சுவாமி விவேகானந்தரும் அன்னை வழிபாடும் - சுவாமி யதாத்மானந்தர்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:37 PM | Best Blogger Tips

பெறுவதற்கு அரிய மானிடப் பிறவியைப் பெற்றவன் இப்பிறவியிலேயே கடவுளை அறிய முயற்சி செய்யவில்லை என்றால் அவன் வீணில் பிறந்தவனே ஆவான்என்று பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் கூறியுள்ளார். கடவுளை அறிய வேண்டும், கடவுளைச் சார்ந்தே வாழ வேண்டும் என்பது தான் உலகில் தோன்றிய மகான்கள் பலரும் வலியுறுத்திக் கூறியுள்ள கருத்தாகும். அதற்காகப் பல சாதனைமுறைகளையும் அவர்கள் வகுத்து வைத்திருக்கிறார்கள். இங்கு இப்போது நடைபெறும் இந்தச் சிறப்பு வழிபாடும் அந்தச் சாதனை முறைகளில் ஒன்றே ஆகும்.
நமது இந்து சமய சாஸ்திரங்கள், கடவுளை அடைவதற்கு நான்கு வழிகளைக் கூறுகின்றன. அவை பக்தியோகம், ஞானயோகம், கர்மயோகம், ராஜயோகம் என்று சொல்லப்படுகின்றன. இவற்றுள் பெரும்பாலான மக்களுக்குப் பெரிதும் ஏற்றதாக விளங்குவது பக்தியோகமே ஆகும்.
சாஸ்திரங்களில் பலவகையான பக்திமுறைகள் பேசப்படுகின்றன. அவற்றுள் சாந்தபாவம், தாஸ்யபாவம், சக்யபாவம், வாத்சல்யபாவம், மதுரபாவம் என்பவை முக்கியமானவை.
சாந்தபாவம் என்பது ஜபம், தியானம், முதலிய சாதனைகளை அமைதியாக மேற்கொள்வது. கடவுளைத் தலைவனாகக் கருதித் தன்னைத் தொண்டனாகக் கருதிச் சேவை செய்வது தாஸ்ய பாவம். தோழமை உணர்வுடன் பக்தி செலுத்துவது சக்யபாவம். கடவுளைக் குழந்தையாகக் கருதித் தாய்மை மனப்பான்மையுடன் பக்தி செலுத்துவது வாத்சல்ய பாவம். கடவுளைத் தலைவனாகவும் தன்னைத் தலைவியாகவும் பாவித்துக் கொள்வது மதுரபாவம்.
இவை எல்லாமே சிறந்த முறைகள் தான் என்றாலும் இவை எல்லாவற்றையும் விடச் சிறந்த முறை ஒன்று உண்டு. கடவுளைத் தாயாகவும் தன்னைச் சேயாகவும் கருதி அன்பு செலுத்துவதே அந்த முறை.
பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் இந்த முறையையே பின்பற்றினார். அவர் பல்வேறு சாதனைமுறைகளைப் பின்பற்றிச் சமரச நெறி காட்டியவராக இருந்தபோதிலும், அன்னை காளியின் அன்புக் குழந்தையாகவே அவர் தம்மை எப்போதும் வைத்திருந்தார்.
தாயே! நான் ஒரு யந்திரம்;, நீ யந்திரி. நான் ஓர் அறை, நீ அதில் வசிப்பவள். நான் உறை, நீ அதனுள் இருக்கும் வாள். நான் ரதம், நீ சாரதி. நீ ஆட்டி வைக்கிறபடி நான் ஆடுகிறேன். நீ பேசுவிக்கிறபடி நான் பேசுகிறேன். என் செயலாவது என்னுள்ளிருக்கும் உன் செயலே. நான் அல்லேன், நான் அல்லேன். எல்லாம் நீ தான்என்று அம்பிகையை முழுமையாகச் சரணடைந்திருந்தார் அவர்.
