சித்திரையில் தான் தமிழ்ப் புத்தாண்டு!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:11 | Best Blogger Tips


பூமி, சூரியனை சுற்றி வருவதும், ஒருமுறை சுற்றிவர ஒரு வருட காலம் எடுக்கும் என்பதும் நிரூபிக்கப்பெற்ற உண்மைகள். பூமி சூரியனை சுற்றும் போது சோதிடம் கூறும் 12 ராசிகளில் முதல் ராசியாகிய மேடராசியில் சூரியன் பிரவேசிக்கும் தினமே தமிழ் புத்தாண்டு பிறப்பாக கணிக்கப்பெறுகின்றது. அதாவது, மீண்டும் ஒருமுறை சூரியன் மேடராசியில் பிரவேசிக்கும் நாளே (சித்திரை) தமிழ் வருடப்பிறப்பாக கொண்டாடப்படுகின்றது

கீழே உங்கள் வசதிக்காக தமிழ் வருடங்கள்.

எண் தமிழ் வருடங்கள்

1 பிரபவ
2 விபவ
3 சுக்ல
4 பிரமோதூத
5 பிரசோற்பத்தி
6 ஆங்கீரச
7 ஸ்ரீமுக
8 பவ
9 யுவ
10 தாது
11 ஈஸ்வர
12 வெகுதானிய
13 பிரமாதி
14 விக்கிரம
15 விஷூ
16 சித்திரபானு
17 சுபானு
18 தாரண
19 பார்த்திப
20 விய
21 சர்வசித்து
22 சர்வதாரி
23 விரோதி
24 விக்ருதி
25 கர
26 நந்தன
27 விஜய
28 ஜய
29 மன்மத
30 துன்முகி
31 ஹேவிளம்பி
32 விளம்பி
33 விகாரி
34 சார்வரி
35 பிலவ
36 சுபகிருது
37 சோபகிருது
38 குரோதி
39 விசுவாசுவ
40 பரபாவ
41 பிலவங்க
42 கீலக
43 சௌமிய
44 சாதாரண
45 விரோதிகிருது
46 பரிதாபி
47 பிரமாதீச
48 ஆனந்த
49 ராட்சச
50 ந‌ள
51 பிங்கள
52 காளயுக்தி
53 சித்தார்த்தி
54 ரௌத்திரி
55 துன்மதி
56 துந்துபி
57 ருத்ரோத்காரி
58 ரக்தாட்சி
59 குரோதன
60 அட்சய

மருத்துநீர்

புத்தாண்டினைக் கொண்டாடுவதற்குச் செய்யப்படும் ஆயத்தங்களில் மருத்துநீர் வைத்து நீராடல் ஒன்றாகும்.

இம் மருத்துநீர் தாழம்பூ, தாமரைப்பூ, மாதுளம்பூ, துளசி, விஷ்ணுகிராந்தி, சீதேவியார் செங்கழுநீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, மஞ்சள், திற்பலி, சுக்கு என்பனவற்றை நீரிலே கலந்து காய்ச்சப்பெறுவதாகும். பெரும்பாலும் புத்தாண்டு நாளுக்கு முதல்நாள் மருத்துநீர் அருகிலிருக்கும் கோயிலிலே காய்ச்சப்படுகின்றது. மக்கள் பெரும்பாலும் இலவசமாகவே இதனைப் பெற்றுக் கொள்வர். சிலர் பணம் கொடுத்தும் பெறுவர்.

மருத்துநீர் தலையிலே தேய்த்து நீராடினால்தான் சித்திரைப் புத்தாண்டின் நல்ல பலன்களைப் பெறலாம் என்னும் நம்பிக்கை இந்துக்களிடையே உண்டு. அவ்வாறு நீராடிய பின்னர் புதிய ஆடைகளைக் குடும்பத்தினர் எல்லோரும் அணிவர்.

