அக்னி நட்சத்திரம்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:38 | Best Blogger Tips

கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் நாட்களே கத்தரி வெயில் என்று சொல்லக்கூடிய அக்னி நட்சத்திரம் ஆகும்.இந்த காலம் 21 நாட்கள் முதல் 26 நாட்கள் வரை இருக்கும்.

கத்திரி என்பது தமிழ் மாதத் தேதி தொடர்பாக அமையும் காலப் பகுதி. அக்னி நட்சத்திரம் என்பது சூரியனுடைய சஞ்சாரம் தொடர்பாக அமையும் காலப்பகுதியாகும். இவ்விரண்டும் பெரும்பாலும் சித்திரை மாத இறுதி பத்து நாட்களும் வைகாசி மாத முதல் பத்து நாட்களும் இணைந்த பகுதியாகும். இந்நாட்களில் முதல் ஏழு நாட்கள் சுமாராகவும் இடையில் ஏழு நாட்கள் மிக அதிகமாகவும் கடைசி ஏழு நாட்கள் சுமாராகவும் வெப்பம் இருக்கும்.

இதற்கு சாஸ்திர ரீதியாக சொல்லப்படும் வரலாறு என்னவென்றால் முன்னொரு காலத்தில் 12 வருடங்கள் இடைவிடாமல் நெய்யூற்றி சுவேதகி யாகம் செய்தார்கள். தொடர்ந்து நெய் உண்டதால் அக்னி தேவனுக்கு மந்த நோய் ஏற்பட்டது. அவன் உடம்பில் சேர்ந்த கொழுப்பைக் குறைக்க, ஒரு காட்டை அழித்து அந்த நெருப்பைத் தின்றால்தான் தீரும். எனவே அக்னி பகவான் காண்டவ வனத்தைத் தேர்ந்தெடுத்தான்.

அவ்வனத்தில் உள்ள அரக்கர்களும் கொடிய விலங்குகளும் தாவரங்களும் சாந்தமான விலங்குகளும் தங்களை அக்னி தேவனின் அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என வருணதேவனிடம் முறையிட்டன. "அக்னி உங்களை ஒன்றும் செய்யாமல் நான் காக்கிறேன்' என வருணன் கூறினான்.

இதையறிந்த அக்னி கிருஷ்ணரிடம் ஓடி, "நான் காண்டவ வனத்தை அழிக்க முடியாமல் வருணன் கனமழை பெய்விக்கிறான். என்னைக் காப்பாற்றுங்கள்' என முறையிட்டான். கிருஷ்ணன் அர்ச்சுனனைப் பார்த்தார். அர்ச்சுனன் அம்புகளை சரமாரியாக எய்து வானை மறைத்து சரக்கூடு கட்டினான். அப்போது அக்னி தேவன் தன் ஏழு நாக்குகளால் வனத்தை எரிக்க முற்பட்டான்.

அப்போது கிருஷ்ணர், "21 நாட்கள்தான் உனக்கு அவகாசம். அதற்குள் உன் பசியைத் தீர்த்துக் கொள்' என்றார். அதன்படி அக்னி காண்டவ வனத்தை அழித்து விழுங்கி, தன் பசி தணிந்த அந்த 21 நாட்கள்தான் அக்னி நட்சத்திர தினம் என்றும் கத்திரி வெயில் என்றும் கூறுகின்றனர்.

ஜோதிட ரீதியாக பார்க்கபோனால் சூரியன் பரணி நட்சத்திரம் 3&ம் பாதம் முதல் கிருத்திகை நட்சத்திரம் முடிய வலம் வரும் காலகட்டமே அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயிலாகும். இந்த ஆண்டில் அக்னி நட்சத்திரம் மே 4&ம் தேதி (நாளை) தொடங்கி மே 29&ம் தேதி முடிகிறது. இந்த அக்னி நட்சத்திர காலமான 26 நாட்களும் தோஷ காலமாக கூறப்படுகிறது. இந்த நாட்களில் முன்பெல்லாம் எந்த விதமான சுப காரியங்களும் தொடங்க மாட்டார்கள். புதிய பேச்சுவார்த்தைகளும் துவக்க மாட்டார்கள். ஜோதிட சாஸ்திரத்தில் இது ‘அக்னி நட்சத்திர தோஷம்’ எனப்படுகிறது.

ஆனால் இப்பொழுது சுபகாரியங்கள் செய்கின்றனர்.அதனால் பாதிப்பு ஏற்படுவதில்லை என்பதே உண்மையாகும்.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.