இந்து மத வரலாறு - பாகம் 26

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:56 | Best Blogger Tips


நீ எங்கள் பசுகூட்டத்தை பாதுகாக்கிறாய் அவைகளின் மீது மிருகங்களும் துஷ்டமனிதர்களும் பாயாதபடி வெப்பம் நிறைந்த உனது கண்களால் பார்த்துக் கொண்டிருக்கிறாய். எங்களது செல்வங்களான பசுக்களின் எண்ணிக்கை வளரும் வண்ணம் அவற்றிற்கு தாராளமாக உணவை கொடுகிறாய்

இந்த பசு செல்வங்களை எங்களிடமிருந்து அபகரிக்க நினைக்கும் தீய மனம் கொண்ட பகைவர்களை உன் ஒளிக்கரங்களால் விரட்டுகிறாய். அதற்கு நன்றி செலுத்த இந்த யாகத்தில் உனக்குய பங்கினை அக்னியிடம் கொடுக்கிறேன். உன் பங்கு மேன் மேலும் பெருகட்டும் என்று சூரியனை வேதகால ரிஷி போற்றி வணங்குகிறான்.

இந்த பாடல் மூலம் அடிப்படையான இரண்டு விஷயங்கள் நமக்கு தெரியவருகிறது. நாம் நினைப்பது போல் அந்த கால மக்கள் அறிவியல் சிந்தனை அற்ற அசடர்களாக இருக்கவில்லை. புல் பூண்டுகள் சூரிய வெளிச்சத்தினால் தான் நன்கு வளரும் வெளிச்சம் இல்லை என்றால் தாவரங்களின் வளர்ச்சி சரிவர அமையாது என்பதை போன்ற அடிப்படையான அறிவியல் அறிவையும் அவர்கள் பெற்றிருந்தார்கள்.

அடுத்ததாக அவர்கள் மாடு மற்றும் கால் நடைகளை நம்பி வாழ்ந்தவர்களாக இருந்தமையனால் ஒரே இடத்தில் நிரந்தரமாக தங்கும் இயல்பு இல்லாதவர்களாகவும் பல இடங்களுக்கு சுற்றி திரியும் தன்மையோடு இருந்தமையாலும் பட்டறிவு என்பது அளவுக்கு அதிகமாக கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள்.

மேலும் யஜூர்வேதத்தில் உள்ள மூன்றாவது பாடல் ஆழமான தத்துவக் கருத்தை வெளியிடுகிறது. என்னை அதனுடன் இணைத்தது யார் அவன் தான். என்னை அதனுடன் பிணைத்தவன் யார் அதுவும் அவன் தான். இந்த வேலையை தொடங்கியவன் நீயே அதை முழுமையாக்கியவனும் நீயே என்ற கருத்து பட நீண்டு செல்லும் இந்த பாடலில் வரும் அது என்ற வார்த்தை வேத கால தெய்வங்கள் எதையும் பொதுவாகவோ சிறப்பாகவோ சுட்டிக் காட்டாமல் மறை முகமாக பரமாத்ம தத்துவத்தை சுட்டி நிற்பதை உணரலாம். இதே போக்கில் வேறு இரு பாடல்களும் முடிவாக விஷ்ணுவை பற்றிய ஒரு பாடலும் வருகிறது. இப்பாடல்கள் அனைத்தையும் இணைத்து பார்க்கின்ற பொழுது நாராயணனை பரம் பொருளாக கருதும் கருத்து யஜூர் வேதத்திலும் இருந்திருப்பது தெரிகிறது.

சிந்து நதி கரையிலும் அதன் உபநதிகளான ஆறு நதிகளையும் இணைத்துக் குறிப்பிடும் சப்த நதி மண்டலத்தில் இந்த மக்கள் தங்களது வாழ்க்கை ஓட்டத்தை நடத்திக் கொணடிருந்த போது பல தேவதைகளை வழிபடுபவர்களாக இருந்திருக்கிறார்கள். அப்பொழுதெல்லாம் ஒரே கடவுள் தான் உண்டு என்ற வாதங்கள் உருவாகாமல் இருந்திருக்கிறது.

