முல்லா வாழ்வில் நடந்த ....

மணக்கால் அய்யம்பேட்டை | PM 6:24 | Best Blogger Tips
வெற்றி பெற வேண்டும் என்றால் சகிப்புதன்மை இருக்க வேண்டும். ஓடு மீன் ஓட உறு மீன் வரும்வரையில் காத்திருக்குமாம் கொக்கு என்பதைபோல, சாதிக்க வேண்டுமானால், நம், கொள்கையின் இலக்கை எட்ட வேண்டுமானால் அத்தகைய நேரமும், காலமும் அமையும்வரையில் காத்திருந்தால் வெற்றிதான்.

இதைதான் நம் முன்னோர்கள். “பொறுத்தார் பூமி ஆள்வார்” என்றார்கள்.

முல்லா வாழ்வில் நடந்த ஒரு சுவரஸ்யமான கதை இது.

முல்லா வழக்கமாக சாப்பிடும் உணவகத்திற்கு வந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது அந்த ஊரில் உள்ள முரடன் ஒருவன், உணவகத்திற்குள் வந்தான். அவனை பார்த்த மற்ற வாடிக்கையாளர்கள் ஓடிவிட்டார்கள். முல்லா இதை கவனித்தார். இருந்தாலும், அந்த முரடனை பார்த்து பயப்படாமல் சாப்பிட்டுகொண்டிருந்தார். முல்லாவின் அருகில் வந்த முரடன், முல்லாவின் தலைபாகையை தட்டிவிட்டு சென்றான்.

இப்படி ஒருமுறை அல்ல. ஒவ்வோரு நாளும் முல்லா வழக்கமாக அந்த உணவகத்திற்கு சாப்பிட வரும்போதெல்லாம், அந்த முரடன் வந்து முல்லாவின் தலைபாகையை தட்டிவிட்டு செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தான்.

இதை பார்த்த அங்கிருந்தவர்கள் முல்லாவிடம் வந்து, “உங்களுக்கு இந்நாட்டு அரசர் நண்பராயிற்றே. இந்த முரடனை பற்றி மன்னரிடம் சொன்னால் எல்லோருக்கும் நிம்மதியல்லவா?” என்றார்கள்.

அதற்கு முல்லா, “அந்த முரடனிடம் விரோதம் எதற்கு?. ஒருவேளை அவன் தண்டனையிலிருந்து விடுதலை ஆன உடன், நான் அவனுக்கு எதிரியாக தெரிவேன். எனது வேலை அவனுடன் மோதி கொண்டிருப்பதல்ல.” என்றார்.

“அப்படி என்றால் இந்த முரடனின் செயல்களுக்கு முற்றுபுள்ளி எப்போது” என கேட்டனர் மக்கள்.

“இறைவனின் விருப்பம் எப்போதோ அப்போது” என்றார் முல்லா.

ஒருநாள். வழக்கம்போல உணவகத்திற்கு வந்து கொண்டிருந்தார் முல்லா. எதிரே மன்னரின் காவலர் வந்துக்கொண்டிருந்தார். முல்லாவும் அந்த காவலரும் நண்பர்கள்.

தன்னுடன் வந்து சிற்றுண்டி சாப்பிடும்படி காவலரை அழைத்தார் முல்லா. அவரும் சம்மதித்து இருவரும் உணவகத்திற்கு வந்து அமர்ந்தார்கள்.

அப்போது, அந்த முரடன் வருவதை கவனித்துவிட்டார் முல்லா. உடனே அவருக்கு ஒரு யோசனை தோன்றியது.

தனது நண்பரான மன்னரின் காவலரிடம், “நண்பரே என்னுடைய தலைபாகை உங்களுக்கு அழகாக இருக்கும். அணிந்து பாருங்கள்.” என்றார் முல்லா.

காவலரும் முல்லாவின் தலைபாகையை அணிந்தார். உடனே முல்லா, ”இங்கேயே உட்கார்ந்து இருங்கள். இதோ வந்துவிடுகிறேன்.” என்ற முல்லா, அங்கிருந்து எழுந்து சென்று அந்த உணவகத்தின் வேறு ஒரு இருக்கையில் அமர்ந்துக்கொண்டார்.

முரடன் வந்தான். வழக்கமாக முல்லா அமர்ந்திருக்கும் இருக்கையில் மன்னரின் மெய்காவலர் அமர்ந்து இருப்பதை கவனிக்காமல், தலைபாகையை பார்த்து முல்லாதான் அமர்ந்து இருப்பதாக நினைத்து தலைபாகையை தட்டிவிட்டான் முரடன்.

மன்னரின் மெய்காவலருக்கு வந்ததே ஆத்திரம். தனது வாளை உருவி முரடனின் தலையை ஒரே சீவாக சீவி கொன்றார். இதை பார்த்த மக்கள் மகிழ்ந்தார்கள். பிறகு ஒன்று தெரியாததைபோல வந்த முல்லா, ”நண்பரே மன்னிக்கவும். உங்களை காத்திருக்க வைத்துவிட்டேன். வாருங்கள் கிளம்புவோம்.” என்று காவலரை அழைத்து சென்றார் முல்லா.

முரடனுடன் நேரடியாக மோதினால் ஆபத்து தனக்குதான் என்பதை உணர்ந்து, இந்த முரடனை அடியோடு அழிக்க காத்திருந்த முல்லாவின் சாமர்த்தியம் இது என்பதை மக்கள் புரிந்து, முல்லாவை பாராட்டி பேசினார்கள்.

ஆம். காரியம் சாதிக்க வேண்டும் என்றால் சகிப்புதன்மை வேண்டும். அந்த சகிப்பு தன்மை இருந்தால்தான் நிரந்தரமான வெற்றி கிடைக்கும், அமைதியும் கிடைக்கும் என்பதற்கு இந்த கதை ஒரு உதாரணம்.

Astrologer, Sri Durga Devi upasakar,
V.G.Krishnarau.