முதல் முறையாக சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கான பண நிர்வாக முறைகள்

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:05 | Best Blogger Tips
நல்ல லாபம் சம்பாதிக்க மற்றும் தன் சொந்த காலில் நிற்க புதிதாக தொழில் தொடங்க பலர் முனைவர். வேலையில் அமர்ந்திருப்பவர்களுக்கு கூட இந்த எண்ணம் இருக்கும். சரி அப்படி ஆரம்பித்த அனைவரும் சாதித்து விட்டனரா என்று பார்த்தால் இல்லை என்று தான் பதில் வரும். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமாக பார்க்கப்படுகிற காரணம் முன் அனுபவம் இல்லாமை. எந்த ஒரு குளறுபடியும் இல்லாமல் தொழிலை நடத்த பலவற்றை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

முதல் முறை தொழில் செய்பவர்கள் பணத்தை கூடுதல் கவனத்துடன் கையாள வேண்டும். நீங்கள் இதற்கு முன் வேலை பார்த்தவரா? அப்படியானால் உங்கள் பழைய வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும். பணத்தை செலவழிப்பதிலும் சேமித்து வைப்பதிலும் உங்கள் அணுகுமுறையை மாற்ற வேண்டும். ஏனென்றால் இனியும் வேலையில் இருப்பதை போல ஒவ்வொரு மாதம் முதல் தேதியில் தான் உங்கள் வங்கி கணக்கின் இருப்பு அதிகரிக்கும் என்று கிடையாது.
நீங்கள் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு வருவாயை ஈட்டித் தருவதற்கு முன்னும் உங்கள் முதல் மூலதனத்தை பெறுவதற்கு முன்னும் முதலில் உங்கள் சேமிப்பு நிலைத்திருக்க கீழ்கூறிய சில குறிப்புகளை கடைப்பிடியுங்கள். செலவிடாத பணம் சேமித்த பணத்திற்கு ஈடானது. ஏன், அதற்க்கும் மேல் தான்.
ஒரு முறைக்கு இரு முறை நன்கு யோசித்தப் பின்னரே செலவு செய்யுங்கள். ஆயிரம் ருபாய் சம்பாதிப்பதும், இருப்பில் இருக்கும் ஆயிரம் ரூபாயை செலவழிக்காமல் இருப்பதும் உங்கள் வங்கி இருப்பின்படி ஒன்றே. சொல்லப் போனால் பணத்தை செலவழிக்காமல் இருப்பதே நல்லது. ஏனென்றால் கையில் இருக்கும் அந்த பணத்தை தேவையான போது நம் தொழிலுக்கே அதை புத்திசாலித்தனமான மூலதனமாக ஆக்கலாம்.
செலவு செய்வதற்கு முன் உங்கள் செலவுகளை கீழ்கண்ட எதாவது ஒரு வகையின் கீழ் பிரித்துக் கொள்ளுங்கள்:
1. இது இல்லாமல் வாழ முடியாது - வாடகை, மின்சாரம், இன்டர்நெட் போன்றவைகள்.
2. இருந்தால் நல்லது - இந்த வகையில் ஏதாவது செலவை சேர்த்தால் அதற்கு முன், முதலீட்டு ஆதாயத்தை கணக்கிடுங்கள் (ரிடர்ன் ஆன் இன்வெஸ்ட்மென்ட்)
3. இது இல்லாமலும் இருக்கலாம் - பெயரே இதை பளிச்சென்று விளக்கி விடுகிறது.
தேவைக்கேற்ப தனித்தனியாக வங்கிக் கணக்குக்கள் ஆரம்பித்துக் கொள்ள வேண்டும்:
ஒவ்வொரு மாதக் கடைசியும் உங்களுக்கு சம்பள காசோலை வருகிறதா? உங்கள் செலவு முறை உங்கள் வங்கியின் இருப்பை பொறுத்தே இருக்கும். ஆனால் தொழில் செய்யும்போது உங்கள் சேமிப்பை வைத்தே செலவு செய்யும் போது, உங்கள் வங்கியின் இருப்பில் ஒரு பெரிய தொகையைக் கண்டு, அது முழுவதும் செலவு செய்வதற்கே என்று ஏமாறக் கூடாது. ஏனென்றால் அது நம் மூலதனத்தையும் சேர்த்து காண்பிக்கும். இந்த குழப்பங்களை தவிர்ப்பதற்காக கீழ்கண்ட வகைகளுக்கு தனித்தனியாக வங்கிக் கணக்குகளை தொடங்கிவிடுங்கள்.