சிந்துவை தாண்டி யமுனையையும், கங்கையையும் கடந்து அந்நதிகரையோரம் பரந்து விரிந்த சமவெளியில் நிலையான வாழ்வைத் துவங்க குடியேறிய பின்னரே வேத மைந்தர்களுக்கு ஒரே கடவுள் தான் இருக்க வேண்டு மென்ற சிந்தனை தெளிவு ஏற்பட்டிருக்கிறது. அதனால் தான் ரிக் வேதம் தோன்றி பல காலத்திற்கு பின்னால் தோன்றிய யஜூர் வேதத்திலும் அதர்வண வேதத்திலும் ஒரே கடவுள் என்ற சிந்தனை அதிக அளவில் நம்மால் காண முடிகிறது.

வேத கால வாழ்வில் சிந்தனைகளை விட சடங்குகளுக்கு அதிக முக்கியத்துவம் இருந்தது. யாககுணடங்களை ஏற்படுத்தி அக்னியை வளர்த்தான் அதிலிருந்து கிளம்பும் புகை மழையை வரவழைக்கும் சக்தியை பெற்றிருப்பதாக நம்பினர். அதனால் தான் நெருப்பை உருவாக்கும் சமித்துகளையும் அதனை வளர்க்கும் நெய்யையும் புனித மிக்கதாக கருதி சமித்துக்கள் அக்னி தேவனின் உணவு என்றும் நெய் அவனுக்கு ஆற்றலைக் கொடுக்கும் பொருள் என்றும் புகழ்ந்து பாடினார்கள்.

இயற்கையோடு ஒருங்கிணைந்து வாழ்ந்ததினால் இயற்கையின் வளர்ச்சியில் தான் தங்களது சமூக வளர்ச்சியும் அடங்கியிருப்பதாக கருதி இயற்கை வளங்களை செழுமைபடுத்துவதற்கான சடங்குகளை ஏற்படுத்தி எந்த சடங்கை எப்போது செய்ய வேண்டும் என்ற நியதியையும் வகுத்தார்கள்.

அந்த ஒழுங்கு முறைக்கு எதிராக பிற்கால சமூகம் செல்லக் கூடாது என்றும் எச்சரித்தனர். வேத நெறிகளை அலச்சியம் செய்யாதே அந்த நெறிப்படி தினசரி நெருப்பை வளர்த்து தேவதைகளை திருப்தி படுத்து யாகப்புகை மேலே செல்லாவிட்டால் மேகங்கள் கூடாது மழை பொழியாது மழை இல்லை என்றால் வாழவே முடியாது என்று அவர்கள் எச்சரித்தது அன்றைய வாழ்க்கைக்கு மட்டுமல்ல இன்றைய வாழ்க்கைக்கும் பொறுத்தமாகவே இருக்கும்.

யாகங்களிலுள்ள விஞ்ஞான பூர்வமான உண்மைகளை விவரிப்பது இந்த இடத்தில் நமது நோக்கம் இல்லையென்றாலும் யாகங்களின் சிறப்பை ஓரளவாவது நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். முறைப்படி சப்தம் தவறாத வேத கோஷங்களுடன் செய்யப்படும் யாகங்கள் மழையை வருவிப்பதும் நச்சு புகையிலிருந்து உயிர்களை பாதுகாப்பதும் நாம் அறிந்ததே ஆகும்.

தீயை வளர்த்து நெய்யை வார்த்து செய்யப்படும் யாகங்கள் அறியாமையின் வெளிப்பாடு அல்ல. கண்ணுக்கு தெரியாமல் பூமியெங்கும் பரவி கிடக்கும் அணுக்களை வேதியியல் முறையில் அசைவித்து நமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் அறிவுப் பூர்வமான செயல்பாடே யாகங்கள் ஆகும்.

அந்த யாகங்கள் சரிவர செய்யப்படாததினால் செய்யும் பண்டிதர்களும் யாகங்களை முறைதவறி செய்வதினாலையும் தான் பருவ காலங்கள் தனது கடமைகளை சரிவர செய்ய முடியாமல் இயற்கை அழிவுகளுக்கு விதை தூவுகிறது. இதை உணர்ந்து தேசத்தில் எதாவது ஒரு மூலையில் நியமப்படி வேதகால யாகம் தொடர்ச்சியாக நடத்தப்படும் என்றால் பூமி பந்தின் கோபச்சூடு கொஞ்ச நேரம் குறையும்.