தக்ஷிணேஸ்வரத்தில் அருள்பாலிக்கும் பவதாரிணி
தட்சிணேஸ்வரம் கோயிலில் எழுந்தருளியுள்ள காளிக்கும் ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கும் இடையில் நிலவிய உறவு உண்மையான ஒரு தாய்க்கும் மகனுக்கும் இடையே நிலவிய உறவே ஆகும். ஸ்ரீ ராமகிருஷ்ணர் காளியோடு உரையாடுவார், உறபாடுவார், விளையாடுவார். தம் செயல்கள் குறித்து அவளுடன் கலந்து பேசுவார். அவள் காட்டும் வழியிலேயே எப்போதும் செயல்படுவார்.
ஆனால் குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அருமைச்சீடரான நரேந்திரர் இதையெல்லாம் ஆரம்பத்தில் ஏற்றுக் கொள்ளவில்லை. அவரைப் பொருத்த வரை காளி என்பது ஒரு கற்சிலை தான். அந்தக் கற்சிலையோடு குருதேவர் பேசுவதும் அந்தக் கற்சிலை பேசியதைத் தாம் கேட்டதாகக் கூறுவதும் நரேந்திரரைப் பொருத்த வரையில் பகுத்தறிவுக்கு முரணான செயல்கள்.
ஆனால் அதே நரேந்திரர் தான் பிற்காலத்தில் “Kali worship is my special fad” என்று குறிப்பிட்டார். இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது? அது தான் அம்பிகையின் திருவிளையாடல்.
ஒரு சமயம் பிரம்மசமாஜத் தலைவர்களான கேசவசந்திரசென், விஜய கிருஷ்ண கோஸ்வாமி ஆகியோரை விட நரேன் பல மடங்கு உயர்ந்தவர் என்று குருதேவர் கூறினார். உடனடியாக நரேன் அதை மறுத்தார். உலகப்புகழ் பெற்ற கேசவருடனும் ரிஷியைப் போன்ற விஜயருடனும் சாதாரண மாணவராகிய தம்மை ஒப்பிட்டுப் பேசுவதை அவரால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. அப்படிப் பேசியதற்காக அவர் குருதேவரைக் கடிந்து கொண்டார். ஆனால் குருதேவரோ, நரேனின் மறுப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. நான் சொன்ன வார்த்தைகள் என்னுடைய வார்த்தைகளல்ல. அம்பிகை எனக்குக் கூறியதையே நான் திருப்பிக் கூறுகிறேன்என்றார்.
அதை கேட்ட நரேன் அம்பிகைதான் சொன்னாளோ அல்லது உங்கள் மனத்தின் கற்பனையோ? யார் கண்டது?” என்றார். இப்படிப் பலமுறை நரேன் குருதேவரிடம் வாதம் செய்தது உண்டு. சிலவேளைகளில் குருதேவர் அம்பிகையிடமே இதுபற்றி முறையிட்டதும் உண்டு. அப்போதெல்லாம் அம்பிகை அவருக்கு ஆறுதல் கூறுவாள். நீ ஒன்றும் கவலைப்படாதே. இன்னும் சிறிது காலத்தில் நீ சொன்னது அத்தனையும் சத்தியம் என்று அவன் ஒப்புக் கொள்வான்என்பாள்.
என் அன்னை காளியை ஏற்காத நீ எதற்காக இங்கு வருகிறாய்?” என்று ஒரு சமயம் குருதேவர் நரேனிடம் கேட்டார்.
நான் இங்கே வருவதால் அம்பிகையை ஒப்புக்கொண்டே ஆக வேண்டுமா? உங்களிடம் எனக்கு அன்பு இருக்கிறது அதற்காக வருகிறேன், அவ்வளவுதான்என்றார் நரேன்.
சரி, இப்போது இப்படிச் சொல்லும் நீ இன்னும் சில நாட்களிலேயே அம்பிகையை ஏற்கத் தான் போகிறாய். அது மட்டுமல்ல. அவள் பெயரைச் சொன்னாலே காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி அழப் போகிறாய்என்றார் குருதேவர்.
