மைக்ரோவேவ் அடுப்பு நல்லதா? கெட்டதா ?

மணக்கால் அய்யம்பேட்டை | 4:51 PM | Best Blogger Tips

ஓர் அலசல் ரிப்போர்ட் !!!

'மைக்ரோவேவ் அடுப்பு’ (நுண்ணலை அடுப்பு) மூலம் சமைத்தால் உணவில் இருக்கும் சத்துக்கள் போய்விடுமா?’ - இந்தச் சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. இன்னொருபுறம் மைக்ரோவேவ் அடுப்பில் சமைத்தால் பல பக்க விளைவுகள் ஏற்படும் என்ற அச்சமும் இருக்கிறது. இதில் எது உண்மை? எது புனைவு? சுகாதார மேம்பாட்டு அலுவலர் பூர்ணிமா, உணவியல் நிபுணர் கிருஷ்ணமூர்த்தி, மற...
்றும் புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை நிபுணர் கோ.ராஜா விளக்கம் கூறியுள்ளனர்

மைக்ரோவேவ் அடுப்பு எப்படிச் செயல்படுகிறது?
'மைக்ரோவேவ் அடுப்பில் உணவைச் சமைக்கும் போது, முதலில் அடுப்பினுள் மின்சார அலை உண்டாகும். அந்த அதிர்வினால் நீர், கொழுப்பு, சர்க்கரை ஆகியவற்றின் மூலக்கூறுகள் அதிர்வடைந்து ஒன்றுடன் ஒன்று உராய்ந்து வெப்பம் உண்டாகும். கண்ணாடி மற்றும் பீங்கான் பாத்திரங்களை இந்த அலை பாதிக்காது. மைக்ரோவேவ் அடுப்பில் சமைக்க அதற்குரிய பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்’ என்று பூர்ணிமா கூறினார்.

'மைக்ரோவேவ் அடுப்பில் சமைத்தால் சத்து இழப்பு ஏற்படுமா?’

இந்தக் கேள்விக்கு பதில் அளித்த டாக்டர் கோ.ராஜா, ''மைக்ரோவேவ் அடுப்புக்குள் இருக்கும் மேக்னெட்ரான் என்னும் கருவி அடுப்புக்குள் வைத்த உணவுப் பொருளைச் சூடேற்ற உதவுகின்றது. இதில் சமைக்கும் நேரமும் குறைவு, காய்கறிகளில் உள்ள சத்துக்கள் மறைந்து போகாது'' என்றார்.

இந்த சந்தேகம் குறித்து உணவியல் நிபுணர் கிருஷ்ணமூர்த்தியிடம் பேசியபோது,

''காய்கறிகளையும் ஒயிட் மீட் என்று சொல்லப்படும் மீன், கோழி ஆகியவற்றையும் மைக்ரோவேவ் அடுப்பில் சமைப்பதால் சத்துக்களில் பெரிய இழப்பு எதுவும் ஏற்படுவதில்லை. ரெட் மீட் எனப்படும் ஆட்டு இறைச்சி மற்றும் மாட்டு இறைச்சி போன்றவற்றில் நிறைய எண்ணெய் விட்டு மசாலாக்கள் சேர்த்துச் சமைத்தால் சாப்பிட ருசியாக இருக்குமே தவிர ஆரோக்கியமானதாக இருக்காது.'' என்றார். மற்ற சமையலுக்கும் மைக்ரோவேவ் சமையலுக்குமான வித்தியாசத்தையும் அவர் விளக்கினார்.

''மைக்ரோவேவ் அடுப்பில் பாலைச் சுடவைத்தால் அதிலுள்ள லைசோஸைம் சிதையும். சாதாரண அடுப்புச் சமையலின்போது பாத்திரத்தில் காய்கறிகளை அதிக நேரம் அடுப்பில் வைத்துவிட்டால் அது கருகியும் தீய்ந்தும் போய்விடும். அவற்றையே குக்கரில் வேக வைக்கும்போது காய்கறிகளின் ருசி குறைந்துவிடும் சாத்தியம் அதிகம். ஆனால் மைக்ரோவேவ் அடுப்பில் சரியான சூட்டில் முறையாகத் தயாரிக்கப்பட்ட உணவுகளின் சத்துக்கள் அப்படியே இருக்கும். காய்கறிகளின் நிறமும் மாறாது'' என்றார்.