நாம் பிராமணனுக்கும், சத்திரியனுக்கும், சூத்திரனுக்கும், ஆரியனுக்கும், அருகில் உள்ளவனுக்கும், அந்நியனுமாகிய அனைத்து ஜனங்களுக்கும் இம்மங்கலகரமான வேதத்தை உபதேசம் செய்கிறேன். காணிக்கை அளிக்கும் தேவர்களுக்கு நான் பிரியமுடனாக வேண்டும் எனது விருப்பம் பூரணமாகட்டும். அது எனது ஸ்வாதினம் ஆகும்.

பிரகஸ்பதியே சத்தியத்தின் புதல்வனே சத்துரு சிறப்புக்கதிகமாயும் அறிவுள்ள ஜனங்களின் நடுவே பிரகாசமுடையதாகிய உறுதியுள்ள செல்வத்தை எமக்களிப்பாய். நீ ஆதரவோடு கிரகிக்கப்பட்டுள்ளாய்.

செல்வம் மிகுந்த இந்திரனே! இங்கே வா நூறு மடங்கு சக்தி உள்ளவனே சோமனை பருகவும் சோமன் பெருமையான சாதனங்களால் நிறைந்துள்ளது. நீ ஆதரவோடு பற்றப்பட்டுள்ளாய். நான் செல்வம் மிகுந்த இந்திரனை பற்றுகிறேன். பசுக்கள் நிறைந்த இந்திரனே இது உனது மூலஸ்தானமாகும். இங்கே வந்து உனது அருளை நிரப்பு.

ஜோதியின் தலைவனாகவும் அழியாதவனாய் உள்ளவனே நாங்கள் நாடுகிறோம். நாங்கள் வைசுவா நரனின் நல்ல நிலையில் சாய வேண்டும் அவனே புவனங்களின் தன்னிகரற்ற தலைவன் ஆவான். இவனே ஜீவனாக தோன்றி விழிகளால் அனைத்தையும் காண்கின்றான். இவன் சூரியனுக்கு சமமாய் உள்ளவன். வெகு தூரத்திலுள்ள வைசுவா நரனை அக்னி எங்கள் அருகில் அழைத்து வரட்டும்.

அக்னி பவித்திரமான ரிஷி ஆவான். பஞ்ச ஜனங்களின் புரோகிதன் அக்னியே. அதிகமாக பிரகாசிக்கவும் ஜோதிவடிவாகவும் உள்ள அக்னியே நீயே செல்வமும் செழுமையும் தரும மூல முதல்வன் பருவகாலங்கள் உனது யாகத்தை விசாலப்படுத்தட்டும். மாதங்கள் உனது அவிர் பாகத்தை ரட்சிக்கட்டும். வருடங்கள் உனது பிரஜைகளை காவல் செய்யட்டும். மலைகள் அருகிலும் நதிகளின் சங்கமத்திலும் தோன்றிய அறிவாளி உனது புகழை பாடி பரவட்டும்.

நாங்கள் வீரமக்கள் எங்கள் பசுக்களும் குதிரைகளும் பல்கி பெருகட்டும். சகல புஷ்டிகளுடன் எமது எல்லா விருப்பங்களும் ஓங்கி வளரட்டும். எங்களை சுற்றியுள்ள மனிதர்களும் மற்ற உயிரினங்களும் பெருகி நிரம்பட்டும். தேவர்கள் எங்கள் யாகத்தை பருவ காலத்தோடு வழி நடத்தி செல்லட்டும்.

சோமனே நீ பசியை அழிப்பவன். அனைத்து மனிதர்களின் நண்பனும் நீ. இன்பம் அளிக்கின்ற தாரையுடன் பெருகி நீ வழிய வேண்டும். தங்கத்தால் ஆன துரோனத்தில் சமமான மூலஸ்தானத்தில் வந்து அமர்ந்துக் கொள்.

இந்த பாடல்கள் யஜூர் வேதம் 26-வது அத்யாயத்தில் 392-வது அனுவாகத்தில் 2 முதல் 26 வரையிலான பாடல்வகளாகும். இவைகளை மீண்டும் ஒருமுறை வாசித்து பாருங்கள் பல உண்மை தெரிய வரும். வேதங்கள் என்பது பிராமணர்களுக்கு மட்டும் உரிமையான சொத்தாகும். அதை மற்ற ஜாதி ஜனங்கள் எந்த வகையிலும் பயன்படுத்தக் கூடாது என்ற கருத்து ஆழமான முறையில் பிரச்சாரம் செய்யப்பட்டு இன்றைய நாள் வரை வந்து கொண்டு இருக்கிறது.

