*ஆனந்த
விகடனா இதை எழுதியது...*
பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் பாஸிடிவ் மாற்றங்கள்...
சென்ற ஆண்டு நவம்பரில் நடைமுறைக்கு வந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால், சாதாரண மக்கள் பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல. பழைய 500, 1,000 ரூபாய்
நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவதற்கு, நீண்ட வரிசையில் கால்கடுக்க நின்று நொந்து போனார்கள் மக்கள்.
*இத்தனை
மக்களையும் கஷ்டப்படுத்தி, பிரதமர் நரேந்திர மோடி அப்படி என்னதான் சாதிக்க நினைக்கிறார் என்கிற கேள்வியைக் கேட்காத ஆட்களே இல்லை*
அந்தக் கேள்விக்கான பதில் இப்போது கிடைக்க ஆரம்பித்திருக்கிறது.
*பணமதிப்பு
நீக்கத்தினால் ஏற்பட்ட பலவிதமான பாசிட்டிவ் மாற்றங்கள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர ஆரம்பித்திருக்கின்றன*
பணமதிப்பு நீக்க நடவடிக்கையை இரவோடு இரவாகக் கொண்டுவந்ததற்கு முக்கியக் காரணம், கணக்கில் அடங்காமல் தலைவிரித்தாடிய கறுப்புப் பணம்தான்.
பல்வேறு துறைகளில், முக்கியமாக, ரியல் எஸ்டேட், தங்கம், பங்குச் சந்தை போன்றவற்றில் கறுப்புப் பணத்தின் ஆதிக்கம் அதிகமாகவே இருந்தது. பல தொழில்களில் அதிகப்படியான வர்த்தகம் நடந்தாலும், அரசுக்குக் கிடைக்க வேண்டிய வரி வருவாய் மட்டுமே வராமலே இருந்தது.
இந்தப் பிரச்னையைச் சரிசெய்ய வேண்டும் என்றால், உடனடியாகச் சாதாரண மருத்துவம் அல்லாது, ஓர் அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. அந்த அறுவை சிகிச்சைதான் பணமதிப்பு நீக்கமாகக் கொண்டு வரப்பட்டது.
நம் நாட்டில் கடந்த 1978-ல்
அன்றைய பிரதமர் மொராஜி தேசாய் காலத்தில் பணமதிப்பு நீக்கம் செய்திருந்தாலும் அன்றைய சூழலில் இந்தியப் பொருளாதாரத்தில் பணப்புழக்கம் அதிக அளவில் இல்லை. இந்தியப் பொருளாதாரமும் இன்று இருப்பதுபோல அல்லாமல், மிகவும் சிறிய அளவிலேயே இருந்தது. அதன் காரணமாக அன்றைய பணமதிப்பு நீக்கத்தால் பெரும் செல்வந்தர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மட்டுமே அதை உணர்ந்தனர். ஆனால், தற்போது நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி அபரிமிதமாக வளர்ந்து, பணப்புழக்கம் மிகவும் பெருகியதால், எல்லோருமே பாதிப்படைந்தனர்.
என்றாலும், கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால், சாதகமான பல மாற்றங்கள் நடக்கவே செய்திருக்கின்றன. அந்த மாற்றங்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் பார்ப்போம்.
*பணமதிப்பு
நீக்க நடவடிக்கையினால் சுழற்சியில் இல்லாத பதுக்கல் பணம் அனைத்தும் வங்கிகளுக்கு வந்துசேர்ந்தது இந்தத் திட்டத்தின் மூலம் கிடைத்த முதல் வெற்றி*
கடந்த சுதந்திர தின விழாக் கொண்டாட்டத்தின் போது நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர், கிட்டத்தட்ட மூன்று லட்சம் கோடி ரூபாய் அளவுக்குக் கறுப்புப் பணம் வங்கிகளில் வந்திருப்பதைச் சுட்டிக் காட்டினார். அதுமட்டுமல்ல, கிட்டத்தட்ட இரண்டு லட்சம் கோடி ரூபாய் அளவுக்குக் கறுப்புப் பணம் புழங்கி வந்ததை மத்திய அரசாங்கம் கண்காணிக்கத் தொடங்கி இருக்கிறது. இனிவரும் நாள்களில் இந்த இரண்டு லட்சம் கோடி ரூபாயும் கறுப்புப் பணம் என நிரூபணம் ஆகும் பட்சத்தில், கறுப்புப் பணத்துக்குச் சொந்தக்காரர்கள் பல ஆயிரம் கோடி ரூபாயை வரி கட்டி, இந்தக் கறுப்புப் பணத்தை வெள்ளை ஆக்க முடியும். இதனால் அரசுக்கு வரவேண்டிய வரி வருவாய் பெரிய அளவில் அதிகரிக்கும். அல்லது வரி கட்ட மறுக்கும்பட்சத்தில், இந்த இரண்டு லட்சம் கோடி ரூபாயும் அரசுக்கே சொந்தமாகிவிட வாய்ப்புண்டு.
