இந்து மத வரலாறு - பாகம் 23

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:03 | Best Blogger Tips



விராட் புருஷன் எல்லா தெய்வங்களை விட மேம்பட்டவன். இவனுக்கு இணையாக எந்த கடவுளும் இல்லை. ஏனென்றால் இவனே எல்லா கடவுளுமாக இருக்கிறான். இவனது மனதிலிருந்துதான் சந்திரன் தோன்றினான் இவன் கண்களிலிருந்து சூரியன் தோன்றினான். இந்திரனும் அக்னியும் இவனது வாயிலிருந்து தோன்றியவர்களே. இவன் சுவாசம் தான் வாயுவாகும். உலகத்தில் காணுகின்ற யாவும் காணாத எல்லாமும் இவனன்றி வேறில்லை. உலகப் பொருளாகவும் இருக்கிறான் அந்த பொருட்களுக்கு அப்பாலும் இருக்கிறான்.

இப்படி 16 பாடல்களாக புருஷ சூத்தகம் பிரம்மத்தை பற்றியும் அதன் உருவம் ஆற்றல் குறித்து விளக்கி கொண்டு போகிறது. இந்த விளக்கங்களுக்கு இடையில் மனித சிருஷ்டியை பற்றியும் பேசுகிறது. இனி ரிக் வேதத்தின் அக்னி என்ற இரண்டாவது மண்டலத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை பார்ப்போம்.

அக்னியை அழியக்கூடிய பிறவிகொண்ட மனிதனான எங்களுக்கு நாள்தோறும் சக்தியை கொடு அதேநேரம் அழிவற்ற நிலையை நோக்கி செல்லும் பாதையை காட்டி அருள் கொடு இப்போதும் இனி எப்போதும் குறைவில்லாத வளம் கொழிக்கும் வாழ்க்கையையே அறிவாளி வேண்டுகிறான். அந்த குறைவற்ற நிறைவான வாழ்வை எப்போதும் கொடுத்துக் கொண்டே இரு இப்படி அக்னி தேவனை நம்பிக்கையுடன் வழிபடும் வேத ரிஷி உரிமை நிறைந்த உறவுடன் அக்னியின் அருகில் நெருக்கமாக சென்று

அக்னியே எங்களிடம் அன்பு கொண்டவனாகவே நீ எப்போதும் இருக்கிறாய். நீ தான் எங்களுக்கு உயிர் கொடுத்த தந்தை என்பதை நாங்கள் அறிகிறோம். நீ எவராலும் வெல்ல முடியாத வல்லமை படைத்தவன் எனவே உனது குழந்தைகளை பலசாலிகாளக பார்க்கவே நீ விரும்புவாய். உன்னை வணங்கும் எங்களுக்கு நீயே பாதுகாவலன் நாங்கள் கேட்பதெல்லாம் எங்களை நூறு நூறாகவும் ஆயிரம் ஆயிரமாகவும் பெருக்கு. உன்னிடம் நாங்கள் சரணடைகிறோம்.

இந்த ரிக் வேத பாடல் ஒரு தோத்திர பாடலாக மட்டுமல்லாது அந்தகால மக்களின் நிலையை படம் பிடித்து காட்டும் காலக் கண்ணாடியாகவும் இருக்கிறது. வேதப் பாடல்களை வடித்தெடுத்த இந்த மக்கள் தாங்கள் வாழும் பகுதியில் வாழ்ந்த மற்ற மனித கூட்டத்தோடு ஒற்றுமையாக இல்லை. அவர்களுடன் போராடிக் கொண்டே இருந்தனர் மனித எண்ணிக்கையும் அடிப்படையில் அன்றைய யுத்தத்தில் வெற்றி தோல்விகள் தீர்மாணிக்கப்பட்டதால் ஆள் பலம் தங்களுக்கு வேண்டுமென்று நெருப்பு தேவியிடம் பிரார்த்தனை செய்கிறான். இதில் இன்னொறு உண்மையும் மறைந்திருக்கிறது. நெருப்பு என்பது விரகுகளை மட்டுமே பற்றிக் கொண்டு எரியும் ஒரு பொருள்ளல்ல எல்லா உயிர்களிடத்திலும் உடம்பிற்குள் அக்னி மறைந்திருக்கிறது. ஜனனத்தை அதிகப்படுத்தும் காமமும் ஒரு வகையில் நெருப்புதான் பித்த உடம்பு அதாவது சூடான உடம்பும் படைத்த மனிதனால் உடனுக்குடன் பிள்ளைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவே இந்த பாடல் அக்னியை போற்றும் பாடலாக மட்டும் அல்லாது இதை முறையிலான சந்தலயங்களோடு ஓதினால் மனித உடம்பில் வெப்பத்தை அதிகபடுத்தும் அதிர்வுகளும் நிறைந்துள்ளதை அனுபவத்தில் உணரலாம்.