அது மட்டுமல்ல வேதங்களை ஓதினால் மற்ற ஜாதிகாரர்களின் நாக்கை துண்டிக்க வேண்டும் காதுகளால் கேட்டால் செவிகளில் ஈயத்தை உருக்கி ஊற்ற வேண்டும் என்பதாகவும் மனுசாஸ்திரத்தில் எழுதப்பட்டிருக்கிறது. இவைகளை அறிவு தெளிவுள்ள எந்த மனிதனும் படித்தாலே அருவருப்பு அடைந்து விடுவான். அதிர்ச்சியில் உரைந்து விடுவான்.

ஆனால் வேதகால கவிஞன் வேதங்களை தனிப்பட்ட சொத்தாக கருதவில்லை. மனிதனாக பிறந்த ஒவ்வொருவனுக்குமே வேதம் சொந்தமாகும் என்று கருதுகிறான். வேதக் கட்டளைக்கு விரோதமாகவும் விருப்பத்திற்கு மாறாகவும் வேதங்களை தனி உடமையாக்கியது யார்? எதற்காக? அது ஜாதிவளைக்குள் சுருட்டப்பட்டுள்ளது என்பதை நாம் சிந்தித்து பார்த்து வாதங்களில் ஈடுபடாமல் வேதத்தை விருப்பமும் தகுதியும் உடைய அனைவருக்கும் கற்பிக்கவும் கற்றவழி நிற்கவும் முன் வரவேண்டும்.

மேலும் புவனங்களின் தலைவனாக இருப்பவனும் மக்களின் உற்பத்திக்கும் சுகதுக்கங்களுக்கும் ஒருவனே காரணம் என்ற கருத்தும் கவனிக்க தக்கது. தேவதைகளுக்கு பல பெயர்களை வைத்து ரிஷிகள் அழைத்தாலும் அவையாவும் ஒரே தேவதையின் மாறுபட்ட பெயர்களே என்பது தெளிவாகிறது இந்திரன், அக்னி, சோமன் என்ற பெயர்களெல்லாம் மூல பரம் பொருளை குறிப்பிடுவதற்காகத்தான் பயன்படுத்தி இருப்பார்களோ என்ற ஐயத்தையும் ஏற்படுத்துகிறது. இனி உழவத் தொழிலை பற்றி வேதக் கருத்தை பார்ப்போம்.

யஜூர் வேத சுக்கில பகுதியில் வேளாண்மையை பற்றி பல பாடல்கள் உள்ளன. அவற்றில் மிக முக்கியமானதாக 12-வது அத்யாயத்தில் ஒரு பாடல் உள்ளது. அதில் நிர்த் என்ற தேவதையின் பெயர் குறிப்பிடப்படுகிறது. விவசாயத்திற்கு தேவைபடுவது மண்ணும், நீரும், ஒளியும், காற்றுமாகும். இந்த நான்குமே வேதங்களில் தேவதையாக வணங்கப்படுகிறது.

நிர்த் என்ற வேதகால விவசாய தேவதை பூமியாக விரிந்து கிடக்கிறாள். முதலில் அவள் பச்சை வண்ண ஆடையை உடுத்தி இருக்கிறாள். முடிவில் பொன் வண்ணமாக காட்சி தருகிறாள். அவள் நீராடுவதற்காக குளிர்ந்த நீர்திவலைகளை கார்முகில் என்ற வானப்பந்தலை அமைத்து வருணதேவன் சாரலாக தெளிக்கிறான். நேரம் செல்லச் செல்ல முகிலினங்கள் பெரும் மழையை கொட்டுகிறது. இதில் அந்த தேவதை முழுமையாக குளிர்ச்சி அடைகிறாள். அவள் உடலெங்கும் ஆறுகளும், குளங்களும், ஏரிகளும், அருவிகளும் வெள்ளியை உருக்கி விட்டது போல் பெருகி ஓடுகிறது.

