இந்து சமய விரதங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:50 | Best Blogger Tips




இந்துக்கள் ஆன்ம ஈடேற்றங்கருதிச் செய்யுஞ் சாதனைகளில் ஒன்று விரதம். விரதம் என்னும் சொல் உண்ணும் உணவை சுருக்குதல் அல்லது விடுத்தல் என பொருள்படும். உபவாசம், நோன்பு என்பன விரதத்துடன் தொடர்புடைய சொற்களாகும். உபவாசம் என்னும் சொல் இறைவனின் அருகே வசித்தல் என்ற பொருளைத் தரும். மேலும் ஒரு தினம் அல்லது பல தினங்கள் உணவு வகை எதனையும் விடுத்து இறை தியானத்தில் இருக்கும் நிலையே உபவாசம். விரதம் என்பது ஒரு வகை விஷேட வழிபாடு ஆகும். விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள் ஐம்புலன்களையும் அடக்கி, திரிகரண சுத்தியுடன் இருத்தல் வேண்டும். மன அடக்கத்தை மேம்படுத்த முடியும். பெரியோர் கூறும் புண்ணியம் ஏழினுள் ஒன்று. விரதம் அனுஷ்டிப்பதனால் மனம் புத்தி முதலிய உட்கருவிகள் தூய்மை அடையும். இதனால் ஞானம், நல்லறிவு கைகூடும்.

பொருளடக்கம்

வரைவிலக்கணம்

மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு, உணவை விடுத்தெனுஞ் சுருக்கியேனும் மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றினாலும் கடவுளை மெய்யன்போடு வழிபடுதல் விரதமாகும்.
- ஆறுமுகநாவலர்.

விரதங்களின் வகைப்பாடுகள்

இந்து மதப் புராணத்தில் 27 வகையான உபவாச விரதங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை,
  1. உமிழ்நீரைக் கூட விழுங்காமல் இருப்பது. இதை யோகிகள் மட்டுமே கடைப்பிடிப்பார்களாம்.
  2. தேன் அல்லது இளநீர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
  3. பசுவின் பாலை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
  4. எந்த உணவுமில்லாமல் தொடர்ந்து பன்னிரண்டு நாட்கள் நீரை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
  5. காலை நேரம் மட்டும் உணவருந்தி உபவாசம் இருத்தல்.
  6. பகல் நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
  7. இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
  8. மூன்று நாட்கள்தொடர்ந்து காலை நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
  9. மூன்று நாட்கள்தொடர்ந்து மதிய நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
  10. மூன்று நாட்கள்தொடர்ந்து இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
  11. கடுமையான விரதங்களுக்கு 21 நாட்கள் வெறும் பசும்பால் மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
  12. மூன்று நாட்கள் பகல் ஒருவேளை மூன்று கைப்பிடி உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
  13. இரவில் மட்டும் மூன்று கைப்பிடி அளவு உணவு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
  14. ஒருநாள் பகல் நேரத்தில் சுத்தமான எள்ளுப் புண்ணாக்கு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
  15. ஒருநாள் இரவில் மட்டும் பசுவின் பால் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
  16. ஒரு நாள் மோரை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
  17. ஒரு நாள் முழுவதும் சுத்தமான நீரை மட்டுமே அருந்தி உபவாசம் இருத்தல்.
  18. ஒரு நாள் முழுவதும் பொரிமாவு (புழுங்கல் அரிசியை வறுத்து நன்கு பொடித்து நெய், தேங்காய், சர்க்கரை ஆகியவற்றைப் போட்டுப் பிசைந்து வைத்திருப்பது) மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
  19. ஒரு நாள் முழுவதும் திணை மாவு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
  20. தேய்பிறை அன்று ஆரம்பித்து வளர்பிறை முடிந்து திரும்பத் தேய்பிறை நாட்கள் வரை தினம் ஒருபிடி அன்னத்தை மட்டும் சாப்பிட்டு பின்னர் தினம் ஒவ்வொரு பிடி அன்னத்தை அதிகமாக்கிக் கொண்டு சுக்கிலபட்சம் முடிந்த பிறகு திரும்ப ஒவ்வொரு பிடி அன்னமாகக் குறைப்பது என உபவாசம் இருத்தல்.
  21. ஒரு நாள் முழுவதும் வில்வ தழையையும் நீரையும் மட்டுமே அருந்தி உபவாசம் இருத்தல்.
  22. ஒரு நாள் முழுவதும் அரச இலைத் தளிர்களையும், நீரையும் அருந்தி உபவாசம் இருத்தல்.
  23. ஒரு நாள் முழுவதும் அத்தி இளந்தளிகளையும், நீரையும் மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
  24. இரு வேளை உணவுடன் உபவாசம் இருத்தல்.
  25. முதல் நாள் ஒரு வேளை பகல் உணவு மட்டும், மறுநாள் இரவு மட்டும் உணவுடன் உபவாசம் இருத்தல்.
  26. மாமிச உணவுகள், மசாலாக்கள் இல்லாத சைவ உணவுகளை மட்டுமே குறைந்த அளவு சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
  27. வாழைக்காய், பூண்டு, வெங்காயம், பெருங்காய்ம் ஆகியவை சேர்ந்த உணவுகளை மட்டும் சேர்த்துக் கொள்ளாமல் உபவாசம் இருத்தல்.
- இந்த உபவாச விரதங்களில் எதைக் கடைப்பிடித்தால் நல்லது என்கிறீர்களா? உங்கள் உடல் நிலைக்கும், சூழ்நிலைக்கும் தகுந்த எந்த உபவாசத்தையும் நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் எதுவுமே சாப்பிடாமல் நீர் மட்டும் அருந்தி உபவாசம் இருப்பதே சிறந்த விரத முறையாகும்.[1]

விரத வகைகள்

இந்துமதத்தில் இருக்கும் பல்வேறு கடவுள்களுக்கும் பல விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இவை கடவுள் வழிபாட்டிற்கேற்ப மாறுபாடுகளைக் கொண்டுள்ளது.