துளசி (Ocimum sanctum)

மணக்கால் அய்யம்பேட்டை | 4:49 PM | Best Blogger Tips
துளசி (Ocimum sanctum) 
மூலிகைகளின் அரசியாக போற்றப் படுகிறது. துளசியை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. பலரது வீடுகளின் கொல்லைப் புறத்தில், துளசிமாடம் அமைந்துள்ளதை இன்றுகூட நாம் காணலாம்.

துளசியானது இடியைத் தாங்கும் சக்தி கொண்டது என அறிவியல் அறிஞர்கள் அண்மையில் கண்டறிந்துள்ளனர். இதனால் தானோ என்னவோ வீடுகளில் துளசி வளர்த்திருப்பார்கள் என தோன்றுகிறது.
...

துளசியின் மணம் உடலுக்கு உற்சாகத்தைக் கொடுக்கக் கூடியது.

இதற்கு அரி, இராமதுளசி, கிருஷ்ண துளசி, திருத்துளாய், துளவு, குல்லை, வனம், விருத்தம், துழாய், மாலலங்கர் என பல பெயர்கள் உண்டு.

துளசி இந்தியா முழுவதும் காணப்படும் செடி வகையாகும். இதில் நற்றுளசி, செந்துளசி, நாய்த்துளசி, நிலத்துளசி, கல்துளசி, முள்துளசி, கருந்துளசி என பல வகைகள் உள்ளன.

துளசியை பொதுவாக தெய்வீக மூலிகை என்றே அழைப்பார்கள். கற்ப மூலிகைகளில் இதற்கு தனிச்சிறப்பு உண்டு. இந்து மதத்தினர், இலட்சுமி தேவியின் அம்சமாகவே எண்ணி இதனை வழிபடுகின்றனர்.

துளசியின் பயன்கள்

· இருதயம், ரத்த நாளங்கள், கல்லீரல், நுரையீரல் ஆகியவற்றை பலப்படுத்தும் தன்மையும் ரத்த ஓட்டத்தை சீராக்கும் தன்மையும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீர்படுத்தும் தன்மையையும் கொண்டது.

· துளசி உடல் சூட்டை சீரான நிலையில் பாதுகாக்கிறது.

· நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்கிறது.

· மன அழுத்தத்தைப் போக்கும்தன்மை கொண்டது.

· உடலுக்கு பலத்தைக் கொடுக்கிறது.

· இருமல் மற்றும் சுவாச நோய்களுக்கு அரு மருந்தாக பயன்படுகிறது.

· கொழுப்பைக் குறைக்கும் தன்மை கொண்டது.

· ஜூரத்தைக் குறைக்கும் குணம் கொண்டது.

· வயிற்றுப் புண், வாய்ப்புண்களை குணப் படுத்தும்.

துளசியை கற்ப முறைப்படி தினமும் சாப்பிட்டு வந்தால் நோயில்லா பெருவாழ்வு வாழலாம்.

குழந்தைகளுக்கான மார்புச்சளி நீங்க

துளசி இலையை சாறு எடுத்து அதனுடன் கற்பூரவல்லி சாறு கலந்து சூடாக்கி தினமும் காலையில் வெறும் வயிற்றில் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், குழந்தைகளுக்கு உண்டாகும் மார்புச்சளி, மூச்சு விட முடியாமை, சளியினால் மூச்சுத்திணறல் போன்றவை நீங்கும். மார்புச்சளி வெளியேறும்.

துளசிச் சாறுடன் எலுமிச்சை சாறு சம அளவு சேர்த்து அதனுடன் தேன் கலந்து தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்வு நீங்கி உடல் புத்துணர்வடையும்.

பெண்களுக்கு

துளசியிலை, வில்வ இலை, வெற்றிலை சம அளவு எடுத்து இடித்து சாறு பிழிந்து அதனுடன் சம அளவு விளக்கெண்ணெய் சேர்த்து நன்கு காய்ச்சி ஆறியபின் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு, தினமும் காலையில் 1 தேக்கரண்டி எடுத்து அருந்தி வரவேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) அருந்தி வந்தால் பெண்களுக்கு உண்டாகும் பெரும்பாடு (இரத்தப் போக்கு) குணமாகும்.

ரத்த அழுத்தம் குறைய

இரத்த அழுத்தம் உள்ளவர்கள் துளசி இலை, முற்றிய முருங்கை இலை சம அளவு எடுத்து இடித்து 50 மி.லி அளவு சாறில் 2 சிட்டிகை சீரகப்பொடி சேர்த்து காலை, மாலை என இருவேளை உட்கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 1 மண்டலம் அருந்தி வந்தால் இரத்த அழுத்தம் குறையும். இது சாப்பிடும் காலங்களில், உப்பு, காரம், புளியைக் குறைப்பது அவசியம்.

உடல் எடை குறைய

துளசி இலைச்சாறுடன் எலுமிச்சம் பழம் சேர்த்து சிறிது சூடாக்கி அதனுடன் தேன் கலந்து, உணவுக்குப்பின் உட்கொண்டால் உடல் எடை குறையும்.