குருதேவரை பெருமைப்படுத்திய சிஷ்யன்
பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் திருவாயிலிருந்து வந்த மொழிகள் நிறைவேறாமல் போகுமா? நரேன் மனத்தில் அம்பிகையைப் பற்றி வைத்திருந்த அபிப்பிராயம் அவரை அறியாமலே மாறத் தொடங்கியது. தந்தை மறைந்து, குடும்பத்தை வறுமை சூழ்ந்த போது அந்த மாற்றம் நிறைவு பெறும் நேரம் வந்தது.
மூத்த மகன் என்ற முறையில் குடும்ப நிர்வாகத்தை ஏற்றுக்கொள்ள வேண்டிய பொறுப்பு நரேனுக்கு இருந்தது. ஆனால் அவரோ குருதேவரின் திருப்பணிக்கே தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர். பெற்ற தாயும் உடன்பிறந்த சகோதர சகோதரரிகளும் உணவுக்கும் உடைக்கும் கஷ்டப்பட வேண்டிய நிலை இல்லாமல் செய்துவிட்டால், தாம் குருதேவர் பணியில் முழுமையாக ஈடுபடலாம் என்று கருதிய நரேன் குருதேவரிடம் ஒரு கோரிக்கை வைத்தார். அன்னை காளியிடம் சொல்லித் தம் குடும்பத்திற்க ஒரு வழி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். அவரோ, நரேனையே காளியிடம் வரம் கேட்கச் சொன்னார். முதலில் தயங்கிய நரேன், பின்னர் பவதாரிணியின் சந்நிதிக்குச் சென்றார்.
அம்பிகை அங்கே ஊனும் உயிரும் தரித்த தேவியாக அவருக்குக் காட்சியளித்தாள். கற்சிலை என்று நரேன் கருதி வந்த தேவி- கற்பனை என்று அவரால் ஏளனம் செய்யப்பட்ட தேவி அங்கே உண்மையிலேயே நின்று கொண்டிருப்பதை அவர் கண்டார். அப்படியே ஆனந்தப் பரவசத்தில் ஆழ்ந்து விட்டார். அந்தப் பரவசத்தில் தாம் கேட்க வந்த வரத்தையே மறந்துவிட்டார். தாயே! எனக்கு விவேகத்தைக் கொடு. வைராக்யத்தைக் கொடு. பக்தியையும் ஞானத்தையும் கொடுஎன்று மனமுருகிப் பிரார்த்தித்தார். அளவிலா ஆனந்தத்துடன் குருதேவரிடம் திரும்பி வந்தார்.
குடும்பத்தின் வறுமை தீர வரம் கேட்டுக் கொண்டாயா? என்று குருதேவர் கேட்டபோது தான் நரேந்திரருக்குத் தாம் கேட்க விரும்பிய வரம் கேட்க மறந்த வரம்- என்ன என்பதே நினைவுக்கு வந்தது. இப்போது என்ன செய்வது?” என்று கேட்டார். மீண்டும் ஒருமுறை அம்பிகையிடம் சென்று வரம் கேட்குமாறு குருதேவர் கூறினார்.
காளியிடம் வரம் கேட்கும் விவேகானந்தர்
மீண்டும் நரேன் அம்பிகையிடம் சென்றார். இப்போதும் முன்பு நடந்தது போலவே நடந்தது. குருதேவரிடம் திரும்பிவந்தார். குருதேவர்
மூன்றாவது முறையாக நரேனை அம்பிகையிடம் அனுப்பி வைத்தார்.
இப்போது அம்பிகையின் சந்நிதியில் நின்றபோது நரேனுக்குத் தாம கேட்க விரும்பிய வரம்பற்றி நன்றாக ஞாபகம் இருந்தது. ஆனால் போயும் போயும் இந்தச் சாதாரண விஷயங்களுக்காகவா அம்பிகையிடம் வரம் கேட்பது என்று ஒருவிதமான வெட்கமும் வேதனையும் அவர் மனத்தில் ஏற்பட்டன். அம்மா! எனக்கு ஞானத்ததையும் பக்தியையுமே கொடுத்தருள்வாய்என்று மட்டுமே அவரால் பிரார்த்திக்க முடிந்தது.