சித்திரைப் பொங்கல்

தைத்திங்கள் முதல் நாளிலே பொங்கலிடுவது போல சித்திரைத் திங்கள் முதல்நாளிலும் பொங்கல் செய்வது வழக்கமாகும். வீட்டு முற்றத்திலே பொங்கல் செய்யும் வழக்கம் இருந்து வந்தது. வீட்டு முற்றத்தில் பொங்கலிடும் இடம் சாணியினாலே மெழுகப்பட்டுத் தூய்மையாயிருக்கும். மாவிலை, தோரணம் கட்டப்படும். மூன்று கற்கள் வைத்து அதன்மேலே பாலுடன் கலந்த நீர் விட்ட பானை ஏற்றப்படும். பால் பொங்கிவரும் போது வீட்டின் தலைவர் அதனுள் கிழக்குப் பக்கமாகவோ வடக்குப் பக்கமாகவோ பார்த்து அரிசியும் பயறும் சேர்ந்த கலவையைக் கையினால் அள்ளி மூன்று தடவை இடுவர். மிகுதியை வீட்டுத் தலைவி பானையுள் இட்டு, ஏனைய பொருட்களையும் சேர்த்து பொங்கல் தயாரிப்பார். மஞ்சளிலே குட்டிப் பிள்ளையார் அமைப்பர். பழம், வெற்றிலை, பாக்கு முதலியனவற்றுடன் பொங்கல் படையல் இடப்படும். கற்பூர ஆரத்தியின் பின்னர் ஒரு சிறிய வாழை இலைத் துண்டிலே பொங்கலில் ஒரு பகுதியை இட்டு, காகத்தைக் கூவி அழைத்து, அது உண்ணுவதற்கேற்றபடி உயரமான ஓர் இடத்திலே வைக்கப்படும். அதன் பின்னர் குடும்பத்தினர் பொங்கல் உண்பர். பொங்கலுடன் பலகார வகைகளையும் பரிமாறும் வழக்கமும் இருந்தது.

இன்று, தைத்திங்களிலே வீட்டு முற்றத்திலே பொங்குவது போல சித்திரைத் திங்களிலே பொங்கும் வழக்கம் அருகியே விட்டது. பெரும்பாலானவர்கள் வீட்டினுள் அடுப்பிலே பொங்குவர். பலர் பொங்கும் வழக்கத்தினையே கைவிட்டுவிட்டனர்.

கைவிசேடம்

சித்திரைப் புத்தாண்டில் கைவிசேடம் கொடுக்கும் வழக்கமுண்டு. இதற்கான உகந்த நேரம் பஞ்சாங்கத்திலே குறிப்பிடப்பட்டிருக்கும். அந்நேரத்தைக் கடைப்பிடித்து, வீட்டிலே தந்தையே பெரும்பாலும் கைவிசேடம் வழங்குவார். வெற்றிலையில் பணத்தை வைத்துக் கொடுக்க வாங்குபவர்கள் அவருடைய காலிலே விழுந்து வணங்கி ஆசிபெற்ற பின்னர் கைவிசேடத்தை வாங்கிக் கொள்வர். சிலரிடமிருந்து கைவிசேடம் பெற்றால் அந்த ஆண்டு முழுவதும் பணவரவும் பல நன்மைகளும் கிடைக்குமென்ற நம்பிக்கையும் உண்டு. இதனால் அவர்களைத் தேடிச் சென்று சித்திரைப் புத்தாண்டிலே கைவிசேடம் பெற்றுக் கொள்வர். அவ்வாறு கைவிசேடமாகப் பெற்ற பணத்தினை அடுத்த சித்திரைப் புத்தாண்டு வரை பத்திரமாக வைத்துக் கொள்ளவேண்டும் என்ற நம்பிக்கையும் உண்டு.

விளையாட்டுக்கள்

போர்த் தேங்காய் அடித்தல் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஒன்றாக அமைந்தது. போர்த் தேங்காய் அடித்தல் தமிழரிடையே நடைபெற்றுவந்த பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றாகும். இது கோயில் திருவிழாக்களிலும் விசேட கொண்டாட்ட நாட்களிலும் நடைபெறுவதுண்டு. சித்திரைப் புத்தாண்டு நாளிலே இவ்விளையாட்டுப் பல காலமாக நடைபெற்று வந்தது.