இந்த நேரத்தில் கலப்பைகள் தயார் செய்யப்படுகின்றன. கலப்பையின் முனைகளில் கூர்மையான இரும்பு கொழுவுகள் பொறுத்தப் படுகின்றன. நுகத்தடியில் வெள்ளை எருதுகள் பூட்டப்படுகின்றன. நிர்த் தயாராக இருக்கிறாள். கலப்பைகளை பலமாக பிடித்துக் கொண்டு முன்னால் செல்கிறாள். அதே நேரம் ஏர் முனையை தனது உடலில் தாங்கியும் கொள்கிறாள்.

இரும்பு முனை மண்ணை அழுத்தி கீறுகிறது மண் கீழும், மேலுமாக புரள்கிறது. மலர்களைப் போல் விரிந்து கலப்பை என்னும் வண்டுகளுக்கு மகரந்தத்தை கூடலில் வாரிக் கொடுக்க தயாராகிறது. உழவன் விதைகளை நாலாபுறமும் தூவுகிறான். நிர்த் தேவதை அதை வாங்கிக் கொள்கிறாள். தனக்குள் தாங்கியும் கொள்கிறாள். தனக்கு கிடைத்த ஒரு தானிய மணியை பல நூறு மடங்காக பெருகி தருகிறாள்.

தேவதையின் உடலில் உழவன் ஏறி விளையாடுகிறான். அரிவாள்களைக் கொண்டு முற்றி தலை சாய்ந்த கதிரை அறுவடை செய்கிறான். தன்னை ஏர் கொண்டு பிளப்பதினாலோ வாள் கொண்டு வெட்டுவதாளோ பூமி தேவதை மனிதர்களை கோபத்துடன் முறைப்பது இல்லை

ஏனென்றால் அவள் உயர்களுக்கெல்லாம் தாயை போன்றவள் முலைக்காம்பை குழந்தை கடித்தால் தாய் அதன் வாயை கிழித்து விடவா போகிறாள் வாரி அணைத்து தானே கொள்வாள். அத்தகைய தாயான தானியங்களை கொடுக்கும் நிர்த் தேவதையை வணங்குவோம். அவள் பசியை போக்கும் அன்னை சக்தியை கொடுக்கும் வெண்ணை. நமது மகிழ்ச்சி தீபத்தை சுடர்விட்டு பிரகாசிக்க செய்யும் எண்ணெய். அவளை மீண்டும் மீண்டும் வழிபடுவோம்.

பூமியின் தாகத்தை தனித்தவன் வருணன். தானியங்களை தருபவன் வருணன். வருணனின் செங்குருதியே மழை நீராகும். அந்த குருதியை நீராக பெற்றுக் கொள்ளும் பூமித்தாய் தானியபாலாக நமக்கு புகட்டுகிறாள். அக்னியின் வடிவமான சூரிய தேவனும் ஆகாயத்திலிருந்து இறங்கி வந்த வாயு தேவனும் நிர்த்க்கு உதவி செய்கிறார்கள். அவர்களை நாம் வணங்குவோம். நமது வீட்டு களஞ்சியங்களில் தானியங்களை நிரம்பி வழிய செய்த இந்த நான்கு தேவதைகளும் நமது கருவூலங்கள் ஆவார்கள். அதனால் தங்கநிற தானியங்களை அக்னியிடம் வழங்குவோம். அவன் அவைகளை தேவதைகளுக்கு நிச்சயம் கொண்டு கொடுப்பான்.

இந்த சடங்கு பாடல் தேவகால மக்களின் வாழ்க்கையை நமக்கு படம் பிடித்து காட்டுகிறது. ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டு நாடோடியாக திரிந்த ஆரம்பகால மக்கள் யஜூர் வேத காலத்தில் நிலையாக ஒரு இடத்தில் தங்கி விவசாயம் முதலியன செய்ய ஆரம்பித்து இருப்பது இந்த பாடல்களால் நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

அது மட்டுமல்ல விவசாயத் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு உடல் உழைப்பு அதிகம் தேவை. உடலால் உழைப்பவர்களை சூத்திரர்களை என்று வேதம் வகைபடுத்தி காட்டுகிறது. சூத்திரர்கள் தாழ்ந்தவர்களாக இழிகுல மக்களாக கருதப்பட்டு ஒதுக்கப்பட்டு இருந்தால் வேதங்கள் அவர்களையும் அவர்களது தொழில்களையும் சிறப்பித்து கூறப்பட்டிருக்குமா இருக்கவே முடியாது. எனவே வேதகாலத்தில் எவனும் எந்த தொழிலிலும் இழிந்தவனாக கருதப்படவில்லை என்பது நன்றாக விளங்குகிறது.