அம்பிகை என்பது வெறும் கற்பனை தான் என்று குருதேவரிடம் பலமுறை வாதாடிய அதே நரேந்திரர், அதே குருதேவரிடம், அதே அம்பிகையின் அருளைப் பெற்றுத் தருமாறு கேட்டுக் கொண்டது எதனால்? பின்னர் அதே குருதேவர், அதே நரேந்திரரை அதே அம்பிகையின் சந்நிதிக்கு அனுப்பி வைத்தபோது, அம்பிகை அவரது கண்ணுக்கு மெய்யாகக் காட்சியளித்தது எப்படி? அது தான் அம்பிகையின் திருவிளையாடல். அல்லது குருதேவரின் திருவிளையாடல், அல்லது குருதேவரின் வடிவில் இயங்கிய அம்பிகையின் திருவிளையாடல்.
சக்தியை வழிபடும் துர்க்கா பூஜை
இந்த நிகழ்ச்சி, இந்தியாவின் சமய வரலாற்றில் இணையற்ற நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியை நிறைவு செய்யும் வகையில் இன்னொரு நிகழ்ச்சி சிறிதுகாலத்திற்குப் பின் நிகழ்ந்தது, அதைப் பற்றி பிற்காலத்தில் விவேகானந்தர் தம் சீடர் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்தபோது குறிப்பிட்டுள்ளார். அந்தச் சமயத்தில் சுவாமிஜி உடல்நலம் குன்றிய நிலையில் இருந்தார். சில நாட்கள் வேலை செய்வதை விட்டுவிட்டு ஓய்வு எடுத்துக்கொண்டால் அவரது உடல்நலம் சீராகும் என்று அந்தச் சீடர் கூறினார். அப்போது சுவாமிஜி கூறிய மொழிகள் அற்புதமானவை.
மகனே! அமைதியாக ஓய்வெடுத்துக் கொண்டு என்னால் இருக்க முடியுமா? ஸ்ரீ ராமகிருஷ்ணர் உடலை விடுவதற்கு இரண்டு நாட்கள் இருந்தபோது, அவர் யாரை காளி என்று அழைப்பாரோ, அந்தக் காளி இந்த உடம்பிற்குள் புகுந்து கொண்டாள். அவள் தான் என்னை ஓய்வாக இருக்க விடாமல், என்னுடைய உடல் வசதிகளையும் கவனிக்க விடாமல், எப்போதும் என்னை இஙகும் அங்குமாக அலைய வைத்துக் கொண்டு, எந்த நேரமும் செயல்புரிய வைக்கிறாள்என்றார் சுவாமிஜி.
அன்னை காளி, குருதேவர், அன்னையுடன் சுவாமிஜி
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் காலமெல்லாம் காளியின் கையில் உள்ள கருவியாகவே செயல்பட்டு வந்தார். அமீ யந்த்ர, துமீ யந்த்ரீஎன்று பரிபூரணமாக அம்பிகையைச் சார்ந்து வாழ்ந்தவர் குருதேவர். அவருள் இருந்து செயல்புரிந்து வந்த அதே காளி, அவருடைய அருமைச் சீடரான சுவாமிஜியின் உடலினுள் புகுந்தகொண்டு அவரை ஓய்வின்றி உழைக்க வைத்தாள்.
சுவாமிஜியின் உழைப்பு சாதாரணமானதல்ல. அந்த உழைப்பின்
மூலம் அவர் நிகழ்த்தியுள்ள சாதனையும் சாதாரணமானதல்ல. அந்தச் சாதனையின் விளைவாக ஏற்பட்டுள்ள நன்மைகளைக் கோடானுகோடி மக்கள் அனுபவித்து வருகிறார்கள்.