பணமதிப்பு நீக்கத்தினால் உருவாகியிருக்கிற மிகப் பெரிய நன்மை, *நிதிச் சந்தைகளில் எக்கச்சக்கமான முதலீடு பெருகியதே*
முன்பெல்லாம் கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைக்க ரியல் எஸ்டேட் பெரிய வரப்பிரசாதமாக இருந்தது. அறிந்தவர், தெரிந்தவர் பெயரில் நிலத்தை வாங்கிவிட்டு, தேவைப்படுகிறபோது அவரிடமிருந்து வாங்கிக்கொள்கிற ‘பினாமி’ முறை நீண்ட காலமாகவே இருந்து வந்ததால், பலரும் ரியல் எஸ்டேட்டில் பணத்தைப் பதுக்கினர். இதனால் நிலத்தின் மதிப்பு ஏகத்துக்கும் அதிகரித்து, சாதாரண மக்கள் சொந்தமாக ஒரு சென்ட் இடம்கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டது.
ஆனால், *பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப்பின், இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாகத் தரக்கூடாது என்கிற நிபந்தனையினால், கறுப்புப் பணத்தை அதில் பதுக்க முடியாமல் தவித்தனர்.* இதன் விளைவாக, பலரும் நிதிச் சந்தையை நோக்கி தங்கள் கவனத்தைத் திரும்ப ஆரம்பித்து உள்ளனர்.
தற்போதுள்ள நிலையில், ரியல் எஸ்டேட்டும், தங்கமும் நல்லதொரு வளர்ச்சி காண முடியாத நிலையில், நிதிச் சந்தைதான் எல்லோருக்குமான முதலீடாக மாறியிருக்கிறது.
நிதிச் சந்தையானது முன்பு வேண்டுமானால் கறுப்புப் பணம் புழங்கக்கூடிய துறையாக இருந்தது. ஆனால், இப்போது நிதிச் சந்தையிலும் பல விதமான கட்டுப்பாடுகள் வந்துவிட்டன. தவிர, அவற்றில் செய்யப்படும் முதலீடு, வருமான வரித் துறையினால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனவே, கறுப்புப் பணமானது இந்தத் துறைகளுக்கு வருவது குறைந்து, வெள்ளைப் பணம் மட்டுமே வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, *பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப்பின் மியூச்சுவல் ஃபண்டுகளில் குவிந்திருக்கும், குவிந்து கொண்டிருக்கும் பணமே அதற்கு முக்கிய அத்தாட்சி*
இந்திய ரிசர்வ் வங்கியின் ஆய்வில் பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு, மியூச்சுவல் ஃபண்டுகளில் ஏறக்குறைய ரூ.93,000 கோடி
அளவிலான புதிய முதலீடு் வந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. பங்குச் சந்தை நல்ல வளர்ச்சி கண்டதும், மியூச்சுவல் ஃபண்டில் பலரும் பணத்தை முதலீடு செய்ததற்கு முக்கியமான ஒரு காரணம்.
அது மட்டுமல்ல, கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளிலும் கடந்த காலத்தில் இல்லாத அளவுக்கு முதலீடு அதிகரித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம், எஃப்.டி போன்ற வங்கித் திட்டங்களுக்கான வட்டி குறைந்து வருவதே. பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப்பின், வங்கிகளில் பணம் குவியத் துவங்கியது. அதே நேரத்தில், வங்கிகளிலிருந்து கடன் வாங்குபவர் களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்தது. இதனால் வட்டி விகிதம் குறையத் தொடங்கியது. இதனால் வங்கி வைப்பு நிதிகளுக்கு இருந்த மவுசு குறைந்து, அந்தப் பணமெல்லாம் கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் வந்திருக்கிறது.