இனி சடங்குகள் என்பது அந்தகால மக்களுக்கு எந்த வகையில் உதவி புரிந்தன என்பதை பார்ப்போம். யஜூர் வேதம் 18-வது அத்யாயத்தில் 77 பாடல்கள் இருக்கிறது. இதில் 29 பாடல்கள் சடங்குகளை பற்றியும் அவைகளால் ஏற்படும் நன்மைகளை பற்றியும் விவரித்து கூறுகிறது.

கிரிகைகள் எனக்கு கொடுப்பது எது? அவற்றை செய்வதினால் தெய்வங்களிடமிருந்து எதை நான் பெறுகிறேன். எல்லாம் எல்லாவற்றையும் நான் பெறுகிறேன். கிரிகையினால் பலத்தை நான் அடைகிறேன். ஆதாயம் அடைகிறேன். என் மனது ஆற்றல் அடைகிறது. உடல் பலம் அடைகிறது. எனது எண்ணங்கள் தெளிவடைகின்றன. எனக்கு புகழும் பாராட்டும் கிடைகிறது. ஒளிமயமான சொர்க்க கதவுகள் எனக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.

இதோ நான் நன்மையும் நன்மைக்கு மேல் நன்மையும் பெற்றுக் கொண்டே இருக்கிறேன். எனது மூச்சு காற்று தடங்கல் இன்றி உள்ளே செல்கிறது. சிரமப்படாடல் வெளியேயும் வருகிறது. அதன் பாதைகளில் அது தங்கும் இடங்களின் எந்த துன்பத்தையும் அனுபவிக்கவில்லை.

எனது கண்கள் தெளிவாக இருக்கிறது. நெருப்புத் துண்டுகள் போல் அவைகள் ஜொலிக்கவும் செய்கின்றன. வில்லிலிருந்து புறப்படும் அம்புகளை போல் எனது பார்வை எல்லா இடங்களிலும் கூர்மையுடன் பாய்கின்றன. எனது காதுகளும் அப்படியே இருக்கின்றது.

இந்திரனின் கட்டளையால் மேகங்கள் மோதி உண்டாகும் இடி முழக்கங்களால் எனது செவிகள் துன்பப்படவில்லை. மிருதுவான இனிமையான புல்லாங்குழலின் ஓசை எனது காதுகளை குளிர்விக்கின்றன. எனது நாவும் நல்லதையே பேசுகிறது. தீய சொற்களை உருவாக்கும் வயலாக அது என்றும் மாறியது இல்லை.

இத்தகைய நன்மையெல்லாம் பெற எனக்கு உதவியது எது. இந்த சடங்குகளும் இந்த யாகங்களும் தான். இதில் எரியும் நெருப்பு எல்லா இடத்திலும் இதமான வெப்பத்தை பரப்பட்டும். இதன் புகை நாலா புறமும் பரவி நறுமணமாக கமழட்டும்.

இன்னும் என்னவெல்லாம் எனக்கு கிடைக்கிறது தெரியுமா? அவைகளை எல்லாம் இதோ பட்டியலிட்டு சொல்கிறேன். இவைகள் உண்மைக்கு புறம்பான பொய்கள் அல்ல. உண்மையை போல் தோன்றும் கற்பனைகள் அல்ல. பயமும் தயக்கமும் இல்லாமல் இதை நான் சொல்லுவதினால் இவை அனைத்துமே உண்மைகள். என்றும் நிலைத்து இருக்கும் சத்தியங்கள்.

யாகங்களால் நான் உண்மையென்னும் பேருலகில் நிலைத்து இருக்கிறேன். அது அசத்தியத்தில் இருந்து என்னை எப்போதும் பாதுகாவல் செய்கிறது. எனது சொற்களில் சத்தியம் மட்டுமே ஒலிப்பதனால் நான் எப்போதும் நாணயத்திடமிருந்து பிரியாமல் இருக்கிறேன்.