அவ்வளவும் அம்பிகையின் செயல் என்பதைத் தான் சுவாமிஜி தம் சீடருடன் பேசும்போது குறிப்பிட்டார். அந்த அம்பிகை சுவாமிஜி மூலம் ஆற்ற வேண்டிய பணிகளை எல்லாம் நிறைவேற்றிக் கொண்டபின், அவருக்குத் தன்னை முழுமையாகக் காட்டியருள வேண்டும் என்று திருவுளம் கொண்டாள்.
சுவாமிஜி காஷ்மீரில் இருந்தபோது அவரது உள்ளத்தில் அம்பிகையே நீக்கமற நிறைந்தாள். அம்பிகையைப் பற்றிய அருமையான பாடல்களை அவர் அகமுருகிப் பாடிக் கொண்டே இருந்தார். மலையில் காணப்பட்ட காட்சிகள் அனைத்தும் அவருக்கு மலைமகளையே நினைவுபடுத்தின. உலகில் உள்ள எல்லாம் அம்பிகையே, உலகில் வாழும் எல்லாரும் அம்பிகையே என்ற உணர்வு அவர் மனத்தில் பொங்கித் ததும்பிக் கொண்டிருந்தது. படகோட்டி ஒருவரின் மகளான நான்கு வயதுச் சிறுமியை அம்பிகையாகக் கருதி பூஜை செய்தார் சுவாமிஜி.
நான் எங்கே திரும்பினாலும் அம்பிகையைக் காண்கிறேன். இதோ இந்த அறையில் நம்முள் ஒருத்தியாக அவளும் இருப்பதாக உணர்கிறேன்என்று சுவாமிஜி தம் சீடர்களிடம் கூறினார்.
என் விரல்களோடு ஐந்து பட்டுவிரல்கள் கோத்துக் கொண்டிருக்கின்றன. என்னை அந்தக் கை எங்கோ அழைத்துச் செல்கிறது. தாயை நம்பிச் செல்லும் குழந்தைபோல் நானும் செல்கிறேன். அந்த மலர்க்கரம் சர்வேஸ்வரியாகிய அம்பிகையினுடையது அல்லது என் குருதேவருடையதுஎன்று ஒரு சமயம் கூறினார்.
குருவும் அம்பிகையும் ஒன்றே என்பது கோட்பாடு. இதை அனுபவத்தில் உணர்ந்த சீடர் சுவாமி விவேகானந்தர். குருவாகிய ஸ்ரீ ராமகிருஷ்ணர், சீடராகிய சுவாமிஜியை அம்பிகையின் பணிக்கென்றே அர்ப்பணித்தார். குரு தமக்களித்த பணியை நிறைவேற்றிவிட்ட நிலையில், குரு எப்படி அம்பிகையின் குழந்தையாகச் சரணடைந்து வாழ்ந்தாரோ, அதேபோல் தாமும் வாழ வேண்டும் என்று விரும்பினார் சுவாமிஜி, அதன்படியே வாழ்ந்தார்.
தமக்கென்று எந்தச் சங்கல்பமும் இல்லாமல், அம்பிகையின் திருவுளப்படியே தம் ஒவ்வோர் அசைவும் அமையபடும் என்று இருந்தார். தாயின் மடியில் தவழும் குழந்தைபோல் ஆனார் சுவாமிஜி.
காளி, காளிஎன்று அவளையே சிந்தித்திருந்த சுவாமிஜி காளியுடன் முழுமையாக ஒன்றியருந்த நிலையில், எல்லாம் அவளே என்னும் இரண்டற்ற தன்மையில் ஆழ்ந்திருந்த நிலையில் தமக்கு ஏற்பட்ட அனுபவத்தைக் கவிதையாக வடித்தார் சுவாமிஜி.
