புருஷ சூக்தம் மத்திரம் !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:35 | Best Blogger Tips
வேத சம்ஹிதைகளின் மிகப் பிரபலமான மந்திரங்களில் ஒன்று புருஷ சூக்தம் எனலாம். எல்லா வைதீக சடங்குகளிலும், வேள்விகளிலும், வழிபாடுகளிலும், பூஜைகளிலும் ஓதப் பெறும் ஒரு சூக்தம் இது. முதன்முதலில் ரிக்வேத சம்ஹிதையில் தோன்றும் இந்த சூக்தத்தின் மந்திரங்கள் சில இணைப்புகளுடன் யஜுர், சாம, அதர்வ வேதங்களிலும், சில உபநிஷதங்களிலும் மீண்டும் மீண்டும் வருகின்றன. அனைத்திலும் ஊடுருவி நிற்கும் பரம்பொருளை புருஷன் என்ற பெயரால் சுட்டி, அந்தப் பரம்பொருளே சிருஷ்டியின் கூறுகளாக வியாபித்திருக்கிறார் என்று போற்றிப் புகழ்கிறது இந்த சூக்தம். பிரார்த்தனை, சடங்கு, தத்துவம் என்ற மூன்று அம்சங்களையும் கொண்டு தன்னளவில் ஒரு முழுமையான சாஸ்திரமாகவே புருஷ சூக்தம் அமைந்துள்ளது எனலாம்.

புருஷன் என்ற சொல்லில் இருந்தே தொடங்கலாம்.

முன் செல்பவன் புருஷன் (புரதி அக்ரே கச்சதி ய:)
அனைத்தையும் தன் சக்தியால் நிரப்புபவன் புருஷன் (பிப்ரதி பூரயதி பலம் ய:)
அனைத்தையும் நிறைத்தும், மறைந்திருப்பவன் புருஷன் (புரி சே’தே ய:)
ஒளிமயமானவன் புருஷன் (புர்+உஷ: )
அழியாத இன்பத்தால் நிறைந்தவன் புருஷன் (புரு+ஷ:)

இவ்வாறு இந்தச் சொல்லுக்கு வேத அகராதிகள் மற்றும் பிராமணங்களின் துணை கொண்டு பல்வேறு அர்த்தங்கள் தரலாம்.

புருஷனின் ”முக்கால் பகுதி விண்ணில் உறைகிறது” என்பதன் பொருள் நமக்கு வெளிப்பட்டு நிற்கும் இயற்கையை விடவும், வெளிப்படாது நிற்கும் பேரியற்கை மிகப் பெரியது என்பதாம். நாம் வசிக்கும் பூமி போல, அது அமைந்துள்ள சூரியக் குடும்பம் போல, அந்த சூரியக் குடும்பம் அமைந்துள்ள பால்வீதி போல, அந்தப் பால்வீதி சுழல்கின்ற பிரபஞ்சம் (universe) போல, ஏராளமான கிரகங்களும் சூரியக் குடும்பங்களும், பால்வீதிகளும், பிரபஞ்சங்களும் கொண்டது பேரியற்கை. நவீன அண்டவியல் (cosmology) கூறும் இந்த பிரம்மாண்டத்தின் அதிசயத்தையே கவித்துவ மொழியில் இந்த மந்திரமும் கூறுகிறது.

”புருஷனிடமிருந்து ‘விராட்’ தோன்றினான்; பின்னர் ’விராட்’டிலிருந்து பல்லுயிர்களாக புருஷன் தோன்றினான்” என்கிறது அடுத்த மந்திரம். இங்கு முதலில் கூறப்பட்ட புருஷன் என்பது வெளிப்படாத பேரியற்கை (அவ்யக்தம்). இரண்டாவதாகக் கூறப்பட்டது வெளிப்பட்ட இயற்கை (வ்யக்தம்). விராட் என்பது இந்த வெளிப்பாட்டிற்கான சாதனம் அல்லது சக்தி. பிற்காலத்தில். சாங்கிய தரிசனத்தின் ஆதாரமாக விளங்கப் போகும் பிரகிருதி-புருஷ தத்துவத்தின் விதைகளை இந்த மந்திரத்தில் காண்கிறோம்.