தர்மத்தை மட்டுமே எனது கண்கள் பார்ப்பதனால் நேர்மை என்ற காவல் படை என்னை சுற்றி எப்போதும் அரணாக இருக்கிறது. வெற்றியை தருவது சத்தியம் மட்டும் தான் என்பதனால் நான் அடைகின்ற ஒவ்வொரு வெற்றியுமே சத்தியத்தின் வடிவங்களாக மின்னுகிறது.

எனது பசுக் கூட்டத்தின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அதனால் எனது செல்வம் மிகுதியாகிறது. எனது சொத்துக்கள் பல மடங்கு பெருகுகிறது. எனது பொருட்கள் குவிவதனாலும் பெருகுவதானலும் நான் அதை அனைவரிடத்திலும் பகிர்ந்து கொள்கிறேன். அந்த பகிர்வு எனக்கு மகிழ்ச்சி பேரை தந்த வண்ணமே உள்ளது.

இந்த மகிழ்ச்சியினால் அதிகமான குழந்தைகள் எனது வீட்டில் பிறக்கின்றன. குழந்தைகளின் மழலை நாதம் என் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. மதுவை விட அதிகமான போதையும் பெண்ணை விட அதிகமான சுகத்தையும் வாரி தருவது குழந்தைகளின் அருகாமையும் மழலை மொழிகளும் தானே. குழந்தைகளே மனிதர்களின் சொர்க்கமாவார்கள்.

யாகங்களால் எந்த நோயும் என்னை அனுகாது அதனால் நான் பிணி என்ற பெரும் துன்பத்தை அனுபவிக்கவே மாட்டேன். எனது உடல் வலுவாக இருப்பதனால் எனது வலது கையில் இருக்கும் ஏர்முனை தானியங்களை உற்பத்தி செய்கிறது. இடது கையில் இருக்கும் கூர்மையான ஈட்டி எனது மக்களை பாதுகாக்கிறது.

எனது ஆயுள் பரிபூரணமாக இருக்கும். மரணம் எப்போது வந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராகவே இருக்கிறேன். ஏனென்றால் அது வாழ்வில் ஒருமுறை மட்டுமே வரக்கூடியது. தவிர்க்க முடியாத அதை எண்ணி நான் ஏன் வருத்தப்பட வேண்டும் எப்போதுமே நான் சுதந்திர காற்றை சுவாசிப்பவனாக இருக்கிறேன்.

நான் எவராலும வெல்ல முடியாதவன் என்னை அடிமையாக்கும் தகுதி எவருக்குமே இல்லை. எனக்குரிய பசுக்கள் மட்டுமல்ல எல்லாமே பெருகும். கல்லும், களி மண்ணும், குன்றுகள், பாறைகளும், தங்கமும், பித்தளையும், இரும்பும் இதர உலோகங்களும் நீரும், நெருப்பும் எப்போதுமே குறையாமல் எனக்காக பெருகிக் கொண்டே இருக்கும்.

இதே மாதிரியான பல விஷயங்களை பேசி கொண்டு செல்லும் யஜூர் வேதம் கடைசி பகுதிகளில் தெய்வத்துடனான சிந்தனையை ஒருமுகப்படுத்துகிறது. இறைவனுடன் ஆத்மாவானது இரண்டற கலந்தால் தான் நிரந்தரமான அமைதியும் சந்தோஷமும் கிடைக்குமென்று சொல்கிறது அப்படி பேசும் யஜூர் வேத பாடல் ஒன்றை சிந்தித்து பார்ப்போம்.

இந்த பூமியிலுள்ள எல்லாமே இறைவனின் படைப்புகள் தான் ஒரு சிறு மண் துகள்கள் கூட மனிதனால் உருவாக்கப்பட்டது அல்ல. அவன் படைத்தவற்றை வைத்து நாம் மகிழ்ச்சியை பெருக்கி கொள்கிறோம். அவன் படைப்பை நாம் அனுபவிக்க அயராது உழைக்க வேண்டும். உழைத்தால் தான் ஆயுள் கூடும். ஆரோக்கியம் பெருகும் உழைக்காமல் கிடந்தால் கல்லைப் போல் வாழ்ந்து காலனின் கைகளில் அகப்பட்டு அழிய வேண்டியது தான்.