அன்னை காளியிடம் பிச்சை கேட்காதீர்கள். அவரிடம் அச்சம் என்பது அணுவளவும் வேண்டாம். உன்னதமான அனுபவத்தைத் தந்தே ஆக வேண்டும் என்று அவளிடம் வற்புறுத்திக் கேளுங்கள். அன்னையின் உண்மையான பக்தர்கள் கல்லைப் போல் உறுதியானவர்கள். சிங்கத்தைப்போல் அச்சமற்றவர்கள். பிரபஞ்சமே வெடித்துத் தூள் தூளாகிக் கிடந்தாலும் அவர்கள் சிறிதும் நிலைகுலைய மாட்டார்கள். உங்கள் பேச்சை அவள் கேட்டே ஆகும்படி செய்யுங்கள். அவளிடம் கெஞ்சிக் கொண்டிருக்க வேண்டாம்என்று சுவாமிஜி தம் சீடர்களுக்குக் கூறினார். அஞ்சுவதும் கெஞ்சுவதும் அன்னையிடம் தேவையில்லை, அவள் நம் தாய், நாம் அவளுடைய குழந்தைகள் என்ற உரிமையோடு அவளிடம் பழக வேண்டும் என்பதே சுவாமிஜி காட்டியுள்ள வழி.
அன்னை காளியே பார த அன்னை!
ஷீரபவானி என்ற தேவிஸ்தலத்தில் சுவாமிஜி அம்பிகைக்கு ஹவிஸ், பாதாம் பருப்பு ஆகியவை கலந்த பாலைக் கொண்டு ஹோமம் செய்தார். தினந்தோறும் நீண்டநேரம் தேவி மந்திரங்களை ஜபம் செய்தார். ஒவ்வொரு நாளும் காலையில் ஒரு சிறுமியை கன்யாகுமரியாகக் கருதி பூஜை செய்தார்.
ஷீரபவானியில் அம்பிகை சுவாமிஜிக்கு மிக மிக அற்புதமான அனுபவங்களைஅருளினாள். அவை உலகுக்கு அறிவிக்கக்கூடாத அளவுக்குப் பரம புனிதமானவைஎன்று அவரே கூறியுள்ளார். எப்போதாவது அபூர்வமாக அந்த அனுபவங்களில் சிலவற்றைத் தம் சகோதரத் துறவிகளுக்குக் கூறியதுண்டு. அந்தச் செய்திகளை வைத்துப் பார்க்கும்போது, தட்சிணேஸ்வரம் காளி கோயிலில் குருதேவரிடம் எப்படி அம்பிகை பேசி வந்தாளோ, அதே போல ஷீரபவானியில் சுவாமிஜியிடம் பேசி வந்தாள் என்பது தெளிவாகிறது.
சுவாமிஜி இரண்டாவது முறை அமெரிக்கா சென்றபோது கலிபோர்னியாவில் ஓர் ஆசிரமத்தை ஏற்படுத்தி அதன் பொறுப்பை சுவாமி துரியானந்தரிடம் ஒப்படைக்க விரும்பினார். துரியானந்தரிடம் இதுபற்றிக் கூறிய போது, “இது தேவியின் திருவுள்ளக் கருத்துஎன்றார் சுவாமிஜி, துரியானந்தர் சிரித்துவிட்டு, “உங்கள் திருவுள்ளம் என்று சொன்னால் போதாதா? ஏன் தேவியின் திருவுள்ளம் என்று சொல்கிறீர்கள்? தேவி உங்களிடம் சொன்னாளா? நீங்கள் அதைக் கேட்டீர்களா?” என்றார்.
ஆம் தேவி சொன்னாள். நான் கேட்டேன். நீயும் நுட்பமான நரம்புகளைப் பெற்றால் தேவி பேசுவதைக் கேட்கலாம்என்றார் சுவாமிஜி.
இது போன்ற நிகழ்ச்சிகள் அம்பிகைக்கும் சுவாமிஜிக்கும் இடையே நிலவிய அற்புத உறவை வெளிபடுத்துவனவாக அமைந்தன.
ஆரம்பக் காலத்தில் அன்னை வழிபாட்டைப் பற்றி அலட்சியமாகப் பேசி வந்த சுவாமிஜி, எப்படி அன்னையால் ஆட்கொள்ளப்பட்டாள் என்பதைப் பற்றிப் பார்த்தோம். அன்னை வழிபாடே வாழ்க்கையின் நிறைவான லட்சியம் என்று சொல்லும் அளவுக்கு அவரது வாழ்க்கை அமைந்துவிட்டது.
