யஜூர் வேதம் இந்த பெயர் பெறுவதற்கு வழிபடுதல் என்ற பொருளைக் கொண்ட யஜ் என்ற வினைச் சொல் மூலக் காரணமாகும். நான்கு வேதங்களில் இது இரண்டாவது இடத்தில் வைக்கப்படுகிறது. இந்த வேதத்தில் அரசர்களும் குடிமக்களும் பின் பற்ற வேண்டிய சடங்கு முறைகளை பற்றியும் அந்த சடங்குகளை செய்யும் போது சொல்ல வேண்டிய மந்திரங்களை பற்றியும் விரிவாக கூறுகிறது.
அதனால் இது மந்திரப்பகுதி, சடங்கு பகுதி என்று இரு பகுதிகளை கொண்டதாகவும் மந்திரங்களை கூறும் பகுதி சுக்கில யஜூர் என்றும் சடங்குகளை கொண்ட பகுதி கிருஷ்ண யஜூர் என்றும் பெயர் சூட்டி அழைக்கப்படுகிறது. யஜூர் வேதத்தில் உள்ள பாடல்களின் மொத்த எண்ணிக்கை 1946 ஆகும்.
இந்த பாடல்கள் பெறும் பகுதி சுக்கில யஜூர் வேதத்திற்குள் அடங்கி விடுகிறது. கிருஷ்ண யஜூர் வேதப்பகுதி உரைநடையாகவே இருக்கிறது. பொதுவாக மற்ற வேதங்களை போலவே இதிலும் சம்ஹிதை, பிரமாணம், ஆரண்யம் என்ற மூன்று பிரதானப் பகுதிகளும் கடைசியாக தத்துவ விளக்கங்களை கூறும் உபநிஷத பகுதியும் உண்டு. யஜூர் இரண்டு பாகமாக பிரிக்கப்பட்டிருப்பதால் ஆரண்யம் என்பது சுக்கில பகுதியில் மட்டுமே காணப்படுகிறது.
யஜூர் வேதம் 40 அத்யாயங்களை கொண்டது இதில் பெரிய அத்யாயங்களும் சிறிய அத்யாயங்களும் அடங்கியுள்ளது. ஒவ்வொரு அத்யாயமும் ஒரு தனிப்பட்ட விஷயத்தை பற்றி மட்டுமே பேசவில்லை. பலதரப்பட்ட விஷயங்களின் கலவையாகவே ஒவ்வொரு அத்யாயமும் அமைந்துள்ளது.
இதில் உள்ள மந்திரங்கள் சடங்குகளின் போது ஒருவராலோ, பலராலோ ஓதப்படும் வண்ணம் அமைந்துள்ளது. சடங்குகள் எதற்காக செய்யப்பட்டாலும் நெருப்பு இல்லாமல் எந்த சடங்குகளும் வேதகாலத்தில் நிகழ்த்தப்பட முடியாது. சடங்குகளின் நெருப்பு அவசியம் என்பதனால் அந்த நெருப்பை மூட்ட சமித்துக்கள் என்ற மரக்குச்சிகள் தேவை. எல்லா மரங்களிலுள்ள உலர்ந்த குச்சிகளை சமித்துக்கள் என்று அழைத்துவிட முடியாது. சில குறிப்பிட்ட வகை மரக்குச்சிகளை தான் குறிப்பாக அரசு, மா, தேவதாரு, சந்தனம் போன்ற மரக்குச்சிகளை தான் வேதகால ரிஷிகள் சமித்துக்கள் என்ற தகுதியில் அழைத்தார்கள். அவர்கள் அன்று சமித்துக்கள் என்று தனித்தகுதி சிறபித்த மரக்குச்சிகளே இன்றளவும் யாகங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சடங்குகள் என்பது ஒரு தனி மனிதனின் சுய தேவைக்காகவும் ஒரு சமுதாயத்தின் பொது நோக்கத்திற்காகவும் நடத்தப்பட்டது. தனி மனிதனுக்குரிய சடங்குகளை செய்ய எழுப்பப்படும் அக்னி குண்டங்கள் அல்லது யாகசாலைகள் ஆகவனியம், தட்சனாக்னியம், காரக பத்தியம் என்று மூன்று வகையாக அழைக்கப்பட்டது.
எந்த திசையை நோக்கி யாக குண்டம் அமைக்கப்படுகிறதோ அதை பொறுத்து. அதாவது மேற்கு திசை நோக்கி யாக சாலை அமைக்கப்பட்டால் காரகபத்தியம் என்றும் கிழக்கு நோக்கி அமைந்தால் ஆகவனி என்றும் தெற்கை நோக்கி அமைந்தால் தட்சனாக்னியம் என்றும் வழங்கப்பட்டது.
இனி யஜூர் வேதத்தின் சில பகுதிகளை பார்ப்போம் இந்த வேதத்தின் முதல் பாடல் சூரிய தேவனை வணங்கி ஆரம்பிக்கிறது. ஒளி மயமான கதிர்களுடன் கிழக்கு வானிலிருந்து புறப்பட்டு வரும் சூரிய தேவனே உன்னை மங்களமாரன வார்க்தைகள் சொல்லி வரவேற்கிறேன்.
நீ எங்கள் பசுகூட்டத்தை பாதுகாக்கிறாய் அவைகளின் மீது மிருகங்களும் துஷ்டமனிதர்களும் பாயாதபடி வெப்பம் நிறைந்த உனது கண்களால் பார்த்துக் கொண்டிருக்கிறாய். எங்களது செல்வங்களான பசுக்களின் எண்ணிக்கை வளரும் வண்ணம் அவற்றிற்கு தாராளமாக உணவை கொடுகிறாய்
இந்த பசு செல்வங்களை எங்களிடமிருந்து அபகரிக்க நினைக்கும் தீய மனம் கொண்ட பகைவர்களை உன் ஒளிக்கரங்களால் விரட்டுகிறாய். அதற்கு நன்றி செலுத்த இந்த யாகத்தில் உனக்குய பங்கினை அக்னியிடம் கொடுக்கிறேன். உன் பங்கு மேன் மேலும் பெருகட்டும் என்று சூரியனை வேதகால ரிஷி போற்றி வணங்குகிறான்.
இந்த பாடல் மூலம் அடிப்படையான இரண்டு விஷயங்கள் நமக்கு தெரியவருகிறது...
தொடரும்..
Via FB இந்து மத வரலாறு - Religious history of hinduism