குப்பைமேனி இலையையும், துளசி இலையையும் சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி, தூள் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த சூரணத்தை தினமும் இருவேளை, வேளைக்கு இரண்டு சிட்டிகை என எடுத்து நெய்யில் குழைத்து தொடர்ந்து உட்கொண்டால் மூலச்சூட்டினால் ஏற்படும் கருப்பு நிறம் மாறும்.

அம்மான் பச்சரிசியுடன், துளசி இலை சம அளவு எடுத்து நன்கு அரைத்து பரு உள்ள இடத்தில் தடவி வந்தால் முகப்பரு மறையும்.

துளசி இலை – 9 எண்ணிக்கை

கடுக்காய் தோல் – 5 கிராம்

கீழாநெல்லி – 10 கிராம்

ஓமம் -5 கிராம்

மிளகு – 3

எடுத்து மைபோல் அரைத்து மோரில் கலந்து தினமும் மூன்று வேளை கொடுத்துவந்தால், சாம்பல், மண் தின்னும் குழந்தைகள் எளிதில் அவற்றை ஒதுக்கும்.

தொண்டைக்கம்மல், வலி நீங்க

தினமும் துளசியிலையை காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக மென்று சாறு இறக்கினால், சளி, தொண்டைக்கட்டு நீங்கும். உடலில் உள்ள நச்சுத்தன்மையும் நீக்கும்.

10 துளசியிலை எடுத்து அதனுடன் 5 மிளகு சேர்த்து நசுக்கி 2 டம்ளர் நீர்விட்டு அரை டம்ளராக சுண்டக் காய்ச்சி கஷாயம் செய்து சூடாக அருந்தி, பிறகு சிறிது எலுமிச்சை சாறு அருந்திவிட்டு நல்ல கம்பளி கொண்டு உடல் முழுவதும் போர்த்தி விட்டால் மலேரியா காய்ச்சல் படிப்படியாக குறையும்.

சிறுநீரகக் கல் நீங்க

துளசி இலையை ஒரு செப்புப் பாத்திரத்தில் நீர்விட்டு இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை எடுத்து இலையோடு சேர்த்து அருந்தி வந்தால் சிறுநீரகக் கல் படிப்படியாக கரையும். இவ்வாறு ஒரு மண்டலம் அருந்துவது நல்லது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற வேதிப் பொருட்கள், விஷநீர்கள் சிறுநீர் வழியாக வெளியேறி ரத்தத்தை சுத்தமாக்கும்.

சிறு சிறு பூச்சிக் கடிகளின் விஷம் நீங்க

கண்ணுக்குத் தெரியாத சிறு சிறு பூச்சிக் கடிகளால் சிலருக்கு உடலில் அலர்ஜி உண்டாகி சருமம் பாதிக்கப்படும். அல்லது வேறு வகைகளில் பாதிப்பு ஏற்படும். இந்த பூச்சிகளின் விஷத்தன்மை நீங்க துளசி இலையை சாறு எடுத்து அதனுடன் சம அளவு தும்பைச் சாறு கலந்து ஒரு வாரம் அருந்தி வந்தால் விஷம் எளிதில் இறங்கும்.

வாய்ப்புண் , வாய் நாற்றம் நீங்க

வயிற்றில் புண்கள் இருந்தால் வாயிலும் புண்கள் உண்டாகும். இதனால் வாய் நாற்றம் வீசும். வாய்ப்புண் ஆற துளசி இலையை பறித்து நீர்விட்டு அலசி, வாயில் வைத்து மென்று மெல்ல மெல்ல சாறினை உள்ளிறக்கினால், வாய்ப்புண் வயிற்றுப்புண் ஆறும். வாய் நாற்றமும் நீங்கும்.

மன அழுத்தம் நீங்க

மன அழுத்தத்தைப் போக்கும் குணம் துளசிக்கு உண்டு. துளசி இலையை நன்கு மைபோல் அரைத்து அதனுடன் வில்வ இலை சாறு சேர்த்து லேசாக சூடாக்கி அருந்தினால் மன அழுத்தம் நீங்கும்.

பற்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் தீர

துளசி இலை, புதினா இரண்டையும் சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் கிராம்புப் பொடி சேர்த்து தினமும் பல் துலக்கி வந்தால், பற்களின் சொத்தை, பல் ஈறு வீக்கம் மேலும் பற்கள் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் தீரும்.

தலைவலி தீர

ஒரு கைப்பிடி துளசி இலை மூன்று மிளகு, 1 துண்டு இஞ்சி எடுத்து நன்கு அரைத்து நெற்றியில் பற்று போட்டால் தலைவலி நீங்கும்.

கண்நோய்கள் தீர

துளசி இலை ஊறிய நீரை 1 மண்டலம் அருந்தி வந்தால் முக்குற்றங்களில் ஒன்றான பித்த அதிகரிப்பு குறையும். இதனால் கண் நரம்புகளின் சூடு குறைந்து நரம்புகள் பலப்படும். கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அணுகாது.

சரும நோய்கள் நீங்க

தேமல், படை உள்ள இடங்களில் துளசியும் உப்பும் சேர்த்து அரைத்து பூசி வந்தால் சரும நோய்கள் நீங்கும்.

துளசி இலைக்கு உள்ளத்தைத் தூய்மையாக்கும் குணமும் உண்டு.