சுவாமிஜி அன்னை வழிபாட்டைப் பல்வேறு விதங்களில் செய்து வந்தாலும், அன்னை வழிபாடுகளில் தலைசிறந்ததாக விளங்கும் துர்க்கா பூஜையை சாஸ்திர முறைப்படி பேலூர் மடத்தில் கொண்டாட வேண்டும் என்னும் விருப்பம் சுவாமிஜிக்கு அவரது இறுதிக்காலத்தில் ஏற்பட்டது. தமிழ் நாட்டில் நாம் நவராத்திரி என்று ஒன்பது நாட்கள் கொண்டாடுகிறோம் அல்லவா? அந்த நவராத்திரியின் நிறைவுநாட்களைத் தான் வங்காள மக்கள் துர்க்கா பூஜையாகக் கொண்டாடுவார்கள்.
பேலூர் மடத்தில் துர்க்கா பூஜை சிறப்பாக நடைபெறுவதாகவும் அந்தப் பூஜையில் துர்க்கா தேவி சிலைவடிவில் எழுந்தருளி வழிபாட்டை ஏற்றுக் கொள்வதாகவும் சுவாமிஜி ஒரு தெய்வீகக் காட்சியில் கண்டிருந்தார். அதன் விளைவாக மடத்தில் துர்க்கா பூஜை செய்ய வேண்டும் என்னும் எண்ணம் அவர் மனத்தில் தோன்றியது. அந்தப் பூஜைக்கான விதிமுறைகளைக் கூறும் சாஸ்திரங்களை ஆராய்ந்து விவரங்களை அறிந்து கொண்டார்.
பூஜை செய்வது என்று உறுதியாகத் தீர்மானித்தவுடன் சுவாமிஜி பிரம்மானந்தருக்கு அதைத் தெரிவித்தார். அப்போது பிரம்மானந்தர் எனக்கும் இதுபோன்ற கனவு தோன்றியது. அந்தக் கனவில் பத்துக் கைகளைக் கொண்ட துர்க்கா தேவி, தட்சிணேஸ்வரம் இருக்கும் திசையிலிருந்து கங்கையைக் கடந்து மடத்தை நோக்கி வருவது போல் கண்டேன்என்றார்.
தொடர்ந்து, பூஜைக்கான ஏற்பாடுகள் சிரத்தையுடன் மேற்கொள்ளப்பட்டன. உரிய நாட்களில் பூஜை மிகச் சிறப்பாக நடைபெற்றது. பூஜா சங்கல்பம் அன்னை சாரதாதேவியின் பெயரில் செய்யப்பட்டது. அன்னை இந்த விழாவில் ஆனந்தத்துடன் கலந்து கொண்டார். சாஸ்திர விதிகளை முழுமையாகப் பின்பற்றிச் செய்யப்பட்ட அந்த பூஜையில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு அம்பிகையின் அருளைப் பெற்றனர்.
அசுரனை சம்ஹரிக்கும் அன்னை-
மஹிசாசுர மர்த்தினி
நவராத்திரியில் மிக முக்கியமான வேளை அஷ்டமியும் நவமியும் சந்திக்கின்ற வேளையாகும், தேவி மஹிஷாசுர மர்த்தினியாகத் தோன்றி அசுரனை அழித்த வேளை அது. அந்த நேரத்தில் செய்யப்படும் சந்தி பூஜை மிகச் சிறப்பான பூஜையாகும். அந்த பூஜை வேளையில் செய்யப்படும் பிரார்த்தனைகள் கண்டிப்பாக நிறைவேறும்.
தாம் விரும்பிய வண்ணமே துர்க்கா பூஜை சிறந்தமுறையில் நடைபெற்றது குறித்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தார் சுவாமிஜி. சந்தி பூஜையில் அவரும் கலந்துகொண்டு அம்பிகையின் திருவடிகளில் மூன்று முறை மலரிட்டு வழிபட்டார்.
