சிவனடியார் திருநாவுக்கரசர்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:30 | Best Blogger Tips

நமக்கு வீட்டிலோ, அலுவலகத்திலோ ஒரு சோதனை வந்துவிட்டால் போதும்... கடவுளைத் திட்டித் தீர்த்து விடுவோம். முற்பிறப்பில், நாம் செய்த பலாபலன்களை இப்பிறப்பில் இவ்வாறு தீர்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர்வதில்லை.

கடலூர் மாவட்டத்திலுள்ள திருவாமூரில், அவதரித்தவர் திருநாவுக்கரசர். தந்தை புகழனார், தாய் மாதினியார், அக்கா திலகவதி. இவர் முற்பிறப்பில், வாகீசர் என்னும் முனிவராக கயிலாயத்தில் இருந்தார்.

ஒருமுறை, அகம்பாவம் மிக்க ராவணன், தன் புஷ்பக விமானத்தில், கயிலை மலையைத் தாண்டி பறக்க முயற்சித்தான்.

"
சிவபார்வதியின் இருப்பிடத்திற்கு மேலாக பறக்கக்கூடாது, சுற்றிப்போ...' என, மலையின் காவலரான நந்தீஸ்வரர் அவனை எச்சரித்தார். அதைக் கேளாத ராவணன், "நான் நினைத்தால் இந்த மலையையே தூக்கி வீசி விடுவேன்...' என்று, தன் 20 கைகளாலும் பெயர்த்தெடுக்க முற்பட்டான். சிவன், தன் கால் விரலால் மலையை அழுத்த, கை உள்ளே சிக்கிக் கொண்டது. வலி தாளாமல் அழுது புலம்பினான் ராவணன்.

அவ்வழியே வந்த வாகீசர், அவனுக்காக இரக்கப்பட்டு, "சிவனைப் புகழ்ந்து பாடு, நீ விடுதலையடைவாய்...' என்றார். அவனும் அவ்வாறே செய்ய, சிவன் அவனை வாழ்த்தி, ஐம்பது லட்சம் ஆண்டுகள் வாழும் வரத்தை அருளினார்.

இந்தச் செயல் நந்தீஸ்வரருக்கு பிடிக்கவில்லை. தெய்வ நிந்தனை செய்த ஒருவனுக்கு, அதிலிருந்து விடுதலையடைய யோசனை சொன்ன வாகீசரை, பூமியில் பிறக்கும்படி சபித்து விட்டார். அந்த வாகீசரே, திருநாவுக்கரசராக பூமியில் பிறந்தார்.

பூமியில் பிறந்ததோடு தண்டனை முடிந்ததா என்றால் இல்லை. அவருக்கு சோதனைகள் தொடர்ந்தது. தாய், தந்தையை இளமையிலேயே இழந்தார். அக்காவின் திருமணத்திற்கு நிச்சயித்திருந்த மாப்பிள்ளையும் போரில் இறந்து போனார். அக்கா மனமுடைந்து இறக்க இருந்த நிலையில், "உன் தம்பிக்காக உயிர் வாழக் கூடாதா?' என்று கதறினார். அக்கா தன் மனநிலையை மாற்றிக்கொண்டு, தம்பிக்காக உயிர் வாழ்ந்தார்.

விதிவசத்தால் சிவனை வணங்கும் சைவரான அவர், சமண மதத்தில் சேர்ந்தார். தம்பியின் மதமாற்றம் கண்டு, அக்கா கண்ணீர் வடித்தார்; சிவனிடம் பிரார்த்தித்தார். சிவனும், திருநாவுக்கரசருக்கு கடுமையான நோயைத் தந்து, அவரை மீண்டும் சைவத்திற்கே திரும்பும்படி செய்தார். மீண்டும் மதம் மாறியதால், கோபமடைந்த சமண ஆதரவு மன்னன் மகேந்திரவர்மன், அவரை சுண்ணாம்பு காளவாசலில் இட்டான். கல்லைக் கட்டி கடலில் தூக்கிப் போட்டான்.
விண்ணிலும் துன்பம், மண்ணிலும் துன்பம் என வாழ்ந்தாலும், இறைவனை ஒருநாள் கூட அவர் கடிந்து கொள்ளவில்லை. மாறாக, "நாமார்க்கும் குடியல்லோம், நமனையஞ்சோம்' என்று, எமனுக்கே சவால் விட்டார். சுண்ணாம்பு காளவாசலில் கிடந்த போது கூட, வீணையின் இசை போலவும், குளிர்ந்த நிலா போலவும், தென்றலின் குளுமை போலவும் தனக்கு அந்த இடம் குளுமையாக இருப்பதாகவே பாடினார். "மாசில் வீணையும், மாலை மதியமும், வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்...' என்ற அவரது பாட்டு, இன்றும் சோதனைகளைத் தாண்ட உதவுவதாக இருக்கிறது.

திருநாவுக்கரசர், சித்திரை சதய நாளில் இறைவன் திருவடி நிழலை அடைந்தார். அந்த நாளில் அவருக்கு குருபூஜை நடத்தி, அவரையே மானசீக குருவாக ஏற்று, எவ்வளவு சோதனை வந்தாலும், அதனைத் தாண்டும் வல்லமையைப் பெறுவோம்.


-
தி. செல்லப்பா