அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும். சில உண்மைகளை எதை கொண்டு மூடினாலும் மறைக்க முடியாது.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் சிங்கப்பூரில் காலடி வைக்கையில் ஒரு சிங்கப்பூர் டாலரின் மதிப்பு 24 ரூபாய், பிரதமர் வாஜ்பாய்.
அடுத்து அரியணை ஏறினார் மன்மோகன் சிங். பத்தாண்டு ஆட்சி முடிந்து கிளம்புகையில் 46.6 சொச்சம், இடையே 52 வரை கூட சென்றது.ஒருவேளை 2014 ல் காங்கிரஸே மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தால் ஒரு டாலர் இந்நேரம் 60 தாண்டி இருக்கும்.
என் போல வெளிநாட்டில் சம்பாதிப்பவர்களுக்கு இவரே பிரதமராக ஆயுளுக்கும் இருந்தாலும் ஆனந்தமே. ஆனாலும் மனம் மோடியையே நாடியது. காரணம் அவரது புடம்போட்ட நேர்மை. தேசமே முதலில் என்னும் பார்வை கூர்மை. குஜராத்தை ஒரு சாதனை மாநிலமாக மாற்றிக்காட்டிய ஆளுமை.
என் நண்பர் சொல்வார் "இந்த ஆள் வந்தால் நமக்கு நஷ்டம், டாலர் ஏறாது". போகட்டுமே, தேசம் ஏற்றம் பெற இதை கூட தாங்கிக்கொள்ளவிட்டால் எப்படி என்று சொல்வேன். அவர் சொன்னது நடந்தது. கிட்டதட்ட முதல் மூன்றரை ஆண்டுகளில் டாலர் மதிப்பில் எந்த ஏற்றமும் இல்லை. சொல்லப்போனால் ஒரு கட்டத்தில் டாலர் 44க்கு கீழே விழுந்தது, நானே கூட திட்ட ஆரம்பித்தேன். சமீபத்தில் தான் இது கொஞ்சம்போல ஏற்றம் கண்டது.
எந்த ஆட்சியில் டாலர் மதிப்பு ஒரே நிலையாக இருந்தது எப்போது உயர்ந்தது என்று படம் பார்த்து புரிந்து கொள்ளுங்களேன். இது பத்து வருட புள்ளிவிவரம், பாஜக வெப்சைட்டில் இருந்து எடுக்கவில்லை http://www.xe.com. உயர்ந்தது சாதனை என்று நினைக்கவேண்டாம். குறைந்தாலோ, நிலையாக இருந்தாலோதான் சாதனை.
மோடி பொறுப்பேற்றதும் கொஞ்சமோ நஞ்சமோ மாற்றங்கள் வரத்தொடங்கின. இந்தியாவின் மதிப்பும் உயர ஆரம்பித்தது. உலக தலைவர்களில் ஒருவராக அவர்களில் முதன்மையானவராக இந்திய பிரதமர் வலம் வருவது பெருமையாக இருந்தது.
ஊழல் ஊழல் என்று திரும்பிய பக்கமெல்லாம் அடித்த துர்நாற்றம் சுத்தமாக காணாமலே போனது. நோட்டை மாற்றி நாட்டை மாற்றவும் முற்பட்டார். தனக்கும் தன் கட்சிக்கும் அது எத்தனை பாதகம் என தெரிந்தும் துணிந்து செய்தார்.
மோடிக்கு காட்டவேண்டிய விசுவாசத்தை வேறு இடத்தில் காட்டி அதை கொஞ்சம் பிசுபிசுக்க வைத்தது அதிகாரவர்க்கம். ஆனாலும் கறுப்புப்பணம் வைத்திருக்கும் எல்லாரையும் செருப்பால் அடித்த அந்த நிகழ்வு எந்த ஒரு தலைவரும் செய்ய துணியாதது.
இன்னும் GST அமல், ஆதார் கார்ட் இணைக்கப்பட்ட திட்டங்கள், மின்சாரமில்லாத கிராமங்கள், தடையில்லாத மின்சாரம், நீர்வழி சாலை என்று எல்லா பக்கமும் முன்னேறிக்கொண்டு தான் இருக்கிறது.
இவரை விட்டால் இனி மீண்டும் கொள்ளையடிக்கவே முடியாது என்று நினைக்கும் குள்ளநரிகள் ஒன்று சேர்ந்து சிங்கத்தை சூழ்ந்துகொண்டு தாக்குகின்றன. எந்த திட்டம் போட்டாலும் ஒரு முட்டுக்கட்டை, போராட்டம், ஆர்பாட்டம். இதையும் தாண்டி தான் அவர் நாட்டின் முன்னேற்றத்துக்கு உழைக்கிறார்.
ஓட்டே போடாத தமிழகம் அவரை பார்த்து Go Back Modi என்று கொடி பிடிக்கிறது. நமக்கு இவரையெல்லாம் பிடிக்காது, ஊரையே அடித்து உலையில் போட்டவர்கள் தான் வேண்டும். எந்த தொழிலையும் செய்ய விடாமல் தடுப்பவர்கள்தான் வேண்டும். மின்சாரம் என்றால் தினம் மூன்று மணிநேரம் தந்து அதில் பார்க்க இலவச டிவி தரும் கூட்டம்தான் வேண்டும். இன்று பாஜகவின் பின்னடைவு இவர்களுக்கு உற்சாகம் அளித்திருக்கும், சந்தேகமில்லை.
துண்டை தவறவிட்ட படையப்பாவாக காட்சி தருகிறார் மோடி. இது தாற்காலிகமானதாக இருக்க வேண்டுவோம். அது மோடிக்கு நல்லதோ இல்லையோ தேசத்துக்கு நல்லது.
எழுத்து
V. வெங்கடேஷ்
சிங்கப்பூர்
V. வெங்கடேஷ்
சிங்கப்பூர்
நன்றி இணையம்