துர்க்கா பூஜையைத் தொடர்ந்து லட்சுமி பூஜை, காளி பூஜை, சரஸ்வதி பூஜை ஆகியவையும் மடத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டன.
காளி பூஜை என்பது இரவு முழுவதும் நடைபெறும் பூஜையாகும். அன்று பூஜை தொடங்குவதற்குமுன்பே பூஜை நடைபெறும் இடத்திற்கு வந்தார். சுவாமிஜி தேவியின் முன்னிலையில் அமர்ந்து தியானம் செய்யத் தொடங்கினார். அப்படியே சமாதியில் ஆழ்ந்துவிட்டார். நெடுநேரம் ஆகியும் அவரது சமாதி நிலை கலையவில்லை. சுவாமி பிரேமானந்தர் சுவாமிஜியின் காதில் குருதேவரின் திருநாமத்தை நீண்ட நேரம் உரத்தகுரலில் ஓதிய பின்பே சுவாமிஜியின் சமாதிநிலை கடைந்தது.
காளி பூஜையைத் தொடர்ந்து ஜகத்தாத்ரி பூஜையையும் சுவாமிஜி கொண்டாடினார். இந்த பூஜையை அவர் தம் தாய்வீட்டில் கொண்டாடினார். அதன்பின் தம் தாயின் பழைய வேண்டுதல் ஒன்றை நிறைவேற்றும் பொருட்டு அவர் கொல்கத்தா காளிகோயிலில் ஹோமத்துடன் வழிபாடு செய்தார். அதன்பின் சுவாமிஜி, அன்னை மகாசக்தியையே அல்லும் பகலும் சிந்தித்தவண்ணம் எஞ்சிய காலத்தைக் கழித்தார்.
பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரிடம் நரேந்திரன் என்னும் இளைஞனாக வந்தபோது அவருக்கு உருவ வழிபாட்டில் நம்பிக்கை இல்லை. ஆனால் விரைவிலேயே அவர் விக்கிரஹ வழிபாட்டின் உண்மைத் தன்மையை உணர்ந்து கொண்டார். பல வடிவங்களில் மக்களுக்கு அருள் பாலிக்கக் கூடிய தன்மை பரமபொருளுக்கு உண்டு என்பது அவருக்கு அனுபவ உண்மையாக விளங்கியது. குறிப்பாக அம்பிகையை வழிபடுவதில் அவர் ஆர்வம் மிகக் கொண்டவராக இருந்தார். இதற்கு என்ன காரணம்?
பாரத அன்னை
வீழ்ச்சியுற்றுக் கிடந்த பாரத சமுதாயத்தை எழுச்சியுறச் செய்வதற்காக வந்தவரே சுவாமி விவேகானந்தர். அதற்காகவே அவர் தம் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டிருந்த இந்திய மக்கள் வலிமை பெற வேண்டும், தன்னம்பிக்கை பெற வேண்டும் என்று அவர் விரும்பினார். சக்தி வழிபாடே அதற்குரிய சாதனை என்று கண்டார். சக்தி நிறைந்த இந்தியச் சமுதாயம் உருவாக வேண்டுமானால் அதற்குச் சக்தி வழிபாடு இன்றியமையாதது என்று உணர்ந்த சுவாமிஜி அதற்காவே சக்தியை வழிபட்டார்.
அவரது 150-ஆவது ஜயந்திவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் இந்தத் தருணத்தில், அவர் அன்புடனும் ஆர்வத்துடனும் போற்றி வழிபட்ட அன்னை மகாசக்தியை நாமும் போற்றுவோம். அன்னையின் அருள் பெறுவோம். அளவிலா நலம் பெறுவோம்!
சொல்லுக் கடங்காவே பராசக்தி
சூரத் தனங்களெல்லாம்
வல்லமை தந்திடுவாள் பராசக்தி
வாழியென்றே துதிப்போம்!
-மகாகவி பாரதி
by சுவாமி யதாத்மானந்தர்
நன்றி இணையம்