*கடந்த
ஓராண்டில் மட்டும் கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு ஏறக்குறைய 32% அதிகரித்துள்ளது.*
கடந்த ஆண்டின் ஜூன் காலாண்டின் முடிவில், கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடான தொகை ரூ.9 லட்சம் கோடியாக மட்டுமே இருந்தது. இதுவே கடந்த ஜூன் காலாண்டின் முடிவில் 11 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல், இன்ஷூரன்ஸ் திட்டங்களிலும் கடந்த ஆறேழு மாதங்களாக அதிகப்படியான பணம் வந்துகொண்டிருப்பதை அந்த நிறுவனங்களின் பிரீமியம் வளர்ச்சியில் தெள்ளத் தெளிவாகக் காணலாம். பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப்பின் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் வசூலிக்கும் பிரீமியம் தொகை ஏறக்குறைய இரு மடங்காகப் பெருகியிருக்கிறது. குறிப்பிட்ட கால இடைவெளிக்கு ஒருமுறை பிரீமியம் செலுத்துபவர்களை விட, ஒரே தவணையில் பிரீமியம் தொகை செலுத்து பவர்களின் எண்ணிக்கை ஏகத்துக்கும் உயர்ந்திருக்கிறது.
கடந்த நவம்பர் முதல் இந்த ஆண்டு ஜூன் வரை இன்ஷூரன்ஸ் திட்டங்கள் மூலம் வசூலான பிரிமீயம் தொகை ரூ.42,210 கோடி.
அதாவது, கடந்த ஆண்டு ஜூன் காலாண்டைவிட இந்த ஆண்டின் இதே காலத்தில் வசூலான பிரீமியம் ஏறக்குறைய 42% அதிகம்.
*வருமானவரித் துறையின் கண்காணிப்புகளும் அதிகமாகி வருவதால், வரி ஏய்ப்பு என்பது முடியாத காரியமாக மாறியிருக்கிறது. இதனால் வரி செலுத்துவோரின் எண்ணிக்கையும் பல மடங்காக அதிகரித்துள்ளது*
கடந்த காலங்களில் வரி செலுத்துவதில் மெத்தனம் காட்டி வந்தோர் பலரும் இந்த நடவடிக்கைக்குப் பிறகு ஒழுங்காக வருமான வரி செலுத்துவது மட்டுமல்லாது, உரிய நேரத்தில் வரித் தாக்கலும் செய்யத் துவங்கியிருக்கின்றனர்
*கடந்த
ஆண்டைவிட இந்த ஆண்டில் வரித் தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 24% அதிகரித்திருக்கிறது.*
கடந்த 2016-17-ம்
நிதியாண்டுக்கான வரிக் கணக்கினை சுமார் 2.82 கோடி
பேர் தாக்கல் செய்திருப்பது மிகப் பெரிய முன்னேற்றம் என்றே சொல்லலாம்.
ஆக மொத்தத்தில், இந்தப் *பணமதிப்பு நீக்கம் என்பது குறுகிய காலத்தில் சில தொந்தரவுகளைத் தந்திருந்தாலும் நீண்ட காலத்தில் பல நன்மைகளைத் தரத் தொடங்கியிருக்கிறது* என்பதற்கான விவரங்களை நாம் பார்த்தோம்.
இதனால், இதுவரை நம் நாட்டில் நிலவிவந்த மெத்தனப் போக்கை பணமதிப்பு நீக்கம் தலைகீழாக மாற்றிப் போட்டுள்ளது. பொருளாதார விகிதத்தில் ஒரு நாடு நல்ல வளர்ச்சியை அடைவது மட்டும் முக்கியமல்ல, அதன் பலன்கள் எல்லோருக்கும், குறிப்பாக, கடைநிலைக் குடிமகனுக்கும் சென்று சேர வேண்டும். அது கறுப்புப் பணம் ஒழிப்பினாலும், வரி ஏய்ப்புகளை ஒழிப்பதாலும்தான் சாத்தியம். அந்த சாத்தியத்தை பணமதிப்பு நீக்க நடவடிக்கை உருவாக்கி இருக்கிறது எனலாம்.
நன்றி இணையம்