இயற்கையாகவே நம் எல்லோருக்கும் பிறர் மேல் அன்பு, அபிமானம், அக்கறை உண்டு. ஒவ்வொருவருக்கும் அந்த அளவின் விகிதாச்சாரம் மாறும்.
இந்த டிவி சீரியல்கள் இருக்கின்றனவே? அவை என்ன செய்கின்றன? மக்களுடைய 'அந்த' அடிப்படைக் குணத்தைச் சரியாகப் புரிந்து கொண்டிருக்கின்றன. பிழியப் பிழிய அழும் சோகக் காட்சிகள்; கண்ணீர் வடிய வடியப் பார்க்கும் தாய்க் குலங்கள். என்ன காரணம்? அந்த நிழல் பிம்பங்களின் மேல் ஏற்படும் அன்பு, அக்கறை, பாசம். அந்த நிழல் பிம்பங்களின் தியாகமும் சோகமும் இன்னலும் மக்களின் ஆழ்மனதை அப்படியே ஈர்க்கின்றன. “அய்யோ! பாவம்”, என்று அடிமனதிலிருந்து அக்கறை பீறிட்டு எழுகிறது, கண்ணீர் முட்டுகிறது.
அந்தக் கண்ணீரின் அளவைப் பொறுத்து தொடரின் 'டிஆர்பி' எகிறி, வேறொருவர் பாக்கெட்டில் பணமாய்க் கொட்டுவது தனிக் கதை.
உலகின் ஏதோவொரு மூலையில் பஞ்சம், இயற்கை சீற்றத்தினால் அழிவு, அதனால் நிர்க்கதியான மக்கள்…….
எனச்செய்தித்தாளில் படிக்கும் போதும் தொலைக்காட்சியில் காணும் போதும் மனம் பதைத்து உள்ளே வலிக்கிறதே ஏன்? அடிப்படையில் எல்லோருக்கும் உதவ, அனைவரையும் அரவணைக்க மனம் விரும்புகிறது. அவரவர் வாய்ப்பு வசதிக்கேற்ப உதவியானது பொருளாகவோ பணமாகவோ ஆறுதல் வார்த்தைகளாகவோ வெளிப்படுகிறது.
ஆச்சரியமில்லை.
அதுதான் அடிப்படை மனித இயல்பு.
விஷயம் யாதெனில் அப்படி நீங்கள் பிறரிடம் மதிப்பு, அன்பு, அக்கறை செலுத்துவதைப் போல் பிறர் உங்களிடமும் மதிப்பு, அன்பு, அக்கறை செலுத்த நீங்களும் ஒரு தகுதியான மனிதனே! இதற்கென நாலைந்து பக்க பயோடேட்டாவும் சிறப்புத் தகுதிகளும் தேவையில்லை. அவையெல்லாம் வேலைக்கு அப்ளை செய்ய மட்டுமே!
இந்த அகண்ட பிரபஞ்சத்தில் நீங்கள் ஒரு தரமான மனிதர். அது போதும். சக மனிதர்களிடமிருந்து அன்பும் பாசமும் பெற அது போதுமானதாகும். அது தான் உங்களது அடிப்படை மதிப்பு.
நன்றி *பெ.சுகுமார்*