மணத்தக்காளி
கொப்பும் கிளையுமாக 3 அடி வரை செழுமையாக வளரும். வேர்கள் கொத்துச் செடிகளுக்கு இருப்பதுபோல இருக்கும். மிளகைவிட சற்றுப் பெரிய காய்கள் கொத்துக் கொத்தாகக் காய்க்கும். இது சிறுசெடி இனம். இதைக் கீரையாகவும் பயன்படுத்தலாம். தமிழகம் எங்கும் மழைக் காலத்தில் ஈரப்பசை உள்ள இடங்களிலும் தோட்டங்களிலும் தானாகவே வளரும். இதில் கருப்பு, சிவப்பு என இரு வகையுண்டு. இரண்டுக்கும் பெரிய வேற்றுமை இல்லை.
வேறு பெயர்கள்: மணித்தக்காளி, மிளகுத் தக்காளி, உலகமாதா, விடைக்கந்தம், கண்ணிகம், காகதேரி, காளி, துகமாசி, குட்டலத் தக்காளி, வனங்காத்தாள், காகசிறுவாசல், ரெத்தத்திர மானப்பழத்தி, சுரனாசினி, வாயசம், காமமாசி.
தாவரவியல் பெயர்: Solanum nigrum
மருத்துவக் குணங்கள்:
இதன் பழத்தைச் சுத்தம் செய்து கொஞ்சம் தயிர் கலந்த உப்பில் சிறிது நேரம் ஊற வைத்து வெயிலில் காய வைத்து கண்ணாடிப் புட்டியில் பத்திரப்படுத்தவும். இதை வற்றலாக எண்ணெய் விட்டு வறுத்து சாப்பிட்டுவர, உடல் சூட்டைச் சமப்படுத்தி, மலச்சிக்கலைப் போக்கும். ஆனால் வயிற்றுக் கழிச்சல் உள்ளவர்கள் கண்டிப்பாகச் சாப்பிடக் கூடாது.
இதன் கீரையை உணவுடன் சேர்த்து உண்டு வர மூலம் நாளடைவில் குணமாகும்.
மணத்தக்காளி இலைச்சாறுடன் சிறிது நெய் கலந்து பூசிவர அக்கி குணமாகும்.
மணத்தக்காளி சாறு 50 கிராம் அளவு எடுத்து அத்துடன் காயத்துண்டு பொடியுடன் சேர்த்து 2 முறை குடித்துவர இடுப்பில் வலி, பிடிப்பு குணமாகும்.
மணத்தக்காளி இலைச்சாறுடன் 200 மில்லியளவு எடுத்து அதில் சிறிது நெய்விட்டுக் காய்ச்சி தண்ணீர்ப்பதம் நீங்கியவுடன் அதை வடிகட்டி 100 மில்லியளவு 2 வேளை குடித்துவர ஈரலில் உள்ள வீக்கம், குடல்புண் நெஞ்சு எரிச்சல், வயிற்றில் உள்ள கட்டிகள் கரையும்.
மணத்தக்காளி இலைச்சாறுடன் 200 மில்லியளவு எடுத்துக் காய்ச்சி வடிகட்டிக் குடித்துவர உடம்பில் உள்ள துர்நாற்றம் பேதியாகி வெளியேறும். இதே ரசத்தில் சிறிது தேன் கலந்து வாய் கொப்பளிக்க நாள்பட்ட வாய்ப்புண் ஆறும்.
மணத்தக்காளி இலையைக் கசக்கி 1/2 சங்களவு குழந்தைகளுக்குக் கொடுத்துவர, மலபந்தம் நீங்கும்.
நிலவேம்பு
கசப்புச் சுவையுடைய நீண்ட இலைகளையும் நாற்கோண வடிவில் அமைந்த தண்டுகளையும் உடைய சிறுசெடி இனமாகும். கொப்பும் கிளையுமாக 2 1/2 அடி வரை வளரும். செடி முழுவதும் மருத்துவக் குணம் உடையது. காய்ச்சலைப் போக்கவும், பசி உண்டாக்கவும் தாதுவைப் பலப்படுத்தவும், முறை நோயைப் போக்கும் குணமும் உடையது. எல்லா மண்ணிலும் தானாகவே வளரக்கூடியது.
வேறு பெயர்கள்: சாகண்ட தித்தம், நித்தார கோசா, கிராதித்தம், கிரார்த்தம், பூ நிம்பர், சாரி தீர்த்தம், கயிராதோ, லேமசனம், சிலேத்து மாதி சோபாக்னி.
தாவரவியல் பெயர்: Andrographis paniculata
மருத்துவக் குணங்கள்:
நில வேம்பு இலை, கண்டங்கத்திரி வேல் வகைக்கு கைப்பிடியளவு எடுத்து, சுக்கு 10 கிராம், சேர்த்து அரைத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாகச் சுண்டக்காய்ச்சி வடிகட்டி ஒரு நாளைக்கு மூன்று வேளை குடித்து வர, மலேரியா காய்ச்சல் குணமாகும்.
நிலவேம்பு இலையுடன், குப்பை மேனி, மஞ்சள் கரிசலாங்கண்ணி இலை சமஅளவாக எடுத்து அரைத்து நெல்லிக்காயளவு எடுத்து ஒரு டம்ளர் பசும் பாலிலோ அல்லது ஆட்டுப் பாலிலோ கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர, மஞ்சள் காமாலை குணமாகும்.
நில வேம்பு, சுக்கு, திப்பிலி, சீந்திக்கொடி வகைக்கு 10 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 மில்லியளவாக மூன்று வேளை குடித்து வர, குழந்தைகளுக்கு வருகின்ற எல்லாவிதமான காய்ச்சலும் குணமாகும்.