மரணத்திற்கு பிறகு நாம் என்னவாக மாறுகிறோம் நமக்கு என்ன நேருகிறது. நாம் எங்கே போகிறோம். நமது பயனத்தின் விவரம என்ன என்ற கேள்விகள் அனைத்திற்கும் மர்ம முடிச்சுகளே பதிலாக கிடைக்கிறது. இந்த பதில்களை பற்றி கவலைபடாமல் இறைவனின் திருவடியே அடைவதற்கு நாம் முயற்சிக்க வேண்டும்.

அவனை போய் அடைவது மட்டுமே நமது பயணத்தின் நோக்கமாக இருக்க வேண்டும். அவன் இருக்கும் இடத்திலேயே நமது பயணம் முடியும். அவன் எப்படி பட்டவன் எத்தகைய குண இயல்பு கொண்டவன் எதுவும் நமக்கு தெரியாது அவன் அசைவற்றவன். அதே நேரம் எல்லாவற்றையும் அசைத்து கொண்டிருப்பவன். அவன் நம்மிடமிருந்து தொலைவிலும் இருக்கிறான் அருகிலும் இருக்கிறான். அவன் எங்கும் நிறைந்தவனாக இருக்கிறான். அவன் இல்லாத இடம் என்று பூமியிலும் ஆகாயத்திலும் எதுவுமே இல்லை.

இதை மனிதன் புரிந்து கொள்ள வேண்டும். அந்த புரிதல் தான் அறிவு அது தான் ஞானம். இந்த ஞானம் பிறந்து விட்டால் ஐயம் இல்லை, எண்ணம் இல்லை, குழப்பம் இல்லை எல்லாவற்றிற்குமே முற்று புள்ளி ஏற்பட்டுவிடும். அவனை பற்றிக்கொண்டால் அடைந்து விட்டால் உடல் என்ற கூடு நமக்கு இல்லை உடல் வேதனைகளும் ஆசைகளும் அவஸ்தைகளும் ஏற்படப்போவது இல்லை. ஏன் என்றால் பிறக்க வேண்டிய அவசியமே நமக்கு இல்லை. பிறப்பும் இறப்பும் இறப்பும் பிறப்பும் முற்றிலுமாக அழிந்தே விடுகிறது. நாம் ஒளிமயம் ஆகிவிடுவோம். மிகத்தூயதாக மாறிவிடுவோம்.

அதோ அந்த பொன் மயமான உலகத்தில் அவன் அமர்ந்து இருக்கிறான். அவனுக்கு அருகில் மிகப் பெரும் சிம்மாசனம் போடப்பட்டிருக்கிறது. அதில் நாமும் அவனும் சமமாக அமரலாம். அவனது இந்த உலகம் தான் சொர்க்கம். அவன் தான் அனைத்துமாய் ஆன பிரம்மம். அவனை அடைந்த பின் நமக்கு கிடைப்பது அழிவற்ற குழப்பமில்லாத அன்பு மயமான சாந்தி! சாந்தி! சாந்தி! மட்டுமே.

யஜூர் வேத பாடல்கள் அனைத்தும் கங்கை கரையில் மக்கள் பரவி வாழ்ந்த பிறகு உருவானவைகளாக இருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்ற கருத்தை இந்த பாடல் வகள் மெய்பிக்கின்றன. சிந்து நதி ஓரம் வாழ்ந்த போது 33 தேவதைகளை வழிபட்ட இவர்கள் யஜூர் வேத காலத்தில் சிந்தனை கூர்மைபட்டவர்களாக காணப்படுகிறார்கள்.

இவர்கள் வாழ்க்கையில் அபாயங்கள் குறைந்து அமைதி நிலவிய காலமாக இது இருந்திருப்பதினால் தான் மனம் இறைவனை பற்றி அவன் ஒருமையை பற்றி சிந்திக்க வழி ஏற்பட்டிருக்கிறது. அதன் விளைவுகளையே இந்த பாடல்களின் மூலக் கருத்தாக அமைந்திருப்பதை நாம் காணலாம். இந்த யஜூர் வேத கருத்துக்கள் தான் நாளடைவில் ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள் உலகம் ஓர் இன்பகேணி என்ற கருத்துக்களின் விரிவாக்கமாக அமைந்திருக்கிறது. இனி நாம் சாம வேதத்தை பற்றி சிந்திப்போம்.
 

Via FB இந்து மத வரலாறு - Religious history of hinduism