1. சொந்த செலவுக்கான கணக்கு - உணவு, உடைகள், பொழுதுபோக்கு போன்றவைகள்.
2. நிறுவனத்தின் செலவுக்கான கணக்கு - பணியாளர்களின் சம்பளம், சரக்கு கொள்முதல், தொலைபேசி கட்டணம் போன்ற தொடர்ச்சியாக வரும் செலவுகள் போன்றவைகள்.
3. நிறுவனத்தின் வருவாய் கணக்கு - நிறுவனத்திற்கு வரும் வருவாய் இந்த கணக்கில் போய்ச் சேரும்.
4. பணம் மூலதனம் கணக்கு - சேமிப்பு, முதலீடு போன்றவைகள்.
வங்கிக் கணக்குகளை நிர்வகித்தல்:
முடிந்த வரை நேரடி பணப் பரிமாற்றத்தை குறைத்து, காசோலைகள் அல்லது வங்கி மூலமாகவே பண மாற்றுதல்கள் நடக்க வேண்டும். இப்படிச் செய்தால் அத்தனை பரிமாற்றங்களும் உங்கள் வங்கிக் கணக்கின் அறிக்கையில் கண் கூடாக தெரிந்துவிடும். இது உங்கள் வரவு செலவு கணக்கை எழுத சுலபமாகவும் இருக்கும். தவிர்க்க முடியாத பண பரிமாற்றத்திற்கு பண ரசீதுகளை (செலவுச் சீட்டு) பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.
வங்கிக் கணக்குகளை கண்காணித்தல்:
உங்கள் அனைத்து வங்கிக் கணக்குகளையும் தொடர்ந்து கண்காணியுங்கள். நம் நிறுவனத்தின் வருவாய்களை காட்டும் அறிக்கை மூலமாக நம் வருவாயின் வளர்ச்சியை கண்டறியலாம். வங்கிக் கணக்கின் அறிக்கை நாம் அந்த இருப்பை வைத்து எத்தனை நாள் சமாளிக்கலாம் என்று கணக்கு போட உதவி புரியும். இந்த சமாளிக்க முடிகின்ற காலத்தை ரன்வே அல்லது ஓடுவழி என்றும் சொல்லலாம்.
நிதி நாளை கடைபிடியுங்கள்:
மாதத்தின் முதல் நாளை நிதி நாளாக முடிவு செய்து அதற்காக அந்த நாளை செலவழியுங்கள். சென்ற மாதத்தின் பரிமாற்றங்களையும், வரவு செலவுகளையும் ஒரு முறை பாருங்கள். எந்தெந்த செலவுகளை குறைத்தால், நாம் கணக்கிட்ட முதலீட்டு ஆதாயத்தை அடையலாம் என்று கணக்குப் பாருங்கள்.
பாதுகாப்பாக இருங்கள்:
நாம் சம்பளம் வாங்கும் பணியாளராக இருந்தால் மருத்துவ காப்பீடு, வருங்கால வைப்புநிதி (ப்ராவிடன்ட் பண்ட்) போன்ற நல திட்டங்களுக்கு நம் முதலாளியே உதவிக் கரம் நீட்டுவார். ஆனால் தொழிலில் ஈடுபடும் போது இதையெல்லாம் நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். மருத்துவ காப்பீடு என்பது நம் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான ஒன்று. உங்களுக்கும், உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் தேவையான மருத்துவ காப்பீடும், ஆயுள் காப்பீடும் எடுத்துக் கொள்ளுங்கள்.
நாம் நம் தொழிலுக்கு மேலும் மேலும் மூலதனம் போட விரும்பினால், எளிதில் பணமாக்கக்கூடிய (லிக்விடிட்டி) வழிகளை பற்றியும் நாம் கவனம் செலுத்த வேண்டும். நம் கையில் இருக்கும் உபரி பணத்தை ஏதாவது எளிதில் பணமாக்கக்கூடிய சொத்தில் முதலீடு செய்ய வேண்டும். இது நமக்கு வசதியாகவும் பண வீக்கத்தையும் தடுக்கும். இந்த முதலீடு நமக்கு அவசரக் காலத்தில் கை கொடுக்கும்.
 Money Management First Time Businessmen

thanks to thatstamil.com