வெள்ளியங்கிரி, கோயம்புத்தூர், கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு
தென்னாடுடைய சிவபெருமானுக்கு உகந்த கார்த்திகை மாதத்தில், "தென் கைலாயம்" என்றழைக்கப்படும் வெள்ளியங்கிரியைப் பற்றி பகிர விழைகிறோம்.
உறையும் திருத்தலமான கைலாயம் மூன்று இடங்களில் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. மேலுலகில் வடகைலாயமும் (உத்தர கைலாயம்), பூவுலகில் இமய மலையில் நடுகைலாயமும் (மத்திய கைலாயம்), மேற்குத்தொடர்ச்சி மலையில் தென் கைலாயமும் (தட்சிண கைலாயம்) அமைய பெற்றிருக்கின்றன. தென் கைலாயமான வெள்ளியங்கிரி கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளபோதும், இத்தலத்தை அடைந்து சிவதரிசனம் பெறுவது கடினமான பயணமே! ஏழு மலைகளைக் கடந்து சுயம்பு மூர்த்தியாக அருள்புரியும் சிவபெருமானை தரிசிக்கும் அனுபவம் அனைவருக்கும் கிட்டுவதில்லை. ஆம். இளவயதில் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் ஆண்கள் மட்டுமே இந்த மலை பயணத்தை மேற்கொள்ள முடியும்.
ரத்தஅழுத்தம், மூச்சுத்திணறல் போன்ற உடல் உபாதைகள் இருப்பவர்கள் இந்த பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. அணைத்து வயது பெண்களுக்கும் மலை ஏற அனுமதி இல்லை. ஒன்பது வயதிற்கு உட்பட்ட அல்லது 60 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் செல்லலாம். பொதுவாக ஆண்களே இப்பயணத்தை மேற்கொள்கின்றனர். வனவிலங்குகளின் நடமாட்டம் உள்ள இந்த மலைத்தொடரில் குறிப்பிட்ட மாதங்களில் கூட்டம் கூட்டமாக பக்தர்கள் பயணத்தை மேற்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தை மாதத் தொடக்கத்திலிருந்து வைகாசி மாதம் தொடங்கும் வரை (அதாவது, சனவரி 15 முதல் மே 15 வரை)
வரை பக்தர்கள் செல்கின்றனர். சித்ரா பெளர்ணமி அன்று மட்டும் சுமார் 3 லட்சம் பக்தர்கள் சிவபெருமானை தரிசிக்கச் செல்கிறார்கள்.
வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோயில், பூண்டி, கோயம்புத்தூர், கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு
மூலவர்: வெள்ளியங்கிரி ஆண்டவர்
அம்மன்: மனோன்மணி
தலவிநாயகர்: பூண்டி விநாயகர்
வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைய பெற்றுள்ள திருத்தலம்.
ஊர்: பூண்டி, கோயம்புத்தூர், கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
பயண வழிகாட்டல்:
கோயம்புத்தூரிலிருந்து சுமார் 39.8 கிலோமீட்டர் தொலைவில் வெள்ளியங்கிரி அமைந்துள்ளது.
கோயம்புத்தூரிலுள்ள காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து பூண்டி வரை செல்ல பேருந்து வசதி உள்ளது.
வெள்ளியங்கிரிக்கு இரண்டு தலவரலாறுகள் உள்ளன. இந்த வாரம் ஒரு தலவரலாறையும் அடுத்த வாரம் மற்றொரு தலவரலாறையும் காணலாம்.
பாணாசுரனை வதம் செய்யும் பொருட்டு பார்வதி தேவி, குமரி என்ற மானுட பெண்ணாகத் தோன்றினாள்.
வளர்ந்து கன்னிப் பருவத்தை அடைந்தாள்.
சிவபெருமானை மணக்கும் எண்ணம் கொண்டு கடும் தவம் இருந்தாள். தவத்தை மெச்சிய சிவபெருமான், பொழுது புலரும் முன் தான் வந்து குமரியை மணம் முடிப்பதாகக் கூறினார். கன்னியால் மட்டுமே மரணம் அடையும் வரத்தைப் பெற்றிருந்தான் பாணாசுரன்.
சிவபெருமான் குமரியை மணம் முடித்துக் கொண்டால் பாணாசுரனின் வதம் நடக்காது என்றுணர்ந்த தேவர்கள் நாரதரின் உதவியை நாடினார்கள்.
அனைவரது நன்மையை கருத்தில் கொண்டு, திருமணத்திற்காக சிவபெருமான் சென்று கொண்டிருந்த வேளையில், சேவலாக உருமாறிக் கூவினார் நாரதர். பொழுது புணரத் தொடங்கிவிட்டதாக கூறிய பூதகணங்களை நோக்கி புன்முறுவல் பூத்தார் சிவபெருமான். இனி திருமணம் நடைபெறாது என்றுரைத்து கைலாயம் திரும்பினார்.
தவக்கோலம் கொண்டார்.
குமரியை மணக்கமுடியாமல் சிவபெருமான் திரும்பியது தென் கைலாயமான வெள்ளியங்கிரிக்கே! இதுவே வெள்ளியங்கிரியின் தலவரலாறு. திருமணம் தடை பட்ட காரணத்தால், இன்று வரை கன்னியாக குமரி அருள்புரியும் திருத்தலம் கன்னியா குமரி ஆகும்.
தலபெருமைகள்
1. மலையடிவாரத்தில் இருக்கும் திருக்கோயிலுக்கு அணைத்து வயது ஆண்கள் மற்றும் பெண்கள் செல்லலாம். வெள்ளியங்கிரி மலையின் தரிசனத்தையும் பெறலாம்.
2. திருக்கோயிலுக்கு அருகிலிருந்து முதல் மலையின் பாதை செங்குத்தான படிகளாக தொடங்குகிறது. குறிப்பிட்ட படிகள் வரை வயதான பெண்கள் செல்ல அனுமதி உண்டு. மற்றவர்கள், முதல் படியை மட்டும் தொட்டு வணங்குகிறார்கள்.
நன்றி ! Copy from FB Temple Encyclopedia in Tamil