மைக்ரோவேவ் அடுப்பை எப்படிப் பயன்படுத்த வேண்டும்?

சாதாரணமாக மைக்ரோவேவ் அடுப்பில் காய்கறிகளைச் சமைத்து முடித்ததும் ஸ்விட்சை அணைத்துவிட, அதன் இயக்கம் முழுவதும் நின்றுவிடும். ஸ்விட்ச் அணைக்கப்பட்ட நொடியில் மின் அலைகள் மறைந்து போவதால் அடுப்புக்குள் கதிர்வீச்சு எதுவும் இருக்காது. சமைத்த உணவிலும் எவ்விதக் கதிர்வீச்சின் தாக்கமும் இருக்காது. ஆனால், இதுவே அடுப்பில் கசிவு இருந்து அது தெரியாமல் சமைத்தால் நிச்சயம் பிரச்னை ஏற்படும். எனவே தரமான நிறுவனங்கள் தயாரிக்கும் அடுப்புகளையே பயன்படுத்தவேண்டும்.

மைக்ரோவேவ் அடுப்பில் சமைக்கும் போது அதன் கதவை நன்றாக மூடி லாக்கான பிறகே சமைக்க வேண்டும். சரியாக மூடாவிட்டால் கசிவு ஏற்பட்டுத் தீக்காயம் ஏற்படும். அடுப்பில் எதாவது பிரச்னை என்றால், உடனடியாகப் சர்வீஸுக்கு கொடுக்க வேண்டும்.

மைக்ரோவேவ் அடுப்பை வாங்கும்போது தரப்பட்ட கையேட்டை நன்றாகப் படித்த பின்னரே அதில் சமைக்க ஆரம்பிக்க வேண்டும். மைக்ரோவேவ் அடுப்பில் கோளாறு ஏற்பட்டால் அதை நாமே பழுது பார்க்க முயற்சி செய்யக் கூடாது.

'மைக்ரோவேவ் அடுப்பில் சமைத்தால் புற்றுநோய் ஏற்படும்’ என்று ஒரு பிரிவினருக்கு அச்சம் இருந்தாலும் இது குறித்து எந்த ஆராய்ச்சி முடிவும் இதுவரை வெளிவரவில்லை.

மைக்ரோவேவ் அடுப்பில் செய்யக் கூடாதவை:

மைக்ரோவேவ் அடுப்பில் உணவு சமைக்கும் போது அடிக்கடி திறந்து மூடக்கூடாது.குறுகிய வாயுள்ள பாத்திரத்தைப் பயன்படுத்தக் கூடாது
முட்டையை ஓட்டுடன் வைக்கக்கூடாது.
வறுவல் செய்யும்போது உப்பு போடக்கூடாது, ஏனெனில் அப்படிச் சமைத்தால் உப்பு தீய்ந்து அதிலிருக்கும் ஐயோடின் சிதைந்து போய்விடும். எனவே, வறுத்த பின்பு உப்பு சேர்க்க வேண்டும்.
பிளாஸ்டிக் மற்றும் காகிதப் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது. பயன்படுத்தினால் அவை உருகி, எரிந்து போய்விடும்

தண்ணீரைச் சுட வைக்க மைக்ரோவேவ் அடுப்பைப் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் இதன் நுண் கதிர்களால் தண்ணீரின் மூலக்கூறுகள் அசைக்கப்பட்டுத்தான் தண்ணீர் சூடாகும். அதனால் நீராவி வெளியேறாது. தண்ணீர் அதன் கொதி நிலையான 100 டிகிரி செல்ஸியஸ் அளவையும் தாண்டி சூடாகும். ஆனால், தண்ணீர் கொதிப்பில் சலனம் எதுவும் இருக்காது. இது தெரியாமல் அடுப்பை அணைத்ததும் உள்ளிருந்து நீரை அஜாக்கிரதையாக எடுத்தால் தப்பித் தவறி தண்ணீர் உடம்பில் பட்டுத் தீக்காயம் ஏற்படும்.

நன்றி
பரமக்குடி சுமதி
See More