிய சதி, அவரோடு கயிலையை அடைந்தாள்.
தக்ஷனின் கோபம் எல்லை மீறியது. சிவபெருமானை பழிவாங்கும் எண்ணம் கொண்டு பெரும் யாகம் ஒன்றிக்கு ஏற்பாடு செய்தார். சிவபெருமானைத் தவிர அணைத்து தேவர்களுக்கும் அழைப்பு விடுத்தார்.
தந்தையின் யாகம் பற்றிய செய்தி சதியின் செவிகளுக்கு எட்டியது. பிறந்தகத்தின் மீது கொண்ட பாசத்தால் யாகத்திற்கு செல்ல ஆவல் கொண்டாள் சதி. தன் எண்ணத்தை சிவபெருமானிடம் கூறி அனுமதி வேண்டினாள். தந்தையின் இல்லத்திற்கு செல்ல அழைப்புத் தேவையில்லை என வாதிட்டாள். தன்னை அவமதிக்கவே தக்ஷன் யாகம் செய்கிறார் என்றும், அழையாத யாகத்திற்கு செல்வது தகாது என்றும் சிவபெருமான் கூறினார். அவர் சொல்வதை கேட்கும் நிலையில் சதி இல்லை. சிவபெருமான் தடுத்தும் கேளாமல் யாகம் நடந்துக் கொண்டிருந்த தலத்தை அடைந்தாள் சதி. மகளைக் கண்டதும் வெகுண்டார் தக்ஷன். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தேவர்கள் அனைவருக்கும் அவிர்பாகத்தை அளித்த தக்ஷன், சிவபெருமானுக்கு மட்டும் தர மறுத்தார்.
பொறுமையின் எல்லையைக் கடந்த சதிக்கு, தான் செய்த தவறும் உரைத்தது. கணவன் தடுத்தும் பிறந்தகம் வந்தது தவறு என்பதை உணர்ந்தாள்.
யாககுண்டத்தில் வீழ்ந்து தன் இன்னுயிரை மாய்த்துக் கொண்டாள்.
செய்தி சிவபெருமானை எட்டியது. பெரும் கோபம் கொண்டு சகலத்தையும் அழிக்கும் ருத்ரனாக யாகசாலையில் தோன்றினார். தக்ஷனின் தலையைக் கொய்தார். தன்னை அவமதித்த தக்ஷனின் யாகத்திற்கு வந்திருந்த தேவர்கள் அனைவரையும் சபித்தார்.
அக்னியில் எறிந்துபோன சதியின் சடலத்தை ஏந்தியவண்ணம் ருத்ர தாண்டவம் ஆடினார்.
சிவபெருமானின் உக்ரத்தை பொறுக்க இயலாமல் அணைத்து உயிரினங்களும், முனிவர்களும்,
தேவர்களும் அஞ்சினர். திருமாலின் உதவியை நாடினர். உக்ரம் தனியவேண்டுமென்றால் முதலில் சதியின் சடலத்தை சிவபெருமானிடமிருந்து பிரிக்க வேண்டும் என்றெண்ணிய திருமால் தனது சக்கராயுதத்தை ஏவி சதியின் சடலத்தை 51 துண்டுகளாக உடைத்தார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு தலத்தில் விழுந்தன. இத்தலங்களே பிற்காலத்தில் 51 சக்திபீடங்களாக மாறின. சதியைப் பிரிந்த சிவபெருமான், தனது ஐந்து திருமுகங்களை கொங்குநாட்டின் ஐந்து மலைகளாக மாற்றி, தென் கைலாயமான வெள்ளியங்கிரியில் ஒடுங்கிவிட்டார்.
ஈசானன், தத்புருஷன், அகோரன், வாமதேவன் மற்றும் சத்யோஜதன் ஆகிய திருநாமங்கள் சிவபெருமானின் ஐந்து திருமுகங்களைக் குறிக்கின்றன.
சாபம் பெற்ற தேவர்கள் சாபவிமோச்சனத்திற்கான வழியை தேடலானார்கள். திருஆவினன்குடி (தற்போதய பழனி) கன்னிகாவனத்தில் புரட்டாசி திங்களில் தவம் மேற்கொண்டனர். திருநணா (தற்போதய பவானி) திருத்தலத்தில் ஐப்பசி திங்களில் துலாமுழுக்கு செய்தனர். கொங்கு நாட்டின் ஐந்து மலைகளையும் கார்த்திகை திங்களில் தரிசனம் செய்தனர். இன்றும் சாபவிமோச்சனத்திற்கான மலை ஏறும் பக்தர்களுக்கு ஊன்று கோலாக துணைக்கு வருகிறார்கள் என்பது ஐதீகம். ஊன்று கோலில்லாமல் ஏழு மலைகளை கடந்து இறைவனை தரிசிப்பது என்பது கடினமான காரியம்.
வெள்ளியங்கிரியிலுள்ள ஏழு மலைகளை மனித உடம்பில் இருக்கும் ஏழு சக்கரங்களுடன் ஒப்பிடுகின்றனர். மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிப்பூரகம், அனாஹதம், விஷுப்தி, ஆக்னை மற்றும் சஹஸ்ராரம் ஆகியவைகளே அந்த ஏழு சக்கரங்களாகும். இவை சூட்சுமமாக அமைந்துள்ளன என்பதும் மானுட கண்களுக்கு தெரியாது என்பதும் சித்தர்களின் வாக்கு. ஏழு மலைகளின் சிறப்புகளை வரும் வாரங்களில் தொடர்ந்து காணலாம்.
நன்றி ! Copy from FB Temple Encyclopedia in Tamil