‘கோழிச்சண்டை’ இன்னொரு பரம்பரை விளையாட்டுப் போட்டி சித்திரைப் புத்தாண்டின் போது நடைபெற்று வந்தது. இம்மரபுவழிபட்ட நிகழ்வினையும் டானியல் தன்னுடைய நாவலிலே விரிவாகவும் தெளிவாகவும் விவரித்துள்ளார். சண்டை செய்வதற்கென்றே சேவல்கள் வளர்க்கப்பட்டன. அவை வளர்க்கப்படும் பக்குவம் பற்றி டானியல் தன்னுடைய அடிமைகள் நாவலில் மிக நுணுக்கமாகக் கூறுகின்றார். இன்று ‘ஆடுகளம்’ திரைப்படத்தின் முக்கிய விடயமாகத் திகழும் ‘கோழிச்சண்டை’ நம்முடைய தேசத்திலே சிறப்பாக நடைபெற்றதென்பதற்கு டானியலுடைய நாவல் சான்றாக உள்ளது.

சித்திரைப் புத்தாண்டு விளையாட்டுக்களில் ஒன்று ‘தாச்சி’ எனப்படும் ‘கிளித்தட்டு’ ஆகும். இதனை விட எல்லை, சடுகுடு போன்ற விளையாட்டுக்களை ஆண்கள் விளையாடுவார்கள். பெண்கள் கொக்கான் வெட்டுதல், பல்லாங்குழி, சொக்கட்டான், நாயும் புலியும் போன்ற விளையாட்டுக்களை விளையாடுவர்.

பஞ்சாங்கம்

சித்திரைப் புத்தாண்டுக் காலத்திலேயே புதிய பஞ்சாங்கம் வெளி வரும். இலங்கையிலே ‘இரகுநாதையர்’ குழுவினர் கணித்து வெளியிடும் வாக்கிய பஞ்சாங்கமும் ‘திருக்கணித’ குழுவினர் கணித்து வெயியிடும் திருக்கணித பஞ்சாங்கமும் வெளிவருகின்றன. சீனர்கள் தங்களுடைய காலக் கணிப்பில் 60 ஆண்டுகளை உள்ளடக்கியுள்ளனர். அவற்றுக்குப் பெயர்களும் இட்டுள்ளனர். கீழைத் தேயக் காலக் கணிப்பில் இது பொதுவான விடயமாக அமைகின்றது. இந்துக் காலக் கணிப்பிலும் 60 ஆண்டுக் கணக்கு இடம்பெறுகின்றது. பிரபவ ஆண்டு தொடக்கம் அஷய ஆண்டு வரையிலான 60 ஆண்டுகளை அடிப்படையாகக் கொண்டே பஞ்சாங்கம் கணிக்கப்படுகின்றது. “இப்பஞ்சாங்கத்திற்கு ஆதாரமாகவுள்ள கணித சித்தாந்தம் மக்களை உய்விக்கும் பொருட்டு மஹாமகத்துவம் பொருந்தியவர்களும் யோக சித்தியால் திரிகால ஞானமுணர்ந்த தத்துவஞானிகளும் ஆகிய முனிசிரேஷ்டர்களால் ஒரு கற்பகாலம் வரையுமுள்ள கிரககால வரையறைகளை எக்காலமும் எளிதிற் கணிக்குமாறு யுக்தியனுபவங்களுக்கியைய நன்கருளிச் செய்யப்பட்டுள்ளது” என்று வாக்கிய பஞ்சாகக்காரர் குறிப்பிடுவதை நோக்குக. இரண்டு பஞ்சாங்கங்கள் பெற்ற மகிழ்ச்சி ஒரு பக்கம்; அதனாலே சில வேளைகளில் உபத்திரவமும் ஏற்படுகிறது.

தமிழ்ப் புத்தாண்டை சித்திரை ஒன்றில் ஏன் கொண்டாடுகிறோம்?

தமிழ்ப் புத்தாண்டை சித்திரை ஒன்றில் ஏன் கொண்டாடுகிறோம் என்பதற்கு நமது பெரியோர்கள் சொன்ன மேலும் சில விளக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்!
சித்திரை 1 ஐ தமிழ்புத்தாண்டாக கொண்டாடி வந்த வழக்கத்தை மாற்றி, தமிழக அரசு தை 1 ஐ தமிழ் புத்தாண்டாக அறிவித்தது. சித்திரை ஒன்று அன்று வழக்கமான பஞ்சாங்கம் படிப்பதைக்கூட கோவில்களில் வாய்மொழியாக தடைசெய்யப்பட்டதாக செய்திகள் வந்தன. ஆண்டு என்பது மாதம், வாரம் மற்றும் நாள் ஆகிவற்றால் ஆனதால் இவைபற்றி பார்ப்போம்.