இதனால்தான் வேத ரிஷி அக்னியை தந்தை என்று உணர்வு பூர்வமாக பாடுகிறான். அதனுடைய உறவையும் நெருக்கத்தையும் வேண்டுகிறான். எல்லா வெளிச்சங்களிலேயும் அக்னியை காண்கிறான். சூரியனும் சந்திரனும், நட்சத்திரங்களும், மின்னலும் அவனுக்கு அக்னி வடிவாகவே தெரிந்தது. அக்னியை பற்றி வேத பாடல் ஆசிரியர் கூறுவதை உபநிஷத ஞானி தத்துவ நோக்கில் நமக்கு காட்டுகிறான். இருட்டிலிருந்து உண்மைக்கு என்னை கூட்டிசெல்வாயாக பொய்யிலிருந்து என்னை மீட்டு செல்வாயாக அழிவிலிருந்து அழிவற்ற அமிர்த நிலைக்கு என்னை அழைத்து செல்வாயாக என்று அக்னி தேவனிடம் முறையிடும் உபநிஷத வாக்கியம் அக்னியை ஞான வடிவாக நமக்கு காட்டுகிறது.

ரிக் வேதத்தின் இரண்டாம் மண்டலம் இந்திரனையும் மூன்றாவது பகுதி வருணனையும் நான்காவது வாயுவையும் பற்றி பேசுகிறது. அவையாவும் ஏறக்குறைய முதல் மண்டல கருத்துகளை போலவே இருப்பதனால் இனி ஐந்தாம் மண்டலத்தில் சூரியனை பற்றி சொல்லப்பட்டிருப்பதை பார்ப்போம்.

வேத ரிஷி சூரியனை துதிக்கும் போது அவனுக்கு பல பெயர்களை சூட்டி மகிழ்கிறான். சூரியனை இருட்டின் பகைவன் என்றும் மனிதச் சோம்பலின் எதிரி என்றும் பாராட்டுகிறான். சூரியனை சோம்பலின் எதிரியாக காட்டுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. வேதகால மனிதன் சோம்பி இருக்க முடியாத நிலையில் இருந்தான். பகைவர்களிடமிருந்தோ கொடிய மிருகங்களிடமிருந்தோ சதாகாலமும் அவனை அபாயம் துரத்திக் கொண்டே இருந்தது. சூரியன் மறைந்து விட்டால் அவனது அச்ச உணவு அதிகபட்டது பாதுகாப்புணர்வு இன்னும் அதிகமாக தேவைப்பட்டது அதனால் அவன் இருட்டை வெறுத்தான் இருட்டை கிழித்தெரியும் பகலவனை வரவேற்றான். ஒளி தருகின்ற அனைத்து பொருட்களையுமே தனது நண்பனாக கருதி அன்பு செலுத்தினான் ஆராதனை செய்தான். இந்த உணர்வுகளை சூரியனை பற்றிய ரிக் வேதப் பாடல்கள் தெளிவாக காட்டுகிறது.

அதனை அடுத்தபகுதியில் பார்க்கலாம்..




Via FB இந்து மத வரலாறு - Religious history of hinduism