இதுவே சைவ மரபில் பின்னர் சிவ-சக்தி தத்துவமாக மலர்கிறது. வேத சொற்பொருள் விளக்கங்களில் “விராட்” என்பது பெண்பாற் சொல்லாகக் கொள்ளப் படுகிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.
அடுத்து வரும் மந்திரங்கள் பிரபஞ்ச சிருஷ்டியை ஒரு மகத்தான வேள்வியாக உருவகம் செய்கின்றன. அக்னி, நெய், சமித்துக்கள், அவி ஆகியவற்றைக் கொண்டு நிகழ்த்தப் படுபவை வேள்விச் சடங்குகள். இச்சடங்குகள் இயற்கை இடர்களிலிருந்து மக்களையும் கால்நடைகளையும் காக்கவும், லௌகீக தேவைகளை நிறைவேற்றவும் தெய்வங்களை வேண்டும் ஒரு பழங்குடித் தன்மை கொண்ட பிரார்த்தனைகள் மட்டுமே என்பதாக நவீனத்துவ அடிப்படையில் பல இந்தியவியலாளர்கள் விளக்கமளித்துள்ளார்கள். ஆனால், வேத ரிஷிகள் அத்துடன் நின்றுவிடவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.

இந்தச் சடங்கு உடனடியாக ஒரு பிரபஞ்சம் அளாவிய குறியீடாக மாறுகிறது. அந்த கணத்தில் அங்கு ஒரு மகத்தான தத்துவப் பாய்ச்சல் நிகழ்கிறது.

யக்ஞம் என்பது sacrifice என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டு, பின்னர் அந்தச் சொல் மூலமாகவே எல்லா வேத மொழியாக்கங்களிலும் பொருள் கொள்ளப் பட்டது. இது மூலச் சொல்லின் ஒரு அம்சத்தைக் குறிக்கின்றதே அன்றி அதன் முழுமையை அல்ல. அடிப்படையில் யக்ஞம் என்பது வஸ்துக்களை ஒன்றிலிருந்து வேறொன்றாக மாற்றும் ஒரு செயல்பாடாகும். பிரபஞ்ச சக்திகளான தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான கூட்டுச் செயல்பாடு யக்ஞம். இந்தக் கருத்தையே கீதையிலும் (3.10-11) நாம் காண்கிறோம் –

தொடக்கத்தில் புருஷன் ஒருவரே இருக்கிறார். இந்த ஒன்று பலவாக ஆவதே சிருஷ்டி. அதை நிகழ்த்துவது காலம். எனவே, காலத்தின் மூன்று பரிமாணங்களான வசந்தம், கோடை, சரத்ருது ஆகியவை முறையே நெய், விறகு, அவி என்று ஆகி இந்த வேள்வி நிகழ்வதாக மந்திரம் கூறுகிறது. வேத அழகியலின் படி இந்த மூன்று பருவகாலங்களும் முறையே இந்திரன், அக்னி, வாயு ஆகிய மூன்று தேவதைகளைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.

அடுத்துள்ள மந்திரங்கள் பிரபஞ்சத்தை புருஷனின் உடலாகப் போற்றிப் பாடுகின்றன. சந்திரனை மனத்துடனும், சூரியனைக் கண்களுடனும், முகத்தை இந்திரன் – அக்னியுடனும், காற்றை மூச்சுடனும் தொடர்புறுத்தும் கவிதை உருவகங்கள் ஆழமானவை.

முடிவற்று விரிந்து செல்லும் விண்வெளி புருஷனின் தொப்புள் என்று கூறியது அபாரமான அழகியல். இதையே மேலும் விரித்து, விஷ்ணு நாபியிலிருந்து மலர்ந்தெழும் தாமரையில் அமர்ந்து படைப்புக் கடவுளான பிரமன் தனது சிருஷ்டித் தொழிலைத் தொடங்குவதாக பிற்காலத்திய புராணங்கள் அற்புதமான கலைநயத்துடன் விவரிக்கின்றன.

“குழலழகர் வாயழகர் கண்ணழகர், கொப்பூழில்
எழுகமலப் பூவழகர் எம்மானார்”

என்று ஆண்டாள் சிலிர்ப்புடன் பாடுகிறாள். உடலியல் ரீதியாக, தாயின் கருவில் இருந்து உதிக்கும் ஒவ்வொரு உயிரின் சிருஷ்டியும் தொப்புள் கொடி வழியாகவே நிகழ்கிறது என்பதையும் இதனுடன் இணைத்துப் பார்க்கலாம்.

 

நன்றி வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும் தலை முறை