காலத்தை அளவு செய்வதன் அளவுகோல் வானவியலை சார்ந்தது. பருப்பொருள்களின் நகர்தலினால்தான் காலம் என்பதே உருவானது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாம் பின்பற்றி வரும் நமது பாரம்பரிய வானசாஸ்த்திரம் வான் கோள்களின் மாறாத இயக்கத்தை காலக்கடிகாரத்தின் முற்களாய் கொண்டு அளந்தது. நாள், வாரம், திங்கள்,வருடம் எல்லாம் கோள்களின் சுழற்சியினால் கணிக்கப்படுவது. நாளின் மணித்துளிகளை ஹோரை என்றனர் (இதுவே Hour ஆனது). நாழி, விநாழி (தமிழில் வினாடி ஆனது) என்பன நேரத்தின் அளவுகோல்கள்.

நமது வானசாஸ்த்திரம் அனைத்து வகையான காலப்பகுதிகளுக்கும் கோள்களின்/கிரஹங்களின் பெயரைச் சூட்டியது. எனவேதான் கிழமைகளின் பெயர்கள் ஞாயிறு மற்றும் ஏனைய கிரஹங்களின் பெயரில் அமைந்தது. [கிரஹிக்கும் அதாவது ஈர்க்கும் சக்தியினால் (Gravitation) இயங்குவதால் கிரஹம் என்றனர். எனவேதான் சூரியனும் ஜோதிட நோக்கில் மையத்தில் உள்ள ஒரு கிரஹம்தான், நவகிரஹங்களில் காண்பது போல். (சுய ஒளி உடையது நட்சத்திரம், பூமி முதலியன கோள்கள்/கிரஹங்கள் என்பது சமீபகாலத்தில் நம் பள்ளிகளில் எழுதப்பட்டது).

ராகு கேது ஆகியன வெறும் நிழற்கோள்களானதால் அவை கிழமைகளில் இல்லை. திதி என்பது தமிழில் தேதி என ஆனது. பனிரெண்டு ராசிகளால் பனிரெண்டு மாதங்களாயின. இந்தப் பதிவின் முக்கியமான விஷயம் கிழமைப்பெயர்களைப் போன்று தமிழ் மாதங்களின் பெயர்களும் வானவியலை சேர்ந்தது என்பதும் அதில் சித்திரைதான் வருடத்தின் முதல் மாதமாக வைக்கப்பட்ட காரணங்களும் இதனை மாற்றக்கூடாததிற்கான காரணங்களைப் பற்றி விவரிப்பதற்காகவும்.
சித்திரையில் தொடங்கி பங்குனி வரையிலான தமிழ்மாதத்தில், அம்மாதத்தின் பெளர்ணமி அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரையே மாதத்தின் பெயராக வைத்துள்ளனர்(விவரம் கீழே காண்க). எனவே தமிழ் மாதப்பெயர்கள் வானசாஸ்த்திரத்தை அடிப்படையாக கொண்டவை.
ஒரு ஆண்டு என்பது பூமி சூரியனை ஒருமுறை சுற்றிவர ஆகும் காலம். ஒரு வட்டத்தின் முதற்புள்ளியை எப்படி கணிப்பது? சுற்றும்போது பூமியின் சாய்வினால் சூரியன் வடக்கு தெற்க்காக நகர்கிறது. சூரியன் பூமத்திய ரேகையில் நேராக பிரகாசிக்கும் மாததை முதற்புள்ளியாய் ஆண்டின் தொடக்கமாக கொண்டுள்ளனர் நமது பெரியோர்.

பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள நமது நாட்டிக்கும் இதுதான் சரி (சித்திரை கத்திரி வெயில்). பனிரெண்டு ராசியினால் பனிரெண்டாக பகுக்கப்பட்ட ஆண்டில் நம்மீது நேராக பிராகசிக்கும்போது சூரியன் மேஷ ராசியில் இருப்பான். எனவேதான் மேஷம் முதல் ராசியானது. இப்படி நேராக பிரகாசிக்கும் மாதம் சித்திரை. எனவேதான் சித்திரை முதல் மாதமானது. தைமாதத்தில் சூரியன் கீழே ஆஸ்திரேலியா மீது நேராக பிரகாசித்துக்கொண்டிருப்பான்.
எனவே முதல் மாதமாக சித்திரை தவிற வேறு எந்தமாதமும் நமக்கு பொருத்ததமாகாது. ஆதலின் சித்திரை முதலான மாதப்பெயர்களை உடைய ஆண்டின் முதல் மாதம் சித்திரையாக மட்டுமே இருக்கமுடியும். எப்படி அர்த்தமே இல்லாமல் தை முதல் மாதமாகமுடியும்?
ஒவ்வொரு மாதத்தின் பெளர்ணமி அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரே தமிழ்மாதத்தின் பெயராக வைத்துள்ளனர். மட்டுமல்லாது அன்றைய தினம் விஷேச தினமாகவும் இருக்கும். சித்திரை மாதம் பெளர்ணமி அன்று சித்திரை நட்சத்திரம் வரும். எனவே மாதத்தின் பெயர் சித்திரையானது. அந்நாளும் சித்ராபெளர்ணமியாக கொண்டாடப்படுகிறது.
சித்திரை = சித்திரை [சித்திரா பெளர்ணமி]

விசாகம் = வைசாகம் = வைகாசி [வைகாசி விசாகம்]

அனுசம் = ஆனி

பூராடம் - பூராடி = ஆடி

சிரவணம் - ச்ராவணி = ஆவணி [திருவோணம் வடமொழியில் ஸ்ராவண நட்சத்திரம்]

பூரட்டாதி = புரட்டாசி [புரட்டாசி பெளர்ணமி பூரட்டாதி நட்சத்திரத்தில் வரும்]

அஸ்வினி = ஐப்பசி [வடமொழியில் ஆஸ்வீஜம்]

கார்த்திகை =கார்த்திகை [கார்த்திகை பெளர்ணமி]

மிருகஷீர்சம்= மார்கஷீர்சம் =மார்கழி

பூசம் வடமொழியில் புஷ்யம் என்பது. இதற்கு தைஷ்யம் என்று மற்றொரு பெயருண்டு. இது தை ஆனது. [தை பூசம்]

மகம் - வடமொழியில் மாக = மாசி [மாசி மகம்]

உத்திரம் -வடமொழியில் உத்திரப் பல்குனி = பங்குனி [பங்குனி உத்திரம்].

ஒவ்வொரு மாதத்தின் பெளர்ணமியன்று அதற்குரிய நட்சத்திரம் வருவதை காணலாம். இந்த நட்சத்திரப் பெயர்கள் ஏதோ வலிந்துபொருத்துவதற்காக அங்கொன்றும் இங்கொன்றுமாக எடுக்கப்பட்டவை அல்ல. சித்திரையில் தொடங்கி பிற நட்சத்திரங்கள் தொடர்ச்சியாக 30 அல்லது 31 நாட்சுழற்சியில் வரும். சித்திரையிலிருந்து 31 வது நாள் விசாக(வைசாக) நட்சத்திரம் மற்றும் இதுபோல. மேலும் வைகாசி விசாகம், தை பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம் போன்ற பண்டிகைகளில் மாதத்தின் பெயருக்கும் நட்சத்திரதிற்கும் உள்ள தொடர்பை தெளிவாக காணலாம்.

இன்னும் அனேகவிஷயங்கள் உள்ளன. இப்படி காலஅளவுகள் நமது பெரியோர்களால் வானசாஸ்த்திரத்தில் அறிவியல் பூர்வமாக கணித்து வழக்கத்தில் உள்ள வருடத்தின் முதல் நாளை மாற்றுவது தவறு. தமிழ் உணர்வு என்பது எல்லாருக்கும் உண்டு. இதனை தேவையில்லாத இடங்களில் புகுத்தி மக்களை உசிப்பேற்றி குளிர்காயக்கூடாது. தமிழை காரணங்காட்டி வங்கிக் கணக்குகளுக்கான வருட ஆரம்பத்தை தை 1 க்கு மாற்ற அரசு உத்தரவிட முடியுமா? தேவையா?
முடிவாக, மாதங்களின் பெயர் சித்திரை முதல் பங்குனி வரை இருக்கும்போது, சூரியன் சித்திரையில் நம்மீது நேராக பிராகசிக்கும் வரை சித்திரை தான் வருடத்தின் முதல் மாதமாக இருக்கமுடியும். முதல்மாதம் தை என்பது வெறும் வீம்பாகத்தான் இருக்க முடியும். இதை மக்கள் உணர்ந்து தெரிந்தவர்கள் இவ்விஷயங்கள் தெரியாதுபோன்று இருக்கும் நம் அரசுக்கு உணர்த்தவேண்டும். தெரியாதவர்களுக்கு எடுத்துச்சொல்வோம்.

யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.

- திருமந்திரம் (திருமூலர்)

தமிழர்கள் பிறந்த நாளை எந்த நாளில் கொண்டாட வேண்டும்?

உண்மையில் நாம் என்று பிறந்தோமோ அந்த நாளை பிறந்த நாளாக கொண்டாட வேண்டும் என்பது நியதி. அப்படிப் பார்க்கும் போது தமிழர்கள் அறுபது வருடத்திற்கு ஒருமுறை தான் பிறந்த நாள் கொண்டாட வேண்டும். நமது தமிழ் வருடங்கள் வான் கோள்களின் சுழற்சியின் அடிப்படையில் இயற்கையின் கணக்கீடுகளைக் குறிப்பதாகவே வடிவமைக்கப்பட்டிருகிறது. தமிழ் மாதங்களும் அவ்வாறே. அப்படிப் பார்க்கும் போது நாம் என்று பிறந்தோமோ அந்த வருடமும், எந்த நட்சத்திரத்தில் பிறந்தோமோ அந்த நாளில் தான் தமிழர்கள் உண்மையாகப் பிறந்த நாள் கொண்டாட வேண்டும்.

அதாவது நாம் எந்த தமிழ் வருடத்தில் பிறந்தோமோ, அந்தத் தமிழ் வருடம், தமிழ் மாதம், தமிழ் நாள் எப்பொழுது மீண்டும் வருகிறதோ அன்று தான் நாம் முதல் பிறந்த நாளையே கொண்டாட வேண்டும். அது தானே சரி. அப்படிப் பார்த்தால் ஒவ்வொருவருக்கும் பிறந்தநாள் அறுபது வருடங்களுக்கு ஒரு முறைதான் வருகிறது.

இப்படி நாம் பிறந்த அதே நாள் அதே வருடம் திரும்பி வருவதற்க்கு அறுபது வருடங்கள் ஆவதால் அந்த நாளை மிகச்சிறப்பாக அறுபதாம் கல்யாணமாக முழுகுடும்பத்துடன் கொண்டாடுகின்றோம். அதாவது அறுபது வயதில் ஒரு மனிதன் கண்டிப்பாக குடும்பத்துடன் தான் இருப்பான் என்பது இயற்க்கை என்பதால் அதை வெறும் பிறந்த நாளாக மட்டும் கொண்டாடாமல் குடும்ப நாளாகக் கொண்டாடுகின்றோம். மேலும் ஒரு மனிதன் வாழ்வின் ஒரு சுற்றை முடிப்பதற்க்குளே பல கஷ்டங்களை அனுபவித்து விடுகிறார்கள். சிலர் இல்லாமலே போகிறார்கள். இதனாலேயே இவைகளைத் தாண்டி இந்த முதல் பிறந்தநாள் அதாவது அறுபதாவது திருமணம் கொண்டாடுபவர்களை வணங்கி ஆசி பெறுகின்றனர். இப்படி இல்லாமல் ஆண்டுக்கொரு முறை பிறந்த நாள் கொண்டாடுபவர்கள் தமிழர்களா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இதை எல்லோரும் மனதில் வைத்து தமிழ் வருடப்படி பிறந்தநாள் கொண்டாட வேண்டும். சரி இதையும் மூட நம்பிக்கை என்று பகுத்தறிவு மூடர்கள் சொன்னார்கள் என்றால் , தமிழ் புத்தாண்டு தேதியை மாற்றிய அவர்கள் தமிழ் வருட கணக்கீடுகளை மாற்ற ஏன் முன்வரவில்லை? தமிழ் வருடங்களின் பெயர்களை ஏன் மாற்றத் துணியவில்லை? முடியாது என்பது அவர்களுக்கும் தெரியும். ஆதலால் அந்த மூடர்கள் படுத்தும் பாடுகளை மறந்து விட்டு நாம் உண்மையான தமிழர்களாக தமிழ்ப் புத்தாண்டை தமிழ் வருடப்படியே கொண்டாடுவோம்.